இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1193



வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு

(அதிகாரம்:தனிப்படர் மிகுதி குறள் எண்:1193)

பொழிப்பு (மு வரதராசன்): காதலரால் விரும்பப்படுகின்றவர்க்குப் (பிரிவுத் துன்பம் இருந்தாலும்) 'மீண்டும் வந்தபின் வாழ்வோம்' என்று இருக்கும் செருக்குத் தகும்.

மணக்குடவர் உரை: தாம் காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு உலகின்கண் இருந்து உயிர்வாழ்வேமென்னுங் களிப்பு அமையும்.
இது, தலைமகள், இருந்தாலும் பயனில்லை: அதிற்சாதல் அமையுமென்று வாழ்க்கையை முனிந்து தோழிக்குக் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே - தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு ஏற்புடைத்து ; வாழுநம் என்னும் செருக்கு -(காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர்; வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு.
('நாம் அவரான் வீழப்படாமையின், நமக்கு அமைவது இறந்துபாடு' என்பதாம்.)

இரா இளங்குமரனார் உரை: யாம் நிறைவான வாழ்வு வாழ்வோம் என்னும் பெருமிதம் எல்லார்க்குமா கிட்டும்? விரும்புபவரால் விரும்பப்படுவர்க்கு அல்லவோ அமையும்!


பொருள்கோள் வரிஅமைப்பு:
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு.

பதவுரை: வீழுநர்-(தாம்) விரும்புபவர், காதலித்தார்; வீழப்படுவார்க்கு-(கணவரால்) விரும்பப்படுபவர்க்கு, காதலிக்கப்படுவார்க்கு; அமையுமே-பொருந்துமே, ஏற்புடைத்தே; வாழுநம்-வாழ்வோம், வாழ்கிறோம்; என்னும்-என்கின்ற, என்று கருதும்; செருக்கு-தருக்கு, இறுமாப்பு.


வீழுநர் வீழப் படுவார்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு;
பரிப்பெருமாள்: தாம் காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு;
பரிதி: விரும்பப்பட்ட நாயகருக்கும் அன்றே;
காலிங்கர்: நெஞ்சே! தாம் விரும்பினராகிய தலைவரால் தம்மை விரும்பப்படுவார் யாவர் சிலர் மற்று அவர்க்கு;
பரிமேலழகர்: (இதுவும் அது.) தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு. [விழையும் - விரும்பும்]

'தாம் காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலரால் என்றும் காதலிக்கப்பட்டார்க்கு', 'தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படும் மகளிர்க்கு', 'தான் காதலிக்கிற கணவனால் தானும் காதலிக்கப்படுகிற பெண்ணுக்குத்தான்', 'காதலுடையார்க்கும் காதலிக்கப்படுவார்க்குமே' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

அமையுமே வாழுநம் என்னும் செருக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகின்கண் இருந்து உயிர்வாழ்வேமென்னுங் களிப்பு அமையும்.
மணக்குடவர் குறிப்புரை: இது, தலைமகள், இருந்தாலும் பயனில்லை: அதிற்சாதல் அமையுமென்று வாழ்க்கையை முனிந்து தோழிக்குக் கூறியது.
பரிப்பெருமாள்: உலகின்கண் இருந்து உயிர்வாழ்வேமென்னுங் களிப்பு அமையும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, தலைமகள், இருந்தாலும் பயனில்லை: அதிற்சாதல் அமையுமென்று வாழ்க்கையை முனிந்து தோழிக்குக் கூறியது.
பரிதி: வாழ்வோம் என்னும் செருக்கு, என்போலும் பிரிந்திருப்பார்க்கு உண்டோ வாழ்வோம் என்னும் நன்மை என்றவாறு.
காலிங்கர் ('அமைந்ததே' பாடம்): அடுத்தது யாது எனில் வையத்து வாழ்கின்றேம் யாம் என்னும் மனச் செருக்கு என்றவாறு.
பரிமேலழகர்: காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர்; வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு ஏற்புடைத்து. [வாழ்தும் என்று இருக்கும் தருக்கு - வாழ்வோம் என்றிருக்கும் இறுமாப்பு]
பரிமேலழகர் குறிப்புரை: 'நாம் அவரான் வீழப்படாமையின், நமக்கு அமைவது இறந்துபாடு' என்பதாம். [இறந்துபாடு - சாதல்]

'உயிர்வாழ்வேமென்னுங் களிப்பு அமையும்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'வையத்து வாழ்கின்றேம் யாம் என்னும் மனச் செருக்கு' என்று காலிங்கரும் 'காதலர் கடிதின் வருவர்; வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு ஏற்புடைத்து' என்று பரிமேலழகரும் உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வாழ்கின்றோம் என்ற பெருமிதம் பொருந்தும்', 'பிரிந்த கணவரோடு இனிது வாழ்வோம் என்னும் பெருமிதம் உண்டாகும்', 'நல்வாழ்வு பெற்றேன்' என்று சொல்லிக் கொள்ளும் பெருமை கிடைக்கும்', 'இன்புற்று வாழ்கின்றோமென்னும் இறுமாப்புப் பொருத்தமுடையது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

வாழ்கின்றோம் என்ற இறுமாப்பு கிட்டுமே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு வாழுநம் என்ற இறுமாப்பு கிட்டுமே என்பது பாடலின் பொருள்.
'வாழுநம்' குறிப்பது என்ன?

ஒருவர்க்கொருவர் அன்பைப் பொழியும் கணவன்-மனைவி ''நாங்கள் வாழும் வாழ்வே வாழ்வு' என்னும் செருக்குக் கொள்ளலாம்.

தாம் விரும்பும் கணவரால் விரும்பப்படும் மகளிர் 'நாம் வாழ்கின்றோம்' என்று கருதியிருக்கும் தருக்கு மிகவும் பொருந்துமே.
காட்சிப் பின்புலம்:
பணி தொடர்பாகக் கணவர் அயல் சென்றிருக்கிறார், பிரிவின் துயரம் தாங்காமல் தலைவியின் உடல் மெலிந்தது. பசலை படர்ந்தது. தனிமையில் அவர் நினைவாகவே வருந்திக்கொண்டு இருக்கிறாள். அப்பொழுது உலகத்துக் காதல் வாழ்வு நடத்துபவர்களை எண்ணிப் பார்க்கின்றாள். ஒத்த காதலுடையவராய் மணவாழ்வு நடத்தும் கணவன் -மனைவி இருவரும் விதையில்லாத இனியகனியைத் தடையின்றிச் சுவைப்பதுபோல் காமத்தை நுகர்ந்து இல்லறவாழ்வின் முழு இன்பப் பயன் பெறுவர்; மனைவிக்குக் கணவர் சமயம் அறிந்து செய்யும் அன்புச் செயல் தன்னை நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் பொழிந்து களிப்படையச் செய்வது போன்றதாம். இவ்வாறு மனமொத்த இணையர் துய்க்கும் இல்லறவாழ்வு பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
உலகில் காதல் வாழ்க்கை நடத்துபவர்களை நினைக்கும்பொழுது, தன்னைப்பற்றியும் தன் கணவர் பற்றியும் இருவருக்குமுள்ள காதல் உறவு பற்றியும் எண்ணங்கள் எழுகின்றன. தலைவனும் தலைவியும் கணவனும் மனைவியாக ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு ஒன்றி விட்டவர்கள். தான் காதலித்தவர் தன்னைக் காதலித்தால் அது பெறுதற்கரிய பேறு ஆகும். அதை நாங்கள் இருவரும் பெற்றுள்ளோம்; பிரிவுத் துன்பம் ஒருபுறம் இருக்க, 'ஒன்றிய மனதுள்ள காதலர்க்குத் தாங்கள் வாழ்கின்றோம் என்ற இறுமாப்பு இருக்கும்; அந்தச் செருக்கு எங்களுக்கும் உண்டு' எனக் கூறுகிறாள்.
வீழுநர் வீழப்படுவார் ஆகிய சொற்கள் அவள் அவனை விரும்புகிறாள்; அவளால் விரும்பப்படுகிறான் என்ற பொருள் தந்து இருவருக்கும் உரிய ஒப்புரிமையை நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ளன.

'(பிரிவுத் துன்பம் இருந்தாலும்) 'மீண்டும் வந்தபின் வாழ்வோம்' என்று இருக்கும் செருக்குத் தகும்', 'காதலிக்கப்படுதலால், பிரிந்தாலும், விரைவில் திரும்புவார் எனும் நம்பிக்கையுளதாகும்', 'காதலரால் விரும்பப்படும் மகளிர்க்குப் பிரிந்த கணவரோடு இனிது வாழ்வோம் என்னும் பெருமிதம் உண்டாகும்', 'நம்மை நினைந்து விரைந்து வருவர், அதன்பின் இன்புற்று வாழ்வோ மென்னும் மிடுக்கு; தாம் காதலிக்குங் கணவராற் காதலிக்கப் பெறும் மகளிர்க்கே அமைவதாம்', 'தாம் விரும்புங் கணவரால் விரும்பப்பெறும் மகளிர்க்கு இப்போது பிரியினும் விரைவில் வருவர் அதுவரை உயிர்வாழ்வோம் என்னும் செருக்குப் பொருத்தமுடைத்து', 'ஒத்த அன்பு வாய்க்கப் பெற்றவர்கள் காதலர் பிரிந்தாலும் மீண்டுவருவர் என்று செருக்கோடு வாழும் பேறு உடையவர்கள்' என உரையாளர்கள் அதிகார இயைபு கருதி இக்குறட்கருத்தை விளக்கினர்.

'வாழுநம்' குறிப்பது என்ன?

வாழுநம் என்பதற்கு உயிர்வாழ்வேம், வாழ்வோம், வாழ்கின்றேம், இன்புற்று வாழ்தும், இன்ப வாழ்வு பெற்றோம், நாம் வாழும் வாழ்வே வாழ்வு, இன்புற்று வாழலாம், இன்புற்று வாழ்கின்றோம், வாழ்கின்றோம், நிறைவான வாழ்வு வாழ்வோம், நல்வாழ்வு பெற்றேம், இனிது வாழ்வோம் என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.

காதலுடையார் - காதலிக்கப்படுவார் ஆகிய இருவர்க்கும் ஒத்த மனம் இருப்பதால் அவர்களுக்கு 'நாங்கள் வாழ்கிறோம்' அதாவது 'நாங்கள் வாழும் வாழ்வே வாழ்வு' என்னும் பெருமிதம் வந்துவிடும். ஒத்த அன்பு இல்லாத கணவன் -மனைவியர்க்கு அந்தப் பெருமித வாழ்வு இல்லையாம், காதலர் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொள்கின்ற அன்பு காரணமாக இருவரிடமும் உயிர்ப்பு நிலை ஊக்கம் பெறுகிறது. இன்பமாக வாழ்கிறோம் என்ற களிப்பும் பெருமித உணர்வும் அவர்களுக்கு உண்டாகின்றன. தற்சமயம் கணவன் பிரிந்திருப்பதால் உள்ளுக்குள் துன்பம் மிகவும் உறுத்தினாலும், அப்பிரிவு சிறுது காலத்துக்குத்தானே, அவர் விரைவில் திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் தலைவி உலவுகிறாள். கணவனால் அன்பு செலுத்தப்படுகிற பெண் ஆதலால் 'இனிது வாழ்வோம்' என்று செருக்கோடு பேசும் நற்பேறு பெற்றவளாயிருக்கிறாள்.

'வாழுநம்' என்ற சொல்லுக்கு வாழ்கின்றோம் என்ற பொருள் பொருந்தும்.

காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு வாழ்கின்றோம் என்ற இறுமாப்பு கிட்டுமே என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தனிப்படர்மிகுதியில் தனது வாழ்வில் விரும்புவார், விரும்பப்படுவார் என்ற ஒப்புரிமை உள்ளதை எண்ணி இறுமாப்புக் கொள்கிறாள் தலைவி.

பொழிப்பு

ஒருவரை ஒருவர் காதலிக்கும் இருவர்க்கும் வாழ்கின்றோம் என்ற இறுமாப்பு கிட்டும்.