இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1199நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு

(அதிகாரம்:தனிப்படர் மிகுதி குறள் எண்:1199)

பொழிப்பு (மு வரதராசன்): யான் விரும்பிய காதலர் மீண்டும் விரைந்து வந்து அன்பு செய்ய மாட்டார் என்றாலும், அவரைப்பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.

மணக்குடவர் உரை: எம்மால் காதலிக்கப்பட்டார் எமக்கு அருளாராயினும் அவர் பக்கத்தனவாகிய சொற்களும் எங்கள் செவிக்கு இனியவாம்.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நசைஇயார் நல்கார் எனினும் - என்னால் நச்சப்பட்ட காதலர் என்மாட்டு அன்பிலரேயாயினும்; அவர்மாட்டு இசையும் செவிக்கு இனிய - அவர் திறத்து யாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு இனியவாம்.
(இழிவு சிறப்பு உம்மை, 'அவர் வாரார் என்னுஞ் சொல்லாயினும் அமையும்' என்பதுபட நின்றது. 'அதுவும் பெற்றிலேன்' என்பதாம்.)

தேவநேயப் பாவாணர் உரை: என்னால் விரும்பப்பட்ட காதலர் என்பால் அன்பில்லாதவரே யாயினும் அவரிடத்தினின்று வரும் எத்தகைச் செய்திகளும் என் செவிக்கு இன்பந்தருவனவாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு. இசையும் இனிய செவிக்கு

பதவுரை: நசைஇயார்-விரும்பப்பட்டவர்; நல்கார்-அளியார், தலையளி செய்யார்; எனினும்-என்றாலும்; அவர்மாட்டு-அவர்திறத்தில், அவரிடமிருந்து; இசையும்-சொற்களும்; இனிய-இனியவை, இனிமை தருவன; செவிக்கு-காதுக்கு.


நசைஇயார் நல்கார் எனினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எம்மால் காதலிக்கப்பட்டார் எமக்கு அருளாராயினும்;
பரிப்பெருமாள்: எம்மால் காதலிக்கப்பட்டார் எமக்கு அருளார் ஆயினும்;
பரிதி: பிரியமாகிய நாயகர் இன்பம்தராத போது;
காலிங்கர்: நெஞ்சே! நாம் ஆசையற்றவர் நம்மை அளித்தலர் ஆயினும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) என்னால் நச்சப்பட்ட காதலர் என்மாட்டு அன்பிலரேயாயினும்; [நச்சப்பட்ட - விருப்பப்பட்ட]
பரிமேலழகர் குறிப்புரை: இழிவு சிறப்பு உம்மை.

'எம்மால் காதலிக்கப்பட்டார் எமக்கு அருளாராயினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்னால் விரும்பப்பெற்ற காதலர் என்னிடம் அன்பில்லாதவரானாலும்', 'நான் காதலிக்கிற என் கணவர் (தாமாக ஒரு சேதியனுப்பி) உதவாவிட்டாலும்', 'காதலர் மீண்டும் அருள்புரியமாட்டா ரென்றாலும்', 'என்னால் விரும்பப்பட்ட காதலர் எனக்கு அன்பினைத் தரார் என்றாலும்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

என்னால் விரும்பப்பட்டவர் தலையளி செய்யார் எனினும் என்பது இப்பகுதியின் பொருள்.

அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் பக்கத்தனவாகிய சொற்களும் எங்கள் செவிக்கு இனியவாம்.
பரிப்பெருமாள்: அவர் பக்கத்தனவாகிய சொற்கள் எங்களால் இகழப்படாது. அதுவும் செவிக்கு இனியவாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: எங்கள் பக்கத்தனவாகிய சொற்கள் அவர்க்கு இன்னாது ஆகும் என்பது குறிப்பு. தலைமகன், பாங்காயினார் அவனைப் புகழ்ந்துழித் தனது வேட்கை மிகுதியால் தலைமகள் கூறியது. அன்றியும் தலைமகனுழை நின்றும் வந்த தூதர் வாய்ச்சொல் கேட்ட தலைமகளது முகமலர்ச்சி கண்டு, இஃது எற்றினான் ஆயிற்று' என்று வினவிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: அவரிடத்திலே சொற்கேட்கிலும் அது காதுக்கு இன்பம் என்றவாறு.
காலிங்கர்: அவர் திறத்து ஒரு வார்த்தை ஆயினும் கேட்கப் பெறின் அதுவும் நமது செவிக்குச் சால இனியதே என்றவாறு.
எனவே அங்கு நின்றான் ஒரு தூது வருதலினும் இங்கு நின்றும் தோழி தானொரு தூதுவிடுதல் செய்வதே இனிது என்பதாம்.
பரிமேலழகர்: (இதுவும் அது.) அவர் திறத்து யாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு இனியவாம்.
பரிமேலழகர் குறிப்புரை: 'அவர் வாரார் என்னுஞ் சொல்லாயினும் அமையும்' என்பதுபட நின்றது. 'அதுவும் பெற்றிலேன்'என்பதாம். [அதுவும் - அச்சொல்லும்]

'அவர் திறத்து ஒரு வார்த்தை ஆயினும் கேட்கப் பெறின் அதுவும் நமது செவிக்குச் சால இனியதே' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இசை என்றதற்கு இவர்கள் அனைவரும் சொல் என்ற பொருளே தந்துள்ளனர் என்பது நோக்கத்தக்கது.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரைப் பற்றிய புகழ்ச் சொற்களும் என் செவிக்கு இனியவாம்', 'அவரைப்பற்றி வேறு யாராயினும் ஒரு சேம வார்த்தை சொன்னாலும் அது எனக்கு ஆறுதல் அளிக்குமே', 'அங்ஙனம் மாட்டாரென்ற சொல்லாவது அவரிடமிருந்து கேட்கப் பெற்றால் அஃது என் செவிக்கு இனிமை தரும்', 'அவர் திறத்து ஏதானும் ஒரு சொல்லும் என் செவிக்கு இனியவாம்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அவர் திறத்து எச்சொல்லும் என் செவிக்கு இனியவாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
என்னால் விரும்பப்பட்டவர் தலையளி செய்யார் எனினும் அவர்மாட்டு இசையும் என் செவிக்கு இனியவாம் என்பது பாடலின் பொருள்.
'அவர்மாட்டு இசையும்' என்பதன் பொருள் என்ன?

அவர் வரும்போது வரட்டும்; ஆனால் அவர் பற்றிய நல்ல செய்திகளே எனக்குக் கிட்டட்டும்.

காதலர் விரைந்து திரும்பி வந்து தண்ணளி செய்யவில்லை என்றாலும் அவர் பற்றிய செய்திஎதுவும் என் செவிகளுக்கு இனிமையாகவே இருக்கும் என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகக் கணவர் பிரிந்து தொலைவு சென்றுள்ளமையால் தலைவி தனிமைத் துயரிலுள்ளாள். அவரையே எப்பொழுதும் நினைந்து கொண்டிருப்பதால் அவளது உடல் நலிவுற்றது; உறக்கம் இல்லாமல் இரவுகள் கழிகின்றன. கடமை முடிவுறும் காலமும் நீட்டித்துக் கொண்டே போகிறது. அதுசமயம் உலகத்து காதலர்கள் எவ்விதம் வாழ்வு நடாத்துகிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறாள்.
உள்ளம் ஒன்றிய இணையர் வாழ்வு என்பது முழுவதும்‌ சுவைக்கப்படும் விதை இல்லாத பழம் போன்று முழுமையான காமஇன்பம்‌ பெறச்செய்வது; மனைவிக்குக் கணவர் தேவை அறிந்து செய்யும் அன்புச்செயலானது, வேண்டும் காலத்தில் மழை கிடைப்பது போன்றதாகும்; விருப்பம் இல்லா கணவருடன் இருப்பது இன்பமில்லாத உரிமையற்ற வாழ்க்கையாகும்; காதல் ஒரு பக்கத்ததானால் துன்பமாகும்; காதல் காவடிபோல் இருபக்கங்களிலும் ஒத்திருப்பதுதான் இனிமை பயக்கும். இந்தக் காமன் ஏன் இருவரிடத்தும் செல்லாமல் ஒருவரிடத்தே பொருந்தி வருத்துகின்றான்?; தம்மால் காதலிக்கப்படும் பிரிந்து சென்றுள்ள கணவரிடமிருந்து இனிய செய்திகளைப் பெறாது வாழும் மகளிரைப் போல் கல்நெஞ்சர் வேறு யாரும் உலகில் இல்லை. இவ்வாறு அவளது எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இக்காட்சி:
நசையார் என்பது விரும்பப்பட்டவர் என்ற பொருள் தருவது. தலைவி தான் கணவர்மீது காதலுடையவள் என்பதைச் சொல்ல அவரை நசையார் என அழைக்கிறாள். கடமை தொடர்பாகச் சென்றுள்ள தலைவரிடமிருந்து தகவல் ஒன்றும் வரவில்லை. தனிமையில் அவரையே நினைத்துத் துன்புற்று இருக்கும் அவளுக்கு இதுவும் கவலையை உண்டாக்குகிறது. அவருக்கு ஏதாவது ஆயிற்றோ என்னவோ என்ற கலக்கமும் உண்டாகிறது. இச்சூழலில் அவரிடமிருந்து ஏதேனும் செய்திகள் வாராதா என்று எதிர் நோக்கி இருக்கிறாள் அவள். அப்பொழுது தான் உறும் துயரத்தைத் தானே தேற்றிக் கொள்ளும் வகையில் 'அவர் விரைந்து திரும்பி வந்து அன்பு செய்யாமல் இருக்கிறாராயினும் அவர் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தால் அவை என் செவிகளுக்கு இனிமை பயக்கும்' எனச் சொல்கிறாள்: கணவரை அவள் மனம் எப்பொழுதும் நினைக்கிறது. அவரை நேரே பார்க்கமுடியவில்லை என்ற குறைஇருந்தாலும் அவரைப் பற்றிய சொல் கேட்கும் பொழுதெல்லாம் அவள் இன்பம் அடைவாள் என்கிறாள். அவர் செய்தி அனுப்பினால் அவர் சென்ற இடத்திலும் நம்மை நினைக்கிறார் என்பதும் அவள் மனதுக்கு ஆறுதல் தருமாகும்.

குறள் முறைவைப்பில் ஒவ்வோர் உரையாசிரியரும் வேறுபடுகின்றனர். அதிகார அமைப்பும் பிறழ்ந்திருக்கலாம் என்பர் குறள் அறிஞர்கள். தனிப்படர் மிகுதி என்ற அதிகாரத்தில் 9-ஆம பாடலாக உள்ள இந்தக் குறளை காலிங்கர் 'நினைந்தவர் புலம்பல்' என்னும் அதிகாரத்தின் கடைசியில் அதாவது 1210-ஆம் குறளாகக் கொள்கின்றார். அவர்வயின் விதும்பல்' என்ற அதிகாரத்தில் உள்ள உரனசை.....................உளேன் (1263) என்ற குறளைத் தனிப்படர் மிகுதி'யில் இக்குறளினிடத்து அவர் எண்ணுகிறார்.

'அவர்மாட்டு இசையும்' என்பதன் பொருள் என்ன?

'அவர்மாட்டு இசையும்' என்றதற்கு அவர் பக்கத்தனவாகிய சொற்களும், அவர் திறத்து யாதானும் ஓர் சொல்லும், அவர் வாரார் என்னுஞ் சொல்லாயினும், அவரிடததிலே சொற்கேட்கிலும், அவர் திறத்து ஒரு வார்த்தை ஆயினும், அவரைப் பற்றிய புகழ்ச் சொற்கள் எவையேனும் பேசப்படுமானால், அவரைப் பற்றிக் கூறும் புகழ்ச் சொற்கள், அவரைப் பற்றி வேறு யாராயினும் ஒரு நல்ல வார்த்தை சொன்னாலும், அவர் திறத்து ஏதானும் ஒரு சொல்லும், அவரைப் பற்றிப் பேசப்படும் புகழ்மொழிகள், அவரிடததிருந்து வரும் எவ்வகைச் சொல்லும், அவரிடத்தினின்று வரும் எத்தகைச் செய்திகளும், அவரைப் பற்றிய பேச்சு எனப் பலவாறு உரை செய்தனர்.

அவர்மாட்டு என்ற சொல்லுக்கு அவரிடமிருந்து என்பது பொருள். ‘இசை’ என்பதற்குச் சொல், புகழ், இனிய சொல் எனப் பொருள் கூறினர். இவற்றுள் இங்கு சொல் என்பதே மிகப் பொருத்தமாக உள்ளது. எனவே 'அவர்மாட்டு இசையும்' என்றதற்கு 'அவர் திறத்து ஏதானும் ஒரு சொல்லும்' என்பது சிறந்து நிற்கிறது.
அவர் திறத்திலிருந்து வரும் ஒரு இனிய இசைவான சொல்லை எதிர்பார்த்திருக்கிறாள் தலைவி. யார்மூலமாவது செய்தி அனுப்புவார் என நினைக்கிறாள். அவர் நன்கு நலத்துடன் இருக்கிறார், அவர் இல்லம் திரும்புவதில் சிறிது காலத்தாழ்ச்சியேற்படலாம் போன்ற சொற்கள்தாம் அவள் வேண்டுவது. இச்செய்திகள்வழி பிரிந்து சென்றுள்ள கணவர் நலமுடன் தான் இருக்கிறார் என்னும் செய்தி ஆறுதல் தருவதால் இனிமையாகிறது.

தலைவரிடமிருந்து என்ன செய்தியைத் தலைவி கேட்க விரும்புகிறாள் என்பதற்கு, 'ஒரு வார்த்தை ஆயினும்' 'யாதானும் ஓர் சொல்லும்-அவர் வாரார் என்னுஞ் சொல்லாயினும்'. 'அருள்புரிய மாட்டாரென்ற சொல்லாவது அவரிடமிருந்து கேட்கப் பெற்றால்', 'அவரைப் பற்றி வேறு யாராயினும் ஒரு நல்ல வார்த்தை சொன்னாலும்', 'அவர் அண்மையில் வருகின்றிலர் என்னும் செய்தியாயினும்' என்றவாறு விளக்கினர். 'அருள்புரிய மாட்டாரென்ற சொல்லாவது அவரிடமிருந்து கேட்கப் பெற்றால்' என்று உரைத்து, இசையும் என்பதில் உம்மை இருப்பதால், வசையும் இனிதாகும் என்ற பொருளில் 'பழிகூறிக் கொண்டிருத்தலும் இன்பம்' எனவும் விளக்கம் செய்தனர்.

'அவர்மாட்டு இசையும்' என்பது அவரிடத்திருந்துவரும் ஏதானும் ஒரு சொல்லும் என்ற பொருள் தரும்.

என்னால் விரும்பப்பட்டவர் தலையளி செய்யார் எனினும் அவர் திறத்து செய்திஎதுவும் என் செவிகளுக்கு இனிமையாகவே இருக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தனிப்படர் மிகுதியால் வாடும் தலைவிக்குக் கணவர் பற்றி ஏதேனும் செய்தி கேட்டால் அது அவரது அன்பு கிடைத்தது போலும்.

பொழிப்பு

விரும்பப்பட்டவர் அருள்செய்யார் எனினும் அவரைப் பற்றிய எப்புகழ்ச் சொற்களும் என் செவிக்கு இனியவாம்.