உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு
(அதிகாரம்:தனிப்படர் மிகுதி
குறள் எண்:1200)
பொழிப்பு (மு வரதராசன்): நெஞ்சமே! நீ வாழிய ! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதைவிட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக
|
மணக்குடவர் உரை:
நெஞ்சே! நம்மோடு அன்புற்றார்க்குத் தூது விட்டாலும் பயனில்லை யென்று உன்னோடு உறாதார்க்கு நீயுற்ற நோயைச் சொல்ல நினையா நின்றாய்: நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாயாயின் அஃது அதனினும் நன்று.
இது தூதுவிடக் கருதிய நெஞ்சுக்குத் தூதுவிட்டாலும் பயனில்லை யென்று தலைமகள் கூறியது.
பரிமேலழகர் உரை:
(தலைமகன் தூது வரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சோடு சொல்லியது.) உறார்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு - நின்னோடு உறாதார்க்கு நின் நோயை உரைக்கலுற்ற நெஞ்சே; கடலைச் செறாய் - நீ ஆற்றாயாயினும் அரிதாய அதனையொழிந்து, நினக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக, அஃது எளிது.
(உரைக்கலுற்றது அளவிறந்த நோயாகலானும், கேட்பார் உறவிலராகலானும், அது முடிவதொன்று அன்று; முடிந்தாலும் பயன் இல்லை என்பது கருதாது, முயலாநின்றாய் என்னும் குறிப்பான், 'வாழிய' என்றாள்.)
தமிழண்ணல் உரை:
உன்னை உறவுகொண்டு காதலியாதவர்க்கு, நின் காதலால் உற்ற நோயை உரைக்க எண்ணுகின்ற மனமே! வாழிய! அதைவிட உனது காமக் கடலைத் தூர்க்க முயல்வாயாக! அஃது அதனினும் எளிது. விரும்பாதார்பின் போகின்ற மனத்தை வெறுத்துச் சொல்வதிது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்.செறாஅஅய் வாழிய நெஞ்சு
பதவுரை: உறாஅர்க்கு-(அன்பு )உறாதவர்க்கு, (அன்பு) கொள்ளாதவர்க்கு; உறு-அடையும்; நோய்-துன்பம்; உரைப்பாய்-சொல்வாயாக; கடலை-கடலை; செறாஅஅய்-தூர்க்க முயல்வாய்; வாழிய-வாழ்க; நெஞ்சு-உள்ளமே! .
|
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நம்மோடு அன்புற்றார்க்குத் தூது விட்டாலும் பயனில்லை யென்று உன்னோடு உறாதார்க்கு நீயுற்ற நோயைச் சொல்ல நினையா நின்றாய்; :
பரிப்பெருமாள்: என் மாட்டு அன்பு உறாதவர்க்கு நீ உற்ற நோயைச் சொல்ல நினையா நின்றாய்;
பரிதி: நாயகருக்குக் காமநோயைச் சொல்லாய்;
காலிங்கர்: நெஞ்சினால் நம்மொடு சிறிதும் பரிவு உறாராகிய நம் காதலர்க்கு நாம் உறுநோய் கூடக் கூடச் சென்று சென்று கூறுவாயாக;
பரிமேலழகர்: (தலைமகன் தூது வரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சோடு சொல்லியது.) நின்னோடு உறாதார்க்கு நின் நோயை உரைக்கலுற்ற நெஞ்சே;
'உன்னோடு அன்பு உறாதார்க்கு நீ உற்ற நோயைச் சொல்ல நினையா நின்றாய்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி: 'நாயகருக்குக் காமநோயைச் சொல்லாய்' என்றதால் இவர் உரையாய் என்று பாடம் கொண்டிருப்பார் எனத் தெரிகிறது. காலிங்கர் 'நம்மொடு பரிவு உறாராகிய காதலர்க்கு நாம் உறுநோய் சென்று கூறுவாயாக'' என்றுரைத்தார். பரிமேலழகர் நின்னோடு உறாதார்க்கு நின் நோயை உரைக்கலுற்ற' என்று பொருள் கூறினார்.'
இன்றைய ஆசிரியர்கள் 'துன்பப் படாதவர்க்கு நீ உற்ற துன்பத்தைத் தூதாற் சொல்', 'உன்னைப் போல் காமநோய் உறாதவர்க்கு நீ உறும் காம நோயினை உரைப்பாயாக', 'நீ அடைந்த காம வேதனையைப் போல் அவரும் அடையாததால் அவர் விரைந்து வரவில்லை. ஆனாலும் வருவார். வந்தபின் உன் காம வேதனையைச் சொல்லித் தீர்த்துக் கொள்ளலாம்', 'உன்னோடு பொருந்தாதார்க்கு நீ அடையும் நோயைச் சொல்லுவாய்!' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அன்பு கொள்ளாதவர்க்கு நீ உற்ற காதல் நோயைச் சொல்வாய் என்பது இப்பகுதியின் பொருள்.
கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சே! நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாயாயின் அஃது அதனினும் நன்று.
மணக்குடவர் குறிப்புரை: இது தூதுவிடக் கருதிய நெஞ்சுக்குத் தூதுவிட்டாலும் பயனில்லை யென்று தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: என் நெஞ்சமே!! அதனினும் நன்று நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாயாயின் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை :இவை இரண்டும் முடியா என்றவாறாயிற்று. தூதுவிடக் கருதிய நெஞ்சுக்குத் 'தூதுவிட்டாலும் பயனில்லை; என்று தலைமகள் கூறியது.
பரிதி: விரகக்கடலைச் செறாய்; நெஞ்சமே! என்ன காரியம் செய்தாய் என்றவாறு.
காலிங்கர்: மற்று அல்லவாயின் நம்மை வருத்துகின்ற பெருங்கடல் ஆகிய வெள்ளநீர் ஒலியைச் செறுத்து வாழ்வாயாக; என் நெஞ்சே! என்றவாறு.
பரிமேலழகர்: நீ ஆற்றாயாயினும் அரிதாய அதனையொழிந்து, நினக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக, அஃது எளிது. [அதனை - உன்னுடன் பொருந்தாதவர்க்கு உனது மிகுந்த காமநோயைச் சொல்லத் தொடங்கியதை; அஃது - கடலைத் தூர்த்தல்]
பரிமேலழகர் குறிப்புரை: உரைக்கலுற்றது அளவிறந்த நோயாகலானும், கேட்பார் உறவிலராகலானும், அது முடிவதொன்று அன்று; முடிந்தாலும் பயன் இல்லை என்பது கருதாது, முயலாநின்றாய் என்னும் குறிப்பான், 'வாழிய' என்றாள். [கேட்பார்- தலைவர்; அது - உரைக்கலுற்றது; குறிப்பான். இகழ்ச்சிக் குறிப்பால்]
'வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாயாயின் அஃது எளிது; என்றும், காமக்கடலைச் செறாய் என்றும் கடல்நீர் ஒலியைச் செறுத்து வாழ்வாயாக' என்றும் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சே! கடலை வெறுக்காதே', 'நெஞ்சே வாழ்க!!. அதனை விடுத்து முழங்கும் கடலை வீணே வெறுக்காதே', '(மனமே! ஏன் இப்படியெல்லாம் அவரை நிந்திக்கிறாய்? அவர் வருவார்; பொறு) மனமே! உன்னை வாழ்த்துகிறேன்; பொறுத்துக் கொள். இப்போது கடல் போல உன்னுள் வளர்ந்துவிட்ட காமஆசையை அடக்கிக் கொள்க', 'நெஞ்சே வாழ்வாயாக உனக்குத் துன்பம் செய்கின்ற கடலை வெறுக்க மாட்டாய்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
கடலைத் தூர்ப்பதற்கு நீ முயலலாம் (அது எளிது). நெஞ்சே! வாழ்த்துக்கள்! என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
அன்பு கொள்ளாதவர்க்கு நீ உற்ற காதல் நோயைச் சொல்வாய்! கடலைச் செறாஅஅய்! நெஞ்சே வாழ்க! என்பது பாடலின் பொருள்.
'கடலைச் செறாஅஅய்' குறிப்பது என்ன?
|
எப்போதுதான் அவர் வந்து சேரப்போகிறாரோ!
உன்னிடம் அன்பு கொள்ளாதவர்க்கு நீ துய்க்கும் துன்பத்தைச் சொல்கிறாயே; அதை விடக் கடலைத் தூர்ப்பதற்கு நீ முயலலாம் நெஞ்சமே! வாழ்த்துக்கள்!
காட்சிப் பின்புலம்:
தன்னிடம் விடைபெற்றுப் பணிக்காக அயல் சென்றுள்ள கணவன் வருகைக்காகத் தலைவி காத்திருக்கிறாள். எந்த நேரமும் அவனையே நினைத்துக் கொண்டிருந்ததால் உடல் மெலிந்து நிறம் மாறித் துயர் உற்றுக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது உலகத்து மற்ற கணவன் -மனைவி உறவு நிலைகள் எப்படியிருக்கும் என எண்ணத் தொடங்கினாள். மனமொத்த கணவன் - மனைவி முழுமையான காம இன்பம் பெற்றுக்கொண்டிருப்பர்; கணவன் சமயம் அறிந்து அன்பு காட்டுவது வேண்டும் காலத்தில் மழை பொழிவது போன்றதாகும்; விருப்பம் இல்லா காதலர் வாழ்க்கை உரிமையற்ற இன்பமில்லா வாழ்க்கையாய் துன்பம் மிகுந்ததாய் இருக்கும்; இந்தக் காதற்கடவுள் ஏன் இருவருள் ஒருவரிடத்தே பொருந்தி வருத்துகின்றான்? என்றபடி அவளது எண்ண ஓட்டங்கள் இருந்தன. 'தாம் காதலிப்பவரிடமிருந்து என்றைக்கு இல்லம் திரும்புகிறார் என்ற இனிய செய்தி ஏதும் கேளாது துயரத்தைத் தாங்கிக்கொண்டு வாழ்பவரை விடவும் கல்நெஞ்சம் கொண்ட பெண்கள் உலகில் வேறு யாரும் கிடையாது' எனத் தன்னைதானே நொந்து கொள்ளவும் செய்கிறாள். 'என்னிடம் அன்பு செலுத்தாமல் போகட்டும்; அவர் கூறும் இனிய சொற்களைக்கூடக் கேட்க முடியாதா?' என ஏங்கி நிற்கிறாள். இவ்விதம் காத்துக் காத்துப் பொறுமை இழந்தவளாகக் காணப்படுகிறாள்.
இக்காட்சி:
இப்பாடலிலுள்ள ‘உறாஅர்க்கு’ என்ற சொல்லுக்குக் காதல்நோய் உறாதவர்க்கு என்று பொருள் கொள்வர்.
கணவர் விரைவில் திரும்பி வந்து தன் பக்கத்திலிருந்து அருள் நல்கவில்லையே என மீளாத் துயரத்தில் இருக்கிறாள் தலைவி. அவர் அன்புகொள்ளாதவராக இருக்கிறாரே எனப் புலம்பித் தவிக்கிறாள்.
அவ்வாற்றாமையை அவளது நெஞ்சு தலைவனிடம் தூதாய்ப் போய் உரைக்க ஆயத்தமாய் இருப்பதாய் கற்பனை பண்ணி தன் நெஞ்சுடன் பேசத் தொடங்குகிறாள்: 'நான் படும் வேதனை ஏன அவர்க்குத் தெரியவில்லை. நெஞ்சே நீ அதை அவர்க்கு உரைக்கக் கருதுகிறாய். அப்படியும் அவர் விரைந்து வரமாட்டார்; அவர் நோக்கப்படிதான் வருவார் என்றே தெரிகின்றது. நீ சொல்வதாலும் அவர் விரைந்து வர மாட்டார். அதைவிடக் கடலைத் தூர்த்துவிடுதல் எளிதாக இருக்கும் அதை முயற்சி செய்' என வெறுப்புடன் தன் மனக்கொதிப்பை நெஞ்சிடம் காட்டுகிறாள்.
'நீ சென்று உரைத்து உறவை மறந்த அவர் வந்து தண்ணளி செய்வார் என்பது முடியக்கூடியதல்ல, அவ்விதம் நடவாத ஒன்றைவிடக் கடலைத் தூர்ப்பது எளிதாக இருக்குமே! அதைச் செய் என் நெஞ்சே! வாழ்த்துக்கள்! எனப் பொறுக்கமாட்டாது அவள் கூறுகிறாள்.
|
'கடலைச் செறாஅஅய்' குறிப்பது என்ன?
'கடலைச் செறாஅஅய்' என்ற தொடர்க்கு நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாயாயின் அஃது அதனினும் நன்று, விரகக்கடலைச் செறாய், நம்மை வருத்துகின்ற பெருங்கடல் ஆகிய வெள்ளநீர் ஒலியைச் செறுத்து வாழ்வாயாக, நினக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக, அதைவிட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக, உனது காமக் கடலைத் தூர்க்க முயல்வாயாக! அஃது அதனினும் எளிது, கடலை வெறுக்காதே, முழங்கும் கடலை வீணே வெறுக்காதே, (இப்போது) கடல் போல் உன்னுள் வளர்ந்துவிட்ட காம ஆசையை அடக்கிக் கொள், நம்மை வருந்தச் செய்யும் கடல்மேல் நீ சினந்து உரையாதே!, உன்னைத் துன்புறுத்துங் கடலைக் கோபித்துத் தூர்க்க முயல்வாயாக. உனக்குத் துன்பம் செய்கின்ற கடலை வெறுக்க மாட்டாய்!, துயரக் கடலைத் தூர்ப்பாயாக, உனக்குத் துயர் விளைக்குங்கடலைத் தூர்க்க முயல்வாயாக அது உனக்கு எளிது என்றவாறு உரைகாரர்கள் பொருள் கூறினர்.
கடலை என்ற சொல்லுக்கு நீர் சூழ்ந்த 'ஆழியை என்று அனைவரும் பொருள் கொண்டனர். செறாஅஅய் என்ற சொல்லுக்குத் தூர்ப்பாயாக, வெறுக்காதே, சினம் கொள்ளாதே, அடக்குக எனப் பலவாறாகப் பொருள் கூறப்பட்டது.
கடல் மேல் ஏன் வெறுப்பும் சினமும் கொள்ள வேண்டும் என்பதற்கு 'கடல் காட்சி காதலை மிகுதிப்படுத்தும். காதலனின்றிக் கடற்காட்சியால் வருந்தும் தலைவியின் நெஞ்சம் கடலை வெறுக்க முனைகின்றது' என்றும் 'கடலலை ஓசை காமத்துன்பத்தை மேலும் வளர்க்கும்' என்றும் விளக்கினர்.
* தூர்ப்பாயாக என்றவர்கள் 'என் மாட்டு அன்பு உறாதவர்க்கு நீ உற்ற நோயைச் சொல்ல நினையா நின்றாய்; அதனினும் நன்று நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாயாயின் நன்று' என்றும் 'உன் துன்ப மிகுதிக்குக் காரணமான கடலைத் தூர்க்க முயல்வாயாக' என்றும் பொருளுரைத்தனர்.
* வெறுக்காதே எனப் பொருள் கொண்டவர்கள் 'நெஞ்சினால் நம்மொடு சிறிதும் பரிவு உறாராகிய நம் காதலர்க்கு நாம் உறுநோய் கூடக் கூடச் சென்று சென்று கூறுவாயாக; மற்று அல்லவாயின் நம்மை வருத்துகின்ற பெருங்கடல் ஆகிய வெள்ளநீர் ஒலியைச் செறுத்து வாழ்வாயாக என் நெஞ்சே!', 'நெஞ்சே! கடலை வெறுக்காதே', 'முழங்கும் கடலை வீணே வெறுக்காதே', 'நெஞ்சே, நீ வாழ்வாயாக! உன்னை வந்து கூடாத தலைவர்க்கு உனது காம நோயினைச் சொல்ல முயல்வாயாக அதனை விட்டு நம்மை வருத்தும் கடலை வீணாகே வெறுக்காதே', 'தலைவனிடத்துக் காமநோய் சொல்வதை விடுத்துக் கடலை ஏன் வெறுக்கிறாய்' என்றபடி உரைத்தனர்.
* சினம் கொள்ளாதே அல்லது முனியாதே என்றவர்கள் 'உன்னிடம் அன்பில்லாதவர்க்கு மிகுந்த காமநோயைச் சொல்லுகின்றாய். அதைவிடக் கடல்மீது கோபம் கொள்வாய் நெஞ்சே! வாழ்க' என்றும் 'நெஞ்சே நீ வாழ்வாயாக! நம்மை வருந்தச் செய்யும் கடல்மேல் நீ சினந்து உரையாதே' என்றும் உரை கூறினர்.
'கடல்’ என்பதற்கு விரகக் கடல் என உருவகமாகவும் கடல்போன்ற காமஆசை என உவமையாகவும் பொருள் கண்டனர் சிலர். விரகக் கடல் என்ற உரைகாரர் 'விரகக்கடலைச் செறாய்' என்றார். காம ஆசை எனக் கொண்ட உரையாசிரியர் 'மனமே! உன்னை வாழ்த்துகிறேன்; (நீ அடைந்த காம வேதனையைப் போலத் தாமும்) அடையாத (தால் விரைந்து வராத) அவருக்கு (அவர் வந்தபின்) நீ அடையும் காம வேதனைகளைச் சொல்லிக் கொள்ளலாம்; (இப்போது) கடல் போல் உன்னுள் வளர்ந்துவிட்ட காம ஆசையை அடக்கிக் கொள்' என உரைக்கிறார்.
பிரிந்து சென்றுள்ள கணவரிடம் நெஞ்சு சென்று தன் துன்பத்தை உரைப்பதைக்கேட்டு அவர் விரைந்து திரும்புவது கடலைத் தூர்ப்பது போன்றது. இரண்டும் முடியா. அவர் உள்ளத்தை கரைப்பதிலும், கடலைத் தூர் செய்து நிரப்புதல் எளிது. உறவை நினையாதவரிடம் என்ன சொன்னாலும் பயன் ஒன்றும் விளையப்போவதில்லை என மனம் வெதும்பிய நிலையில் தலைவி உள்ளாள் என்பது செய்தி.
'கடலைச் செறாஅஅய்' என்ற தொடர்க்குக் கடலைத் தூர்ப்பாயாக என்பது பொருத்தமான பொருளாக அமையும்.
|
உன்னிடம் அன்பு கொள்ளாதவர்க்கு நீ துய்க்கும் துன்பத்தைச் சொல்கிறாயே; அதை விடக் கடலைத் தூர்ப்பதற்கு நீ முயலலாம் (அது எளிதாம்). நெஞ்சமே! வாழ்த்துக்கள்! என்பது இக்குறட்கருத்து.
தலைவி தனிப்படர் மிகுதியால் ஆற்றாளாகி, 'கணவர் அளிசெய்ய விரைந்துவருவார் என்பதும் கடலைப் புரட்டிப் போடுவதும் நடவா' என்கிறாள்.
அன்பு கொள்ளாதவர்க்கு நீ உறும் துன்பத்தை உரைப்பாயாக. உரைத்தும் என் பயன்; அவர் வரப்போவதில்லை; அதனினும் கடலைத் தூர்க்க நீ முயலலாம் என் நெஞ்சமே! (அது எளிதாம்) வாழ்த்துக்கள்!
|