காமமிகுதியால் தலைவன் நாண் துறத்தலைக் கூறுவது இவ்வதிகாரம். அதிகாரத்தின் 1-7 குறள்கள் ஆற்றானாகிய தலைவன்தன் நாண்துறவுஉரைத்தல் என்றும் 8, -10 குறள்கள் அறத்தொடுநிற்றலை மேற்கொள்ளக் கருதும் தலைமகள்தன் நாண்துறவு உரைத்தல் என்றும் பல உரையாளர்கள் கூறுவர். ஆனால் பாக்கள் அனைத்தையும் தொல்லாசிரியர் காலிங்கர் உரைப்பதுபோலத் தலைவன் கூற்றாகக் கொள்வதே பொருத்தம். தலைவியைக் காண முடியாத துயரைப் பொறுக்கமாட்டாத தலைவன், தலைவியை மணப்பதற்காகத் தன் காதலை ஊரார் அறியச் செய்வதற்காகத் தன் நாணத்தை விட்டு மடல் ஏறுவேன் என்கிறான் இங்கு. ஊரார் எள்ளி நகையாடுவார்களே என்று எண்ணி நாணாமல் அந்த நாணத்தைத் துறந்து மடலேறுவேன் என்று கூறியதால் இந்த அதிகாரம் 'நாணுத்துறவுரைத்தல்' என்னும் பெயர் பெற்றது.
அதிகாரம் முழுமையுமே மடலேறுதல் பற்றிய ஒரு கருத்தாடலாக அமைந்துள்ளது.
மடலேறுதலானது, மடல், மடலூர்தல் என்றும் அறியப்படும். தான் காதலித்துக் கலந்தவளைக் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்து தன்னைத்தான் ஒறுத்து-வருத்தி அழித்துக் கொள்ள முயல்வது மடலேறுதலாம்.
தன் உள்ளங் கவர்ந்த பெண்ணை அடைவதில் இடையூறுகள் ஏற்படுவதை உணர்ந்த காதலன், அதை வெல்ல, எல்லா வழிகளையும் முயன்று, அவற்றில் தோற்று, இறுதியாக மடலேறுதலே தனக்குள்ள ஒரேவழி என்ற முடிவுக்கு வருகிறான். உடலுக்கும் உள்ளத்திற்கும் வருத்தம் உண்டாக்கும் மடலூர்தல் ஒரு கடினமான முடிவுதான். இதனால் அவனது தனிப்பட்ட மானம், உள்ளத்திண்மை இவற்றை இழக்க நேரிடும். ஊர்மக்கள் மடலேறுவோரைப் பரிவுடன் நோக்குவதில்லை; இகழ்ச்சிக் குறிப்புடனே பார்ப்பர்.
மடல் பற்றி குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை ஆகிய சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
மடல் என்பது பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையைக் (மடல்மா) குறிக்கும். இக்குதிரைக்கு ஆவிரம்பூ மாலையும் மணியும் அணிவர்.
மடலேறுதல் என்பது காதலன், இக்குதிரையின் மீதேறி அதைச் செலுத்துவதைக் குறிக்கும். இக்குதிரையின் கீழ் உருளைகளைப் பொருத்தி கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வர். அவன் மார்பில் எலும்பு மாலையும் தலையில் எருக்க மாலையும் கொண்டு மடல்மாமேல் ஏறித் தெருவில் வருவான். தன் காதலி யார் என்று ஊருக்குச் சொல்லும் வகையில் கையில் அவள் உருவம் வரையப்பட்ட ஒரு கிழியை (கிழி = ஓவியம் வரையப்பட்ட துணி). ஏந்திக் கொண்டு, உடம்பெங்கும் சாம்பல் பூசி, அரைகுறை ஆடையில் தெருக்களில் திரிந்து, அவன் ஊர் மன்றம் செல்வான். அப்பொழுது மடலூர்பவன் உடலெங்கும் பனங்கருக்குக் குத்திக் குருதி வெளிவரும். மடலேறுதல் ஒரு தற்கொலை முயற்சி என்றும் சொல்வர்.
தலைவனின் காதல் வன்மையை ஊருக்கு உணர்த்துதலே மடல் ஏறுவதன் நோக்கம் ஆகும். தலைவனின் துன்பத்தை ஊர் மன்றத்தோர் கண்டு, அவனுடைய துன்பம் தீர்வதற்காகத் தலைவியை அவனுடன் சேர்த்து வைக்க முயல்வார்கள். அதன் பயனாக தலைவன் தலைவியை அடைய வாய்ப்பு இருந்தது. மேலும் தலைவனின் காமத்துயரம் நீங்க மடல் உதவும் என்று கருதப்பட்டதால் மடல் என்பதைக் காமக்கடலை நீந்துவதற்குரிய தெப்பம் என்று பழம்நூல்கள் கூறுகின்றன.
தலைவியின் காதலொழுக்கம் பற்றி ஊர்மகளிர் கூடியிருந்து முணுமுணுத்துப் பேசுவது அம்பல் என்றும் வெளிப்படையாகப் பேசுவது அலர் எனவும் சொல்லப்படும். தலைவன் மடலூர்ந்ததால் தலைமக்களின் காதல் அம்பலும் அலருமாயிற்று அதாவது ஊர் முழுக்க அச்செய்தி பரவிவிட்டது. இதைக் குறிப்பால் உணர்த்துகிறது ஒரு பாடல் (1139). மடலூர்தல்வழி தலைவனது காதல் திட்பத்தையும் அவன் காதலில் வீழ்ந்த தலைவியையும் ஊரார் அறிவர்.
மடலேறுதல் காமநோயைத் தணிக்கும் என்றும் பழம் இலக்கியங்கள் கூறுகின்றன.
காதலன் மடலேறுவது குறிப்பால் இவ்வதிகாரத்தில் உணர்த்தப்படுகிறது.
மடல் ஊர்வேன் என்று கருதுதலும் சொல்லுதலும் மடல் ஊர்தலும் ஆடவர்க்கு உரிய என்றும், மடல் ஊர்வேன் என்று கருதுதலும் சொல்லுதலும் மகளிர்க்கு உரிய என்றும் கூறுவர்.
மடல் ஏறுவேன் எனக் கூறுதல் அகத்திணைக்கும், மடலேறுதல் பெருந்திணைக்கும் உரியவாம் எனவும் உரைத்தனர். வள்ளுவர் ஒருதலைக் காதலை குறளில் எங்கும் பேசவில்லை. வள்ளுவரின் தலைமக்கள் மனம் ஒன்றிய காதலர்களாகவே காணப்படுகின்றனர்; எனவே இது பொருந்தாக் காமம் ஆகாது.
மடலூர்தலைப் பெண்ணானவள் ஏற்றுச் செய்யாமையும், காமத்தால் தன் உடலும் உள்ளமும் உணர்வும் அழுத்தப்படுகின்ற நிலையை வெளிப்படுத்தாமையும் பெண்ணுக்குள்ள சிறந்த குண நலன்களாகக் கருதப்படும். பெண்ணானவள் தன்னுடைய காதலுணர்வைப் போர்க்குணத்துடன் ஊரார்க்கு வெளிக்காட்டாத பண்பை இவ்வதிகாரத்து ஒரு குறள் (1137) சிறப்பாகப் போற்றுகிறது.
மனம் ஒத்த காதலர்கள் தடைகளை மீறி இணைய மடல் பயன்படுகிறது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது என்பார் தெ பொ மீனாட்சிசுந்தரம்.
மடலேறுதல் குரூரமான முறையாகத் தோன்றினாலும் இது ஒரு நேர்மையான அணுகுமுறை எனலாம். ஒருவன் தான் மணக்க விரும்பும் பெண்ணைப் பெறுதல் அரியது என்ற நிலை உருவாகும் போது பெற்றோரால் பாதுகாக்கப்படும் பெண்ணைச் சிறைஎடுத்தல் போன்ற வன்செயல்களில் ஈடுபடாது அமைதியான வழியில் அவளைப் பெற முயற்சிக்கிறான். ஆயினும் செப்பமற்ற அணுகுநெறி என்பதாலும் காதலி, அவரது வீட்டார் ஆகியோரது நற்பெயர் களங்கப்பட வாய்ப்பு உள்ளதால் மடலேறல் விரும்பத்தக்கது அல்ல என்பது விளங்கும்.
நாண், நல்லாண்மை இவற்றைக் காதலன் இழப்பான் என்றும், ஊரார்முன் அவன் நகைப்புக்குள்ளாகிறான் என்றும் குறட்பாக்கள் சொல்வதால், மடலேறுதலை வள்ளுவர் ஏற்கவில்லை என்றே தெரிகிறது.
இவ்வழக்கு தற்போது இல்லை.