இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1138நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறைஇறந்து மன்று படும்

(அதிகாரம்:நாணுத்துறவு உரைத்தல் குறள் எண்:1138)

பொழிப்பு (மு வரதராசன்): இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!

மணக்குடவர் உரை: நிறையிலர், மிக அளிக்கத்தக்கா ரென்னாது என் காமமானது மறைத்தலைக் கடத்தலுமன்றி மன்றின்கண் படரா நின்றது.
இஃது அம்பலும் அலரும் ஆகாவென்று தோழி பகற்குறி மறுத்தது.

பரிமேலழகர் உரை: (காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது.) நிறை அரியர் - இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது; மன் அளியர் என்னாது - மிகவும் அளிக்கத்தக்கார் என்று இரங்குதல் செய்யாது; காமம் மறை இறந்து மன்றுபடும் - மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது.
('என்னாது' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'மன்று'என்பது தந்தை தன்னையரை நோக்கி. உலகத்துப் பெண் பாலார் காமத்து இயல்பு கூறுவாள் போன்று தன் காமம் பெருகியவாறும், இனிஅறத்தோடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பால் கூறியவாறாயிற்று ).

இரா சாரங்கபாணி உரை: மனத்தை கண்டபடி ஓடவிடாமல் தடுத்து நிறுத்தும் தன்மையால் சிறந்தவர். மிகவும் இரங்கத்தக்கவர் என்று என்னிடம் அன்பு காட்டாமல் இக்காமம் மறைத்தலைக் கடந்து தெருவிலே வெளிப்படுத்தி விட்டதே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறைஇறந்து மன்று படும்.

பதவுரை: நிறை-(நிலை) நிறுத்திய குணம்; அரியர்-மீறுதற்கு முடியாதவர்; மன்-மிகுதி; அளியர்-அன்பு காட்டத் தக்கவர்; என்னாது-என்று கருதாது; காமம்-காதல்; மறை-மறைத்தல், ஒளித்தல்; இறந்து-கடந்து; மன்று-பொதுஇடம்; படும்-வெளிப்படும், உண்டாகும்.


நிறையரியர் மன்அளியர் என்னாது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிறையிலர், மிக அளிக்கத்தக்கா ரென்னாது;
பரிப்பெருமாள்: நிறையிலர், நனி அளிக்கத்தக்கார் என்னாது;
பரிதி: செங்கோல் அறியாது அரசின் கொடுமை அறியாது வங்கிஷம் அறியாது உயிர்பாராது;
காலிங்கர் ('நிறையரிது' பாடம்): அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி என்னும் நாற்பெருங் குணத்துள்ளும் நிறை என்கின்றது ஒருவன் தான் தன்னைச் சமைத்துக் கொள்ளும் வன்மையுடைமை யாதலால் மற்று அதன் இறப்பானது சாலப் பெறுதற்கு அரிதாயுள்ள தொன்று; மிகவும் அதனால் அளிக்கத்தக்கார்; இவரை நாம் எளிமைப்படுத்தலாகாது என்னாது;
பரிமேலழகர்: (காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது.) இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது; மிகவும் அளிக்கத்தக்கார் என்று இரங்குதல் செய்யாது; [காப்புச் சிறை-காவலாகிய சிறை. தான் நினைத்தவாறு ஒழுகுதல் இன்றிப் பிறர் நினைத்தவாறே ஒழுகும்படி காத்தல் சிறை எனப்படும்; மீதூர்தற்கு-மேற்கொள்ளுதற்கு]
பரிமேலழகர் குறிப்புரை: 'என்னாது' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவிக்கப்பட்டது.

மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'திட்பமற்றவர் அருளத்தக்கவர் என்னாது' என்று பொருளுரைத்தனர். பரிதி உரை அவர் தலைவனை ஓர் வேந்தனாக நினைந்து எழுதியதாக அறிவிக்கிறது; இது தெளிவில்லாததாக உள்ளது; அவர் உரைக்குப் பாடவேறுபாடு காரணமாக இருக்கலாம். காலிங்கர் தலைமகன் கூற்று எனக் கொண்டு நிறை என்பதை ஆடவருக்குரிய நாற்குணங்களுள் ஒன்றாகக் கருதி உரை எழுதியுள்ளார். பரிமேலழகர் 'நிறையால் நாம் மேற்கொள்ளுதற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது; மிகவும் அளிக்கத்தக்கார் என்று இரங்குதல் செய்யாது' என்றும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'திட்பமற்றவர் அருளத்தக்கவர் என்னாது', 'இவர் கற்புடையராதலின் மேற்பட்டு வெல்லுதல் இயலாதென்று அஞ்சாது இரங்கத் தக்கார் இவரென்று இரக்கம் வையாது', 'இவர் கற்பைக் கடப்பதற்கு அரியராவார் என்று அஞ்சாது மிகவும் இரக்கத்துக்குரியர் என்று இரங்காது', 'பெண்கள் காமத்தை அடக்கிக் கொள்ளும் தன்மை மிகுந்தவர்கள் என்பதையும் இரக்கமுடையவர்கள் என்பதையுங்கூட மதிக்காமல்' என்ற பொருளில் உரை தந்தனர்.

நிறைகுணத்தான், அருளத்தக்கவன் என்று பாராமல் என்பது இப்பகுதியின் பொருள்.

காமம் மறைஇறந்து மன்று படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என் காமமானது மறைத்தலைக் கடத்தலுமன்றி மன்றின்கண் படரா நின்றது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அம்பலும் அலரும் ஆகாவென்று தோழி பகற்குறி மறுத்தது.
பரிப்பெருமாள்: காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் படா நின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அம்பலும் அலரும் ஆகாவென்று தோழி பகற்குறி மறுத்தது.
பரிதி: இவள் கொடுத்த மடல் மன்றுபடும் என்றவாறு.
காலிங்கர்: என்வயிற் காமமானது என்னையும் கொண்டு அங்குப்பட்ட களவியலைக் கடந்து சென்று யாவரும் அறிய மன்றத்து வெளிப்படும் ஆயின் யான் செயற்பாலது என்னை எனத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது என்றவாறு.
பரிமேலழகர்: மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'மன்று' என்பது தந்தை தன்னையரை நோக்கி. உலகத்துப் பெண் பாலார் காமத்து இயல்பு கூறுவாள் போன்று தன் காமம் பெருகியவாறும், இனிஅறத்தோடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பால் கூறியவாறாயிற்று. [மன்று' என்பது இங்குத் தந்தை தமையன்மார் கூடிய கூட்டமாம்]

'என் காமமானது மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமம் ஒளிக்க முடியாமல் அம்பலப்படும்', 'காமமானது மறைப்பைக் கடந்து அவைக்கண்ணே வெளிப்படக்கூடியது ஆயிற்று', 'காமம் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாய் இருந்தது (தலைவி கூற்று.)', 'இதுவரைக்கும் என் மனதுக்குள்ளேயே மறைவாக இருந்த என் காமம் இப்போது வெளிப்படையாகவும் வந்துவிட்டது' என்றபடி பொருள் உரைத்தனர்.

என் காமம் ஒளிக்க முடியாமல் மற்றவர்முன் வெளிப்படுமே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நிறையரியர், அருளத்தக்கவன் என்று பாராமல் என் காமம் ஒளிக்க முடியாமல் மன்றத்தில் வெளிப்படுமே என்பது பாடலின் பொருள்.
'நிறையரியர்' யார்?

நாண்துறந்து மடலேறிப் பொதுவிடத்தில் தான் வரும்போது தன்னுடைய நற்குணங்களை யாரும் கருதமாட்டார்களே! என நாணிக் கூறுகிறான் தலைவன்.

‘நிறை குணத்தவர் இவர்’ என்றும், ‘இரங்கத்தவர் இவர்’ என்றும் பாராது, மடலூர்தலில், எங்கள் காதல் மறைவிலிருந்து நீங்கி, மன்றத்தில் தானாக வெளிப்பட்டுவிடுமே!
காட்சிப் பின்புலம்:
தன் காதல் முற்றுப்பெற முடியாமல் இடர் ஏற்படுவதாகத் தலைவன் அறிகிறான். தலைவி வீட்டுச்சிறையில் இருப்பதாகத் தெரிகிறது. அவளைக் காண முடியாத சூழ்நிலை தலைவனுக்கு உண்டானதால் அத் துன்பத்தைத் தாங்கமாட்டாதவனாகிறான் அவன். தன் காதலை ஊரார் அறியச் சொல்லித் தலைவியை மணமுடிக்கும் முயற்சியாக மடலேறத் துணிகிறான். உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் உண்டாக்கும் மடல் ஒரு கடினமான முடிவு. மடலூர்தலால் அவன் தன் மானம், உள்ளத்திண்மை இவற்றை இழப்பான். இப்பொழுது மடலேறும் எண்ணத்தையும் மாலைக்காலம் தரும் துயரையும் அவள் எனக்குத் தந்துள்ளாள் என வருந்திக் கொண்டிருக்கிறான். ஊர் உறங்கும் வேளையில் கூட மடலூர்தலையே எண்ணிக்கொண்டிருப்பதால் அவனது தூக்கமும் தொலைந்தது. அதேநேரம், கடல்போன்ற காமம் தம்மை அழுத்தினாலும் மடலேறுவதைக் கருதாத பெண்ணின் பெருமையே பெருமை எனப் பெண்களின் பொதுமைப் பண்பைப் போற்றிக் கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
மடலேறும் வேளையில் தலைவனின் எண்ண ஓட்டத்தைச் சொல்லும் பாடல் இது.
நிறைஅரியர் என்ற தொடர் நற்குணங்களிலிருந்து மீறுவதற்கு அரியராவர் எனப்பொருள்படும்; மன் அளியர் என்ற தொடர்க்கு மிகவும் அன்பு காட்டத் தக்கவர் என்பது பொருள்; காமம் என்ற சொல் காமச்செயல் குறித்து வந்தது.
தலைவனுக்குத் நிறைஅரியர், மன் அளியர் ஆகிய தன் நற்குணங்களின்மேல் நல்ல நம்பிக்கை உண்டு. அதாவது தான் நல்ல குணங்களிலிருந்து பிறழ்பவன் அல்லன் என்பதில் பெருமிதம் கொள்பவன் அதனால் அன்பு காட்டத் தக்கவன் என்று நம்புபவன்.
நாண் துறந்து தான் மடலில் ஊருக்குள் செல்லும்பொழுது தன் களவுக் காதல் மறைப்பொழிந்து ஊரார் முன் வெளிப்பட்டுவிடுமே! அப்பொழுது தான் நிறைகுணம் கொண்டவன் என்பதையும் மிகவும் அன்பு காட்டத் தக்கவன் என்பதையும் கருதி இவரை நாம் எளிமைப்படுத்தலாகாது என்று ஊர் எண்ணுமா என்பதை நினைத்துப் பார்க்கிறான்.
உள்ளத்தை நிறுத்தும் தன்மையால் சிறந்தவர் என்றோ அல்லது அருள் நெஞ்சம் கொண்டவர் என்றோ எண்ணி இரங்கி என் தலைவியை என்னுடன் சேர்த்து வைக்க ஊரார் உதவ மாட்டார்களா? என்ற ஏக்கமும் அவனிடத்துத் தெரிகிறது.

இக்குறளைத் தலைவி கூற்றாகக் கொண்டு இது பெண் நாண்துறத்தல் பற்றியது என்று பெரும்பான்மை உரையாசிரியர்கள் எழுதினர். காலிங்கர் மட்டும் தலைவனது கூற்றாகக் கொண்டு ஆணினது நாண்துறவு பற்றி இப்பாடல் கூறுகிறது என்றார். இப்பாடலில் குறிக்கப்பெற்ற நிறை என்னும் சொல் ஆண்களுக்குண்டான நான்கு குணங்களுள் (அறிவு நிறை ஓர்ப்பு (ஆராய்தல்), கடைப்பிடி (துணிந்த ஒருண்மையினை விடாது பற்றுதல் ஆகிய நான்கு)) ஒன்றான நிறை அதாவது 'காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்' பற்றிச் சொல்வதாக இவர் உரை அமைத்தார். அதிகாரப் போக்கிற்கும் தலைவன் கூறுவதாகக் கொள்வது மிகப் பொருந்தியே வருகிறது. எனவே இவ்வுரை ஏற்கத் தக்கதே.

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும் (நிறையழிதல் 1254 பொருள்: நானோ மனத்திண்மை கொண்டவள் நான் என்று கருதிக்கொண்டிருப்பேன்; ஆனால் என் காதல்வேட்கை மறைத்தலைக் கடந்து பொதுவெளிக்கு வந்துவிடும்போல) என்று தலைவி தன் நிறையழிதலை வேறோரிடத்தில் கூறும் பாடல் இக்குறளின் சொல்லாட்சியை ஒட்டி அமைந்துள்ளது. அங்கு அது காதலியின் கூற்று. இங்கு தலைவன் கூறுவதாக உள்ளது.

மன்று என்பது இங்கு பொதுவெளி என்ற பொருள் தரும். இது மன்றம் என்றும் அறியப்படுவது. ஊரின் நடுவில் ஆல் அல்லது பிற பெரிய மரத்தினருகில் உள்ள பொதுவிடமே மன்று எனப்படும். அங்கு ஊரவை கூடுவது மட்டுமன்றிப் பொதுவாக விழாவெடுக்கவும் விளையாட்டுக்களுக்கும் ஊரார் அனைவரும் அவ்விடத்துக் கூடுவர். இன்றும் இத்தகைய பொதுவிடத்தைச் சிற்றூர்களில் காணலாம்.
இங்கு இச்சொல் வெளிப்படையாய் அதாவது மற்றவர் முன்னிலையில் என்ற பொருளில் ஆளப்பட்டது. மன்று படும் என்ற தொடர் பலர் கூடும் மன்றின்கண் வெளிப்படும் எனப் பொருள் தரும்.

'நிறையரியர்' யார்?

'நிறையரியர்' என்றதற்கு நிறையிலர், நிறை என்கின்றது ஒருவன் தான் தன்னைச் சமைத்துக் கொள்ளும் வன்மையுடைமை யாதலால் மற்று அதன் இறப்பானது சாலப் பெறுதற்கு அரிதாயுள்ள தொன்று, நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர் (என்று அஞ்சுதல் செய்யாது), நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், நிறையைக் காப்பாற்ற முடியாத அரியர் ஆயினர் (என்று இரங்காமலும்), திட்பமற்றவர், மனத்தை கண்டபடி ஓடவிடாமல் தடுத்து நிறுத்தும் தன்மையால் சிறந்தவர், காமத்தை அடக்கிக் கொள்ளும் தன்மையில் மிகுந்தவர்கள், மனத்தை அடக்கிக் காக்க முடியாதவர், கற்புடையராதலின் மேற்பட்டு வெல்லுதல் இயலாதென்று அஞ்சாது (இரங்கத் தக்கார் இவரென்று இரக்கம் வையாது), கற்பைக் கடப்பதற்கு அரியராவார், மனதை ஒருநிலைப்படுத்தும் திட்பமும் இல்லை, இவர் நிறை யென்னும் அடக்கப் பண்புடைமையால் இவரை நாம் மேற்கொள்வது அரிது (என்று அஞ்சுதல் செய்யாது), அறநெறியில் நிற்பவர்கள் எனப் பலவாறாக உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நிறைஅரியர் என்ற தொடரை குறட்கருத்துடன் இயைபுபடுத்துவதில் உரையாசிரியரகள் வேறுபட்டனர்.
‘நிறையரியர்’ என்பதற்கு நிறையிலர் என மணக்குடவரும் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது எனப் பரிமேலழகரும் பொருள் கண்டனர். அடக்கத்தில் மிகுந்தார், அறநெறியில் நிற்பவர், உள்ளத்தை நிறுத்தும் தன்மையால் சிறந்தவர் என இன்றைய ஆசிரியர்கள் பொருள் கொள்வர்.
காலிங்கர் 'நிறையரிது' எனப் பாடம் கண்டு 'அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி என்னும் நாற்பெருங் குணத்துள்ளும் நிறை என்கின்றது ஒருவன் தான் தன்னைச் சமைத்துக் கொள்ளும் வன்மையுடைமை யாதலால் மற்று அதன் இறப்பானது சாலப் பெறுதற்கு அரிதாயுள்ள தொன்று' என இத்தொடர்க்கு விரிவான விளக்கந் தருவார்.
நிறை என்பது மனத்தைஒரு நிலையில் நிறுத்துவதைக் குறிக்கும் சொல். அரியர் என்ற சொல்லுக்கு மீறுதற்கு முடியாதவர் எனப் பொருள் கொண்டால், நிறைஅரியர் என்ற தொடர் மனத்தை கண்டபடி ஓடவிடாமல் தடுத்து நிறுத்தும் மன உறுதியை மீற மாட்டாத நற்குணம் கொண்டவர் எனப் பொருள்படுவதாகிறது.

நிறையரியர் என்னும் தொடர் உள்ளத்தை நிறுத்தும் தன்மையால் சிறந்து நிற்பவர் என்ற பொருள் தரும்.

நிறைகுணம் கொண்டவன், இரங்கத்தக்கவன் தான் என்பவை கருதப்படாமல் தன் காமம் ஊரார் முன் வெளிப்பட்டுத் தான் நாணிழக்க நேரிடுமே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதல் வெட்கமறியாது என்னும் நாணுத்துறவுரைத்தல்.

பொழிப்பு

நிறைகுணத்தான், மிகவும் அன்புகாட்டத் தக்கவன் என்று பாராமல் என் காமம் ஒளிக்கமுடியாது ஊர்முன்னால் வெளிப்பட்டுவிடுமே,