இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1132



நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து

(அதிகாரம்:நாணுத்துறவுரைத்தல் குறள் எண்:1132)

பொழிப்பு (மு வரதராசன்): (காதலியின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்திவிட்டு மடலூரத் துணிந்தன.

மணக்குடவர் உரை: பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்: நாணினை நீக்கி நின்று.
இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.

பரிமேலழகர் உரை: ('நாணுடைய நுமக்கு அது முடியாது', என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன; நாணினை நீக்கி நிறுத்து - அதனை விலக்குவதாய நாணினை அகற்றி.
('வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகுபெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி முதலிய முன்னே நீங்கவும் நாண் நீங்காது நின்றது. அதுவும் இது பொழுது நீங்கிற்று என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதாம் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற்குறை நேர்தல் நோக்கி.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: தலைமகளைக் காணப் பெறாமையால் வந்த வருத்தத்தைத் தாங்க முடியாத உடம்பும் உயிரும், வெட்கத்தை விலக்கித் தூர நிறுத்திவிட்டு மடற் குதிரையை ஏறத் துணிகின்றன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும் நாணினை நீக்கி நிறுத்து.

பதவுரை: நோனா-நோவு தாங்காத, வலி பொறாத; உடம்பும்-யாக்கையும்; உயிரும்-உயிரும்; மடல்-பனங்கருக்கு (குதிரை); ஏறும்-ஊரும்; நாணினை-வெட்கத்தை; நீக்கிநிறுத்து-நீக்கி நிறுத்தி, அகற்றி, தள்ளி வைத்துவிட்டு, எடுத்து எறிந்து.


நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்:
பரிப்பெருமாள்: பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்:
பரிதி: யாமுற்ற காமநோய் பொறுக்கலாவுடம்பும் உயிரும் மடலேறாயிருந்தது;
காலிங்கர்: யான் உற்ற காமநோய் பொறுக்கலா உடம்பும் உயிரும் இங்ஙனம் மடலேறுமாயிருந்தது;
பரிமேலழகர்: ('நாணுடைய நுமக்கு அது முடியாது', என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது) அவ் வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன; [அதற்கு-அவ்வருத்தத்தினை நீக்குதற்கு; ஊர-ஏறிச்செலுத்த]

'காமநோய் பொறுக்கலா உடம்பும் உயிரும் மடலேறும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமம் தாங்காத உடம்பும் உயிரும்', 'காம நோயினைப் பொறுக்க இயலாத உடம்பும் உயிரும் பாதுகாவலாக மடலேறும்', 'காதல் துன்பத்தைப் பொறுக்க முடியாத உடலும் உயிரும் அதற்குப் பாதுகாவலாகிய மடல் குதிரையை ஊரும் (ஏறும்)', 'காம நோயின் வேதனையைப் பொறுக்க முடியாமல் என் உடலும் உயிரும் மடலேறத் தூண்டுகின்றன' என்ற பொருளில் உரை தந்தனர்.

காதல்நோவைத் தாங்கமாட்டாத உடம்பும் உயிரும் மடலேறுமாயிருந்தன என்பது இப்பகுதியின் பொருள்.

நாணினை நீக்கி நிறுத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாணினை நீக்கி நின்று.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.
பரிப்பெருமாள்: நாணினை நீக்கி நிறுத்தி.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது 'நீர் கூறிய மடலேறு நாணமுடையார்க்குக் கூடுமோ!' என்ற தோழிக்கு, நாணினை நீக்கி உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.
பரிதி: முன்னின்ற நாணினையும் எடுத்தெறிந்து இதிலே வலிபெறுகின்றது என்று உரைத்தான் தலைமகன் என்றவாறு.
காலிங்கர்: முன்னின்ற நாணினையும் எடுத்து எறிந்து;
காலிங்கர் குறிப்புரை: இனி என்னை செயற்பாலது என்று பின்னும் இதனையே வலிபெறுத்து உரைத்தான் தலைமகன் என்றவாறு.
பரிமேலழகர்: அதனை விலக்குவதாய நாணினை அகற்றி. [அதனை-மடன்மா ஏறுதலை]
பரிமேலழகர் கருத்துரை: 'வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகுபெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. அதுவும் இது பொழுது நீங்கிற்று என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதாம் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற்குறை நேர்தல் நோக்கி. [அவைதாம்-உடம்பும் உயிரும்]

'நாணினை எடுத்து எறிந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வெட்கத்தை விட்டு மடல் ஏறத் துணியும்', 'மடலேறத் தடையாக இருந்த நாணத்தைத் தள்ளி வைத்துவிட்டு', 'மடலேறுதலைத் தடுப்பதாகிய நாணினை அகற்றி விட்டு', 'வெட்கத்தையும் விட்டுவிட்டு' என்றபடி பொருள் உரைத்தனர்.

நாணத்தை எடுத்து எறிந்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நாணத்தை எடுத்து எறிந்து, நோனா உடம்பும் உயிரும் மடலேறுமாயிருந்தன என்பது பாடலின் பொருள்.
'நோனா உடம்பும் உயிரும்' குறிப்பது என்ன?

நாணத்தைத் தூக்கியெறிந்தேனும் காதலியை அடைவேன் என்கிறான் தலைவன்.

காதலியைக் காணப் பெறமுடியாத துன்பத்தைத் தாங்கமுடியாமல் என் உடம்பும் உயிரும், நாணத்தை எடுத்தெறிந்துவிட்டு, மடலேறப் போகின்றன என்று சொல்கிறான் தலைவன்..
காட்சிப் பின்புலம்:
தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தபின் களவுக் காதலில் ஈடுபட்டனர். இவர்களது உறவை அறியவரும் தலைவியின் பெற்றோர் அவர்களது காதலுக்கு உடன்படாமல் அவளை வெளியே செல்லவிடாமற் செய்கின்றனர். இதனால் தலைவனுக்கு அவளைப் பார்க்க முடியாமல் போகிறது. பலவேறு வழிகளில் அவளைச் சந்திக்க முயன்றும் பயன் கிட்டவில்லை. காதல்நோயோ அவனை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது. அவளை எந்த வகையானும் பெற்றே தீருவேன் என உறுதி பூண்டவன் மடலூர்வதெனத் துணிகிறான். அவளை அடைய அதைவிட நன்மை தரும் துணை வேறொன்றும் இல்லை எனச் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
என்ன முயன்றும் காதலியைக் காண்பதில் உள்ள தடைகள் தொடரவே செய்கின்றன; எந்நேரமும் அவளையே நினைந்து கொண்டிருக்கிறான் தலைவன். இது அவனது உடலுக்கும் உயிருக்கும் மிகுந்த வலியைத் தருகிறது. இந்த நோவைத் தாங்க முடியாதவன் நாண் பற்றி கருதாமல் மடலேற முடிவு செய்கிறான். மடலேறுதல் என்பது பனை மடலால் செய்யப்பட்ட குதிரை மீதேறிக் காதலியின் உருவம் எழுதிய கிழியுடன் தெருவில் திரிந்து ஊரார்க்குத் தன் காதலைத் தெரிவித்தல் ஆகும். ஊரறிய மடலேறுவது என்பது நாண் துறந்து தன்னைத் தான் வருத்தி அழித்துக் கொள்ளும் வன்முறை உள்ளடக்கிய செயலாம். அது எள்ளத்தக்கதாகவும் இழிவானதாகவும் கருதப்பட்டது. இவற்றை அறிந்து வைத்திருந்தும் நாணத்தை அகற்றிவிட்டுத் தான் மடலூர ஆயத்தமாய் இருப்பதாகக் கூறுகிறான்.
மடலேறலைத் தடுத்து நிறுத்தக்கூடியது நாணம். ஒருத்திக்காகப் பலரறிய இவ்வாறு அழிவதா என்று நாண் தடுக்கின்றது. ஆனால் நாணத்தின் தடையையும் பொருட்படுத்தாமல் உடம்பும் உயிரும் மடலேற முனைகின்றன. காதல்‌ மிக்கார்க்கு நாணம்‌ இல்லை என்பது சொல்லப்படுகிறது.

'நோனா உடம்பும் உயிரும்' குறிப்பது என்ன?

'நோனா உடம்பும் உயிரும்' என்றதற்குப் பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும், யாமுற்ற காமநோய் பொறுக்கலாவுடம்பும் உயிரும், வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும், காதலியின் பிரிவால் ஆகிய துன்பத்தைப் பொறுக்காத என் உடம்பும் உயிரும், காம உணர்வால் வருந்தும்பொழுது அத்துன்பத்தைத் தாங்க முடியாத என் உடம்பும் உயிரும், காதலியைப் பெறாமையால் உண்டாகிய நோயைத் தாங்கமாட்டாத உடலும் உயிரும், (காம நோயின் துன்பத்தைப்) பொறுக்க முடியாமல் என் உடலும் உயிரும், தலைமகளைக் காணப் பெறாமையால் வந்த வருத்தத்தைத் தாங்க முடியாத உடம்பும் உயிரும், காதல் துன்பத்தைப் பொறுக்க முடியாத உடலும் உயிரும், காமம் தாங்காத உடலும் உயிரும், துன்பத்தைப் பொறாத வுடம்பும் உயிரும், காதலியைத் திருமணத்தில் பெறாது வருந்தும் துன்பத்தினைப் பொறுக்க இயலாத உடலும் உயிரும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நோனா என்பது பொறுக்கமாட்டாத என்ற பொருள் தரும். காதல் முற்றுப்பெறாத துன்பத்தைப் பொறுக்கவொண்ணாத என் உயிரும் உடலும் நாண்நீங்கி மடலூரக்கருதின என்கிறான் தலைமகன் இங்கு. உடல்தான் வருந்துவதாகக் கூறுவது உண்டு. இங்கு உயிரும் வருந்துவதாகக் கூறப்பட்டுள்ளமை காதலின் ஆழத்தை அறிவிக்கின்றது. காதலியை உற்றறிய முடியாத உடலும், அவளது பிரிவு பொறுக்காத உயிரும் காதல் கொண்ட தலைவனை மிகவும் வருத்துகின்றன. இந்நோவைக் காப்பாற்ற மடல்மட்டுமே உண்டு என்ற முடிவுக்கு வருகிறான் அவன்.
காதல் என்பது உயிருடன் ஒன்றிய ஒன்று. அவளே அவனது உயிர் ஆகிவிட்டாளாதலால் அவளை அடையாவிட்டால் அவனது உயிர் போய்விடும் என்ற நிலை இப்பொழுது. நாணம் உடலைக் கூனிக் குறுகச் செய்யும். ஆனால் உயிரும் இங்கே துன்பப்படுவதால் அந்த உயிரின் தூண்டுதலால் துன்பத்தைப் பொறுக்காத உடலும் உயிரும் ஒருங்கே மடல் ஏறத் துணிந்துவிட்டன என்கிறான் காதலன்.
மடலூர்தல் துணிவு உயிரிழக்கும் துன்பத்தினையும் தலைவன் அடையக்கூடும் என்பதையும் குறித்து நின்றது.

'நோனா உடம்பும் உயிரும்' என்பது காதல் துன்பத்தைப் பொறுக்க இயலாத உடம்பும் உயிரும் எனப் பொருள்படும்.

நாணத்தை எடுத்து எறிந்து காதல்நோவைத் தாங்கமாட்டாத உடம்பும் உயிரும் மடலேறுமாயிருந்தன என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பெருகிய காமநோவு மடலேறத் தூண்டுகிறது என்னும் நாணுத்துறவுரைத்தல்.

பொழிப்பு

நோவு பொறுக்க இயலாத உடம்பும் உயிரும் மடல் ஏறத் துணியும், நாணத்தைத் ஒதுக்கித் தள்ளிவிட்டு.