இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1135



தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்

(அதிகாரம்:நாணுத்துறவுரைத்தல் குறள் எண்:1135)

பொழிப்பு (மு வரதராசன்): மடலேறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்குத் தந்தாள்.

மணக்குடவர் உரை: மாலைபோலச் செய்யப்பட்ட சிறுவளையினை யுடையாள் மடலோட கூட மாலைக்காலத்து உறுந்துயரினைத் தந்தாள்.
தொடலை யென்பதற்குச் சோர்ந்த வளை யெனினும் அமையும். குறுந்தொடி- பிள்ளைப்பணி. இவை ஏழும் தலைமகன் கூற்று.

பரிமேலழகர் உரை: ('இவ்வாற்றாமையும் மடலும் நுமக்கு எவ்வாறு வந்தன'? என்றாட்குச் சொல்லியது.) மாலை உழக்கும் துயர் மடலொடு - மாலைப் பொழுதின்கண் அனுபவிக்கும் துயரினையும், அதற்கு மருந்தாய மடலினையும், முன் அறியேன்; தொடலைக் குறுந்தொடி தந்தாள் - இது பொழுது எனக்கு மாலை போலத் தொடர்ந்த சிறு வளையினை உடையாள் தந்தாள்.
(காமம் ஏனைப்பொழுதுகளினும் உளதேனும், மாலைக்கண் மலர்தல் உடைமையின், 'மாலை உழக்கும் துயர்' என்றும், மடலும் அது பற்றி வந்ததாகலின், அவ்விழிவும் அவளால் தரப்பட்டது என்றும், அவள் தான் நீ கூறியதே கூறும் இளமையள் என்பது தோன்ற, 'தொடலைக் குறுந்தொடி' என்றும் கூறினான். அப்பெயர் உவமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, 'இவை அவள் தந்தனவாகலின் நின்னால் நீங்கும்' என்பது கருத்து.)

இரா சாரங்கபாணி உரை: மாலைபோல அடுக்காக வளையலை அணிந்த பெண் மடலையும் மாலைப்பொழுதில் பெரிதும் வருத்தும் காமத் துன்பத்தையும் தந்தாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தொடலைக் குறுந்தொடி மடலொடு மாலை உழக்கும் துயர் தந்தாள்.

பதவுரை: தொடலை-மாலை(போலத் தொடர்ந்த); குறுந்தொடி-சிறிய வளை(அணிந்தவள்) தந்தாள்-கொடுத்தாள்; மடலொடு-மடல் ஏறுதலுடன்; மாலை-மாலைப் பொழுது; உழக்கும்-நோகவைக்கும், வருத்தும், உறும், அனுபவிக்கும், படும்; துயர்-துன்பம்.


தொடலைக் குறுந்தொடி தந்தாள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாலைபோலச் செய்யப்பட்ட சிறுவளையினை யுடையாள் தந்தாள்;
மணக்குடவர் குறிப்புரை: தொடலை யென்பதற்குச் சோர்ந்த ('சேர்ந்த' என்றும் பாடம்) வளை யெனினும் அமையும். குறுந்தொடி- பிள்ளைப்பணி.
பரிப்பெருமாள்: மாலைபோலச் செய்யப்பட்ட சிறுவளையினை யுடையாள் தந்தாள்;
பரிப்பெருமாள் குறிப்புரை: தொடலை என்பதனைச் சேர்ந்த வளை எனினும் அமையும். குறுந்தொடி- பிள்ளைப்பணி.
பரிதி: விளையாடலாகிய பேதை தந்தாள்;
காலிங்கர்: மாலையும் சிறுதொடியும் உடைய இம்மாதராள் எமக்குத் தந்தாளே;
பரிமேலழகர்: ('இவ்வாற்றாமையும் மடலும் நுமக்கு எவ்வாறு வந்தன'? என்றாட்குச் சொல்லியது.) இது பொழுது எனக்கு மாலை போலத் தொடர்ந்த சிறு வளையினை உடையாள் தந்தாள்.

'மாலைபோலச் செய்யப்பட்ட சிறுவளையினை யுடையாள் தந்தாள் என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'விளையாடலாகிய பேதை தந்தாள்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அடுக்கிய வளையல் அணிந்தவள் தந்தாள்', 'மாலைபோலத் தொடுத்த சிறு வளையினையுடையவள் எமக்குத் தந்தாள்', 'மாலைபோலத் தொடர்ந்த சிறு வளையினை உடையாள் தந்தாள்', 'மேகலாபரணமும் அழகான வளையல்களும் அனிந்த என் காதலி எனக்குத் தந்துவிட்டாள்' என்ற பொருளில் உரை தந்தனர்.

மலர்ச்சரம்போல் சிறிய வளையல்களை அடுக்காக அணிந்தவள் தந்தாள் என்பது இப்பகுதியின் பொருள்.

மடலொடு மாலை உழக்கும் துயர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மடலோட கூட மாலைக்காலத்து உறுந்துயரினை.
மணக்குடவர் குறிப்புரை: இவை ஏழும் தலைமகன் கூற்று.
பரிப்பெருமாள்: மடலோட கூட மாலைக்காலத்து உறுந்துயரினை.
பரிப்பெருமாள் குறிப்புரை: அதனாலே இளையள் என்பது சொன்னானாம். தலைமகன் ஆற்றாமை கண்டு, 'நின்னால் காதலிக்கப்பட்டாள் இவ்வையத்துள் யாவள்? என்ற தோழிக்கு, 'இத்தன்மையாள்' என்று தலைமகன் கூறியது. வளையுடையார் பலருங் கூட நிற்றலின் மாலைபோலச் செய்த வளையினையுடையாள் என்று விசேடித்துக் கூறப்பட்டது. இவை எட்டும் தலைமகன் கூற்று.
பரிதி: மடலும் மா துயரமும் என்றவாறு.
காலிங்கர்: இனி அஃது யாதோ எனின், மடலோடு கூட இற்றை மாலைப்பொழுதின்கண் யாம் உழப்பதோர் துயரினை என்றவாறு.
பரிமேலழகர்: மாலைப் பொழுதின்கண் அனுபவிக்கும் துயரினையும், அதற்கு மருந்தாய மடலினையும், முன் அறியேன்.
பரிமேலழகர் குறிப்புரை: காமம் ஏனைப்பொழுதுகளினும் உளதேனும், மாலைக்கண் மலர்தல் உடைமையின், 'மாலை உழக்கும் துயர்' என்றும், மடலும் அது பற்றி வந்ததாகலின், அவ்விழிவும் அவளால் தரப்பட்டது என்றும், அவள் தான் நீ கூறியதே கூறும் இளமையள் என்பது தோன்ற, 'தொடலைக் குறுந்தொடி' என்றும் கூறினான். அப்பெயர் உவமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, 'இவை அவள் தந்தனவாகலின் நின்னால் நீங்கும்' என்பது கருத்து. [அது பற்றி-காமம் பற்றி; இவை-மாலை உழக்குந்துயரும் மடலும்]

'மடலோட கூட மாலைக்காலத்து உறுந்துயரினை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மடலோடு மாலையிற் படும் காமத்துயரை', 'மாலைப் பொழுதின் துய்க்குந் துயரத்தையும் அதற்கு மருந்தாகிய மடலினையும்', 'மாலைப்பொழுதில் வருந்தும் துன்பத்தினையும், அதற்கு மருந்தாகிய மடலேறுதலையும்', 'நாள்தொறும் மாலைக் காலத்தில் காம மிகுதியால் மடலேறுவதைப் பற்றியே நினைத்துக் கலங்கிக் கொண்டிருக்கும் துன்பத்தை' என்றபடி பொருள் உரைத்தனர்.

மடலோடு மாலையில் வருத்தும் காமத்துயரை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தொடலைக் குறுந்தொடி மடலோடு மாலையில் வருத்தும் காமத்துயரை தந்தாள் என்பது பாடலின் பொருள்.
'தொடலைக் குறுந்தொடி' என்றால் என்ன?

நாணம் துறந்த மடலூர்தலை நினைந்ததும் மாலைப்பொழுதும் தலைவனைத் துயரத்தில் ஆழ்த்துகின்றன.

மாலைபோல் தொடுத்த குறுவளையல்களை அணிந்த இளம்பெண், மாலைக்காலத்துக் கடுந்துயரத்தையும், மடலேறும் எண்ணத்தையும் எனக்கு தந்துவிட்டாளே! என்கிறான் தலைவன்.
காட்சிப் பின்புலம்:
தலைவன் - தலைவியரின் காதல் வாழ்வில் இடர் உண்டாகிறது. அவர்களது மணவினைக்குத் தடை ஏற்படும்போல் தோன்றுகிறது. தலைவி வீட்டுச்சிறையில் இருக்கிறாள். தலைவியைக் காண முடியாத துயரைப் பொறுக்கமாட்டாமலும், தன் காதலை ஊரார் அறியச் சொல்லித் தலைவியை மணப்பதற்காகவும் நாண் துறந்து மடலேறத் துணிகிறான் அவன். மடலேறுதல் என்பது காதலன், பனை மட்டையால் செய்யப்பட்டு, கீழ் உருளைகள் பொருத்தப்பட்ட குதிரையின் மீதேறி அதைக் கயிற்றல் கட்டி இழுத்துச் செல்வதைக் குறிக்கும். மடலூரும் சமயம் பனங்கருக்கு உடலெங்கும் குத்தி ஊறு விளைவிக்கும். காதல் வன்மையை ஊருக்கு உணர்த்துவதற்காகவே மடல் ஏறுவான் தலைவன். அவனது துன்பத்தை ஊர் மன்றத்தோர் கண்டு, அதைத் தீர்ப்பதற்காகத் தலைவியை அவனுடன் சேர்த்து வைக்க முயல்வார்கள். மடலூர்தல் என்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் வருத்தம் உண்டாக்குவது; இதனால் அவனது தனிப்பட்ட மானம், உள்ளத்திண்மை இவற்றை இழக்க நேரிடும். காமப் பெருவள்ளத்தின் முன் நாணமும் ஆண்மையும் தகர்த்தெறியப்படும் என அவன் சொல்லிக்கொண்டு இருக்கிறான்.

இக்காட்சி:
காதலியை அடைவதில் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளும் தலைமகன் இப்பொழுது மடல் ஏறத் துணிந்துவிட்டான். மடல் ஏறுதல் என்பதால் நாணையும் நல்லாண்மையையும் இழக்கவிருக்கிறான். அந்த எண்ணமும் அவனுக்குப் பெரும் மன உளைச்சலைத் தந்து துன்புறுத்திக் கொண்டு இருக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல மாலைநேரமும் வருகிறது. காதலின் துயரம் எல்லாப் பொழுதுகளிலும் உண்டு என்றாலும் மாலையில் அது மிகுந்தெழும். அதை ..... மாலை மலரும் இந்நோய் (1227) என்று பிறிதோரிடத்தில் சொல்லும் குறள். மாலைப் பொழுதில் அவள் நினைவும் அவளுடன் பழகிய நிகழ்வுகளும் தோன்றி அவனைத் துன்புறுத்துகின்றன.
தலைவியைக் காணமுடியாத நிலையில் காமத்துயரும் அது தீர்தற்கு மடலூறநேரிடும் இழிவும் அவளால் வந்த நிலை எனவே 'மாலைக்காலத்தில் கடும் துயரத்தையும் மடலேறும் எண்ணத்தையும் மாலைபோல் வளையணிந்திருக்கும் அவள் எனக்குத் தந்தாள்' என்கிறான் காதலன்.

உழக்கும் என்ற சொல் வருத்தும், நோகவைக்கும் என்ற பொருள் தரும். உழக்கும் துயர் என்றது இடைவிடாது அதிலேயே கிடந்து உழலுகின்ற துயரத்தைக் குறித்தது.

'தொடலைக் குறுந்தொடி' என்றால் என்ன?

'தொடலைக் குறுந்தொடி' என்றதற்கு மாலைபோலச் செய்யப்பட்ட சிறுவளையினையுடையாள், விளையாடலாகிய பேதை, மாலையும் சிறுதொடியும் உடைய இம்மாதராள், மாலை போலத் தொடர்ந்த சிறு வளையினை உடையாள், மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி, மலர்ச்சரம்போல் கையைச் சுற்றிக் கிடக்கும் சிறிய வளையல்களை அடுக்காக அணிந்த இவ்விளைய மகள், அடுக்கிய வளையல் அணிந்தவள், மாலைபோல அடுக்காக வளையலை அணிந்த பெண், மேகலாபரணமும் அழகான வளையல்களும் அணிந்தவளான என் காதலி, தொடுத்தணிந்த சிறிய வளையல்களையுடையவள், மாலைபோலத் தொடுத்த சிறு வளையினையுடையவள், மாலைபோலத் தொடர்ந்த சிறு வளையினை உடையாள், மாலை சூடிச் சிறு வளை அணிந்த இவள், மாலை போல் கையை வளைந்த சிறு வளையல்களையுடைய தலைவி, தளிரைப் போன்ற மேனியையும்,குறுகிய வளையலையும் அணிந்த பெண், தொடுக்கப்பட்ட மலர் மாலையையும் சிறிய தொடிகளையும் அணிந்தவள் அல்லது மாலை போன்றவள் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தொடலை என்றதற்கு தொடர்ச்சியாக உள்ள என்பது பொருள். 'தொடுக்கப்பட்ட' என்றும் உரைப்பர்.
குறுந்தொடி என்பது சிறிய வளையல் என்று பொருள்படும். இங்கு அதை அணிந்துள்ளவளைக் குறித்தது.
'தொடலைக் குறுந்தொடி' என்ற தொடர்க்கு மாலைபோலச் செய்யப்பட்ட சிறுவளையினை யுடையாள் அல்லது மலர்ச்சரம்போல் சிறிய வளையல்களை அடுக்காக அணிந்தவள் என்று பொருள். தலைவி அணிந்திருந்த அணிகலனாக அமைவது 'தொடலைக் குறுந்தொடி'. காதலியைக் காணமுடியாத நிலையில், ஆற்றமாட்டாத தலைமகன், மடல் ஏறித் தன் உள்ளத்தை ஊரார்க்குப் புலப்படுத்தலாமா என எண்ணுகின்றான். அதுபோது அவளது உருவம் அவன் கண்முன் தோன்றி அவள் அணிந்திருந்த குறுந்தொடி அவனுடைய நினைவிற்கு வருகின்றது. இவ்வணியானது இளைய மகளிரால் அணியப்படுவது என்பது உரைகாரர்களது குறிப்புக்களிலிருந்து அறியக் கிடக்கிறது. இது கையில் அணியப்படும் வளை- மாலை போலத் தொடுக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிகிறது. இளவயதினள் என்று தெரிவிப்பதற்காக மாலை போல் தொடுக்கப்பட்ட சிறிய வளையலை அணிந்தவள் எனக் குறிக்கப்பட்டது.

'தொடலைக் குறுந்தொடி' என்ற தொடர் மாலைபோல் தோன்றுமாறு அடுக்கிய சிறுவளையினை யுடைய இளைய மகள் என்ற பொருள் தரும்.

மலர்ச்சரம்போல் சிறிய வளையல்களை அடுக்காக அணிந்தவள் மடலோடு மாலையில் வருத்தும் காமத்துயரை தந்தாள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மடல், மாலைப்பொழுது என்று தொடராய்த் துன்புறுகிறேனே என்னும் நாணுத்துறவுரைத்தல்.

பொழிப்பு

மாலைபோல அடுக்காக வளையலை அணிந்தவள் மடலையும் மாலைப்பொழுதில் வருத்தும் காமத் துன்பத்தையும் தந்தாள்.