இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1140யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு

(அதிகாரம்:நாணுத்துறவு உரைத்தல் குறள் எண்:1140)

பொழிப்பு (மு வரதராசன்): யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால், அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக் கண்டு நகைக்கின்றனர்.

மணக்குடவர் உரை: .............மணக்குடவர் உரை கிடைக்கவில்லை.............

பரிமேலழகர் உரை: (செவிலிக்கு அறத்தொடு நின்று வைத்து, 'யான் நிற்குமாறு என்னை' என்று நகையாடிய தோழியோடு புலந்து தன்னுள்ளே சொல்லியது,) யாம் கண்ணின்காண அறிவில்லார் நகுப - யாம் கேட்குமாறுமன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை அறிவிலார் நகாநின்றார்; யாம் பட்ட தாம்படாவாறு - அவர் அங்ஙனஞ்செய்கின்றது யாம் உற்ற நோய்கள் தாம் உறாமையான்.
('கண்ணின்' என்றது, முன் கண்டறியாமை உணர நின்றது. அறத்தொடு நின்றமை அறியாது வரைவு மாட்சிமைப்படுகின்றிலள் எனப் புலக்கின்றாள் ஆகலின், ஏதிலாளாக்கிக் கூறினாள். இது, நகாநின்று சேண்படுக்குந் தோழிக்குத் தலைமகன் கூறியதாங்கால், அதிகாரத்திற்கு ஏலாமை அறிக.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: நான் படும் துன்பங்களைத் தாம் படாத காரணத்தால் அறிவில்லாதவர்கள் எனக்குத் தெரியும்படி என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
யாம்கண்ணின் காண அறிவில்லார் நகுப; யாம்பட்ட தாம் படாவாறு.

பதவுரை: யாம்-எம்; கண்ணின்-கண்ணினால்; காண-பார்க்க; நகுப-எள்ளிச் சிரிப்பர்; அறிவில்லார்-அறிவு இல்லாதவர்; யாம்-நாங்கள்; பட்ட-அனுபவித்த; தாம்-தாங்கள்; படா-உறா; ஆறு-வழி.


யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: யாம் கண்ணால் காணும்வகை எதிரே நின்று அறிவில்லாதார் நகா நின்றனர்;
பரிதி: யாம் கொண்ட காதலனைக் கண்டு சிரிப்பார்,
காலிங்கர்: இவ்விடர் உற்றோம் நாமாகவே இகழ்ச்சி எம் கருத்துள் அறிதலே அன்றிக் கண்ணினானும் காணுமாறு நகுவர் இவ்வறிவில்லாதார்;
பரிமேலழகர்: (செவிலிக்கு அறத்தொடு நின்று வைத்து, 'யான் நிற்குமாறு என்னை' என்று நகையாடிய தோழியோடு புலந்து தன்னுள்ளே சொல்லியது,) யாம் கேட்குமாறுமன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை அறிவிலார் நகாநின்றார்; [செவிலி -தலைவியை வளர்த்த தாய்] .
பரிமேலழகர் குறிப்புரை: 'கண்ணின்' என்றது, முன் கண்டறியாமை உணர நின்றது. அறத்தொடு நின்றமை அறியாது வரைவு மாட்சிமைப்படுகின்றிலள் எனப் புலக்கின்றாள் ஆகலின், ஏதிலாளாக்கிக் கூறினாள். இது, நகாநின்று சேண்படுக்குந் தோழிக்குத் தலைமகன் கூறியதாங்கால், அதிகாரத்திற்கு ஏலாமை அறிக. [முன் கண்டறியாமை-முன் தோழி தன் எதிரே நின்று சிரிப்பதைப் பார்த்தறியாமை; ஏதிலாள் ஆக்கி-அயலாளாக்கி; இது நகாநின்று சேண்படுக்குந் தோழிக்குத் தலைமகன் கூறியதாங்கால் அதிகாரத்திற்கு ஏலாமை அறிக-இக்குறள் சிரித்துக் கொண்டே சேட்படுத்துகின்ற தோழிக்குத் தலைவன் கூறியதாகக் கொண்டால் நாணுத்துறவுரைத்தல் என்னும் இவ்வதிகாரத்திற்குப் பொருந்தாமை அறிந்து கொள்க - பரிப்பெருமாள் உரை மறுக்கப்படுதல்.]

'எம் கண்ணால் காணும்வகை எதிரே நின்று அறிவில்லாதார் சிரிப்பார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பேதையர்கள் என் கண்பார்க்கச் சிரிப்பார்கள்', 'நாம் கண் முன்னே காணுமாறு இப்பெண்கள் இகழ்ந்து சிரிக்கின்றனர்', 'யாம் கேட்கும்படி மாத்திரமல்லாமல் யாம் காணும்படி எம்மைப் பார்த்து அறிவில்லாதவர்கள் சிரிக்கின்றார்கள்', 'அறிவில்லார் யாம் கண்ணால் காணுமாறு எம்மை நகுகின்றனர்' என்ற பொருளில் உரை தந்தனர்.

என் கண்பார்க்க எதிரே நின்று அறிவில்லாதவர்கள் நகுகின்றனர் என்பது இப்பகுதியின் பொருள்.

யாம்பட்ட தாம்படா வாறு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: யான் பட்ட துன்பம் படாமையான் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: 'யாமத்து மறவேன்' என்ற தலைமகனை நோக்கி நகை செய்த தோழிக்கு, 'நமக்கு உண்டாகிய நோய் தமக்கும் உண்டாயினாரல்லரே' என்று தலைமகன் வெகுண்டு சொல்லியது.
பரிதி: யாம் பட்டபாடு தாம் படாமையால் என்றவாறு.
காலிங்கர்: இதற்குக் காரணம் யாதென அறிந்தேன்; ஈங்கு யாம் பட்ட இடர் அனைத்தும் தாம் படாமையால் தமக்குத் தெரியாது அன்றே ஆதலால் என்றவாறு.
பரிமேலழகர்: அவர் அங்ஙனஞ்செய்கின்றது யாம் உற்ற நோய்கள் தாம் உறாமையான்.

'நாம் பட்ட துன்பம் படாமையால்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நான் பட்டது தாங்கள் படாமையால்', 'நாம் பட்ட துயரத்தைத் தாம படாததால்', 'யாம்பட்ட துன்பத்தை அவர்கள் படவில்லையாதலால்', 'அவர் அங்ஙனம் செய்கின்றது யாம் உற்ற துன்பங்களைத் தாம் அடையாமையால்' என்றபடி பொருள் உரைத்தனர்.

நாம் பட்ட துயர் அவர்கள் படவில்லையாதலால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லாதவர்கள்; நாம் பட்ட துயர் அவர்கள் படவில்லையாதலால் என்பது பாடலின் பொருள்.
'யாம்கண்ணின் காண நகுப' என்றால் என்ன?

சிரிப்பவர்கள் சிரிக்கட்டும். என்வலி எனக்குத்தானே தெரியும்!

நான் பட்ட இந்தக்காதல் துன்பத்தை அவர்களும் அடையாததால்தான், அறிவில்லாதவர், என் எதிர் நின்றே சிரிக்கின்றனர் என்கிறான் தலைமகன்.
காட்சிப் பின்புலம்:
தலைவனுக்குத் தன் காதலியைக் காண முடியாத சூழ்நிலை உருவாகியது. தன் காதலில் இடர் எதிர்கொள்ளும் தலைவன் தன் காதலை ஊரார் அறியச் சொல்லித் தலைவியை மணப்பதற்காக மடலேறத் துணிகிறான். மடலூர்தலால் தன் நாணையும் நல்லாண்மையையும் அவன் இழப்பான் என உணர்ந்தும் இருக்கின்றான். தன் காதல் நிறைவேற உதவ முன்வராத ஊர் மக்களை இகழ்கிறான். உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் உண்டாக்கும் மடல் ஒரு கடினமான முடிவுதான். இதனால் அவனது தனிப்பட்ட மானம், உள்ளத்திண்மை இவற்றை இழக்க நேரிடும். எனினும் அவன் மடலேறிவிட்டான். அது ஊரைச் சுழன்றுவரத் தொடங்கிவிட்டது.

இக்காட்சி:
காதலியை எப்படியும் அடைந்தே தீருவேன் என்று உறுதிபூண்ட காதலன் மடலேறி வருகிறான். அவனது காதல்பற்றியும், காதலர்களுக்கு ஏற்பட்ட தடைகளையும் பற்றியும் அவர்கள் அறிந்து கொண்டார்கள். ஊர்மக்கள் மடலேறுவோரைப் பரிவுடன் நோக்குவதில்லை. இகழ்ச்சிக் குறிப்புடனே பார்ப்பர். அவர்கள் பார்வையில் அவன் ஒரு கிறுக்கன் போல் காட்சி அளிக்கிறான். எனவே அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஊர் மக்கள் ஏளனமாகச் சிரிக்கிறார்கள். தன் நிலையைப் பார்த்து அவர்கள் சிரிக்கிறார்கள் என்பதை எண்ணி நோகிறான். அப்படி நகைப்பவர்கள் அவன் படும் காதல் வலியை உணராதவர்கள். அவன் படும்பாடு அவர்கள் பட்டாலன்றோ தெரியும்! என நினைக்கிறான். எனவேதான் அறிவிலிகள்போலத் தன்னை இகழ்ச்சிக் குறிப்போடு நோக்குகிறார்கள் என்று வெகுண்டு கூறுகின்றான். காதல் போராட்டத்துக்குட்படாத மாந்தரே தம் போன்று காமநோயால் உழல்பவர்களைப் பார்த்துச் சிரித்து நகையாடுவார்கள் என்றும் சொல்கிறான்.
இப்பாடல் வழி மடலூர்தல் மிகவும் இகழ்ச்சிக்குரியது என்று அறிய முடிகிறது.

‘அறிவில்லார்’ என்பதற்கு காதல் நோய் பற்றிய அறிவு இல்லாதவர், காதலர் நிலை பற்றி அறியாதவர், அறிவிலிகள்-முட்டாள்கள் என்று பொருள் கொள்வர். தான் அனுபவிக்கும் துயர் புரியாமல் தான் மடலேற நினைப்பதைக் கருதி தன்னைக் காணும்போதெல்லாம் சிரிக்கும் ஊரார் பற்றிச் சினம் மேலிட இவ்வாறு அவன் கூறுகிறான்.
நகுப என்ற சொல்லுக்கு நகைப்பர் என்பது பொருள். இங்கு எள்ளிச் சிரிப்பர் என்ற பொருளாகிறது.

தலைவி தோழியிடம் மனம் வேறுபட்டுத் தன்னுள்ளே கூறியதாகப் பரிமேலழகரும் தலைவன் தோழியிடம் வெகுண்டு கூறியதாகப் பரிப்பெருமாளும் இக்குறட் கருத்தைக் கொண்டுள்ளனர். தலைவன் தன்னுள்ளே கூறுவதாகப் கொள்வதே பொருத்தம்.

'யாம்கண்ணின் காண நகுப' என்றால் என்ன?

எனக்குத் தெரியும்படி என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.
பைத்தியக்காரத்தனமாக ஒருவன் நடந்து கொண்டால் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது மற்றவர் இயல்பு. இங்கு தலைவன் மடலேறி வருவதைப் பார்க்கும் மாந்தர் அவனை அறிவு திரிந்த ஒருவனை நோக்குவதுபோல் பார்த்து நகைக்கின்றனர். இதனாலேயே அவன் 'நான் கண்ணில் பட்டாலே, என்னைப் பார்த்து நகைக்கின்றனர்' என்று கூறுகிறான்.
'எம் கருத்துள் அறிதலே அன்றிக் கண்ணினானும் காணுமாறு நகுவர்' என்று காலிங்கரும் 'யாம் கண்ணால் காணும்வகை எதிரே நின்று அறிவில்லாதார் நகா நின்றனர்' எனப் பரிப்பெருமாளும் 'யாம் கேட்குமாறுமன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை நகாநின்றார்' என்று பரிமேலழகரும், இப்பகுதியை விளக்கினர்.

'யாம்கண்ணின் காண நகுப' என்றது என் கண்பார்க்க நகைப்பார்கள் என்று பொருள்படும்.

என் கண்பார்க்க எதிரே நின்று அறிவில்லாதவர்கள் நகுகின்றனர்; நாம் பட்ட துயர் அவர்கள் படவில்லையாதலால் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கேட்கும்படியும் காணும்படியும் எள்ளப்பட்ட நாணுத்துறவுரைத்தல்.

பொழிப்பு

அறிவில்லாதவர்கள் என் கண்பார்க்கச் சிரிப்பார்கள்; நான் பட்ட துயரத்தைத் தாங்கள் படாமையால் .