'புனைந்துரை' எனும் சொல், தானாகச் சில பண்புகளைக் கற்பித்துப் பாராட்டுவதை உணர்த்தும். கற்பனைஉரை என்று இன்று நாம் புரிந்து கொள்வதே புனைந்துரைத்தல் ஆகும். ஒரு பொருளை மிகைபடுத்திச் சொல்வதை 'புனைந்துரைத்தல்' என்று கூறுவது இலக்கிய மரபு. இங்கு காதலியின் நலன்களைத் தலைவன் புனைந்துரைத்துப் பாராட்டுவதால் நலம்புனைந்துரைத்தல் ஆயிற்று.
தன் காதலியிடம் உள்ள நலன்களில் அவனுக்கு அவளுடைய மென்மைத் தன்மையே மிகையாகத் தாக்கம் ஏற்படுத்தியது எனத் தோன்றுகிறது.
அதிகாரத்து முதல் குறளிலும் (1111) இறுதிப் பாடலிலும் (1120) அதை எண்ணி மகிழ்கிறான்.
பெண்ணின் கண் அழகு எப்போழுதுமே வள்ளுவருக்கு ஈர்ப்பு தருவது. எந்த மலரைப் பார்த்தாலும் காதலியின் கண் நினைவுக்கு வருவதாகவும் அவளது கண் வேல்வடிவம் கொண்டது என்றும் குவளை மலரையே வெட்கப்படச் செய்வது அவளது கண் அழகு என்றும் மூன்று செய்யுள்களில் (1112, 1114, 1119) கண்ணழகு பாராட்டப்படுகிறது.
பெண்ணின் இடையை இந்த அளவு உயர்வாக்கம் தந்து எந்தக் கவிஞரும் பாடியதில்லை என்னும் அளவு சிற்றிடையைப் புகழ்கிறது ஒரு பாடல் (1115).
அவளது முக அழகை நிலவுக்கு ஒப்பிட்டுத் திங்களினும் காதலியின் முகம் ஒளிவீசக் கூடியது என்ற பொருளில் மூன்று கவிதைகள் (1116, 1117, 1118) பாடப்பெற்றுள்ளன.
காதலியின் நிறம், சிரிப்பு, நறுமணம், தோள்வனப்பு இவற்றைப் பற்றியும் பேசுகிறது இவ்வதிகாரம்.
ஒரு பெண்ணுக்குப் புற அழகுடன் அக அழகும் சேர்ந்திருப்பதுதான் விரும்பத்தக்கது என்று வள்ளுவர் கருதுவதால் காதலி கொண்ட நாணமே அவளுக்குத் திங்களைவிட ஒளிவீச்க்கூடிய முகப் பொலிவு தருகிறது என்ற பொருளில் ஒரு பாடலை (1119) அமைத்துள்ளார்.