இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1114காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று

(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1114)

பொழிப்பு (மு வரதராசன்): குவளை மலர்கள் காணும் தன்மைபெற்றுக் கண்டால், "இவளுடைய கண்களுக்கு யாம் ஒப்பாகவில்லையே" என்று தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கும்.

மணக்குடவர் உரை: குவளைமலர் காணவற்றாயின் மாட்சிமைப்பட்ட இழையினை யுடையாளது கண்ணை ஒவ்வோமென்று நாணி, கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.
இது காணுந்தோறும் ஒவ்வாதென்றது.

பரிமேலழகர் உரை: (பாங்கற்கூட்டத்துச் சென்று சார்தலுறுவான் சொல்லியது.) குவளை - குவளைப் பூக்கள் தாமும்; காணின் - காண்டல் தொழிலையுடையவாயின்; மாண் இழை கண் ஒவ்வேம் என்று கவிழ்ந்து நிலன் நோக்கும் - மாண்ட இழையினை உடையாள் கண்களை யாம் ஒவ்வேம் என்று கருதி அந்நாணினால் இறைஞ்சி நிலத்தினை நோக்கும்.
(பண்பானேயன்றித் தொழிலானும் ஒவ்வாது என்பான், 'காணின்'என்றும், கண்டால் அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாம் என்பது தோன்றக் 'கவிழ்ந்து' என்றும் கூறினான். காட்சியும் நாணும் இன்மையின் செம்மாந்து வானை நோக்கின என்பதாம்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: குவளை மலர் என் காதலியைப் பார்த்தால் சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ள அவளுடைய கண்களுக்குத் தாம் இணையாக இல்லாமைக்கு வெட்கப்பட்டுத் தலையைக் குனிந்து கொண்டு நிலத்தைப் பார்க்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குவளை காணின் மாணிழை கண்ணொவ்வேம் என்று கவிழ்ந்து நிலன்நோக்கும்.

பதவுரை: காணின்-கண்டால், காணும் ஆற்றல் இருந்தால்; குவளை-குவளை மலர்; கவிழ்ந்து-தலை குனிந்து; நிலன்-நிலம்; நோக்கும்-பார்க்கும்; மாண்-சிறந்த; இழை-அணிகலம் (அணீந்தவள்); கண்-விழி; ஒவ்வேம்-நிகர்க்க மாட்டோம்; என்று-என்பதாக.


காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குவளைமலர் காணவற்றாயின் கவிழ்ந்து நாணி,நிலத்தை நோக்கும்.
பரிப்பெருமாள்: குவளைமலர் காணவற்றாயின் கவிழ்ந்து நாணி,நிலத்தை நோக்கும்.
பரிதி: குவளைப்பூக்கள் தாமும் காண்டகத் தொழிலுடையவாய் அந்நாணினால் இறைஞ்சி நிலத்தினை நோக்கும் என்றவாறு.
காலிங்கர்: நெஞ்சே! யான் அழகுடையேன் என்று இங்ஙனம் தன்னை மதித்து வான் நோக்கிச் செவ்விதமாய் நிற்கும் குவளை, நாணிக் கவிழ்ந்து நிலம் நோக்கி நிற்கும்
பரிமேலழகர்: (பாங்கற்கூட்டத்துச் சென்று சார்தலுறுவான் சொல்லியது.) குவளைப் பூக்கள் தாமும் காண்டல் தொழிலையுடையவாயின்; அந்நாணினால் இறைஞ்சி நிலத்தினை நோக்கும். [சார்தலுறுவான்-தலைமகளைக் கூடும் தலைவன்]

'குவளை மலர்க்கு காணும் ஆற்றல் இருந்தால் நாண் கொண்டு தலை கவிழ்ந்து நிலத்தினை நோக்கும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'அவள் கண்களைப் பார்ப்பதாற்கு முன் யான் அழகுடையேன் என்று செறுக்குற்று வான் நோக்கிச் செவ்விதமாய் நின்றது' என்று நயமுரைத்தார். இதைத்தழுவி பரிமேலழகரும் 'காட்சியும் நாணும் இன்மையின் செம்மாந்து வானை நோக்கின' என்று தமது உரையில் இணைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'குவளைகள் இவள் கண்னைக் காண நேர்ந்தால் தலைசாய்த்துக் குனியும்', 'குவளை மலர் காணும் தன்மையைப் பெற்று நாணித் தலைசாய்த்து நிலத்தை நோக்கும்', 'குவளைப் பூக்களுக்குப் பார்க்கக்கூடிய வலியிருக்குமானால், வெட்கித் தலை குனிந்து இப்போது வானத்தை நோக்குவது போல் மேல்நோக்காது நிலத்தையே நோக்கும்', 'குவளைப் பூக்கள் இவளைக் கண்டால், நாணத்தால் முகம் கவிழ்ந்து நிலத்தைப் பார்க்கும்' என்றபடி உரை தந்தனர்.

குவளை மலர்கள் என் காதலியைக் கண்டால் நாணித் தலை கவிழ்ந்து நிலம் நோக்கும் என்பது இத்தொடரின் பொருள்.

மாணிழை கண்ணொவ்வேம் என்று:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாட்சிமைப்பட்ட இழையினை யுடையாளது கண்ணை ஒவ்வோமென்று.
மணக்குடவர் குறிப்புரை: இது காணுந்தோறும் ஒவ்வாதென்றது.
பரிப்பெருமாள்: மாட்சிமைப்பட்ட இழையினை யுடையாளது கண்ணை ஒவ்வோமென்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வடிவுதானும் ஒவ்வாதென்றது.
பரிதி: மாண்ட இழையினையுடையாள் கண்களை யாம் ஒவ்வேம் என்று கருதி.
காலிங்கர்: மற்றதுவும் நம் மாணிழையாள் கண்ணுக்கு உவமை ஒவ்வேம் என்று இதற்குக் காரணம் என்றான் தலைமகன் என்றவாறு.
பரிமேலழகர்: மாண்ட இழையினை உடையாள் கண்களை யாம் ஒவ்வேம் என்று கருதி.
பரிமேலழகர் விரிவுரை: பண்பானேயன்றித் தொழிலானும் ஒவ்வாது என்பான், 'காணின்'என்றும், கண்டால் அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாம் என்பது தோன்றக் 'கவிழ்ந்து' என்றும் கூறினான். காட்சியும் நாணும் இன்மையின் செம்மாந்து வானை நோக்கின என்பதாம். [செம்மாந்து-இறுமாப்படைந்து]

'மாணிழையாளது கண்னை யாம் ஒவ்வோம் என்று' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உவமையாகோம் என்று', 'சிறந்த அணிபூண்ட மங்கையின் கண்களைக் கண்டால், நாம் அவற்றுக்கு ஒப்பாக மாட்டோம் என்று', 'சிறந்த அணியை உடைய இவளது கண்களுக்கு ஒப்பாக மாட்டோம் என்று', 'மாட்சிமை உடைய அணிகலன்களை உடைய இவள் கண்களுக்கு ஒப்பாக மாட்டோம் என்று கருதி' என்றபடி பொருள் உரைத்தனர்.

சிறந்த அணியை உடையவளது கண்களுக்கு யாம் இணையாக மாட்டோம் என்று என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
குவளை மலர்கள் என் காதலியைக் கண்டால், சிறந்த அணியை உடையவளது கண்களுக்கு யாம் இணையாக மாட்டோம் என்று, நாணித் தலை கவிழ்ந்து நிலம் நோக்கும் என்பது பாடலின் பொருள்.
குவளை மலர் ஏன் உவமையாகச் சொல்லப்பட்டது?

மலரை மிஞ்சியது தன் காதலியின் கண் அழகு என்று தலைவன் பெருமைப்படுகிறான்.

குவளை மலர்கள், அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அணிகளைப் பூண்டுள்ள என் காதலியைக் கண்டால், ‘அவளது கண்களுக்கு யாம் ஒப்பாக மாட்டோம்’ என்று தலையைக் கவிழ்த்து நிலத்தை நோக்குமே என எண்ணுகிறான் தலைவன்.
காட்சிப் பின்புலம்:
தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் இருந்து மெய்யுறு புணர்ச்சி கொண்டும் பழகுகின்றனர். காதலியைக் கூடிப் பெற்ற இன்பத்தை நினைந்து நினைந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறான் அவன். அவளது தோள், நிறம்தளிர், பல் அழகு, உடம்பின்மணம் இவற்றின் நலம் புனைந்துரைத்துக் கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
இங்கு அவளது கண் அழகு பற்றி புனைகிறான். காதலியை காணச் செல்லும் வழியில் அவன் குளத்தில் பூத்திருக்கும் குவளை மலர்களைக் காண்கிறான். அப்போது, இயல்பாக அவளது கண்கள் நினைவுக்கு வந்து அம்மலர்களுடன் அவளது கண்களை ஒப்பிட்டு நோக்க மனம் தூண்டுகிறது. காதலியின் கண்களின் அழகு குவளை மலரில் இல்லை என்று உணர்கிறான். மலர் நேரே வான் நோக்கிப் பூத்திருக்கும் இயல்புடையது. அந்த மலர் அப்படி நிமிர்ந்திருப்பது அது இன்னும் என் காதலியைப் பார்க்காததனால்தான் என்று எண்ணுகிறான். 'தலைநிமிர்ந்து காட்சி அளிக்கும் அம்மலர்கள், என் காதலியின் கண்களைக் காணும் ஆற்றலைப் பெற்றிருந்தால், அவற்றுக்கு யாம் ஒப்பமாட்டோம் என்று வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலம் நோக்கும்' என்று சொல்கிறான். அதாவது அவளது கண் குவளை மலரையே வெட்கப்படச் செய்வது என்கிறான். தலை குனிதலும், நிலம் நோக்கலும் நாணத்தினால் என இட்டுக்கட்டிச் சொல்கிறான்.
'மலர்ந்து செம்மாந்து நிற்கும் குவளை மலரை என் தலைவி காணப்பெற்றால், அந்நோக்கினை எதிர்கொள்ள இயலாத குவளைமலர், இத்தலைவியின் (குவளை மலரினும்) மிக்கசாயல் படைத்து கண்ணின் எழிலுக்கு முன்னால் நம்முடைய எழில் எம்மாத்திரம் என்று கருதி நாணமுற்று அதன் கரணியமாகத் தலைவி காணாதவாறு தலைகவிழ்ந்து நிலம் நோக்கும்' எனக் 'காண்டலை'த் பூவின் மேலன்றித் தலைவியின் மேல் ஏற்றிக் கூறப்பட்ட உரையும் உளது.
மாணிழை என்ற தொடர் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அணிகளைப் பூண்டவள் என்ற பொருள் தரும்.

இக்குறட் கற்பனையை ஒட்டிக் கம்பர் தலைவியின் முக அழகைப் பாராட்டும் பாடல் ஒன்று உளது:
தள்ளி ஓடி அலைதடு மாறலால்
தெள்ளு நீரிடை மூழ்குசெந் தாமரை
புள்ளி மான் அனையார் முகம் போல்கிலாது
உள்ளம் நாணி ஒளிப்பன போன்றவே.
(கம்பராமாயாணம் நீர்விளையாட்டுப் படலம் 29)
(பொருள்: நீராடலால் தம் நிலையிலிருந்து தள்ளப்படுதலால், பரந்து சென்று அலைகள் தடுமாறுவதால், தெளிந்த அலை எழுந்தாடுதலால், பூத்த தாமரை மலர்கள் நீரிடை மூழ்குகின்றன. துள்ளித் திரியும் புள்ளிமானை ஒத்த மகளிர் முகப்பொலிவிற்கு நாம் ஒப்ப மாட்டோம் என்றெண்ணி நீரிடை மூழ்கின எனப் புனைந்தார் கம்பர். குறளின் குவளைப்புனைவு கம்பர் பாடலில் தாமரைப்புனைவாக மாறியது.

குவளை மலர் ஏன் உவமையாகச் சொல்லப்பட்டது?

பெண்களின் கண்ணைக் குளிர்ச்சியும் அழகும் பொருந்திய குவளை மலரோடு ஒப்பிட்டுக் கூறுவது புலவர் மரபு. பழம் இலக்கியங்களில் பெண்களின் கண்ணுக்கு உவமையாகக் குவளை கூறப்பட்டது. இப்பூ பெண்களின் கண்ணை நினைவூட்டக்கூடிய தன்மையது. இது குளத்தில் பூப்பது. நீல நிறமானது. நீலஅல்லி என்றும் கூறுவர். தலைவியின் கண்கள் நீலநிறமாக இருந்திருக்கும் போலும். மலர்கள் பலவற்றுள்ளும் குவளையின் வடிவமும் பெண்கள் கண்ணோடு மிக நெருக்கமானது. வள்ளுவரும் குவளை மலரின் அழகில் ஈடுபட்டு அதைத் தலைவியின் கண்ணுக்கு உவமையாக்கினார். இம்மலர் மிகுதியான இதழ்களை உடையதாதலால் அதைப் ‘பல்லிதழ்’ என்று அழைத்தனர்.
கண்கள் குவளை மலர்களைப் போல் உள்ளது என்றுதான் சொல்வார்கள். ஆனால் குவளை மலரை விட அழகான கண்கள் என்றும் அம்மலர்க்கு பார்க்கும் திறம் இருந்தால், ஒருமுறை கண்டாலும் போதும். உடனே காதலியின் கண்களின் அழகுக்குத் தோற்று வெட்கத்தால் நிலத்தை நோக்கிக் கவிழும் என்றும் தலைவன் தன் காதலியின் கண்களை உவமித்துப் பாராட்டுகின்றான்.

குவளை மலர்கள் என் காதலியைக் கண்டால், சிறந்த அணியை உடையவளது கண்களுக்கு யாம் இணையாக மாட்டோம் என்று, நாணித் தலை கவிழ்ந்து நிலம் நோக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

குவளைமலரைத் தாழ்வு அடையச் செய்யும் கண்ணின் நலம்புனைந்துரைத்தல்.

பொழிப்பு

குவளை மலர் சிறந்த அணிபூண்ட காதலியின் கண்களைக் கண்டால், தான் அவற்றுக்கு ஒப்பாக மாட்டோம் என்று தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கும்.