இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1118



மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி

(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1118)

பொழிப்பு (மு வரதராசன்): திங்களே! இம் மாதரின் முகத்தைப்போல் ஒளி வீச உன்னால் முடியுமானால், நீயும் இவள்போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

மணக்குடவர் உரை: மதியே! நீ இம்மாதர் முகம்போல ஒளிவிட வல்லையாயின் நீயும் எம்மாற் காதலிக்கப்படுதி.
வாழி- அசை. இது மறுப்போயினதாய முகமென்று கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) மதி வாழி - மதியே வாழ்வாயாக; மாதர் முகம் போல ஒளி விடவல்லையேல் காதலை - இம்மாதர்முகம் போல யான் மகிழும் வகை ஒளிவீச வல்லையாயின், நீயும் என் காதலையுடையையாதி.
('மறு உடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய்', என்பதாம். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு.)

சி இலக்குவனார் உரை: இம்மாதர்(காதலி) முகம்போல ஒளிவீசவல்லையேல் என் காதலை உடையை ஆவாய். மதியே வாழ்வாயாக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி!.

பதவுரை: மாதர்-பெண் (இங்கு காதலி); முகம்=முகம்; போல்-நிகராக; ஒளிவிட-ஒளிவீச; வல்லையேல்-திறமையுடையாய் என்றால், ஆற்றலிருந்தால்; காதலை-காதலையுடையையாவாய்; வாழி -வாழ்வாயாக; மதி-திங்கள்.


மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இம்மாதர் முகம்போல ஒளிவிட வல்லையாயின்;
பரிப்பெருமாள்: இம்மாதர் முகம்போல ஒளிவிட வல்லையாயின்;
பரிதி: மாதர் முகம்போலத் தேய்தலற்று மறுவற்று விரகப் பார்வை அற்புதப்பார்வை உண்டாகில்;
காலிங்கர்: மற்று இவ்வன்பு உடைய மடந்தைதன் ஒளிதிகழ் முகம்போல நீயும் ஒளிவிட வல்லையாயின்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) இம்மாதர்முகம் போல யான் மகிழும் வகை ஒளிவீச வல்லையாயின்;

'இம்மாதர் முகம்போல ஒளிவீச் வல்லையாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் காதலி முகம்போல ஒளிவிட முடியின்', 'இப்பெண்ணின் முகம்போல நான் மகிழ நீயும் ஒளிவிட முடியுமானால்', 'இம்மாதினுடைய முகம் போல நீ ஒளி வீச முடியுமானால்', 'நீ பெண்களின் முகத்தைப் போல் பிரகாசிக்க முடியுமானால்' என்றபடி உரை தந்தனர்.

இப்பெண்ணின் முகம்போல் உன்னால் ஒளிவீச முடியுமானால் என்பது இப்பகுதியின் பொருள்.

காதலை வாழி மதி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீயும் எம்மாற் காதலிக்கப்படுதி மதியே!
மணக்குடவர் குறிப்புரை: வாழி- அசை. இது மறுப்போயினதாய முகமென்று கூறப்பட்டது.
பரிப்பெருமாள்: நீயும் எம்மாற் காதலிக்கப்படுவை மதியே!
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மறுப்போயிற்றாயின் ஒக்கும் என்று கூறப்பட்டது.
பரிதி: மதியே பிரகாசிப்பாயாக; அன்றி உதயஞ் செய்யவேஎண்டா என்றவாறு.
காலிங்கர்: நீயும் சால அழகியை; மதியே! வாழ்வாயாக என்றவாறு.
பரிமேலழகர்: நீயும் என் காதலையுடையையாதி வாழ்வாயாக மதியே. [ஆதி - ஆவாய்]
பரிமேலழகர் குறிப்புரை: 'மறு உடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய்', என்பதாம். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு. [அது மாட்டாய்-ஒளிவிட மாட்டாய்; மாட்டாமையின்-ஒளிவிட மாட்டாமையால்; வாழி என்பது இகழ்வதற்கண் வந்த குறிப்புச் சொல்]

நீயும் எம்மால் காதலிக்கப்படுவாய் மதியே என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகிய பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி மதியே பிரகாசிப்பாயாக!; அல்லது காட்சி தரவேண்டாம் என்று கூறினார். காலிங்கர் மதியே! நீயும் அழகி ஆகிவிடுவாய்! வாழ்வாயாக! என்று உரை பகர்ந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'திங்களே! நீயும் என் காதலுக்கு உரியை', 'என் காதலைப் பெறுவாய் மதியே, வாழ்வாயாக!', 'நீயும் என்னால் விரும்பப்படத்தக்காய் திங்களே! நீ வாழ்வாயாக.', 'நீயும் ஒருவனால் காதலிக்கப்படுவாய். பிறகு நானும் உன்னை வாழ்த்துவேன்.சந்திரனே!' என்றபடி பொருள் உரைத்தனர்.

நீயும் என்னால் விரும்பப்படுவாய் திங்களே! வாழ்க! என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இப்பெண்ணின் முகம்போல் உன்னால் ஒளிவீச முடியுமானால், காதலை வாழி திங்களே! என்பது பாடலின் பொருள்.
'காதலை' என்ற சொல் குறிப்பது என்ன?

இவளிடமுள்ளளவு நிலவில் ஒளியில்லை.

மதியே! இப்பெண்ணின் முகத்தைப் போல நீயும் ஒளிர்ந்தால், நீயும் என்னால் காதலிக்கப்படுவாய்! வாழ்க!
காட்சிப் பின்புலம்:
தான் காதலுற்றவளுடன் கூடி மகிழ்ந்தபின் அதனாலடைந்த இன்பம் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறான் தலைமகன். அவளது உடலின் மென்தன்மை, மலர்போன்ற கண்கள், தோள் பல் மணம் குவளையும் நாணும் மைதீட்டியகண்கள், மெல்லிடை இவற்றையெல்லாம் எண்ணிய பின்னர் அவள் முகத்தை நினைத்துப் பார்க்கும்பொழுது வானில் திரியும் மதிதான் அவனுக்கு நினைவிற்கு வருகிறது. திங்களையும் இவளது முகத்தையும் வேறுபடுத்தி அறியமுடியாமல் விண்மீன்கள் தடுமாறுகின்றன என்கிறான்; நிலவின் தோற்றத்தில் களங்கம் தெரியும்; ஆனால் இவளுக்கோ மறுவற்ற மிகத் தெளிவான முகம் எனப் பெருமிதத்துடன் கூறிக்கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
நிலவு பொழியும் இரவு வேளை தன் காதலிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான் தலைவன். திங்கள்கண் உள்ள மறு போலக் காதலி முகத்தில் களங்கம் உண்டோ? என்று சற்றுமுன் கேட்டான். பின்னர், நிலவைச் சற்று மிகையாகவே பழித்துவிட்டோமோ என்ற குற்றஉணர்வு அவனுள்ளே தோன்றுகிறது. மதியைக் குளிர்ச்சிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறான். அதனுடன் சிறுது நேரம் விளையாட்டாகப் பேசி அமைதிப்படுத்தலாம் என்ற நோக்கில் 'நிலவே! நீயும் என் காதலியின் முகத்தைப் போல் ஒளிவீச இயலுமானால் நானும் உன்னை விரும்புவேன். வாழ்க!' என்று எள்ளலுடன் ஓர் பேரத்தை முன்வைப்பதுடன் விரைவில் மதி முழு ஒளியுடன் திகழ தனது வாழ்த்தையும் கூறுகிறான். திங்களின் ஒளிர்வு இவள் முகத்தினும் ஏற்றமாக முடியாது என்ற எண்ணமுடையவனாதலால் நகையாகப் பேசுகிறான்.
நிலவை விட ஒளிவீசும் முகம் தன் காதலியுடையது என்கிற பெருமை அவனிடம் தெரிகிறது.

சின்னஞ்சிறு ஈற்றடியாய்- மிகக் குறைந்த அளவாக-ஏழு எழுத்துக்களைப் பெற்றுள்ள குறட்பாக்கள் இரண்டு. இக்குறள் ஒன்று. மற்றது .......ஆகுல நீர பிற (அறன்வலியுறுத்தல் 34) என்பது. இவ்விரண்டு பாக்களின் ஈற்றடியில் உள்ள மூன்று சீர்களிலும் உள்ளவை ஏழு எழுத்துக்களே.

'காதலை' என்றால் என்ன?

'காதலை' என்றதற்கு எம்மாற் காதலிக்கப்படுதி, எம்மாற் காதலிக்கப்படுவை, நீயும் சால அழகியை, என் காதலையுடையையாதி, நீயும் இவள்போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய், என் காதலுக்கு உரியை ஆவாய், என் காதலுக்கு உரியை, என் காதலைப் பெறுவாய், (நீயும் ஒருவனால்) காதலிக்கப்படுவாய், காதலுக்கு அவளைப் போலவே நீயும் உரிமை ஆவாய், என்னால் விரும்பப்படத்தக்காய், என் காதலை உடையை ஆவாய், என் காதலுக்கு உரியாய், என் காதலையுடையையா யிருப்பாய், நீயும் விரும்பப்படுவாய் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

காதலை என்பதற்கு 'என் காதலை உடையவள் ஆவாய்' என்று பலர் பொருள் கூறியுள்ளனர்.
பரிதி வழக்கமாகக் கருத்துப் பொருளே கூறுபவர். இங்கும் இதற்கு சொற்பொருள் கூறாமல், 'மாதர் முகம் போலத் தேய்தல் அற்று மறு அற்று, விரகப் பார்வைம் அற்புதப் பார்வை உண்டாகி மதியே பிரகாசிப்பாயாக. அன்றி உதயஞ் செய்ய வேண்டா' என்று குறளுரை செய்தார். காலிங்கரும் இச்சொல்லுக்கு நேர் பொருள் கூறாமல் 'நீயும் சால அழகியை' என்று உரை பகன்றார். இவ்விருவரும் காதல் பற்றி ஒன்றும் சொல்லாததால் நிலவுடன் காதல் என்பதை ஏற்கவில்லை எனத் தெரிகிறது.
இன்றைய ஆசிரியர்களில் பெரும்பான்மையோர் 'காதலை' என்பதற்கு காதலிக்கப்படுவை என்ற பொருளிலே உரைத்தனர்.

'காதலை' என்பதற்கு 'நீயும் என்னால் விரும்பப்பெறுவை' என்பது பொருள்.

இப்பெண்ணின் முகம்போல் உன்னால் ஒளிவீச முடியுமானால், நீயும் என்னால் விரும்பப்படுவாய் திங்களே! வாழ்க! என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

திங்களினும் மேலாக காதலியின் முகம் ஒளிர்கிறது என்ற முகப் பொலிவின் நலம்புனைந்துரைத்தல்.

பொழிப்பு

என் காதலி முகம்போல ஒளிவீச முடியுமானால், திங்களே! நீயும் என் காதலைப் பெறுவாய். வாழ்க!