நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்
(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல்
குறள் எண்:1111)
பொழிப்பு: அனிச்சப்பூவே! நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்! நீ வாழ்க! யாம் விரும்பும் காதலி உன்னைவிட மெல்லிய தன்மை உடையவள்.
|
மணக்குடவர் உரை:
அனிச்சப்பூவே! நீ நல்ல நீர்மையை யுடையாய்; எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மிக நீர்மையாள் காண்.
இஃது உடம்பினது மென்மை கூறிற்று.
பரிமேலழகர் உரை:
(இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) அனிச்சமே வாழி நன்னீரை - அனிச்சப்பூவே, வாழ்வாயாக, மென்மையால் நீ எல்லாப் பூவினும்
நல்ல இயற்கையையுடையை; யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள் - அங்ஙனமாயினும் எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மெல்லிய
இயற்கையை உடையவள்.
(அனிச்சம்: ஆகுபெயர், 'வாழி' என்பது உடன்பாட்டுக் குறிப்பு. இனி 'யானே மெல்லியள்' என்னும் தருக்கினை ஒழிவாயாக என்பதாம்.
அது பொழுது உற்றறிந்தானாகலின், ஊற்றின் இனிமையையே பாராட்டினான், 'இன்னீரள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
அனிச்சப்பூவே! நீ எல்லாப் பூவினும் மென்மையான நல்ல இயல்புடையாய்! நீ வாழ்வாயாக; யாம் விரும்புகின்றவள் உன்னைப் பார்க்கிலும் மெல்லியல் யுடையவள்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
அனிச்சமே வாழி! நன்னீரை! நின்னினும் மென்னீரள் யாம் வீழ்பவள்.
பதவுரை: நல்-நல்ல; நீரை-நீரைய, இயல்பினையுடையாய்; வாழி-வாழ்வாயாக; அனிச்சமே-அனிச்சப்பூவே; நின்னினும்-நின்னை விட, உன்னைக்காட்டிலும்; மென்-மென்மையான; நீரள்-இயல்புடையவள்; யாம்-எம்மால்; வீழ்பவள்-(என்னால்)விரும்பப்படுபவள்.
|
நன்னீரை வாழி அனிச்சமே:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அனிச்சப்பூவே! நீ நல்ல நீர்மையை யுடையாய்;
பரிப்பெருமாள்: அனிச்சப்பூவே! நீ நல்ல நீர்மையாய் உடையாய்;
பரிதி: அனிச்சமே! நீ முகர்ந்து பார்த்தால் கன்றுவை;
காலிங்கர்: கேளாய் அனிச்சமே! நீயும் சால மென்மையை உடையை. அது நன்று;
பரிமேலழகர்: (இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) அனிச்சப்பூவே, வாழ்வாயாக, மென்மையால் நீ எல்லாப் பூவினும் நல்ல இயற்கையையுடையை;
பரிமேலழகர் குறிப்புரை: அனிச்சம்: ஆகுபெயர், 'வாழி' என்பது உடன்பாட்டுக் குறிப்பு.
'அனிச்சமே!' என்று விளித்து, 'நீ நல்ல நீர்மையை யுடையாய்' எனத் தொல்லாசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அனிச்சப்பூவே! நற்பண்பு உடையாய் வாழ்க', 'அனிச்ச மலரே, நீ வாழ்க! மென்மையிலே நீ எல்லா மலரினும் நல்லியல்பு உடையாய்', 'அனிச்சப்பூவே! நீ எல்லாப் பூவினும் மென்மையான நல்ல இயல்புடையாய்! நீ வாழ்வாயாக', 'அனிச்ச மலரே! நீ மிகவும் மிருதுவான நல்ல இயல்புடைய மலர்தான்' என்றபடி உரை தந்தனர்.
'அனிச்ச மலரே! நீ நல்ல மென்மைத் தன்மையை உடையை. மிக நன்று' என்பது இப்பகுதியின் பொருள்.
நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மிக நீர்மையாள் காண்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உடம்பினது மென்மை கூறிற்று.
பரிப்பெருமாள்: எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மிக நீர்மையாள் காண்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உடம்பினது மென்மை கூறிற்று.
பரிதி: உன்னினும் மெல்லிய நாயகி, புணரும்போது மிருதுவாயிருப்பாள் என்றவாறு.
காலிங்கர்: ஆனாலும் நின்னினும் சால அழகிய மென்மையை உடையவள் மற்று யாம் விரும்பப்பட்ட இவள்;
காலிங்கர் கருத்துரை: என்று இங்ஙனம் தானும் உற்றறிபொருள் ஆகலின் உள் மகிழ்ந்து உரைத்தனன் தலைமகன் என்றவாறு.
பரிமேலழகர்: அங்ஙனமாயினும் எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மெல்லிய இயற்கையை உடையவள்.
பரிமேலழகர் கருத்துரை: இனி 'யானே மெல்லியள்' என்னும் தருக்கினை ஒழிவாயாக என்பதாம். அது பொழுது உற்றறிந்தானாகலின், ஊற்றின்
இனிமையையே பாராட்டினான், 'இன்னீரள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.
'எம்மால் விரும்பப்பட்டவள் உன்னைவிட மென்மையை உடையவள்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'என் காதலி உன்னைவிட மென்மையள்', 'அப்படி இருந்தாலும் யாம் விரும்புபவள் உன்னைவிட மென்மையான இயல்பு வாய்ந்தவள்', 'யாம் விரும்புகின்றவள் உன்னைப் பார்க்கிலும் மெல்லியல் யுடையவள்', 'ஆனாலும் நான் காதலிக்கும் பெண் உன்னைவிட விருதுவான இயல்பினள்' என்றபடி பொருள் உரைத்தனர்.
'என் காதலி உன்னைவிட மென்மையை உடையவள்' என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
'அனிச்சமே! நீ நல்ல மென்மைத் தன்மையை உடையை. மிக நன்று; என் காதலி உன்னைவிட மென்மையை உடையவள்' என்பது பாடலின் பொருள்.
'அனிச்சம்' என்பது என்ன?
|
மிக மெல்லிய இயல்புடையவள் என் காதலி என்கிறான் தலைவன்.
நல்லியல்புடைய அனிச்ச மலரே! வாழ்க! நான் விரும்பும் என் காதலி உன்னைவிட மென்மையான தன்மையினள்!
காட்சிப் பின்புலம்:
காதலியைக் கூடிய பின்னர், அவளிடம் பெற்ற ஊறு இன்பத்தை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறான் தலைமகன். இதுவரையிலும் பெண்களின் தீண்டல் இன்பத்தைக் காணாது வாழ்ந்தவனுக்கு அவளது மென்மைத்தன்மை நினைவுக்கு வருதலைத் தடுக்க முடியவில்லை.
|
இக்காட்சி:
தான் பெற்ற புணர்ச்சி இன்பத்தை எவ்விதமாவது வெளிப்படுத்த நினைக்கிறான் தலைவன். அருகே அனிச்ச மலர் தென்படுகிறது.
அதனிடம் செல்கிறான்; அது கேளாதது போல் இருப்பதால் அதைக் கேட்கச் செய்ய விளித்துக் கூறுகிறான்.
'அனிச்சமே! நீ எல்லா மலரினும் மென்மையாய் இருக்கிறாய். அதற்கு என் வாழ்த்துக்கள்! என் காதலி உன்னைவிட மென்மை என்று அறிவாயா?' என்கிறான்.
இங்கு மென்மை என்பது தலைவியின் உடலினது மெல்லியல்பு குறித்தது. உடல் மென்மை என்பது பொதுவாகத் தோல் மென்மையை உணர்த்துவதாகும். மகளிர் தம் உடம்பை பட்டுப்போல் மென்மையாகவும் வழுவழுப்பாகவும் இருக்குமாறு பேணிக் காப்பர். தனது காதலியின் தோல் மென்மையானது என்று பெருமைப்பட்டு மென்மைக்குக் காட்டு தன் காதலிதான் என்று உள்ளூர அவன் மகிழ்கிறான்.
காதலியின் உடல் மென்மை தந்த இன்பம் அவன் நினைவில் மேலோங்கி நிற்பதால், புணர்ச்சிக்குப் பின்னர், நலம்புனைந்துரைத்தல் அதிகாரத்தின் முதற் குறளாக அவ்வின்பம் பேசப்படுகிறது.
காதல் உணர்வுகளை மிகைப்படுத்திக் கூறும்பொழுது, பூ, நிலா, மாலைப்பொழுது, பறவை போன்றவைகளிடம் உரையாடுவதாக அமைத்துக் கூறும் கவிதை உத்தி இங்கு ஆளப்பட்டது. தலைவி அதிக மென்மையுடையவள் என்பதை நேரடியாகக் கூறாமல், அனிச்சம் பூவுடன் தலைவி உன்னைவிட மென்மையானவள் என்று சொல்வதாக உள்ளது.
காமத்துப்பாலில் வீழ்தல் என்னும் சொல் விழுதுபோல் 'அன்பில் ஊன்றுதல்' என்ற பொருளிலேயே வள்ளுவரால் ஆளப்படுகிறது என்பர். வீழ்பவள் என்பது விரும்பப்படுபவள் என்ற பொருள் தரும்.
பல்வேறு உத்திகளில் பிறந்த இப்பாடல் சொல்லும் பொருளிலும் சொல்லும் முறையிலும் மொழி அமைப்பிலும் சிறந்து விளங்குகிறது.
விளியையும் முன்னிலையையும் பயன்படுத்தி மூன்று வாக்கியங்களில் ('அனிச்சமே வாழி!', 'அனிச்சமே நன்னீரை!', 'நின்னினும் மென்னீரள் யாம் வீழ்பவள்')
மிகச் சிறப்பாகத் தலைவியின் மென்மையை அனிச்சப்பூவின் மென்மையோடு ஒப்ப வைத்துச் சிறந்த தொடை நயம், செம்மையான கட்டமைப்பு ஆகியவற்றைக்
கொண்டு அருமையாக ஆக்கப்பட்ட பாடல் என்பது விளங்கும் என்பார் ச அகத்தியலிங்கம்.
வாழ்வாயாக என வாழ்த்தியது உடன்பாட்டுப் பொருளில் வந்த குறிப்புச்சொல். அனிச்சம் பூவே! இனி நீ யானே மென்மைத் தன்மை உடையவள் என்ற செருக்குற்று வாழமாட்டாய் என உடன்பாட்டுச் சொல்லால் எதிர்மறைப் பொருளை உணர்த்திய குறிப்பாம்.
|
'அனிச்சம்' என்பது என்ன?
அனிச்சம் என்பது ஒரு பூவின் பெயர். சங்கப்பாடல்களில் குறிஞ்சிப் பாட்டிலும் கலித்தொகையிலும் அனிச்சம், பூ என்ற அளவிலேயே குறிப்பிடப்பட்டது.
அதற்கு மென்மைத் தன்மை வழங்கி அந்தப் பூவைச் சிறப்பித்தவர் வள்ளுவர்.
மலர்கள் எல்லாமே மென்மையானவைதாம். அனிச்சம் எல்லாப் பூவினும் மென்மையுடையதென்பது வள்ளுவர் கருத்து.
அனிச்சத்தின் மென்மையை அவர் நன்கு உணர்ந்து துய்த்திருக்க வேண்டும். எனவே தான் ‘அனிச்சம்’ பற்றி நான்கு குறள்களில் (90, 1111, 1115, 1120) குறிப்பிடுப்பிட்டுள்ளார். இந்த நான்கு பாக்களுமே அதன் மென்மைத் தன்மையை உணர்த்துவனவாக உள்ளன.
பரிதி என்னும் பழம் உரையாசிரியர் 'அனிச்சமே! நீ முகர்ந்து பார்த்தால் கன்றுவை. உன்னினும் மெல்லிய நாயகி, புணரும்போது மிருதுவாயிருப்பாள்' என இக்குறட்கருத்தை விளக்குகிறார்.
அனிச்சம் என்ற ஒரு மலர் இருந்ததா? இன்றும் இருக்கிறதா? அதன் நிறம் என்ன? அது நீர்ப் பூவா கோட்டுப்பூவா ஆகியன பற்றி உறுதியாக ஒன்றும் அறியக்கூடவில்லை. மேலே சொன்ன நூல்கள் மட்டுமன்றி, பின்வந்த சிந்தாமணியிலும் மற்றைய பக்தி இலக்கியங்களிலும் அனிச்சமலர் பற்றிக் குறிப்புகள் உள்ளன. எனவே அனிச்சம் பூ என்று ஒன்று இருந்ததாகத் தெளிவடையலாம். இப்போது அது வேறு பெயரில் உள்ளதா என்பதும் அறிவியல் பிரிவில் எந்தத் தாவரவகையில் சேர்ந்தது என்பதும் தெரியவில்லை.
தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் அனிச்சம் எது என்பது பற்றிய ஆய்வு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
|
அனிச்ச மலரே! நீ நல்ல மென்மைத் தன்மையை உடையை. மிக நன்று; என் காதலி உன்னைவிட மென்மையை உடையவள் என்பது இக்குறட்கருத்து.
பூவினும் மென்மையானது எனத் தலைமகளின் உடம்பினது நலம்புனைந்துரைத்தல்.
அனிச்ச மலரே! மெல்லியல்பு உடையாய்! போற்றுகிறேன்; ஆனால் என் காதலி உன்னைவிட மென்மையானவள்!
|