இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1116மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்

(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1116)

பொழிப்பு (மு வரதராசன்): விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.மணக்குடவர் உரை: மதியினையும் மடந்தை முகத்தினையும் கண்டு இவ்விரண்டினையும் அறியாது தன்னிலையினின்றுங் கலங்கித் திரியா நின்றன மீன்கள்.
மீன் இயக்கத்தைக் கலங்குதலாகக் கூறினார். இம் மீன் கலங்கித் திரிதலானே இவள் முகம் மதியோடு ஒக்கும் என்று கூறியது.

பரிமேலழகர் உரை: (இரவுக்குறிக்கண் மதி கண்டு சொல்லியது.) மீன் - வானத்து மீன்கள்; மதியும் மடந்தை முகனும் அறியா - வேறுபாடு பெரிதாகவும் தம் மதியினையும் எம்மடந்தை முகத்தினையும் இதுமதி, இதுமுகம் என்று அறியமாட்டாது; பதியின் கலங்கிய - தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன.
(ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல் பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான். வேறுபாடு, வருகின்ற பாட்டால் பெறப்படும். இனி 'இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது கலங்கின மீன்கள் அறியா' என்றுரைப்பினும் அமையும்.)

வ சுப மாணிக்கம் உரை: வானவட்டத்துச் சுழன்றுதிரியும் விண்மீன்கள் இது திங்கள் இது மாதர் முகம் என அறியா.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மீன் மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய.

பதவுரை: மதியும்-திங்களும்; மடந்தை-மங்கை; முகனும்-முகமும்; அறியா-(வேறுபாடு)அறியாமல்; பதியின்-இருப்பிடத்தினின்றும், தன்நிலையினின்றும்; கலங்கிய-குழம்பித் திரிந்தன; மீன்-விண்மீன்.


மதியும் மடந்தை முகனும் அறியா:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மதியினையும் மடந்தை முகத்தினையும் கண்டு இவ்விரண்டினையும் அறியாது;
பரிப்பெருமாள்: மதியினையும் மடந்தை முகத்தினையும் கண்டு இவ்விரண்டினையும் யாதுமதி என்று அறியாது;
பரிதி: மதியும்மடந்தை முகமும் அறியாவாய்;
காலிங்கர்: நெஞ்சே! விசும்புள் வாழும் மதியும் நிலத்து வாழும் மடந்தை முகமும் தெரியமாட்டா;
பரிமேலழகர்: (இரவுக்குறிக்கண் மதி கண்டு சொல்லியது.) வேறுபாடு பெரிதாகவும் தம் மதியினையும் எம்மடந்தை முகத்தினையும் இதுமதி, இதுமுகம் என்று அறியமாட்டாது; [இரவுக் குறியாவது கூடுமிடத்து அடையாளமாம். அஃதாவது தலைவன் தலைவியை இரவில் அவளது மனையருகே குறித்ததோர் இடத்தில் வந்து கூடுதலாம்]

'நிலவையும் பெண்ணின் முகத்தையும் கண்டு இரண்டினில் எது நிலவு, எது முகம் என்று அறியமாட்டாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மதிக்கும் மடந்தை முகத்துக்கும் வேறுபாடு அறியாது', 'திங்கள் இது இம்மடந்தையின் முகம் இது என்று அறியமாட்டாது', 'மதியினையும் (சந்திரனையும்) காதலியாம் பெண்ணின் முகத்தினையும் வேறுபடுத்தி அறியாதனவாய்', 'சந்திரனுக்கும் இந்தப் பெண்ணின் முகத்துக்கும் வேற்றுமை அறிந்து கொள்ளமுடியாமல்' என்றபடி உரை தந்தனர்.

திங்களையும் மங்கை முகத்தினையும் நோக்கி இவ்விரண்டினுக்கும் வேறுபாடு அறியாது என்பது இப்பகுதியின் பொருள்.

பதியின் கலங்கிய மீன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னிலையினின்றுங் கலங்கித் திரியா நின்றன மீன்கள்.
மணக்குடவர் கருத்துரை: மீன் இயக்கத்தைக் கலங்குதலாகக் கூறினார். இம் மீன் கலங்கித் திரிதலானே இவள் முகம் மதியோடு ஒக்கும் என்று கூறியது.
பரிப்பெருமாள்: தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன மீன்கள்.
பரிப்பெருமாள் விரிவுரை: மீன் இயக்கத்தைக் கலக்கமாகக் கூறினார். அன்றியும் 'பதியிற் கலங்கிய மீன் அறியா' என்று பாடம் ஓதித் தம்நிலையினின்றும் கலங்கின மீன்கள், மதியினையும் மடந்தை முகத்தினையும் அறியாவாயின எனினும் அமையும். மீன்கள் கலங்கித் திரிதலாலே இவள் முகம் மதியோடொக்கும் என்று கூறியது.
பரிதி: பதியிலும் வேறேயாய் அலைந்தன விண்மீன்கள் என்றவாறு.
காலிங்கர்: ஆதலால் விசும்பாகிய பதியுள் நின்றும் இந்நிலத்துறத் தாழ்ந்து பார்த்தும், விசும்புற உயர்ந்து பார்த்தும் இங்ஙனம் தடுமாறித் திரிகின்ற மீன்களானவை, அம்மதியைப் போல மதியில என்று இங்ஙனம் இவள் முகம் நலம் புனைந்துரைத்தான் தலைமகன் என்றவாறு.
பரிமேலழகர்: தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன.
பரிமேலழகர் விரிவுரை: மீன் - வானத்து மீன்கள்; ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல் பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான். வேறுபாடு, வருகின்ற பாட்டால் பெறப்படும். இனி 'இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது கலங்கின மீன்கள் அறியா' என்றுரைப்பினும் அமையும். [மீன்கள்-விண்மீன்கள், நட்சத்திரங்கள்; இயங்குதல்-திரிதல்; வேறுபாடு-மதிக்கும் மடந்தைக்கும் உள்ள வேற்றுமை (தேய்தலும் வளர்தலும் மறு உடைமையும்)]

'தம் நிலையினின்றுங் கலங்கித் திரிந்தன விண்மீன்கள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விண்மீன்கள் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன', 'வானத்திலுள்ள உடுக்கள் தமது நிலையினின்றும் பெயர்ந்து திரியலாயின', 'வானத்து மீன்கள் (நட்சத்திரங்கள்) தம் இடத்திலிருந்து மயங்கித் திரிகின்றன.', 'வானத்திலுள்ள நட்சத்திரங்கள் தாம் இருக்க வேண்டிய இடத்தைவிட்டு மாறிவிட்டோமோ என்று குழப்பமடைந்தன' என்றபடி பொருள் உரைத்தனர்.

தம் நிலையினின்றுங் கலங்கித் திரிந்தன விண்மீன்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
திங்களையும் மங்கை முகத்தினையும் நோக்கி இவ்விரண்டினுக்கும் வேறுபாடு அறியாது பதியின் கலங்கிய விண்மீன்கள் என்பது பாடலின் பொருள்.
'பதியின் கலங்கிய' என்றால் என்ன?

விண்மீன்களைச் சுழலவிட்டது தலைவியின் மதிமுகம்.

நிலவெதுவோ தலைவியின் முகமெதுவோ என வேறுபாடு அறியாமையால், விண்மீன்கள் தம் நிலையில் நில்லாது கலங்கிப் போயினவே.
காட்சிப் பின்புலம்:
தான் நெருக்கமாக உணர்ந்த, காதலுக்குரியவளின் உறுப்பு நலன்கள் தலைமகனது உள்ளத்தில் மேலோங்கி நிற்கின்றன. உணர்ச்சிப் பெருக்கோடு, தன் நெஞ்சோடு பேசுவது போலவும், மலரை விளித்து அதனுடன் உரையாடுவது போலவும், அவளது அழகைக் கொண்டாடுகிறான் அவன். தன் காதலியினது மென்மைத் தன்மை, வளவளப்பான தோள், பல்லொளி, உடல் மணம், கண்ணழகு, இடையழகு இவற்றை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
முழுநிலவு தோன்றும் ஓர் இரவில் தன் காதலியைக் கூடுவதற்காகக் காத்திருக்கிறான் அவன். அப்பொழுது வானை நோக்கிப் பார்வையைச் செலுத்துகிறான். அங்கே விண்மீன்கள் விட்டுவிட்டு மின்னுகின்றன; அது அவை அங்கும் இங்கும் அலைவன போல் தோன்றுகின்றன. சற்று முன் இருந்த இடத்தில் இப்போது இல்லை என்னுமாறு நிலைகொள்ளாமல் விண்மீன்கள் அலைந்து திரிவதற்குக் காரணம் என்ன என்று அவனது சிந்தனை செல்கிறது. வானில் ஒளிரும் தண்நிலவைக் கூர்ந்து நோக்குகிறான். அம்மதி அவனுக்குத் தன் காதலியின் முகம் போன்று ஒளிமிகுந்து தோன்றுகிறது. இப்பொழுது அவன் புரிந்துகொள்கிறான்- ஏன் விண்மீன்கள் தவிக்கின்றன என்று. தன்னைச் சந்திக்க வந்துகொண்டிருக்கும் காதலியின் முகத்தையும் நிலவையும் கண்ட விண்மீன்கள், 'எது உண்மையான நிலவு?' என்று அறியாமல், நில மங்கையையும் விண்மீன்களையும் மாறி மாறிப் பார்த்து விழிக்கின்றன. இதனால்தான் அவை தம் இடத்தில் நிலைத்து நிற்காது திகைத்துத் திரிகின்றனவோ என்று கூறுகிறான். அதாவது நிலவும் காதலியின் முகமும் வேறுபாடு காணமுடியாமல் ஒளிவீசுகின்றன என்கிறான் தலைமகன்.

இரவில் திங்கள் ஒளியில் நின்ற காதலன் தன் காதலியின் முக நலம் புனைந்துரைக்கும் கவிநயம் மிக்க குறட்பா.
மதியே அவளது முகம், அவள் முகமே வான்மதி என்று சொல்லும் அளவு காதலியின் முகம் அழகானது; ஒளிரும் தன்மையது; மிகுந்த தண்மை கொண்டது என்பதாக அவன் உணர்ந்து சொல்லும் வெளிப்பாடாக இக்குறள் உள்ளது.
நீர்நிலைகளில் உள்ள மீன்கள் நிலைகொள்ளாமல் தவித்து அலைவது அவற்றின் இயங்குதன்மையால். அது போலவே வான்மீன்கள் மினுக் மினுக்கென மின்னுவது அவை நிலைகொள்ளாமல் அலைவதுபோல் காட்சியளிக்கின்றன. வானிலுள்ள தண்ஒளி பெற்ற முழுமதி போலவே பூமியிலுள்ள காதலியினுடைய பொலிவுமிக்க முகம் இருத்தலால் அவற்றிற்கு வேறுபாடு அறியமாட்டாமல் விண்மீன்கள் கலங்குகின்றன என்பது இப்பாடலின் புனைவு.
இக்காட்சியைக் காலிங்கர் நயம்பட இவ்விதம் விளக்குவார்: 'இந்நிலத்துறத் தாழ்ந்து பார்த்தும், விசும்புற உயர்ந்து பார்த்தும் இங்ஙனம் தடுமாறித் திரிகின்ற மீன்களானவை.' விண்மீன்கள் தம்மெதிரே இரண்டு திங்களைக் காண்கின்றனவாம். இவ்விரண்டில் எது திங்கள்? எது பெண்முகம்? எனப் பிரித்தறிய முடியாமல், காதலியின் முகம் இருக்குமிடத்தைக் குறியாகக் கொண்டு பார்ப்பதும் பின்னர் மதியை நோக்கிப் பார்வையைச் செலுத்துவதுமாக நிலை தடுமாறி மின்னுகின்றனவாம்.

'பதியின் கலங்கிய' என்றால் என்ன?

'பதியின் கலங்கிய' என்றதற்குத் தன்னிலையினின்றுங் கலங்கி, தம் நிலையினின்றும் கலங்கி, பதியிலும் வேறேயாய் அலைந்தன, விசும்பாகிய பதியுள் நின்றும் இந்நிலத்துறந் தாழ்ந்து பார்த்தும் விசும்புற உயர்ந்து பார்த்தும் இங்ஙனம் தடுமாறித் திரிகின்ற, அங்கும் இங்குமாய் விழித்துப் பார்க்கின்றன!, வானவட்டத்துச் சுழன்றுதிரியும், தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன, தாம் இருக்க வேண்டிய இடத்தில் மாறிவிட்டோமோ என்று குழப்படைந்தன, தாம் இருக்கும் இடத்தில் இருந்து பெயர்ந்து நடுங்குவன வாயின, தமது நிலையினின்றும் பெயர்ந்து திரியலாயின, தம் இடத்திலிருந்து மயங்கித் திரிகின்றன, தடுமாறுகின்றன, மயங்கித் தம் நிலையினின்றும் பெயர்ந்து அங்குமிங்குந் திரிகின்றன, தங்கள் இடங்களினின்றும் நிலை கலங்கி விண்ணிலே சுழல்கின்றன என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பதியின் என்பதற்குத் தம் இடத்திலிருந்து அதாவது தாம் இருக்க வேண்டிய இடத்திலிருந்து என்பது பொருள். கலங்கிய என்ற சொல்லுக்கு தடுமாறித் திரிகின்றன என்று பொருள். பதியின் கலங்கிய என்பது 'ஒரிடத்து நிலைத்து நில்லாது தடுமாறித் திரிகின்றன' என்ற பொருள் தரும்.
விண்மீன்களின் இயற்கை என்ன? அறிவியல் சொல்வது: அவை நகரலாம்; ஓரிடத்திலே இருக்கலாம்; அல்லது சார்புநிலையில் இயங்கலாம். ஆனால் நம் பார்வைக்கு அவை ஓரிடத்தில் தங்கி நிற்பதில்லை. நேற்று இருந்த இடத்தில் இன்று இல்லை; இன்று இருக்கும் இடத்தில் நாளை இருக்காது. சற்று முன் இருந்த இடத்தில் இப்போது இல்லை. நீர்நிலையில் இருக்கும் மீன்களும் தம்நிலையில் இல்லாமல் எப்பொழுதும் இயங்கிக் கொண்டேயிருக்கும். இக்காட்சியைத் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரியும் விண்மீன்கள் என்று கற்பனை செய்து அந்த மீன்கள் மதி இன்னது, இப்பெண்ணின் முகம் இன்னது என்றறியாது அலைகின்றனவே! என்ற கவின்மிகு கவிதை ஒன்றைத் தந்தார் வள்ளுவர்.
நாமக்கல் இராமலிங்கம் இத்தொடருக்கு நாமிருக்கும் இடத்தினின்று மாறிவந்து விட்டோமோ என்று மீன்கள் திகைப்படைந்தன என்று பொருள் உரைத்தார்.

'பதியின் கலங்கிய' என்ற தொடர்க்குத் தாமிருக்கும் இடங்களினின்று பெயர்ந்து விட்டோமோ என்று மீன்கள் கலங்கின என்பது பொருள்.

திங்களையும் மங்கை முகத்தினையும் நோக்கி இவ்விரண்டினுக்கும் வேறுபாடு அறியாது தம் நிலையினின்றுங் கலங்கித் திரிந்தன விண்மீன்கள் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வான்வெள்ளியையும் சிமிட்டவைத்த தலைவியின் முகநலம்புனைந்துரைத்தல்.

பொழிப்பு

விண்மீன்கள் நிலவுக்கும் பெண்ணின் முகத்துக்கும் வேறுபாடு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.