இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1119



மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி

(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1119)

பொழிப்பு (மு வரதராசன்): திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

மணக்குடவர் உரை: மதியே! நீ மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்தை ஒப்பையாயின், பலர் காணுமாறு தோன்றாதொழிக.
இது மதி ஒளியும் வடிவும் ஒத்ததாயினும் குணத்தினாலே ஒவ்வாதென்றது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) மதி - மதியே; மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் -இம்மலர் போலும் கண்ணையுடையாள் முகத்தை நீ ஒக்க வேண்டுதியாயின்; பலர் காணத்தோன்றல் - இதுபோல யான் காணத் தோன்று; பலர் காணத் தோன்றாதொழி.
(தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டும், பலர் காணத்தோன்றலை இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: மலர் கண்ணாளின் முகம்போல் ஆகவிரும்பின் திங்களே! பலர் பார்க்கத் தோன்றாதே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மதி! மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின் பலர்காணத் தோன்றல்.

பதவுரை: மலர்-பூ; அன்ன-போன்ற; கண்ணாள்-கண்களையுடையவள்; முகம்-முகம்; ஒத்தியாயின்-ஒத்திருக்கவேண்டுகின்றாயானால், ஒப்பாக விரும்புவாயானால்; பலர்-பலர்; காண-பார்க்க; தோன்றல்-தோன்றாதே, வெளிப்படாதே; மதி-நிலவு.


மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீ மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்தை ஒப்பையாயின்;
பரிப்பெருமாள்: நீ மலர்போலுங் கண்ணினை யுடையாளது முகத்தை ஒப்பையாயின்;
பரிதி: செங்கழுநீர் போலும் கண்ணாள் முகத்திற்கு நிகராவை யாகில்;
காலிங்கர்: நீ இக்குவளை மலரன்ன கண்ணினை உடையாளது முகத்தை ஒப்பதோர் ஒளிநலம் உடையையாயின்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) இம்மலர் போலும் கண்ணையுடையாள் முகத்தை நீ ஒக்க வேண்டுதியாயின்; [வேண்டுதியாயின் - விரும்பினாய் ஆனால்] .

'மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்தை ஒக்க விரும்பினால்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இம்மலர் போன்ற கண்களையுடைய இவள் முகத்தை ஒத்திருக்க விரும்புவாயானால்', 'நீ மலர் போன்ற கண்களுள்ள என் காதலியின் முகம்போல (பிரகாசமுள்ள பெண்) ஆகிவிட்டால்', 'மலர்போலுங் கண்ணையுடைய இவளது முகத்தை ஒத்திருக்க வேண்டுமானால்', 'மலர் போலும் கண்களையுடையாள் முகத்தை நீ ஒக்க விரும்புவாயானால்' என்றபடி உரை தந்தனர்.

மலர்போலுங் கண்களை யுடையாளது முக ஒளிநலத்தை ஒத்திருக்க விரும்பினால் என்பது இப்பகுதியின் பொருள்.

பலர்காணத் தோன்றல் மதி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பலர் காணுமாறு தோன்றாதொழிக மதியே!
மணக்குடவர் குறிப்புரை: இது மதி ஒளியும் வடிவும் ஒத்ததாயினும் குணத்தினாலே ஒவ்வாதென்றது.
பரிப்பெருமாள்: பலர் காணுமாறு தோன்றாதொழிக மதியே!
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மதி ஒளியும் வடிவும் ஒருவாற்றால் ஒத்தது ஆயினும் குணத்தினாலே ஒவ்வாதென்றது.
பரிதி: பலர் காணத் தோன்றல் மதி என்றவாறு.
காலிங்கர்: இவள்போல் ஒரு வரம்பினை யுளவாய் ஓரிடத்து உறைதல் அன்றி இங்ஙனம் யாவரும் காணத் தோன்றக்கடவையல்ல மதியே! என்று மற்று அவள் கேட்ப இங்ஙனம் கூறினான் தலைமகன் என்றவாறு.
பரிமேலழகர்: இதுபோல யான் காணத் தோன்று மதியே; பலர் காணத் தோன்றாதொழி.
பரிமேலழகர் குறிப்புரை: தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டும், பலர் காணத்தோன்றலை இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது என்பதாம்.

'பலர் காணுமாறு தோன்றாதொழிக திங்களே' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பலரும் காணுமாறு நீ தோன்றாதே! நான் மட்டும் காணத் தோன்றுவாயாக மதியே', 'அதன் பிறகு நீ இப்படிப் பலபேர் உன்னைப் பார்க்கும்படி வெளியே திரியக் கூடாது சந்திரனே!', 'பலர் பார்க்கும்படியாகத் தோன்றாதே. நான் மட்டும் பார்க்கும்படி தோன்று மதியே!', 'மதியே பலர் காணுமாறு தோன்றுதலை ஒழிக' என்றபடி பொருள் உரைத்தனர்.

பலரும் காணும்படி தோன்றாதே நிலவே! என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மலர்போலுங் கண்களை யுடையாளது முக ஒளிநலத்தை ஒத்திருக்க விரும்பினால், பலர்காணத் தோன்றல் நிலவே! என்பது பாடலின் பொருள்.
ஏன் 'பலர்காணத் தோன்றல்' எனக்கூறுகிறான் காதலன்?

தான் மட்டுமே துய்ப்பதற்காக உரியது அவளது முக அழகுநலம் என்கிறான் தலைவன்.

நிலவே! மலர்போன்ற கண்களையுடைய என் காதலியை ஒத்திருக்க விரும்பினால், பலரும் காணுமாறு தோன்றாதிருப்பாயாக!
காட்சிப் பின்புலம்:
காதலியைக் கூடிப் பெற்ற இன்பத்தை நினைந்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறான் தலைவன். அவள் மலரினும் மெல்லிய இயல்புடையவள் என்கிறான். பலர் காணும்படி உள்ள இம்மலர் மேல் நீ எப்படி மையல் கொள்ளலாம்? என் காதலிபோல் நான் மட்டும் கண்டு மகிழக்கூடியதல்லவே இது! எனத் தன் நெஞ்சத்தைக் கடிகிறான். மூங்கில்போலும் தோளினையுடைய அவளது நிறம் தளிர்; முத்துப்போன்ற பலவரிசை கொண்டவள்; இயற்கை மணம் உடையவள்; மையுண்ட கண்கள் வேல் என மற்ற அழகு நலன்களைக் கொண்டாடுகிறான். குவளை மலர் இவளைக் கண்டால் இவளது கண்களுக்கு நாம் ஒப்பமாட்டோம் என நாணித் தலை கவிழ்ந்து கொள்ளும், அவள் அனிச்சப்பூவைக் காம்பு நீக்காமல் தலையில் சூடினால் அவளது இடை முறிந்துவிடுமே! வானத்து மீன்கள் நிலவையும் இவள் முகத்தையும் நோக்கி எது நிலவு எது அவள் முகம் எனத் தடுமாறும். மதிக்கு மறுவுண்டு, ஆனால் இவள் முகத்தில் ஏதும் இல்லையே! மதியே இவள் முகம்போல் ஒளிவீச உன்னால் முடியுமானால் நீயும் என்னால் காதலிக்கப் படுவாய், ஆனால் அதற்கு வாய்ப்பில்லையே! என்று மலருடனும் மதியுடனும் விளையாட்டாகப் பேசுவதுபோல் தன் காதலியின் அழகுநலங்களைப் புனைந்துரைத்துக் கொண்டிருக்கிறான் தலைமகன்.

இக்காட்சி:
தன் காதலியின் கண் மலர் போன்றது; அவளது நாண்குணம் அவளது முகத்துக்கு ஒளி கூட்டுகிறது என்று இங்கு தலைவன் மொழிகிறான். மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி (1118) என முந்தைய குறளில் காதலியைப் போல் திங்கள் ஒளிரமுடிதல் கடினம் என்று சொன்ன பிறகு நிலவுக்கு ஒரு அழகுக் குறிப்பு தருகிறான் அவன். 'என் காதலி முகம் ஒப்பதோர் ஒளிநலம் உடையையாய் விரும்பினால் பலர் காணத் தோன்றாமல் இரு' என்கிறான். 'என் காதல் தலைவி எனக்கு மட்டுமே அவள் முக அழகு தோன்றுமாறு காட்சி தருவாள். அது அவள் அணிந்த நாண் என்னும் நற்குணத்தால் உண்டாவது. அதுவே அவளுக்குக் கூடுதல் முகஒளிர்வைத் தருகிறது. நிலவே நீயும் நாண் பூண்டு தோன்றமுடியுமானால் என் காதலியினது போன்ற முகப்பொலிவு பெறுவாய்' என்று நிலவுக்குத் தன் தலைவியின் ஒளிதிகழ் முகப்பொலிவுக்குக் காரணம் கூறுவதுபோல் அவளது மிளிரும் முகம் பற்றி உயர்ந்தேத்திப் பெருமிதத்துடன் பேசுகிறான் தலைவன்.

தலைவியின் முகம் நிலாவைவிட ஒளி மிகுந்து விளங்கக் காரணம் நிலாவுக்கு இல்லாத நாணம் உடையவள் தன் காதலி; நிலவானது வானத்தில் உலகோர் அனைவரும் பார்க்கும்படி வளையவருவதால் அதற்கு நாண் குணம் இல்லை; ஆனால் தன் காதலி தான் மட்டும் அவள் முகத்தை காணும்படி நாணுடன் வருவதால் அது அவளுக்குக் கூடுதல் முகப்பொலிவைத் தருகிறது என்பது செய்தி.

ஏன் 'பலர்காணத் தோன்றல்' எனக்கூறுகிறான் காதலன்?

பலர் காணத் தோன்றல் என்றால் பலரும் காணும் படி தோன்றாதே என்று பொருள். நிலவு பலர் காண்பதற்காகவே உண்டானதாயிற்றே! பின் ஏன் காதலன் இப்படிக் கூறுகிறான்? பலர்காணத் தோன்றாதொழிக என்றது தான் மட்டும் காணும்படி தன்காதலி தோன்றுகிறாள் என்பதைக் குறிப்பால் உணர்த்தியது.
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று (1112 பொருள்: 'இவளது கண் பலரால் காணப்படும் பூவையொக்கும் என்று, நெஞ்சே! மலர்களைக் கண்டால் மயங்குகின்றாய்') என முன்பு இதே அதிகாரத்துக் குறள் ஒன்று 'பலர் காணத்தோன்றும் பூ' என மலர் இழித்துக் கூறப்பட்டது. 'நான் மட்டுமே கண்டு மகிழக்கூடிய, எனக்கே உரிமைப் பொருளான, அவளது கண்களுக்கு பலர் காணும் பூ, ஒப்புமை ஆகாது' என்று அங்கு சொல்லப்பட்டதுபோல, பலர் காணத் தோன்றும் நிலவின் பொலிவு தான் ஒருவனே கண்டு நுகர்தற்குரிய பொருளாக உள்ள காதலின் முக அழகுக்கு ஒப்பாக முடியாது என இங்கு நிலவு தலைவனால் பழிக்கப்படுகிறது.

தலைவன் தன் காதலி தனக்கு மட்டுமே உரியவள்; தான் மட்டுமே அவள் எழில்நலங்களைத் துய்க்கவேண்டும் என்னும் எண்ணங்கள் கொண்டவனாக இருக்கிறான். காதலன் மட்டுமே காணத்தோன்றும் தலைவிக்கு ஒப்புமையாக வேண்டின் அங்ஙனம் ஒப்புமையாக வரும் பொருளும் அத்தனித்தன்மையுடையதாக விளங்கல் வேண்டும். ஆனால், பலர்காணத் தோன்றுவதே மதியின் இயற்கையாதலின், ஒரு நாளும் அது தலைவிக்கு உவமையாக முடியாது என்று தலைவன் நலம் பாராட்டுகிறான். தலைவி தன் காதலன் முன் தோன்றும்போது அவளது முகத்தில் காணும் அழகும் ஒளியும் கூடுதலாக இருந்தது. புற அழகுடன் அக அழகையும் முன்வைப்பது வள்ளுவர் வழக்கம். புற அழகு மலரன்ன கண்கள். அக அழகு நாண் அதாவது பலர்முன் அடக்கமாகத் தோன்றல். இங்கு மலரன்ன கண் எனக் காதலியின் புற அழகைப் புனைந்தபின், அவள் நாணம் மேலிட அடக்கத்துடன் காட்சி அளிப்பதை அவள் முகத்தைத் தான் மட்டும் பார்க்கவே காட்டுவாள் எனத் தலைவன் சொல்வதுபோல அவளது உயர்ந்த பண்பைக் கூறுகிறார் அவர். தலைவி காதலன் மட்டுமே பார்க்கத் தோன்றுவதாலே பொலிவுமிகக் காணப்படுகிறாள். அவளது முகம் நிலாவைவிட ஒளி மிகுந்து இருப்பதற்குக் காரணம் அவள் நாணம் உடையவளாய் இருப்பதுதான்.

மணக்குடவர் 'மதி ஒளியும் வடிவும் ஒத்ததாயினும் குணத்தினாலே ஒவ்வாதென்றத' என்று விளக்கம் செய்தார் மணக்குடவர். அது என்ன குணம் என்று இவர் சொல்லவில்லையாயினும் அது நாணத்தைக் குறிப்பது என்று பின் வந்த உரையாளர்கள் கொண்டனர். காலிங்கர் 'இவள்போல் ஒரு வரம்பினை யுளவாய் ஓரிடத்து உறைதல் அன்றி இங்ஙனம் யாவரும் காணத் தோன்றக்கடவையல்ல மதியே!' என்று கட்டுப்பாடுடன் உள்ள பெண் அவள் எனப் பொருள்படும்படி விளக்கினார். பரிமேலழகர் 'தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டும், பலர் காணத்தோன்றலை இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது' என்று உரை கண்டார். அதாவது அவள் முக அழகை தான் ஒருவனே துய்க்கவேண்டும் எனத் தலைவன் கூறுவதாக இவ்வுரை உள்ளது.
பிற்கால உரையாசிரியர்களும் மேற்சொன்ன 'நாணம் கொள்', 'வரையறையோடு தோன்று (ஒழுக்கத்தைக் கடைப்பிடி)'. 'அவள் அவனது உரிமைப் பொருளாய் இருப்பதுபோல் நான் மட்டும் பார்க்கத் தோன்று' என்றவாறே விளக்கம் தந்தனர். இன்னும் சிலர் 'தேய்தல்/வளர்தல் களங்கம் உடையது திங்கள்; அதனால் தோன்றக்கூடாது' என்றனர். மேலும் 'பலர் பார்த்தால் அழகு குறையும்; ஒருவருக்கு மட்டும் தோன்ற வேண்டும்' என்றும் பொருளுரைத்தனர். 'தன் காதலியின் முகத்தை வேறு ஆடவர் கண்டு மகிழக்கூடாது என்று கருதும் ஆடவரின் பொறாமையுள்ளம் வெளிப்படுத்தப்படுகின்றது' என்பதும் ஓர் கருத்து. இன்னும் 'முகத்திரை இட்டுக்கொள்', 'பரத்தை மாதிரித் திரியாதே' என்பன போன்ற நயமற்ற உரைகளும் உள.

பெண்ணை 'வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றோ, வந்தால் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வா' என்றோ சொல்லப்படவில்லை. நாண் கொண்ட பெண்கள், பொதுஇடங்களில், பிற ஆடவர் பார்க்கும்வண்ணம் நீண்டபொழுது காட்சிப் பொருளாக நிற்கும் நிலை தவிர்ப்பர்; அந்த நாண் குணம் பெண்ணின் அழகுக்கு அழகு சேர்க்கும் எனக் காதலன் சொல்கிறான் எனக் கூறி அமையலாம்.

மலர்போலுங் கண்களை யுடையாளது முக ஒளிநலத்தை ஒத்திருக்க விரும்பினால், பலரும் காணும்படி தோன்றாதே நிலவே! என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தலைவியின் நாண் குணமே அவளுக்குத் திங்களின் மேலாக ஒளி தருகிறது என்று முக நலம்புனைந்துரைத்தல்.

பொழிப்பு

மலர் போன்ற கண்களையுடைய இவள் முக ஒளிர்வு போல் ஆகவிரும்பின் திங்களே! பலரும் காணுமாறு தோன்றாதே.