அனிச்சமும் அன்னத்தின் தூவியும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அனிச்சப்பூவும், அன்னத்தின் தூவியும்;
பரிப்பெருமாள்: அனிச்சப்பூவும், அன்னத்தின் தூவியும்;
பரிதி: உலகத்தார் மேன்மை கொடுக்கப்பட்ட அனிச்சப் பூவும் அன்னப்புள்ளின் சிறகும் இரண்டும்;
காலிங்கர்: நெஞ்சே! அனிச்ச மலரும் அன்னத்தின் தூவியும் இரண்டும் சால மென்மை உடையவன்றே;
பரிமேலழகர்: (உடன் போக்கு உரைத்த தோழிக்கு அதனது அருமை கூறி மறுத்தது.) உலகத்தாரான் மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப்பூவும் அன்னப்புள்ளின் சிறகும் ஆகிய இரண்டும்; [உடன் போக்கு-தலைவன் தலைமகளைத் தன் ஊருக்கு உடனழைத்துச் செல்லுதல்; அதனது அருமை-உடன்போக்கின் அருமை]
'அனிச்சப்பூவும் அன்னத்தின் சிறகும்' என்று அனைத்து பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும்', 'அனிச்சப் பூவும் அன்னப்பறவையின் சிறகும்', 'மென்மைக்கு எடுத்துக் காட்டாய் உள்ள அனிச்சப்பூவும்', 'மிகவும் மிருதுவாகிய அனிச்சப் பூவும் அன்னப் பறவையின் சிறுமயிரும்கூட' என்றபடி உரை தந்தனர்.
அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும் என்பது இப்பகுதியின் பொருள்.
மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாதரடிக்கு நெருஞ்சிப் பழத்தோடு ஒக்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அவையிற்றினும் மெல்லியது அடியென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: இம்மாதரடிக்கு நெருஞ்சிப் பழத்தோடு ஒக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அவையிற்றினும் மெல்லியது அடி என்று கூறப்பட்டது. இதனுள் இரவும் பகலும் காணப்பட்ட பொருள்களை உவமமாகக் கூறிய அதனால் இயற்கைப்புணர்ச்சியும் நலம் பாராட்டுதலும், பகற்குறியினும் இரவுக்குறியினும் என்று கொள்ளப்படும்.
பரிதி: இரண்டும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் போல வருத்தம் செய்யும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவை தாமும் நம் மாதராள் அடியினது மென்மைக்குச் சில நெருஞ்சிமுள். எனவே அவற்றினை அடியினும் ஆற்றாள் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும்.
பரிமேலழகர் குறிப்புரை: முள் வலிதாதலுடைமையின் பழம் என்றான். இத்தன்மைத்தாய அடி 'பாத்திஅன்ன குடுமிக் கூர்ங்கற'களையுடைய (அகநா.களிற்.5) வெஞ்சுரத்தை யாங்ஙனம் கடக்கும்'? என்பது குறிப்பாற் பெறப்பட்டது. செம்பொருளேயன்றிக் குறிப்புப் பொருளும் அடிநலனழியாமையாகலின், இதுவும் இவ்வதிகாரத்ததாயிற்று. [வெஞ்சுரம்-கொடிய பாலைவனம்]
'மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'காதலியின் அடிக்கு நெருஞ்சி முள்', 'மாதினுடைய பாதத்திற்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும்', 'அன்னப்பறவையின் இறகும் மாதர் (காதலி) அடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தம் செய்யும்', '(என் காதலியின் பாதங்களில்) நெருஞ்சி முள்போலக் குத்திவிடக் கூடியவை எண்ணும்படி அவ்வளவு மிருதுவானவை என் காதலியின் பாதங்கள்' என்றபடி பொருள் உரைத்தனர்.
காதலியின் அடிக்கு நெருஞ்சி முள்போல வருத்தம் செய்யும் என்பது இப்பகுதியின் பொருள்.
|