பெரியாரின் ஆற்றலைச் சொல்லி அவரைப் பிழைக்க வேண்டாம் எனக் கூறப்படுவதால், பெரியார் நல்லவராக அமைவராவார். நற்பண்புகள் நிறைந்தவர்களாக, நன்மை நாடிக் கடைப்பிடிப்பவராக இவரைக் கொள்ளலாம். அவரை எதிர்த்தால் துன்பம் வரும் என்பது சொல்லப்படுகிறது.
பெரியார் யார்? நாட்டுத் தலைவன் (அல்லது அரசுஅங்கங்கள்), ஆற்றல்பல கொண்ட அறிஞர் இவர்களைப் பெரியார் எனச் சொல்கிறது இவ்வதிகாரம். இறையாண்மை (sovereign power)யை எதிர்க்கப்படுவதும், தற்சிந்தனையாற்றலுடைய அறிஞர்களை ஆட்சியாளர் பகைப்பதும் பேசப்படுகின்றன.
பெரியார் இவ்வதிகாரத்தில், ஆற்றுபவர், வெந்துப்பின் வேந்து, குன்றன்னார், தகைமாண்ட தக்கார், ஏந்திய கொள்கையார், சிறந்தமைந்த சீரார் என்னும் தொடர்ப் பெயர்களால் குறிப்பிடப்படுகிறார்.
உலகில் ஆட்சியில் இருப்பவர்கள் அதிகாரம் பலம் மிக்கவர்களாக இருக்கின்றார்கள். அரசாட்சி மக்கள் நலனுக்காக உண்டாவது. அதை இகழ்ந்து பிழை செய்வதால் வரும் இடரும் அழிவும் தாங்க முடியாதனவாக இருக்கும். ஆகையால் தற்காப்புத் தேடுவார் செய்யும் காவல் முறைகளில் தலையானது எது என்றால், ஆற்றல் உடையவர்களின் ஆற்றலை மதித்து நடப்பதே ஆகும். மீறி நடந்தால் ஆள்வோரால் நீங்காத துன்பம் வரும் என அரசாட்சியின் ஆற்றல் கூறப்படுகிறது. 'அடல் வேண்டின் ஆற்றுபவர்' (893), 'வெந்துப்பின் வேந்து' (895) குன்றன்னார்..நிலத்து (898) போன்ற தொடர்கள் நாட்டுத் தலைவனையே குறிப்பது தெளிவு. இத்தகு பண்பு விளக்கங்கட்கு மேல் சில செயல் விளக்கமும் இவர்க்குப் பொருந்துகின்றது. 'ஆற்றுவார்- ஆற்றுபவர்' (891, 893) என்பது அவற்றுள் ஒன்று.
அடுத்து அறிவிலும் திறமையிலும் ஆற்றலிலும் தன்னலம் இல்லாமல் பொதுத்தொண்டு செய்ய முற்பட்ட அறிஞர் பெருமக்கள். 'தகைமாண்ட தக்கார்' (897), 'ஏந்திய கொள்கையார்' (899), 'சிறந்தமைந்த சீரார்' (900) என்ற தொடர்கள் இவ்வறிஞர்களையே குறிப்பனவாகவே தோன்றும். ஏந்திய கொள்கையர் சீறின் வேந்தனும் தன் சிறப்பையிழந்து கெடுவான் எனக் கூறப்படுவதால் பல்வகைத் திறம் பெற்ற அறிஞரின் ஆற்றலுக்கு எதிர் நிற்க மாட்டாது அரசு என்பது கருத்தாதல் வேண்டும். இவர்களுக்கு ஆற்றல் மிகுதி; மக்களின் நல்லெண்ணமும் அவர்களின் சார்பிலேயே திரளும். எப்பொழுதெல்லாம் அரசு அறம் பிறழ்ந்து ஆட்சி செய்கின்றதோ அப்பொழுதெல்லாம் இவர்கள் எழுச்சி கொண்டு அரசைக் கண்டிப்பர். ஆகையால் அவர்கள் சீறி எழும்வகையில் அரசு தவறாக நடந்து கொள்ளக்கூடாது.
இவ்வாறாக அரசிடம் பிழைக்கக் கூடாது என்று சொல்லும் அதே வேளையில் அரசும் தவறான பாதையில் சென்றால் பெரியார் வீறுகொண்டு எழுந்து வருவர் என்பதும் சொல்லப்படுகிறது. அரசை மற்றவர்கள் பிழையாமையும், பெரியாரை அரசு பிழையாமையும், பெரியாரைப் பிழையாமை என்ற அதிகாரப் பெயரில் தொகுத்துக் கூறப்பட்டது.
பெரியவர்களைப் புறக்கணித்து கலந்தெண்ணாமல் செய்தல், அவர்களுக்குத் துன்பம் தருதல், அவர்களைச் சினப்படுத்துதல், செல்வச் செருக்கால் அவர்களைப் பகைத்துக் கொள்ளல், அவர்களைக் குறைவாக மதித்தல், அறிவுடையாரைப் பகைத்துக்கொள்ளல், நுண்ணறிவாளர் சீறுமளவு நடந்து கொள்ளுதல் இவை பெரியாரைப் பிழைக்கும் செயல்களாகக் கருதப்படுவன.