யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்
(அதிகாரம்:பெரியாரைப்பிழையாமை
குறள் எண்:895)
பொழிப்பு (மு வரதராசன்): மிக்க வலிமை உடைய அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.
|
மணக்குடவர் உரை:
எவ்விடத்துச் செல்லினும் எவ்விடத்தும் உளராகார்: வெய்ய வலிமையுடைய வேந்தனால் செறப்பட்டார்.
இது கெட்டுப்போனாலும் இருக்கலாவதோர் அரணில்லை யென்றது.
பரிமேலழகர் உரை:
வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் - பகைவர்க்குவெய்தாய வலியினையுடைய வேந்தனால் செறப்பட்ட அரசர்; யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் -அவனைத் தப்பி எங்கே போயுளராவார், ஓரிடத்தும் உளராகார்.
(இடை வந்த சொற்கள் அவாய் நிலையான் வந்தன. 'வெந்துப்பின்வேந்து' ஆகலால், தம் நிலம் விட்டுப் போயவர்க்கு இடங்கொடுப்பாரில்லை, உளராயின், இவர் இனி ஆகார்என்பது நோக்கி அவனொடு நட்புக்கோடற் பொருட்டும், தாமே வந்தெய்திய அவர் உடைமையை வெளவுதற்பொருட்டும் கொல்வர், அன்றெனில் உடனே அழிவர் என்பன நோக்கி 'யாண்டுச்சென்று யாண்டும் உளராகார்' என்றார். இதனால் அக்குற்றமுடையார் 'அருமை உடையஅரண் சேர்ந்தும் உய்யார்' என்பது கூறப்பட்டது.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
கொடிய வீரமுடைய அரசனாற் சினக்கப்பட்டவர்கள், அவனைத் தப்பி எவ்விடத்துச் சென்றாலும் அவ்விடத்தும் உயிர்வாழமாட்டார்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் யாண்டுச்சென்று யாண்டும் உளராகார்.
பதவுரை: யாண்டு-எவ்விடத்திற்கு (இடப்பொருள்); சென்று-போய்; யாண்டும்-எக்காலத்தும் (காலப்பொருள்); உளர்-இருக்கின்றவர்; ஆகார்-ஆகமாட்டார்; வெம்-கொடிய, விரும்பத்தக்க; துப்பின்-வலிவினையுடைய; வேந்து-அரசு; செறப்பட்டவர்-வெகுளப்பட்டவர்.
|
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எவ்விடத்துச் செல்லினும் எவ்விடத்தும் உளராகார்:
பரிப்பெருமாள்: எவ்விடத்துச் செல்லினும் எவ்விடத்தும் உளராகார்:
பரிதி: எந்தத் தேசத்திலும் போய்ப் பல தீர்த்தம் ஆடினும் உய்யார்; [உய்யார் -பிழையார்]
காலிங்கர்: எவ்விடத்தில் சென்றும் எக்காலத்திலும் உளராக உய்யமாட்டார்;
பரிமேலழகர்: அவனைத் தப்பி எங்கே போயுளராவார், ஓரிடத்தும் உளராகார்.
'எவ்விடத்துச் செல்லினும் எவ்விடத்தும்/எக்காலத்திலும் உளராகார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எங்கெங்கு போனாலும் உய்ய முடியுமா?', 'தப்பித்துக் கொள்ள எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது', 'எங்கே போனாலும் எங்கும் சுகமாக இருக்க முடியாது', 'எங்கே சென்றாலும் எவ்விடத்தும் அவர் தப்பிப் பிழைக்கமாட்டார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
எங்கே சென்றாலும் எக்காலத்தும் அவர் வாழ முடியாதவராவார் என்பது இப்பகுதியின் பொருள்.
வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வெய்ய வலிமையுடைய வேந்தனால் செறப்பட்டார். [செறப்பட்டார் - சினக்கப்பட்டார்]
மணக்குடவர் குறிப்புரை: இது கெட்டுப்போனாலும் இருக்கலாவதோர் அரணில்லை யென்றது.
பரிப்பெருமாள்: வெய்ய வலிமையுடைய வேந்தனால் செறப்பட்டார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கெட்டுப்போனாலும் இருக்கலாவதோர் அரணில்லை யென்றது.
பரிதி: மனுஷரானவர்கள் பெரியோர் முனிந்தால் என்றவாறு.
காலிங்கர்: மற்று யார் எனின் உலகத்து நல்லோரால் விரும்பத்தக்க வலிக்கு ஒரு சக்கரவர்த்தியாகிய அரசரால் செறப்பட்டவர் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: ஈண்டு வெம்மை என்பது விருப்பம் என்றது; துப்பு என்பது வலி என்றது.
பரிமேலழகர்: பகைவர்க்கு வெய்தாய வலியினையுடைய வேந்தனால் செறப்பட்ட அரசர். [வெய்தாய வலி- மிகக் கொடிய ஆற்றல்]
பரிமேலழகர் குறிப்புரை: இடை வந்த சொற்கள் அவாய் நிலையான் வந்தன. 'வெந்துப்பின்வேந்து' ஆகலால், தம் நிலம் விட்டுப் போயவர்க்கு இடங்கொடுப்பாரில்லை, உளராயின், இவர் இனி ஆகார்என்பது நோக்கி அவனொடு நட்புக்கோடற் பொருட்டும், தாமே வந்தெய்திய அவர் உடைமையை வெளவுதற்பொருட்டும் கொல்வர், அன்றெனில் உடனே அழிவர் என்பன நோக்கி 'யாண்டுச்சென்று யாண்டும் உளராகார்' என்றார். இதனால் அக்குற்றமுடையார் 'அருமை உடையஅரண் சேர்ந்தும் உய்யார்' என்பது கூறப்பட்டது. [வௌவுதற் பொருட்டு -கவர்தற் பொருட்டு; அருமையுடைய அரண் - பிறர் புகுதற்கு அரிய கோட்டை; உய்யார் - பிழைக்க மாட்டார்]
வெய்ய வலிமையுடைய வேந்தனால் செறப்பட்டார் என்ற பொருளில் பழைய ஆசிரியர்களில் மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'பகைவர்க்கு வெய்தாய வலியினையுடைய வேந்தனால் செறப்பட்ட அரசர்' என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'வலிமிக்க வேந்தனை எதிர்த்துக்கொண்டவர்', 'வலிமை மிக்க அரசனால் வெகுளப்பட்டவர்', 'ஐம்புல ஆசைக் குற்றங்களையும் அடக்கியாளும் வேந்தராகிய பெரியாருக்கு வருத்தம் உண்டாக்குகிறவர்கள்', 'பகைவர்க்குக் கேடு செய்யும் கொடிய வலியினை உடைய அரசரால் வெறுக்கப்பட்டவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
விரும்பத்தக்க வலிமை மிக்க அரசால் சினக்கப்பட்டவர் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
வெந்துப்பின் வேந்து சினக்கப்பட்டவர் எங்கே சென்றாலும் எக்காலத்தும் அவர் வாழ முடியாதவராவார் என்பது பாடலின் பொருள்.
'வெந்துப்பின் வேந்து' என்றால் என்ன?
|
அரசைப் பிழைத்தவர் எங்கு சென்றாலும் அலைக்கழிக்கப்படுவார்.
மிகுந்த வலிமையினையுடைய அரசாலே வெகுளப்பட்டவர் எங்கு சென்றாலும் எக்காலத்தும் வாழமாட்டார்.
ஒருவர் அரசிடம் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறார். அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் அல்லது அரசுக்குரிய வரி போன்ற வருமானத்தைத் தர மறுக்கிறார்.
அரசு அவரை வேட்டையாடத் தொடங்குகிறது. அரசின் சினத்துக்குள்ளானதால் அதன் பிடியிலிருந்து தப்பிக்கும் எண்ணத்தில் தானுறையுமிடம் நீங்கி வேறு இடம்தேடி அலைகிறார். வலிமையுள்ள அரசு அல்லது அரசங்கங்களை எதிர்த்தோர் எங்குச் சென்றாலும் இன்றில்லையெனின் நாளை என எக்காலத்திலும் தப்பிக்க முடியாது. இங்குள்ள வேந்து என்ற சொல் அரசையே குறிப்பது தெளிவு. ஆளுமை உடைய பெரியாரைப் பிழைத்தவர் எங்கெங்கு தப்பி ஓடினாலும் வாழ முடியாதவராகிவிடுவார். பெரியாரைப் பிழைத்தல் என்பது இங்கு அரசுத்தலைவனை அதாவது அரசைப் பகைத்தலாம்.
இப்பாடலில் முதலிலுள்ள ‘யாண்டு’ச் சென்றும் என்பதற்கு இடப்பொருளான எவ்விடத்தில் சென்றும் எனவும் மற்றொரு 'யாண்டு'ம் என்பதற்குக் காலப் பொருளாக எக்காலத்தும் எனப் பொருள் கொள்வது சிறக்கும். 'யாண்டுச் சென்று யாண்டும் உளர் ஆகார்' என்ற பகுதி வெந்துப்பின் வேந்தனுக்குத் தப்பி எங்குச் செல்லினும் எக்காலத்தும் அமைதியாக இருக்கமுடியாது எனப் பொருள்படும். மிகுந்த ஆற்றல் கொண்ட அரசு எனச் சொல்லப்பட்டதால் அது பல நாடுகளிலும் ஆளுமை மிக்கதாக இருக்கும். சினந்த அவ்வரசிடமிருந்து தப்பியோடியவர் எந்நாட்டுள் புகுந்தாலும் அந்நாட்டரசனால் திருப்பிஅனுப்பப்பட்டு இந்த அரசிடம் ஒப்புவிக்கப்படுவது உறுதி, இவன் காரணமாகப் பகைவிளைத்துக்கொள்ளப் பகைவனும் விரும்பமாட்டான் என்பதால்.
இக்குறட் கருத்தைத் தழுவியதாக சீவகசிந்தாமணிச் செய்யுள் வரி ஒன்று உள்ளது: வேந்தொடு மாறு கோடல் விளிகுற்றார் தொழில் அது ஆகும் (சீவகசிந்தாமணி குணமாலையார் இலம்பகம் 1089. பொருள்: அரசனொடு மாறுபடுதல் கெடுதலடைந்தார் செயலாகும்)
|
'வெந்துப்பின் வேந்து' என்றால் என்ன?
'வெந்துப்பின் வேந்து' என்ற தொடர்க்கு வெய்ய வலிமையுடைய வேந்தன், பெரியோர், உலகத்து நல்லோரால் விரும்பத்தக்க வலிக்கு ஒரு சக்கரவர்த்தியாகிய அரசர், பகைவர்க்குவெய்தாய வலியினையுடைய வேந்தன், பகைவர்க்கு வெய்ய பலமுடைய அரசன், வேகும் வலியினையுடைய வேந்தன், மிக்க வலிமை உடைய அரசன், பகைவர்களுக்குக் கொடிதாகிய பெரும் வலிமையினையுடைய வேந்தன், ஆற்றல் மிக்குடைய அரசர், வலிமிக்க வேந்தன், வலிமை மிக்க அரசன், ஐம்புல ஆசைக் குற்றங்களையும் அடக்கியாளும் வேந்தராகிய பெரியார், கடுமையான வலிமையமைந்த ஆட்சியாளன், கொடிய வீரமுடைய அரசன், பகைவர்க்குக் கேடு செய்யும் கொடிய வலியினை உடைய அரசர், மிகுந்த வலிமையினையுடைய வேந்தன், கொடிய வலிமிக்க வேந்தன், கடுவலிமையுள்ள பேரரையன் என உரையசிரியர்கள் பொருள் கூறினர்.
நாமக்கல் இராமலிங்கம் 'வெம் துப்பு-வெம்மையாகிய குற்றங்கள்-அதாவது ஐம்புல ஆசைகளால் வரும் குற்றங்கள். வெம்மை-ஆசை. துப்பு-குற்றம். வெம்துப்பின் வேந்து-ஆசைக் குற்றங்களை வென்றவன்' என உரை செய்தார். இவரது உரை இயல்பாக இல்லை.
பழைய (உ வே சா) உரை ஒன்று 'வேந்துப்பின்' எனப் பாடம் கொண்டு 'வேந்துப்பு-வேகும்வலி; பிறரைக் கொல்லும் வலி யென்க. துப்பு-வலி. வேகும் வலியுனையுடைய வேந்தன் எனக் கூறியது.
பரிமேலழகரும் மற்றவர்களும் வெந்துப்பின் என்றதற்கு 'வெய்தாய வலி' எனக் கொண்டு மிகக் கொடியதிறமை அல்லது மிகுந்த ஆற்றல் என்று பொருள் உரைப்பர். எங்குச் சென்றாலும் தப்பமுடியாது என்று குறட்பொருள் அமைந்துள்ளதால் அதற்குக் கடுமையான வலிமை வேண்டும் என்ற கருத்தில் இவர்கள் மிகக் கொடிய ஆற்றல் எனக் கொண்டனர் போலும்.
'வெந்துப்பின்' என்ற தொடரை 'வெம்+துப்பின்' எனப்பிரித்து 'விரும்பத்தக்க வலிமை' என உரை கண்டனர் மணக்குடவரும் காலிங்கரும். இவ்வுரை ஆட்சித்தலைவனான பெரியார் வெம்மையானவன் அல்லன் என்ற பொருள்படும்படி அமைந்துள்ளது. விரும்பத்தக்க வலிமை என்பதால் செங்கோல் ஆட்சி நடத்துபவன் என்பதாகிறது. எனவே அதிகாரத் தலைப்பான பெரியார் என்பதற்குப் பொருத்தமானவனாகிறன் இவ்வரசுத் தலைவன்.
தொல்லாசிரியரான காலிங்கர் 'உலகத்து நல்லோரால் விரும்பத்தக்க வலிக்கு ஒரு சக்கரவர்த்தியாகிய அரசர்' எனப் பொருள் கூறி 'ஈண்டு வெம்மை என்பது விருப்பம் என்றது; துப்பு என்பது வலி என்றது' என விளக்கமும் தருகிறார். இதுவே வள்ளுவரின் சிந்தனையாகவும் இருக்க முடியும்.
|
விரும்பத்தக்க வலிமை மிக்க அரசால் சினக்கப்பட்டவர் எங்கே சென்றாலும் எக்காலத்தும் அவர் வாழ முடியாதவராவார் என்பது இக்குறட்கருத்து.
அரசைச் சினப்படுத்தாதிருத்தல் பெரியாரைப்பிழையாமையாம்.
வலிமை மிக்க அரசால் சினக்கப்பட்டவர், எங்கே சென்றாலும் எக்காலத்தும் அமைதியாய் வாழ முடியாது.
|