இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0896எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

(அதிகாரம்:பெரியாரைப்பிழையாமை குறள் எண்:896)

பொழிப்பு (மு வரதராசன்): தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர்பிழைத்து வாழ முடியும்; ஆற்றல் மிகுந்த பெரியாரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பிப் பிழைக்க முடியாது.

மணக்குடவர் உரை: தீயினால் சுடப்படினும் உய்தல் உண்டாம்: பெரியாரைப் பிழைத்தொழுகுவார் உய்யார்.
இது முனிவரைப் பிழைத்தலினால் வருங்குற்றம் கூறிற்று. முற்பட உயிர்க்கேடு வருமென்று கூறினார்.

பரிமேலழகர் உரை: எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் - காட்டிடைச் சென்றானொருவன் ஆண்டைத் தீயாற் சுடப்பட்டானாயினும் ஒருவாற்றான் உயிருய்தல் கூடும்; பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார் - தவத்தாற் பெரியாரைப் பிழைத்து ஒழுகுவார், எவ்வாற்றானும் உயிருய்யார்.
(தீ முன் உடம்பினைக் கதுவி அதுவழியாக உயிர்மேற் சேறலின், இடையே உய்யவும் கூடும். அருந்தவர் வெகுளி அன்னதன்றித் தான் நிற்பது கணமாய் அதற்குள்ளே யாவர்க்கும் காத்தல் அரிதாகலின், (குறள்-6) அது கூடாதாகலான், அதற்கு ஏதுவாய பிழை செய்யற்க என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: தவறி நெருப்பில் விழுந்தாலும் தப்பிக்கலாம்; பெரியவர்க்குத் தவறு செய்தால் பிழைப்பில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார்.

பதவுரை: எரியால்-தீயால்; சுடப்படினும்-எரிக்கப்பட்டாலும்; உய்வு-உயிர் தப்புதல், மீளுதல்; உண்டாம்-உளதாம்; உய்யார்-தப்ப மாட்டார்; பெரியார்-பெருமையுடையவர், அரசர்; பிழைத்து-தவறு செய்து, குற்றம் செய்து; ஒழுகுவார்-நடந்து கொள்பவர்.


எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீயினால் சுடப்படினும் உய்தல் உண்டாம்:
பரிப்பெருமாள்: தீயினால் சுடப்படினும் உய்தல் உண்டாம்:
பரிதி: நெருப்புப் பற்றினமரம் வேர் உண்டாய்ப் பதினைந்து நாளில் கிளைக்கும்;
காலிங்கர்: தீயினால் சுடப்படினும் யாதானும் ஒருவாற்றால் பிழைப்பு உண்டாகவும் கூடும்;
பரிமேலழகர்: காட்டிடைச் சென்றானொருவன் ஆண்டைத் தீயாற் சுடப்பட்டானாயினும் ஒருவாற்றான் உயிருய்தல் கூடும்; [ஆண்டைத் தீயால் - அவ்விடத்து ஏற்பட்ட தீயால்]

'தீயினால் சுடப்படினும் உய்தல் உண்டாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீயினால் சுடப்பட்டால் ஒருவன் ஏதேனும் ஒரு காரணத்தால் ஒருவகையில் தப்பிப் பிழைக்க முடியும்', 'நெருப்பினால் சுடப்பட்டாலும் தப்பித்துக் கொள்ளலாம்', 'தீயாற் சுடப்பட்டாயினும் பிழைத்துக் கொள்ளலாம்', 'தீயால் சுடப்படினும் பிழைத்தல் கூடும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தீயினால் சுடப்பட்டாலும் தப்பித்துப் பிழைக்கலாம் என்பது இப்பகுதியின் பொருள்.

உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெரியாரைப் பிழைத்தொழுகுவார் உய்யார்.
மணக்குடவர் குறிப்புரை: இது முனிவரைப் பிழைத்தலினால் வருங்குற்றம் கூறிற்று. முற்பட உயிர்க்கேடு வருமென்று கூறினார். [முற்பட - முன்னே]
பரிப்பெருமாள்: பெரியாரைப் பிழைத்தொழுகுவார் உய்யார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது முனிவரைப் பிழைத்ததனால் வருங்குற்றம் கூறிற்று. முற்பட உயிர்க்கேடு வருமென்று கூறினார்.
பரிதி: பெரியோர் கோபித்தால் கிளையற வெந்து போய்விடும் என்றவாறு. [கிளையற -சுற்றம் நீங்க]
காலிங்கர்: பிழையார், பெரியோரைப் பிழைத்து ஒழுகுமவர் என்றவாறு.
பரிமேலழகர்: தவத்தாற் பெரியாரைப் பிழைத்து ஒழுகுவார், எவ்வாற்றானும் உயிருய்யார்.
பரிமேலழகர் குறிப்புரை: தீ முன் உடம்பினைக் கதுவி அதுவழியாக உயிர்மேற் சேறலின், இடையே உய்யவும் கூடும். அருந்தவர் வெகுளி அன்னதன்றித் தான் நிற்பது கணமாய் அதற்குள்ளே யாவர்க்கும் காத்தல் அரிதாகலின், (குறள்-6) அது கூடாதாகலான், அதற்கு ஏதுவாய பிழை செய்யற்க என்பதாம். [கதுவி - பற்றி; அருந்தவர்-செயற்கரிய தவம் செய்தவர்]

'பெரியாரைப் பிழைத்தொழுகுவார் உய்யார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால் பெரியாரிடத்துக் குற்றம் செய்தவர் எக்காரணம் கொண்டும் தப்பிப் பிழைக்க முடியாது', 'ஆனால் (தவப் பெருமையுள்ள) மகான்களுக்குத் துன்பம் செய்து (அதனால் உண்டாகும் பாவத் தீயினால்) தொடரப்பட்டவர்கள் தப்பித்துக் கொள்ளவே முடியாது', 'பெரியார்க்குக் குற்றம் செய்து நடப்பவர் எவற்றாலும் பிழைத்துக் கொள்ளமாட்டார்', 'ஆனால் பெரியார்க்குக் குற்றம் செய்து ஒழுகுபவர் ஒரு நாளும் பிழைத்து வாழார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பெரியாரிடத்துத் தீமை செய்து நடப்பவர் பிழைத்தலில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தீயினால் சுடப்பட்டாலும் தப்பித்துப் பிழைக்கலாம் பெரியார்ப் பிழைத்தொழுகுவார் பிழைத்தலில்லை என்பது பாடலின் பொருள்.
'பெரியார்ப் பிழைத்தொழுகுவார்' யார்?

அரசுக்கு எதிரான குற்றம் புரிவோர் எவ்வழியும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.

தீயால் சுடப்படினும் ஒருவாற்றால் உயிர் வாழ்தல் கூடும்; ஆற்றல் மிக்க பெரியாரிடத்தில் குற்றம் செய்து நடப்பவர் எவ்வழியினும் தப்பிப் பிழைக்க முடியாது.
பலர் பெரியார் என்பதற்குத் தவஞான வொழுக்கங்களிற் சிறந்த முனிவர் என்றும் அவரது சாபத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது எனக் கொள்வர். சாகும்படி சாபம் கொடுப்பவர் தவத்தினர் என்பது ஏற்குமாறு இல்லை. மற்றும் சிலர் தம்மினும் வலிமையுடைவர்க்குத் தவறிழைத்தவர் தப்ப முடியாது என்றனர். வலிமையுடையவர் எல்லோரும் பெரியவர் ஆகிவிடமுடியாது. எனவே பொது நன்மைக்காக இயங்கும் அரசுக்குத் தீங்கு செய்வர் அரசின் பிடியிலிருந்து மீள முடியாது என இங்கு பொருள் கொள்ளப்படுகிறது.
நெருப்பு சூழ்ந்து சுட்டாலும் பிழைத்துக் கொள்ள வாய்ப்புண்டு. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்... என அடக்கமுடைமை (129) அதிகாரப் பாடல் ஒன்று கூறியது. ஆனால் பெரியோரிடம் தீமை செய்கின்றவர்கள் தப்பிப் பிழைக்க முடியாது. 'பிழைத்தொழுகுவார்' என்ற தொடர் இவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்துபவர் என்பதைச் சொல்கிறது. ஆட்சியை இகழ்ந்து அரசுக்கு எதிராகச் செயல்பட்டால் ஆற்றல் மிக்க தலைவனான பெரியாரிடமிருந்து தப்பிக்க முடியாது. தீப்பிழம்புக்கு ஆயிரம் நாக்குகள் உண்டு; அரசுக்கு ஆயிரம் கண்களும் பல்லாயிரம் கைகளும் உள. எனவே அவற்றின் பிடியிலிருந்து தப்புவது கடினம்.

'பெரியார்ப் பிழைத்தொழுகுவார்' யார்?

'பெரியார்ப் பிழைத்தொழுகுவார்' என்ற தொடர்க்குப் பெரியாரைப் பிழைத்தொழுகுவார், பெரியோர், பெரியோரைப் பிழைத்து ஒழுகுமவர், தவசினாலே பெரியவர்களுக்குக் கோபம் வருமாறு நடந்தவர்கள், பெரியாருக்குப் பிழை செய்து ஒழுகுவார், ஆற்றல் மிகுந்த பெரியாரிடத்தில் தவறு செய்து நடப்பவர், தம்மிலும் வலிமை மிக்கவர்களுக்குத் தப்புச்செய்து நடப்பவர், தம்மில் வலியாரை அவமதிப்பவர்கள், ஆற்றல்மிக்க பெரியார்க்குத் தவறு செய்தவர், பெரியார்க்குக் குற்றம் செய்து நடப்பவர், பெரியார்க்குக் குற்றம் செய்து ஒழுகுபவர், அறிவாற்றல் மிக்க பெரியாரை இகழ்ந்தவர்கள், தவத்தாற் பெரியார்க்குத் தவறாக நடந்தவர், பெரியோர்களுக்குத் தீமை செய்பவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'பெரியாரைப் பிழைத்தொழுகுவார் உய்யார் என்றது அவரால் செறப்பட்டன்று. விட்டில் தன் இயற்கையால் தீயில் மாய்வதுபோலப் பிழைப்பார் தன்னியற்கையால் கெடுவார்' எனக் கருத்துரைத்தார் தண்டபாணி தேசிகர்.
மாதவர் சினத்திற்கு ஆளாகாது காத்துக்கொள்க என்பதாகப் பெரும்பான்மையர் பொருளுரைத்தனர். பெரியார்ப் பிழைத்தொழுகுவார் என்றது ஆற்றல்மிக்க பெரியார்க்குத் தவறு செய்து நடப்பவர் குறித்தது.

'பெரியார்ப் பிழைத்தொழுகுவார்' என்றதற்கு ஆற்றல் மிகுந்த பெரியாரிடத்தில் குற்றம் செய்து நடப்பவர் என்பது பொருள்.

தீயினால் சுடப்பட்டாலும் தப்பித்துப் பிழைக்கலாம் பெரியாரிடத்துத் தீமை செய்து நடப்பவர் பிழைத்தலில்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அரசுக்கு எதிராகக் குற்றம் செய்யாமை பெரியாரைப்பிழையாமையாம்.

பொழிப்பு

தீயினால் சுடப்பட்டாலும் தப்பித்துப் பிழைக்கலாம் பெரியாரிடத்துத் தீமை செய்து நடப்பவர் தப்பித்தலில்லை