இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0898குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து

(அதிகாரம்:பெரியாரைப்பிழையாமை குறள் எண்:898)

பொழிப்பு (மு வரதராசன்): மலைபோன்ற பெரியார் கெட நினைத்தால், உலகில் அழியாமல் நிலைபெற்றாற்போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

மணக்குடவர் உரை: மலைபோலப் பெரியாரைக் குறைய மதிப்பாராயின், உலகத்தின் கண்ணே நின்றாற்போலத் தோன்றுகின்றவர் குடியோடே கூடமாய்வர்.
குன்ற மதித்தல்- அவமதித்தல்

பரிமேலழகர் உரை: குன்று அன்னார் குன்ற மதிப்பின் - குன்றத்தை ஒக்கும் அருந்தவர் கெட நினைப்பாராயின்; நிலத்து நின்று அன்னார் குடியொடு மாய்வர் - அப்பொழுதே இந்நிலத்து நிலைபெற்றாற் போலும் செல்வர் தம் குடியொடும் மாய்வர்.
(வெயில், மழை முதலிய பொறுத்தலும் சலியாமையும் உள்ளிட்ட குணங்கள் உடைமையின், 'குன்றன்னார்' என்றார். 'மல்லல் மலையனைய மாதவர்'(சீவக.முத்தி-191) என்றார் பிறரும். நிலை பெற்றாற் போறலாவது, இறப்பப் பெரியராகலின், இவர்க்கு எஞ்ஞான்றும் அழிவில்லை என்று கண்டாரால் கருதப்படுதல்.)

வ சுப மாணிக்கம் உரை: குன்றுபோல் வலியுடையார் அழிக்க நினைப்பின் குடிதழைந்து நின்றவரும் வழியின்றி மறைவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நிலத்து நின்றன்னார் மாய்வர்.

பதவுரை: குன்று-மலை; அன்னார்-ஒத்தவர்; குன்ற-குறைவாக, கெட; மதிப்பின்-எண்ணினால், மதிப்பாராயின்; நினைத்தால்; குடியொடு-குடும்பத்தோடு; நின்றஅன்னார்-நிலைபெற்றது போன்றோர்; மாய்வர்-அழிவர், இறப்பர்; நிலத்து-பூமியின்கண்.


குன்றன்னார் குன்ற மதிப்பின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மலைபோலப் பெரியாரைக் குறைய மதிப்பாராயின்;
மணக்குடவர் குறிப்புரை: குன்ற மதித்தல்- அவமதித்தல்
பரிப்பெருமாள்: மலைபோலப் பெரியாரைக் குறைய மதிப்பாராயின்;
பரிதி: மேருகிரியை ஒத்த பெரியோர் ஒருவரைப் பிழைத்தால்; [மேருகிரி- மேரு மலை]
காலிங்கர்: தவம் முதலியவற்றால் பெரியோராகிய மலைபோலச் சிறிதும் சலியாதோரைக் குறைபட நினைப்பின்; [சலியாதோர்- அசையாதவர்]
பரிமேலழகர்: குன்றத்தை ஒக்கும் அருந்தவர் கெட நினைப்பாராயின்;
பரிமேலழகர் குறிப்புரை: வெயில், மழை முதலிய பொறுத்தலும் சலியாமையும் உள்ளிட்ட குணங்கள் உடைமையின், 'குன்றன்னார்' என்றார். 'மல்லல் மலையனைய மாதவர்' (சீவக.முத்தி-191) என்றார் பிறரும்.

'மலைபோலப் பெரியாரைக் குறைய மதிப்பாராயின்/கெட நினைப்பாராயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மலை போன்ற பெரியார் கெடக் கருதுவாராயின்', '(கொள்கையிலும் குணங்களிலும் சலனமில்லாத தன்மையினால்) மலையைப் போன்றவர்களான மகான்கள் (மனம் நொந்து) குறைவாக எண்ணினாலும்', 'மலைபோன்ற பெருமையுடையவர் பிறரொருவர் கெட்டுப் போக நினைப்பாராயின்', 'குன்றத்தை ஒக்கும் பெருமையை உடையவர் அழியுமாறு நினைத்தால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மலைபோன்ற வலியுடையாரைக் குறைவாக எண்ணினால் என்பது இப்பகுதியின் பொருள்.

குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தின் கண்ணே நின்றாற்போலத் தோன்றுகின்றவர் குடியோடே கூடமாய்வர்.
பரிப்பெருமாள்: உலகத்தின் கண்ணே நின்றாற்போலத் தோன்றுபவர் குடியோடே கூடமாய்வர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: நின்றாற்போல என்றது நிலையாமை குறித்தது. குன்ற மதித்தல்- அவமதித்தல். இது மந்திரி புரோகிதரைப் பிழைத்து ஒழுகினால் அவர் அவமதிப்பராயின் தாமும் தம்கீழ் வாழும் குடியும் மாய்வர் என்று கூறிற்று.
பரிதி: குடிகெட்டுத் தானும் மாளுவார் என்றவாறு.
காலிங்கர்: இவ்வுலகத்துச் சிறந்த குடிப்பிறப்போடு நின்று வைத்தே மற்று அத்தன்மையாரும் அதனால் ஓர் ஆக்கம் இன்றி நசிப்பர் என்றவாறு.
பரிமேலழகர்: அப்பொழுதே இந்நிலத்து நிலைபெற்றாற் போலும் செல்வர் தம் குடியொடும் மாய்வர்.
பரிமேலழகர் குறிப்புரை: நிலை பெற்றாற் போறலாவது, இறப்பப் பெரியராகலின், இவர்க்கு எஞ்ஞான்றும் அழிவில்லை என்று கண்டாரால் கருதப்படுதல் [நிலைபெற்றாற் போறல் - நிலை பெற்றாற் போன்று இருத்தல். போறல்=போல்+தல்; இறப்பப் பெரியர் - மிகப்பெரியர்]

'உலகத்தின் கண்ணே நின்றாற்போலத் தோன்றுகின்றவர் குடியோடே கூடமாய்வர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவர் நினைத்தபோதே நிலைபெற்றாற் போன்ற செல்வமுடையவர் தம்குடியோடும் கெடுவர்', '(அவர்களுக்குத் துன்பம் செய்தவர்கள்) உலகத்தில் உயர்ந்து நின்றவர்களானாலும் குலத்தோடு அழிந்து போவார்கள்', 'அங்ஙனம் நினைக்கப்பட்டவர் நிலைபெற்றால் போன்ற செல்வமுடையாரயினும், பெரியவர் நினைத்தபோதே தமது குடும்பத்தோடு அழிவர்', 'நிலைத்து இருந்தவர்போல் உள்ளவர் தம் குடியோடு இந்நிலத்தில் அழிவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இவ்வுலகில் நிலைத்து இருப்பார்போல் உள்ளவரும் தம் குடும்பத்தோடு அழிவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மலைபோன்ற வலியுடையாரைக் குறைவாக எண்ணினால், இவ்வுலகில் நிலைத்து இருப்பார்போல் உள்ளவரும் தம் குடும்பத்தோடு அழிவர் என்பது பாடலின் பொருள்.
'குன்ற மதிப்பின்' என்ற தொடரின் பொருள் என்ன?

பெரியாரைக் குறைத்து மதித்தால் குடும்பம் பூண்டோடு அழியும்.

மலைபோன்ற மதிப்பு மிக்க பெரியாரை ஒருவர் குறைவாக எண்ணினால், என்றுமே அழியாமல் இருப்பார்போல் தோன்றுவோரும் தம் குடும்பத்தோடு அழிந்து போவர்.
இவ்வதிகாரத்துப் பிறபாடல்கள் சிலவற்றில் ஆட்சித்தலைவன் பெரியாராக குறிப்பிடப்படுகிறான். அவனைச் சூழ்ந்து வரும் அமைச்சரும் மிகுந்த வலிமை பெற்றவர்தான். தலைவனை மிகவும் நெருங்கி இருப்பதால் அவனுக்கு இணையான ஆற்றல் பெற்றவர் அமைச்சராவார். அவர் குறைத்து மதிப்பிடத்தக்கவர் இல்லை. இப்பெரியாரது சினத்துக்கும் ஆளாகக் கூடாது.
அமைச்சரானவர் பலதிறம் கொண்டவர். அரசியலில் கருவி, காலம், செய்யும் விதம், செய்யப்படும் அரிய செயல் இவற்றை நன்கு அறிந்தவர் இவர். அஞ்சாமை, நல்லொழுக்கமுடைமை, குடிகளைக் காப்பாற்றுதல், அரசியல் அறிவு இவற்றைப் பெற்று பெருமுயற்சியும் உடையவர். நாட்டிற்குப் பளுதாங்கும் தூண் போன்றவர். நிலை தாழாதவர். அரசியல் அறிவு மிகக் கொண்டவராதலால் நாட்டின் நலனுக்கு எதிராக கலகம் செய்யும் குழுக்களை அடையாளம் கண்டு அழிக்கும் வல்லமை பெற்றவர். இவரது நிலைதளராமையும் சலியாமையும் நோக்கிக் 'குன்றன்னார்' எனப்பட்டார். இவரை மதித்து நடக்க வேண்டும். பன்முக ஆளுமை உடைய இப்பெரியாரைக் குறைத்து மதிப்பிட்டுக் குறும்பு செய்வோர் நிலையான சீருஞ் சிறப்பும் உள்ளோம் என்று பெருமை கொண்டிருந்தாலும் அழிவர். குன்ற மதித்தவரது நிலைபேறு உண்மையன்று என்பதால் அவரை 'நின்றன்னார்' என்கிறது பாடல். நாட்டுக்குக் கேடு செய்யும் இவர் மலைபோன்றிருந்தாலும் அமைச்சரின் சீற்றத்திற்கு ஆளானால் கடிதில் மடு ஆகிவிடுவார்.

'குன்ற மதிப்பின்' என்ற தொடரின் பொருள் என்ன?

'குன்ற மதிப்பின்' என்றதற்குக் குறைய மதிப்பாராயின், பிழைத்தால், குறைபட நினைப்பின், கெட நினைப்பாராயின், கெட நினைத்தாராகில், கெட நினைப்பின், கெட நினைத்தால், குறைவாக எண்ணி அவமதித்து நடப்பாராயின், மதிப்புக் குறைய நடப்பின், அழிக்க நினைப்பின், கெடக் கருதுவாராயின், குறைவாக எண்ணினாலும், குறைவுபட நினைப்பாராயின், கெட்டுப் போக நினைப்பாராயின், அழியுமாறு நினைத்தால், குறைவாக மதிப்பாராயின், அழிக்கக் கருதினால், அழியட்டும் என்று நினைப்பார்களானால் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'குன்ற மதிப்பின்' என்ற தொடர்க்குக் குறைய மதிப்பாராயின் என ஒரு திறத்தாரும் கெட நினைப்பாராயின் என மற்றொரு திறத்தாரும் பொருள் கூறினர். குறைய மதிப்பாராயின் என்றவர்கள் அமைச்சர் அல்லது புரோகிதரை மதிப்புக் குறைய நடப்பின் என உரை வகுத்தனர். இது பெரியாரைப் பிழையாமை என்ற அதிகாரத் தலைப்பிற்குப் பொருந்தி வருகிறது. கெட நினைப்பாராயின் என்றவர்கள் பெரியாரைப் பிழைத்தால் அப்படிப் பிழைத்தவர் கெடவேண்டும் என்று நினைத்தால் அவரை அழித்துவிடுவர் என்றனர். மலைபோன்றவர் என்று சொல்லியபின் அப்பெரியவர் ஒருவரைக் கெடுப்பதற்குக் கருதுவார் என்பது அவ்வளவு சிறப்பாக இல்லை. குன்ற மதித்தல் என்றதற்கு அவமதித்தல் என மணக்குடவரும் பரிப்பெருமாளும் பதவுரை கூறினர். 'குன்ற மதிப்பின்' என்றதற்குக் குறைய மதித்து அவமதித்தால் என்பது பொருத்தம்.

'குன்ற மதிப்பின்' என்ற தொடர் குறைய மதிப்பாராயின் என்ற பொருள் தரும்.

மலைபோன்ற வலியுடையாரைக் குறைவாக எண்ணினால், இவ்வுலகில் நிலைத்து இருப்பார்போல் உள்ளவரும் தம் குடும்பத்தோடு அழிவர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

குறைவாக மதிக்காமை பெரியாரைப்பிழையாமையாம்.

பொழிப்பு

குன்றுபோல் வலியுடையாரைக் குறைவாக எண்ணினால், நிலைபெற்றார் போல் நின்றவரும் தம்குடியோடு அழிவர்.