இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0892பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்

(அதிகாரம்:பெரியாரைப்பிழையாமை குறள் எண்:892)

பொழிப்பு (மு வரதராசன்): ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

மணக்குடவர் உரை: பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின் அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும்.
இது முனிவரைப் போற்றா தொழியின் அது குற்றம் பயக்கு மென்றது.

பரிமேலழகர் உரை: பெரியாரைப் பேணாது ஒழுகின் - ஆற்றல்களால் பெரியராயினாரை வேந்தன் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவாராயின், பெரியாரால் பேரா இடும்பை தரும் - அவ்வொழுக்கம் அப்பெரியாரால் அவர்க்கு எஞ்ஞான்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும்.
(அத்துன்பங்களாவன, இருமையினும் இடையறாது வரும் மூவகைத் துன்பங்களும் ஆம், அவையெல்லாம் தாமே செய்துகொள்கின்றனர் என்பது தோன்ற, ஒழுக்கத்தை வினை முதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். பொது வகையால் அவரைப் பிழைத்தற்குற்றம் இதனாற் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையாற் கூறுப.)

வ சுப மாணிக்கம் உரை: பெரிய ஆற்றலுடையாரை மதியாது நடந்தால் தவிர்க்க முடியாத துன்பம் வரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் பேரா இடும்பை தரும்.

பதவுரை: பெரியாரை-ஆற்றலுடையவரை; பேணாது-மதியாமல்; ஒழுகின்-நடந்து கொண்டால்; பெரியாரால்-பெரியாரால்; பேரா-நீங்காத; இடும்பை-துன்பம்; தரும்-கொடுக்கும்.


பெரியாரைப் பேணாது ஒழுகின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின்;
பரிப்பெருமாள்: பெரியாரைப் போற்றாது ஒழுகுவனாயின்;
பரிதி: பெரியாரை உதாசினம் சொல்வனாகின்; [உதாசினம்- அலட்சியப்படுத்துதல்]
காலிங்கர் (பேணா இடும்பை' பாடம்): அங்ஙனம் பெரியோரை நெஞ்சினால் விரும்பாது ஒழுகின்;
பரிமேலழகர்: ஆற்றல்களால் பெரியராயினாரை வேந்தன் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவாராயின்;

'பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெரிய ஆற்றலுடையாரை மதியாது நடந்தால்', 'பேராற்றல் படைத்த பெரியவரை ஒருவர் மதிக்காமல் இகழ்ந்து நடந்தால்', 'திறமைமிக்க பெரியவர்களைத் தழுவிக் கொள்ளாது அரசன் நடந்தால்', 'பெரியவர்களை விரும்பாது அவமதித்து ஒழுகினால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

திறமைமிக்கவர்களை விரும்பாது இகழ்ந்து நடந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

பெரியாரால் பேரா இடும்பை தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும்.
மணக்குடவர் குறிப்புரை: இது முனிவரைப் போற்றா தொழியின் அது குற்றம் பயக்கு மென்றது.
பரிப்பெருமாள்: அவன் ஒழுக்கம் அவரானே எல்லாரானும் இகழப்படும் துன்பத்தைத் தரும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது முனிவரைப் போற்றாது ஒழுகின் குற்றம் பயக்கும் என்றது. இவை இரண்டும் பிழையாமை வேண்டும் என்று கூறப்பட்டது.
பரிதி: அந்தப் பெரியாரால் போக்குதற்குரிய இடும்பை தரும் என்றவாறு.
காலிங்கர் (பேணா இடும்பை' பாடம்): அப்பெரியார் தம்மாலும் பேணிக் கோடற்கு அரிதாகிய பேரிடும்பையைத் தரும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: பேரிடும்பை என்பது பேணிக்கொள்ள ஒண்ணாத இடும்பை என்றது.
பரிமேலழகர்: அவ்வொழுக்கம் அப்பெரியாரால் அவர்க்கு எஞ்ஞான்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: அத்துன்பங்களாவன, இருமையினும் இடையறாது வரும் மூவகைத் துன்பங்களும் ஆம், அவையெல்லாம் தாமே செய்துகொள்கின்றனர் என்பது தோன்ற, ஒழுக்கத்தை வினை முதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். பொது வகையால் அவரைப் பிழைத்தற்குற்றம் இதனாற் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையாற் கூறுப. [இருமையினும் -இம்மையினும் மறுமையினும்; இடையறாது -நடுவே நீங்காமல் (தொடர்ச்சியாக); மூவகைத் துன்பங்கள் -தன்னைப் பற்றி வருவன, பிறர் உயிர்களைப் பற்றி வருவன, தெய்வத்தைப் பற்றி வருவனவாகிய மூவகைப் பிறவித் துன்பங்கள்

'அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கரும் பரிமேலழகரும் இக்கருத்தினரே. பரிதி 'அந்தப் பெரியாரால் போக்குதற்குரிய இடும்பை தரும்' என்றார். 'பேணா இடும்பை' பாடம் எனப் பாடங்கொண்ட காலிங்கர் 'அப்பெரியார் தம்மாலும் பேணிக்கொள்ள ஒண்ணாத பேரிடும்பையைத் தரும்' என உரை கூறுவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தவிர்க்க முடியாத துன்பம் வரும்', 'அது அப்பெரியவரால் அவருக்கு எப்பொழுதும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும்', 'அந்நடக்கை அவர்களால் அவனுக்கு நீங்காத துன்பம் உண்டாக்கும்', 'பெரியாரால் நீங்காத துன்பங்கள் உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

(அவ்வொழுக்கம்) பெரியாராலும் பேணிக்கொள்ள முடியாத இடும்பையைத் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
திறமைமிக்கவர்களை விரும்பாது இகழ்ந்து நடந்தால் அவ்வொழுக்கம் பெரியாராலும் பேணிக்கொள்ள முடியாத இடும்பையைத் தரும் என்பது பாடலின் பொருள்.
'பெரியாரால்' என்ற சொல் குறிப்பதென்ன?

பெரியாரைப் புறக்கணித்துச் செய்யும் செயல் எவரானும் தீர்க்கமுடியாத தீங்கினைப் பயக்கும்.

ஆற்றல் மிகுந்த பெரியார்களை ஒருவன் நன்கு மதிக்காமல் ஒழுகுவானானால், அந்நடக்கை பெரியாரால் அரசுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுத்துவிடும்.
அரசியல், நிதி, பேரிடர் மேலாண்மை, வணிகம் என ஒவ்வொரு துறையிலும் சிறந்தாராக உள்ளவர் பெரியார் எனப்படுவார். இவர் அறிவிலும், ஆராய்ச்சியிலும் அனுபவத்திலும், ஆற்றலிலும் மேம்பட்டவர். தலைவன் எல்லாவற்றையும் தானே கண்டு முடிவெடுக்க முடியாது என்பதாலே பேராயம் போன்ற அமைப்புகளை நிறுவி வேறுபட்ட துறைகளுக்கும் அந்தந்த துறையில் திறன் பெற்ற பெரியார்கள் வழி ஆள்வான். பெரியாரைத் துணையாகக் கொண்டால் வெற்றியும் எளிதாகும். பெரியார்களிடத்தில் கலந்து ஒழுக வல்ல தலைவன் தனக்கு ஒரு தீங்கும் வராது காத்துக் கொள்வான். தலைவனானவன் நாட்டுக்குத் தேவையான ஓர் அரும்பெரும் வினையைச் செய்யமுயலும் முன் அத்தொழில்முறை நூலறிவோடு நுண்ணறிவும் அமையப்பெற்ற பெரியாருடன் கலந்தெண்ணியே முடிவு எடுப்பான்.
மிகுந்த ஆற்றல் கொண்ட பெரியாரின் துறையில், அவர் நன்றாகச் செயல் ஆற்றிக் கொண்டிருக்கும்போது, ஆட்சித்தலைவன் இடையில் உள்புகுந்து, தன் கற்பனைக்குத் தோன்றியவாறும், மனம் போனபடியும் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்தினால், அந்நடக்கை யாராலும் தீர்க்க முடியாத பெருஞ்சிக்கல்கள் பலவற்றை உண்டாக்கிவிடும். பெரியாரைப் புறக்கணித்து தனக்கே எல்லாம் தெரியும் என எண்ணித் தான் தோன்றித்தனமாக நடந்தால் நாட்டின் அங்கங்கள் உருக்குலைந்து சிதறுண்டு போகும். அதனால் விளையுந்தீங்குகளை நீக்கிக்கொள்ளுதல் எத்தகைய ஆற்றல் படைத்தவர்க்கும் அரிதாகிவிடும். இதை வள்ளுவர் 'பேரா இடும்பை' என இங்கு குறிக்கிறார். ஒருசெயலில் பெரியாரை மதியாது அதில் தலைவன் தானே தலையிட்டால் தீர்க்க முடியாத துன்பங்கள் நேரும் எனச் சொல்லப்பட்டது.
பேணாது என்ற சொல்லுக்குக் கருதாமல், மதியாமல், புறக்கணித்து, காவாமல் எனப் பல பொருள் உண்டு. இங்கு மதியாமல் என்ற பொருளில் ஆளப்பட்டது.
நாட்டு நலனை உயர்த்தும் நோக்கில் பாடுபடும் பெரியவர்களைப் புறக்கணித்தலும் பிழைத்தலாகும் என்பது செய்தி.

'பெரியாரால்' என்ற சொல் குறிப்பதென்ன?

இக்குறளின் பிற்பகுதி 'பெரியாரால் பேரா இடும்பை தரும்' என்கிறது. இதிலுள்ள பெரியாரால் என்ற சொல்லாட்சி உரை காண்போர்க்கு இடர் உண்டாக்கிற்று. இத்தொடர் பெரியாரே தீமை தருவர் எனப்புரிந்து கொள்ளப்பட்டது. எனவே 'இடும்பை தருவார் எங்ஙனம் பெரியார் ஆவார்?' 'அது எந்த அளவு ஏற்புடையது?' என்றவாறான வினாக்கள் எழுந்தன.
இதற்கு அமைதி காணும் முகத்தான் நாமக்கல் கவிஞர் 'பெரியாரால் பேரா இடும்பை தரும்' என்றதற்குப் 'பெரியாராலும் நீக்கமுடியாத துன்பம் வந்துவிடும்' என்று சொல்லப்பட்டது என உரை வகுத்தார். பெரியாராலும் நீக்க முடியாத துன்பம் எனக் கொண்டால், அது அவரது ஆற்றலுக்குக் குறைவு தருவதால் ஏற்க முடியாது என இவ்வுரையை மறுப்பர். 'பெரியாரைப் பேணாதபோது, பெரியாராலும் தீமை வரலாம்; பிறராலும் தீமை வரலாம். பெரியார் துணை, ஒரு பாதுகாப்புக் கவசம். எனவே அவரைப் பேணாமை, பிறர் தீமை செய்ய இடன் அளிக்கும்' என மற்றொரு உரை கூறுகிறது. ஆனால் இங்கு பேணாது ஒழுகப்பட்டாரும், பெரியாரால் எனப்பட்ட பெரியாரும் ஒருவரே என்பதால் இவ்வுரையும் பொருந்தாது.

காலிங்கர் 'பேணா இடும்பை தரும்' எனப்பாடங்கொண்டு, 'பெரியாராலும் (அப்பெரியார் தம்மாலும்) பேணிக் கொள்ள முடியாத இடும்பை தரும்' எனப் பொருளுரைத்தார். இது பெரியாரால் என்ற சொல்லால் வரும் இடரை நீக்கியது. 'பெரியாரால் பேரா இடும்பை தரும்' என்றதற்குப் 'பெரியாரைப் பேணாத ஒழுக்கம் காரணமாக ஒருவனுக்கு நீங்காத துன்பம் வரும்' என்னும் கருத்துப்பட பரிதி தவிர்த்த அனைத்துத் தொல்லாசிரியர்களும் உரைப்பதால் இதுவே 'பெரியாரால்' என்னும் சொல்லையும் உள்ளடக்கி விளக்கம் தரும் நல்லுரையாக அமையும்.
பெரியார், தம்மை மதியார்க்கு வஞ்சத்தால் துன்பம் விளைவிப்பார் என இங்கு கூறப்படவில்லை. இடும்பை தருவது பெரியார்க்கு இயல்பு அல்ல. பெரியோரைப் பிழைத்த தலைவனின் தவறே இடும்பை தரும் என்பதுவே சொல்லப்பட்ட கருத்து.

திறமைமிக்கவர்களை விரும்பாது இகழ்ந்து நடந்தால் அவ்வொழுக்கம் பெரியாராலும் பேணிக்கொள்ள முடியாத இடும்பையைத் தரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெரியாரைப் போற்றுதலும் பெரியாரைப் பிழையாமையாம்.

பொழிப்பு

மிகத்திறம்படைத்தோரை மதிக்காமல் இகழ்ந்து நடந்தால், அந்நடக்கை காரணமாகப் பெருந்துன்பங்கள் உண்டாகும்.