வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்
(அதிகாரம்:பெரியாரைப்பிழையாமை
குறள் எண்:897)
பொழிப்பு (மு வரதராசன்): தகுதியால் சிறப்புற்ற பெரியார் ஒருவனை வெகுண்டால் அவனுக்குப் பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்?
|
மணக்குடவர் உரை:
எல்லா வகையானும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொருளும் என்ன பயனுடையனவாம்: பெருமையால் மிக்க தகுதியுடையார் செறுவாராயின்.
எல்லா வகையுமாவன சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின.
பரிமேலழகர் உரை:
தகை மாண்ட தக்கார் செறின் - சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின்; வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம் - உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும் ஈட்டி வைத்த பெரும் பொருளும் என் பட்டுவிடும்?
(உறுப்பு - அமைச்சு, நாடு, அரண், படை என இவை. 'செறின்' என்பது அவர் செறாமை தோன்ற நின்றது இவ்வெச்சத்தான். முன் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான் அருந்தவர் மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவர் வெகுளித்தீயான் ஒரு கணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம்.)
வ சுப மாணிக்கம் உரை:
எல்லாத் தகுதியும் நிறைந்தவர் சினந்தால் ஏற்றமான வாழ்வும் செல்வமும் என்னாகும்?
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
தகைமாண்ட தக்கார் செறின் வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்?
பதவுரை: வகை-வகை வகையான; மாண்ட-மாட்சிமை பெற்ற, நயமுள்ள, சிறப்புற்ற, ஏற்றமுள்ள; வாழ்க்கையும்-வாழ்வியலும்; வான்-பெரிய, பெருமை; பொருளும்-செல்வமும்; என்-என்ன; ஆம்-ஆகும்; தகை-பெருமை; மாண்ட-மாட்சிமைப்பட்ட; தக்கார்-தகுதியுடையவர்; செறின்-வெகுண்டால்.
|
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா வகையானும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொருளும் என்ன பயனுடையனவாம்:
மணக்குடவர் குறிப்புரை: எல்லா வகையுமாவன சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின.
பரிப்பெருமாள்: எல்லா வகைகளும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொருளும் என்ன பயன் உடைத்தாம்:
பரிப்பெருமாள் குறிப்புரை: எல்லா வகையுமாவன சுற்றமும், நட்டோரும், குற்றிளையோரும், இல்லும், நிலமும் முதலாயின. வான் பொருள்-ஈட்டிவைத்த பொருள்கள் எல்லாம் அழியும் என்றது.
பரிதி: தவத்தின் வகை தானத்தின் வகை உண்டாயினும் அதனால் என்ன பயன்; [தவத்தின் வகை - நீர்நிலை நிற்றல், மூச்சடக்கல் முதலியன; தானத்தின் வகை - அன்ன தானம், சொர்ண தானம் முதலிய அறுபத்து நான்கு வகையான தானங்கள்]
காலிங்கர்: நூல் வகுத்த வகையனைத்தும் மாட்சிமைப்பட்ட இல்வாழ்க்கையும் அதற்குச் சிறந்த பொருளும் உடைத்து ஆயினும் என்னாம்;
பரிமேலழகர்: உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும் ஈட்டி வைத்த பெரும் பொருளும் என் பட்டுவிடும்? [என்பட்டுவிடும்- என்ன ஆகும்? அடியோடு அழிந்துவிடும்]
பரிமேலழகர் குறிப்புரை: உறுப்பு - அமைச்சு, நாடு, அரண், படை என இவை.
'எல்லா வகையானும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொருளும் என்ன பயனுடையனவாம்' என்றபடி மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'தவத்தின் வகை தானத்தின் வகை உண்டாயினும் அதனால் என்ன பயன்?' எனப் பொருள் உரைத்தார். காலிங்கர் 'நூல் வகுத்த வகையனைத்தும் மாட்சிமைப்பட்ட இல்வாழ்க்கையும் அதற்குச் சிறந்த பொருளும் உடைத்து ஆயினும் என்னாம்' எனக் கூற பரிமேலழகர் 'உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும் ஈட்டி வைத்த பெரும் பொருளும் என் பட்டுவிடும்?' என்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவனது பலவகைச் சிறப்புடைய வாழ்க்கையும் பெருஞ் செல்வமும் என்ன ஆகும்? (அழியும்)', 'அவனுடைய விதம் விதமான சிறப்புகளுள்ள சுக வாழ்வும் அளவுகடந்த செல்வமும் என்னத்திற்கு ஆகும்?', 'பலவகை நயமிக்க வாழ்க்கையும் பெருஞ் செல்வமும் என்ன பயன் தரும்? (என்ன கதியடையும்? என்றலும் ஒன்று.)', 'பல வகையாக மாட்சிமைப்பட்டுள்ள வாழ்க்கையும் பெரிய செல்வமும் என்ன பயனைத் தரும்?' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பலவகைச் சிறப்புடைய வாழ்க்கையும் பெருஞ் செல்வமும் இருந்து என்னத்திற்கு ஆகும்? என்பது இப்பகுதியின் பொருள்.
தகைமாண்ட தக்கார் செறின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெருமையால் மிக்க தகுதியுடையார் செறுவாராயின்.
பரிப்பெருமாள்: பெருமையால் மிக்க தகுதியை யுடையார் செறுவாராயின்.
பரிதி: பெரியோர் முனிந்தால் என்றவாறு.
காலிங்கர்: தவமும் ஞானமும் ஒழுக்க நெறியும் உடைய சீரார் செறின். [சீரார் - சிறப்பினையுடையவர்; செறின் - சினந்தால்]
பரிமேலழகர்: சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின்; [சாபம் -அழிதற்கு ஏதுவாய சில சொற்கள்; அருள் - கருணை செய்தல்]
பரிமேலழகர் குறிப்புரை: 'செறின்' என்பது அவர் செறாமை தோன்ற நின்றது இவ்வெச்சத்தான். முன் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான் அருந்தவர் மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவர் வெகுளித்தீயான் ஒரு கணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம். [முன் வருவன - இவ்வதிகாரத்தின் 8 ஆம் குறளில் 'மதிப்பின்' என்றும் 9 ஆம் குறளில் சீறின் என்றும் 10 ஆம் குறளில் 'செறின்' என்றும் வருவன; அருந்தவர் - செயற்கரிய தவத்தினையுடையார்]
'பெருமையால் மிக்க தகுதியுடையார்/பெரியோர்/தவமும் ஞானமும் ஒழுக்க நெறியும் உடைய சீரார்/சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் செறுவாராயின் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'அரசனை வெகுள்வராயின்' எனக் கூறுகிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'பலவகையிலும் தகுதியிற் சிறந்த பெரியார் ஒருவனை வெகுண்டால்', 'மனிதத் தன்மையில் உயர்ந்த (ஆன்ம உணர்ச்சியில் உயர்ந்த) மேன்மக்கள் (ஒருவனை) வெறுப்பார்களானால்', 'தகுதியிற் சிறந்த அருந்தவர் சினந்தால்', 'பெருமைகளால் மாட்சிமைப்பட்ட பெரியவர் சீற்றம் கொண்டால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பெருமைகளால் மாட்சிமைப்பட்ட பெரியவர் சினந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தகைமாண்ட தக்கார் சினந்தால் பலவகைச் சிறப்புடைய வாழ்க்கையும் பெருஞ் செல்வமும் இருந்து என்னத்திற்கு ஆகும்? என்பது பாடலின் பொருள்.
'தகைமாண்ட தக்கார்' யார்?
|
பெருமை பொருந்தியவர் சினத்துக்கு முன் பொருள்வலி நில்லாது.
பெருமையால் சிறப்புற்ற பெரியார், ஒருவன்மீது சினம் கொள்வாராயின் அவனுக்கு வகைவகையான நயமிக்க வாழ்க்கையும், மிகுந்த பொருளும் இருந்து என்னத்துக்கு? அவற்றாலும் தன்னைக் காத்துக் கொள்ள இயலாது.
அந்த நாட்டின் ஆட்சித்தலைவர் பெருமை மிகுந்த தகுதியானவர் ஆக உள்ளார். அதாவது நல்ல பண்புகள் கொண்டவனாக, கல்வி, அறிவு, ஆற்றல், நிறைந்தவனாக இருக்கிறார். மக்கள் செல்வாக்குடன் செம்மையான ஆட்சி நடத்துபவராக விளங்குகிறார்.
அதே நாட்டில் ஒருவன் செல்வம் மிகக் கொண்டவனாயிருக்கிறான். அவன் மிகுதியாகச் செல்வம் குவித்து வைத்து எல்லா வகையான சிறப்புமிக்க வாழ்க்கை நடத்துகிறான். பலவகை இன்பங்களையும் துய்ப்பவனாக இருக்கிறான். நிலம், வீடு, ஊர்தி, ஏவலர் என எதற்கும் குறைவில்லை. தன் பணபலத்தால் எதையும் செய்ய முடியும் என்ற ஆணவத்தில் உள்ளான். பொருள் நிறையச் சேர்த்துவிட்டதால் தனக்கு மிகுந்த ஆற்றல் இருக்கிறது என்று நம்புகிறான். இதனால் அரசையே எதிர்க்கத் துணிகிறான். நாட்டின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறான். அரசு சீறினால் சீரும் சிறப்பும் பெற்ற கவலையற்ற இன்பப் பெருவாழ்வு, செல்வம் அனைத்தையும் இழப்பான்.
'பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்' என்றதனால் செல்வமுடையானுக்கு இவ்வுலகம் முற்றும் உரித்தானதல்ல என்பதை அவன் அறியவேண்டும்.
உலக நல்வாழ்விற்குப் பொருளோடு, பொருளினும் சிறந்த பல பண்புகள் இன்றியமையாதன.
அப்பண்புகள் இருந்தால்தான் செல்வத்தின் பயனைத் துய்க்கலாம். செருக்குற்று பகைப்பவரின் வலி தெரியாமல் மேற்சென்றால் அது பொருள் உடையானைக் கீழறுக்கும்.
பொருளாற்றாலுக்கும் ஓர் எல்லை உண்டு. அதை உணர்ந்து அவன் ஒழுகவேண்டும். பெரியோரது சினம் தன்னை அழிக்க வரும்போது, தன்னிடம் இருக்கும் வகையான வாழ்க்கை, பெருஞ்செல்வம் இவையா அவனைக் காக்கப் போகின்றன? இல்லை. அவை அவனிடமிருந்து நீக்கப்பட்டுவிடும். பணம் எல்லாக்காலங்களிலும் பாதாளம் வரை பாயாது.
|
'தகைமாண்ட தக்கார்' யார்?
'தகைமாண்ட தக்கார்' என்றதற்குப் பெருமையால் மிக்க தகுதியுடையார், பெரியோர், தவமும் ஞானமும் ஒழுக்க நெறியும் உடைய சீரார், சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர், சாபானுக்ரக சமத்தராகிய தவசிகள், அருளுஞ் சாப மிகுதியாகிய தகைமையுடைய பெரியோர், தகுதியால் சிறப்புற்ற பெரியார், பண்புநலன்களால் மாட்சிமைப்பட்ட தகுதியுடையார், வலியார், எல்லாத் தகுதியும் நிறைந்தவர், பலவகையிலும் தகுதியிற் சிறந்த பெரியார், மனிதத் தன்மையில் உயர்ந்த (ஆன்ம உணர்ச்சியில் உயர்ந்த) மேன்மக்கள், பண்பால் சிறந்த பெரியவர், தகுதியிற் சிறந்த அருந்தவர், பெருமைகளால் மாட்சிமைப்பட்ட பெரியவர், பண்பாட்டுத் தகுதிமிக்க சான்றோர், ஆக்க வழிப்பிற் கேதுவாகிய ஆற்றல் மாட்சிமைப்பட்ட மாதவர், அறிவு ஒழுக்கங்கள் ஆகிய தகுதி நிறைந்த தக்கவர்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
சாப அருள்கள் வழங்கும் தக்கோர் சினந்தால் ஆட்சியும் பொருளும் தாழ்ச்சியுறும் என்று இக்குறள் கூறுவதாகப் பெரும்பான்மையர் உரைத்தனர்.
தவசிகள் வெகுண்டு பேரழிவுகள் ஏற்படுவதில்லை. இந்திரன் அகத்திய முனிவரால் சபிக்கப்பட்டு மலைப்பாம்பு ஆனான் என்பதெல்லாம் கற்பனைக் கதைகளில்தான் முடியும். உலகியலில் தவத்தினர்க்கு அழிவுக்குரியதற்கான ஆற்றல் எதுவும் இருப்பதில்லை. சாபம் கொடுப்பது தகைமாண்ட தக்கார்க்கு ஏற்றதுமல்ல, எனவே இங்கு சொல்லப்பட்டது தவத்தார் அல்லர். அரசியலாரே பெரியார் என இங்கு குறிப்பிடப்படுவதாகவே கொள்ள வேண்டும். தகைமாண்ட தக்கார் என்றதால் நல்லாட்சி செய்யும் தலைவன் என்றாகிறது.
ஆட்சியாளர் செல்வர் மேல் சினம் கொள்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆட்சியைக் கவிழ்க்கத் துணை போவது அவற்றில் ஒன்று. செல்வத்தின் வலி பெரிது என்பதால் அதை வைத்திருப்பவர் எந்த எல்லைக்கும் போகத் துணிவர். அவரை எதிர்கொண்டு அவரது வகைமாண்ட வாழ்க்கையையும் வான்பொருளையும் கெடுக்க அரசியல் தலைவரால்தான் முடியும்.
அரசியல் தலைவரே 'தகைமாண்ட தக்கார்'.
'தக்கார் எனவே தகைமாண்ட தன்மை பெறப்படுமாயினும் தகைமாண்ட தக்கார் என்றது அவர் செற்றம் தப்பாமாற்றாழ்க்காமல் பயனைத் தரும் என்ற துணிவு பற்றி என்க' என இத்தொடர்க்கு விளக்கம் தருவார் தண்டபாணி தேசிகர்.
'தகைமாண்ட தக்கார்' என்பது இங்கு பண்பால் சிறந்த அரசியல் தலைவனைக் குறிக்கும்.
|
பெருமைகளால் மாட்சிமைப்பட்ட பெரியவர் சினந்தால் பலவகைச் சிறப்புடைய வாழ்க்கையும் பெருஞ் செல்வமும் இருந்து என்ன ஆகும்? என்பது இக்குறட்கருத்து.
செல்வச் செருக்கால் அரசைப் பகைக்காமை பெரியாரைப்பிழையாமையாம்.
தகுதியில் நிறைந்தவர் வெகுண்டால் ஒருவனது பலவகையான சிறப்புடைய வாழ்க்கையும் பெருஞ் செல்வமும் என்ன ஆகும்?
|