மாட்சிமையுள்ள பகை என்பது என்ன?
பகைக்கப்பட்டான் இழிகுணம் பல படைத்தமையின் பகைத்தவன் பகை மாண்புறுகிறது. இதுவே பகை மாட்சி.
அறிவின்மை, கண்ணைமறைக்கும் சினம் கொள்ளல், சுற்றந்தழுவாமை, துணையின்மை, கழிபெருங்காமம் போன்ற குற்றங்குறைகளாற் பகையைச் சிறப்பித்தல் பகைமாட்சியாம். பகைவரின் குணக்குறைபாடுகள் கூறப்பட்டு அவை இருப்பதால் அவரை எளிதாக வெல்லலாம்; எனவே அவருடன் பகை கொள்ளலாம் எனச் சொல்கின்றன இவ்வதிகாரத்துப் பாடல்கள். தனக்கு நன்மை பயக்குமாறு பகையையும் பயன்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறது இத்தொகுதி.
பொதுவாழ்வில் மாறுபாட்டை வளர்த்து தீமை செய்வாரைப் பொறுப்பதற்குண்டான அளவு மீறிப்போய்விட்டால் பகையைத் தாக்கி அழிப்பது அறம் ஆகுமே அல்லாமல், தீமை செய்யும் சிலரைப் பொறுத்து அவர்களுக்கு இடம் கொடுப்பது அறம் அன்று; ஆகையால், இகல் வேண்டாம் என்று அறிவுறுத்திய வள்ளுவர் வளர்ந்துவிட்ட பகையை ஒழிப்பதே கடமை என்று இங்கு கூறுகின்றார். அவ்வாறு பகைகொண்டு நன்மை செய்ய முயலும்போது, யாருடன் பகைகொள்கிறோம் என்று எண்ணிப் பார்த்து வெல்லக் கூடிய இடத்தில் மட்டுமே பகை கொள்ள வேண்டும். தம்மைவிட வலிமை மிகுந்தவர்களைப் பகைத்து எதிர்ப்பதால் நோக்கம் நிறைவேறாது; தோல்வியும் அழிவும் நேரும். ஆகையால் தம்மைவிட வலியார்க்குப் பகையாதலைத் தவிர்க்க வேண்டும். அவர்களை எதிர்க்காமல் இருப்பதே நல்லது. தம்மின் வலியாரோடு பகை கொள்ளற்க என்றது கோழைத்தனம் ஆகாதோ? தம்முடைய வலிமையைப் பெருக்கி வளர்த்துக் கொண்டு உரிய காலம் வரும்பொழுது பகை கொண்டு வெல்லுதல் நலம் பயக்கும் என்பது கருத்து. தம்மை விட மெலியவர் மேல் பகை கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது.
அன்பு இல்லாத போது, நல்ல துணை இல்லாதபோது, தானும் வலியில்லாதபோது, ஒருவர் பகைவனுடைய ஆற்றலை ஒழிக்க முடியாது.
எதற்கும் அஞ்சுகின்றவனாய், அறிய வேண்டியவற்றை அறியாதவனாய், பிறரோடு பொருந்தி வாழும் பண்பில்லாதவனாய், ஈகைத் தன்மை அற்றவனாயும் இருப்பவன் பகை இல்லாத வழியும் அழிந்துவிடுவானாதலால் அவன் பகைவரை வெல்லுதல் என்பது அரிது; அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
ஒருவன் சினம் நீங்காதவனாகவும் மறை காக்கமுடியாதவனாகவும் இருந்தால் அவனை வெல்லுதல் எக்காலத்தும், எவ்விடத்தும், எவர்க்கும் எளிது.
ஒருவன் நல்லவழியை நோக்காமல், பொருந்துவனவற்றைச் செய்யாமல், தீய செயலால் வரும் பழியை அஞ்சாமல் நற்பண்பும் இல்லாமல் இருந்தால், அவனது பகைமை மாற்றார்க்கு இனியதாகும்.
கண்ணைமறைக்கும் கடும் சினத்தை உடையவனாய், கழிபெருங்காமம் உடையவனாய் இருப்பவனது பகைமையை பிறர் விரும்பிக் கொள்வர்.
போரைத் தொடங்கி அண்மையில் இருந்து கொண்டு போர்த்தொழிலுக்கு மாறானவற்றைச் செய்பவனுடைய பகைமையைப் ஏது கொடுத்தேனும் கொள்ள வேண்டும், அத்தகையவரை எளிதில் வெல்ல முடியும் என்பதால்.
பண்பு ஏதும் இல்லாதவனாய், குற்றங்கள் பலவுடையவனாய் ஒருவன் இருப்பின், அவனது நிலை பகைவர்க்கு நன்மை பயக்கும்.
போர்செய்யும் அறிவு அற்று, பகைவரை எதிர்காணின் அஞ்சும் இயல்புடையவரைப் பெற்றால் அவருடன் போரிடுவார்க்கு வெற்றி இன்பங்கள் நெருங்கி நிற்கும்.
ஆட்சி நெறி அறியாதவனைப் பகைப்பதால் வரும் சிறு பொருளை அடைய மாட்டாதவனைப் புகழ் ஒரு போதும் சேராது.
இவை பகைமாட்சி அதிகாரம் கூறும் செய்திகள்.
குற்றம் உடைமையாலே பகைவன் மெலிதாகத் தோன்றுகிறான். அம்மெலிய இயல்பைப் பயன்படுத்தி வெற்றிகொள்க என்று விதிப்பது இவ்வதிகாரம்.