இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0861வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேன் மேக பகை

(அதிகாரம்:பகைமாட்சி குறள் எண்:861)

பொழிப்பு (மு வரதராசன்): தம்மைவிட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும்; தம்மை விட மெலியவர் மேல் பகை கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.

மணக்குடவர் உரை: தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் தவிர்க: தம்மைப் போற்றாத எளியார்மாட்டுப் பகைகோடலை மேவுக.
இது தனக்கு எளியாரோடு பகை கோடலாமென்றது.

பரிமேலழகர் உரை: வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக - தம்மின் வலியார்க்குப் பகையாய் எதிர்தலை ஒழிக; மெலியார்மேல் பகை ஓம்பா மேக - ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக.
('வலியார்' என்புழித் துணை வலியும் அடங்கலின், 'மெலியார்' என்புழித் துணை வலியின்மையும் கொள்ளப்படும். அத்துணைதான் படை பொருள் முதலிய வேற்றுமைத் துணையும், நல்லறிவுடைமை நீதிநூல்வழி ஒழுகல் முதலிய ஒற்றுமைத் துணையும் என இரண்டாம். அவ்விரண்டும் இல்லாரை வெல்வார்க்கு வலி தொலையாமையின் அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. சிங்கநோக்காகிய இதனுள் பகை மாட்சி பொதுவகையால் கூறப்பட்டது.)

மயிலை சிவமுத்து உரை: தம்மைக் காட்டிலும் வலிமையினால் மிகுந்துள்ளவர்களைப் பகைத்து எதிர்த்தலை விட்டொழிக; தம்மைப் போற்றாத எளியாரைப் பகைத்தலை மேற்கொள்ளுக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக; ஓம்பா மெலியார்மேன் பகை மேக.

பதவுரை: வலியார்க்கு-வலிமையுடையவர்க்கு; மாறு-பகைத்து; ஏற்றல்-எதிர்தல்; ஓம்புக-ஒழிக; ஓம்பா-ஒழியாமல்; மெலியார்-வலி குறைந்தவர்; மேன்-கண், இடத்து; மேக-விரும்புக, மேற்கொள்க; பகை-பகை.


வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் தவிர்க:
பரிப்பெருமாள்: தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் தவிர்க:
பரிதி: தன்னில் வலியார் மேலே மாறுகொள்வதை விடுக;
காலிங்கர்: ஆள்வலி, தோள்வலி, பொருள்வலி, துணைவலி முதலிய இவற்றால் தம்மின் வலியார்க்குத் தாம் மாறுபாடு ஏற்றலைப் பரிகரிக்க; [ஆள்வலி - காலாட்படையின் வலிமை; தோள்வலி - அரசனுடைய தோள்வலிமை; அதாவது உடலைப் பற்றிய வலிமை. பொருள்வலி- அரசுக்குரிய இறை முதலியவற்றால் வரும் பொருளின் வலிமை. துணைவலி - கூலிப்படை, சுற்றப்படை, அமைச்சு முதலிய துணையாவாரது வலிமை
பரிமேலழகர்: தம்மின் வலியார்க்குப் பகையாய் எதிர்தலை ஒழிக;

'தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் தவிர்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வலியவரோடு முரணுதலை விடுக', 'தம்மைவிட வலிமையுடையவர்க்குப் பகையாய் எதிர்த்து நிற்றலைத் தவிர்க்க', '(உன்னைக் காட்டிலும்) வலிமை மிகுந்தவராக (உன்னைத் தாக்க வருகின்றவருக்கு) எதிரடி கொடுப்பதற்கு உன் வலிமையை வளர்த்துக் கொள்வாயாக', 'தம்மின் வலியாரைப் பகையாய் எதிர்த்தலை ஒழிக' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தம்மைவிட வலிமையுடையவரைப் பகையாய் எதிர்த்தலைத் தவிர்க என்பது இப்பகுதியின் பொருள்.

ஓம்பா மெலியார்மேன் மேக பகை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மைப் போற்றாத எளியார்மாட்டுப் பகைகோடலை மேவுக.
மணக்குடவர் குறிப்புரை: இது தனக்கு எளியாரோடு பகை கோடலாமென்றது.
பரிப்பெருமாள்: தம்மைப் போற்றாத எளியார்மாட்டுப் பகைகோடலை மேவுக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தனக்கு எளியாரோடு பகை கோடலாமென்றது.
பரிதி: தன்னில் எளியார் மேலும் பகையை விடுக என்றவாறு.
காலிங்கர்: மற்று யார்மாட்டு எனின் தம் வன்மையும் மென்மையும் சீர்தூக்கித் தம் வலியைப் பரிகரிக்க; வல்லாத மெலியார்மாட்டு மேவுக பகைமை என்றவாறு. [பரிகரிக்க - நீக்குக]
காலிங்கர் குறிப்புரை: மேகபகை என்பது மேவுக பகைமை என்றது.
பரிமேலழகர்: ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக.
பரிமேலழகர்: 'வலியார்' என்புழித் துணை வலியும் அடங்கலின், 'மெலியார்' என்புழித் துணை வலியின்மையும் கொள்ளப்படும். அத்துணைதான் படை பொருள் முதலிய வேற்றுமைத் துணையும், நல்லறிவுடைமை நீதிநூல்வழி ஒழுகல் முதலிய ஒற்றுமைத் துணையும் என இரண்டாம். அவ்விரண்டும் இல்லாரை வெல்வார்க்கு வலி தொலையாமையின் அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. சிங்கநோக்காகிய இதனுள் பகை மாட்சி பொதுவகையால் கூறப்பட்டது. [வலிதொலையாமையின் -அழியாமையின்]

'வல்லாத எளியார்மாட்டுப் பகைகோடலை மேவுக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னைக் காவாத எளியவரைப் பகைக்க', 'தம்மைப் போற்றாத எளியவரிடத்துப் பகை கொள்ளுதலை விரும்புக', '(உன்னைவிட) வலிமை குறைந்தவர் மேல் உனக்குண்டான பகைமையை அதிகம் பாராட்டாமல்', 'ஏனை மெலியாரைப் பகைவராய்க் கொள்ளுதலை ஒழியாது விரும்புக' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தம்மைப் போற்றாத எளியவரிடத்துப் பகை கொள்ளுதலை விரும்புக என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம்மைவிட வலிமையுடையவரைப் பகையாய் எதிர்த்தலைத் தவிர்க; தம்மைப் போற்றாத மெலியார்மேன் மேக பகை என்பது பாடலின் பொருள்.
'மெலியார்மேன் மேக பகை' குறிப்பது என்ன?

ஒருவரது வலிமை, மென்மை நோக்கி பகை பொருந்துக.

தம்மினும் வலியவருக்குப் பகையாகி அவரை எதிர்த்தலை விட்டொழிக; தம்மைவிட மெலியவருக்குப் பகையாவதை விடாமல் கொள்வதற்கு விரும்பலாம்.
தன் வலியும் அதாவது படைவலி பொருள்வலி முதலியவும், மாற்றார் வலியும் துணைவலியும் தூக்கிப் பகைவர் வலி பெரிதாக இருந்தால் அவரை எதிர்த்தலைக் கைவிடுக. பகைவர் மெலியாராக இருந்து தம்மைப் போற்றாது இருந்தால் அவர்மீது பகை கொள்ளலாம்.
வெல்லக் கூடிய இடம் எது எனக் கண்டு அங்கு மட்டுமே பகை கொள்ளலாம் என்கிறது இப்பாடல். தம்மைவிட வலியவர்களை எதிர்ப்பதால் தோல்வியும் அழிவுமே நேரும். எச்சமயத்தும் பகைவர் வலியைத் தெரிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. மாற்றார் வலி அறிதல் என்பது தம் வலியைப் பெருக்கி வளர்த்துக் கொள்வதற்குத்தான். ஆதலால், மாற்றார் வலியறிந்து அதற்கு இணையான அல்லது மேலான வலிமையைப் பெற முயலவேண்டும். அதுவரை அவர்களோடு மாறுபட்டுப் பகை கொள்வதை விட வேண்டும். தம்மை ஏற்றுக்கொள்ளாத அல்லது மதியாத மெலியவர்களோடு பகைகொள்வதை விரும்பி மேற்கொள்ளலாம்.

'மெலியார்மேன் மேக பகை' குறிப்பது என்ன?

'மெலியார் மேற்செல்லுதலை விரும்பி பகை மேற்கொள்க' என்கிறது பாடலின் பிற்பகுதி. இதற்கு வலிமையில்லாதவன்மீது பகைகொண்டு படையெடுக்கலாம் என்பது பொதுவான பொருள்.
இப்பகுதிக்குத் 'தம்மினும் மெலியார்மேல் பகைகொண்டு போரிடாது, பகை என்னும் இடைவெளியை மேவி நிரப்புக (சமன் செய்து நட்பு கொள்க)' என்று விளக்கம் செய்தனர். காமாட்சி சீனிவாசன் 'படை வலிமையற்ற நல்லரசனுடன் போர்செய்க எனக் கூறுவது அறமாகாது. மெலியார் என்பது இங்கே அறிவில், செங்கோலாட்சியில் மெலியாரைக் குறிப்பதாகவே இருக்கலாம்' என இதை விளக்கினார். 'இக்குறளில் ‘வலியார்’ என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல்லாக ‘மெலியார்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளமையால், மெலியார்-அறிவில், செங்கோலாட்சியில் மெலியார் என்னும் காமாட்சி சீனிவாசன் கொள்ளும் பொருளும் சாலாது' என்பார் இரா சாரங்கபாணி.
'ஓம்பாமெலியார்' என்பதில் ஓம்பா என்பதற்கு மணக்குடவர் தம்மைப் போற்றாத மெலியார் எனவும், காலிங்கர் 'வல்லாத மெலியார்' எனவும் பொருள் கண்டனர். ஆனால் பரிமேலழகர் 'மெலியார்மேல் பகை ஓம்பா(து) மேவுக' எனக்கூட்டிப் 'பகையை ஒழியாது விரும்புக' என்றார். இவற்றுள் 'தம்மை மதியாத மெலியார் இடத்து பகையை விரும்பிக் கொள்க' என்ற மணக்குடவர் உரையே சிறந்தது.

'ஒருவன் தன்னினும் மெலியாரிடம் மாறுபாடு கொள்வதை விரும்பலாம்' என்பது இப்பகுதியின் பொருள்.

தம்மைவிட வலிமையுடையவரைப் பகையாய் எதிர்த்தலைத் தவிர்க; தம்மைப் போற்றாத எளியவரிடத்துப் பகை கொள்ளுதலை விரும்புக என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

மெலியார் மேற்செல்லுதலிலும் பகைமாட்சிக்கு இடம் உண்டு.

பொழிப்பு

தம்மைவிட வலியவரோடு பகையாய் நிற்றலைத் தவிர்க; தம்மினும் எளியவரிடத்துப் பகைக்கலாம்.