இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0865



வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.

(அதிகாரம்:பகைமாட்சி குறள் எண்:865)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் நல்வழியை நோக்காமல், பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால், அவன் பகைவர்க்கும் எளியனாவான்.

மணக்குடவர் உரை: ஒருவினை செய்யத்தொடங்குங்கால் பின் வருவன பாரான், பயன்படுவனவற்றைச் செய்யான், அதனால் உறும் பழியைப் பாரான், குணமுமிலன்; இவன் பகைமை பகைவர்க்கு இனிது.
இஃது இவன் பகைமையால் பகைவர்க்கு இனிமை உண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: வழிநோக்கான் - ஒருவன் நீதிநூலை ஓதான்; வாய்ப்பன செய்யான் - அது விதித்த தொழில்களைச் செய்யான்; பழி நோக்கான் - தனக்கு வரும் பழியைப் பாரான்; பண்புஇலன் - தான் பண்புடையன் அல்லன்; பற்றார்க்கு இனிது - அவன் பகைவர்க்கு அப்பகைமை இனிது.
(தொல்லோர் அடிப்பட வழங்கி வந்ததாகலான் 'வழி' என்றும் , தப்பாது பயன்படுதலின் 'வாய்ப்பன' என்றும் , இக்குற்றங்களுடையான் தானே அழிதலின் 'பற்றார்க்கு இனிது' என்றும் கூறினார்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: காரியங்களைச் செய்யும் வழிகளை ஆராயாதவனாய்ப் பொருத்தமானவற்றைச் செய்யாதவனாய், தன்மேல் வரக்கூடிய பழியைக் கருதாதவனாய், நல்ல குணம் இல்லாதவனாய் உள்ளவன் பகைவரால் எளிதாய் எதிர்க்கப்படுதற்கு உரியனாவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது.

பதவுரை: வழி-செயல்வழி, ஆகிறவழி, நல்வழி; நோக்கான்-ஆராயமாட்டான்; வாய்ப்பன-பயன்படுவன; செய்யான்-செய்யாதவன்; பழி-பழி; நோக்கான்-பாரான்; பண்பிலன்-குணமில்லாதவன்; பற்றார்க்கு-பகைவர்க்கு; இனிது-இனிமையானது.


வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவினை செய்யத்தொடங்குங்கால் பின் வருவன பாரான், பயன்படுவனவற்றைச் செய்யான், அதனால் உறும் பழியைப் பாரான், குணமுமிலன்;
பரிப்பெருமாள்: ஒருவினை செய்யத்தொடங்குங்கால் பின் வருவன பாரான், பயன்படுவனவற்றைச் செய்யான், அதனால் உறும் பழியைப் பாரான், குணமுமிலன்;
பரிதி: ஆகிறவழியான் உலகம் பொருந்தின காரியம் செய்யான், அபகீர்த்தியும் பாரான், பண்பில்லாதான் ஆகில்;
காலிங்கர்: நூல் நெறி ஆரய்ந்து பாரானுமாய், மற்று அதனாலே வாய்ப்புடைக்கருமங்கள் செய்யானுமாய், மற்று இவை செய்தார் பிறர் பழிக்கும் பழித்துரை பாரானுமாய், மற்று உலக வழக்கம் ஆகிய மரபு இலனும் ஆயின்;
பரிமேலழகர்: ஒருவன் நீதிநூலை ஓதான், அது விதித்த தொழில்களைச் செய்யான், தனக்கு வரும் பழியைப் பாரான், தான் பண்புடையன் அல்லன்;

ஒருவினை செய்யத்தொடங்குங்கால் பின் வருவன பாரான்/ஒருவன் நீதிநூலை ஓதான், பயன்படுவனவற்றைச் செய்யான்/அது விதித்த தொழில்களைச் செய்யான், பழியைப் பாரான், குணமுமிலன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வழியும் பொருத்தமும் பழியும் பாராதவன் பண்பும் இல்லாதவன்', 'காரியங்கள் செய்யும் வழிகளை ஆராயான், பொருந்துவனவற்றைச் செய்யான், தனக்கு வரும் பழியைப் பாரான், பண்புடையனும் அல்லன்', 'நீதி நெறி முறைகளை மதிக்காதவனாகவும், நியாயத்துக்கு ஒத்த காரியங்களைச் செய்யாதவனாகவும், பழிபாவங்களுக்கு அஞ்சாதவனாகவும், நற்குணமில்லாதவனாகவும் உள்ள ஒருவனை', 'தொன்றுதொட்டு வரும் முறைமைகளை ஆராயாதவன்; பொருந்துவனவற்றைச் செய்யாதவன்; பழியைப் பாரான்; தான் நற்குணமுடையன் அல்லன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நல்ல வழிகளை ஆராயான், வாய்ப்புடைய செயல்களைச் செய்யான், தனக்கு வரும் பழிக்கு அஞ்சான், நற்குணமுடையன் அல்லன் என்பது இப்பகுதியின் பொருள்.

பற்றார்க்கு இனிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவன் பகைமை பகைவர்க்கு இனிது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இவன் பகைமையால் பகைவர்க்கு இனிமை உண்டாமென்றது.
பரிப்பெருமாள்: இவன் பகைமை பகைவர்க்கு இனிதாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இவன் பகைமையால் பகைவர்க்கு இனிமை உண்டாமென்றது. இவை ஐந்தினானுன் தான் திருந்தவேண்டும் என்று கூறப்பட்டது.
பரிதி: அவனை வெல்லுதற்கு மாற்றாருக்குப் பிரியம் என்றவாறு.
காலிங்கர்: அவன்பகை பகைவர்க்குச் சால இனியதொன்று என்றவாறு.
பரிமேலழகர்: அவன் பகைவர்க்கு அப்பகைமை இனிது. [அப்பகைமை- அவனோடு கொண்ட பகைமை]
பரிமேலழகர் குறிப்புரை: தொல்லோர் அடிப்பட வழங்கி வந்ததாகலான் 'வழி' என்றும் , தப்பாது பயன்படுதலின் 'வாய்ப்பன' என்றும் , இக்குற்றங்களுடையான் தானே அழிதலின் 'பற்றார்க்கு இனிது' என்றும் கூறினார். [தொல்லோர் - நீதிநூல் இயற்றிய முன்னோர்]

'இவன் பகைமை பகைவர்க்கு இனிது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவர்க்கு இனியவன்', 'இத்தீய இயல்புகளைக் கொண்டவனது பகை பகைவர்க்கு இனியதாம்', 'தோற்கடிப்பதில் அவனுடைய பகைவர்கள் மகிழ்ச்சி கொள்வார்கள்', 'பகைவர்க்கு இனியனாவான். (எளிதில் வெல்லப்படுவதால்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இவனோடு கொண்ட பகைமை பகைவர்க்கு இனிது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நல்ல வழிகளை ஆராயான், வாய்ப்புடைய செயல்களைச் செய்யான், தனக்கு வரும் பழியை எண்ணமாட்டான், நற்குணமுடையன் அல்லன் இவனோடு கொண்ட பகைமை பகைவர்க்கு இனிது என்பது பாடலின் பொருள்.
'வழிநோக்கான்' என்பதன் பொருள் என்ன?

தான் நினைத்ததை ஏனோதானோவென்று செய்பவன் பகைவர்க்கு இனியனாவான்.

தக்க நல்ல வழிகளை ஆராய்ந்து பாரான்; வாய்ப்புடைச் செயல்களை மேற்கொள்ளமாட்டான்; தனக்கு வரக்கூடிய பழியையும் எண்ணிப்பாரான்; நல்ல குணமும் இல்லான்; இத்தகைய ஒருவன் பகைவர்க்கு இனிதாவான்.
வாய்ப்பன செய்யான்: பயன்படுபவனவற்றைச் செய்யமாட்டாதவன் என்பது பொருள். இவன் தப்பாது பயன்படும் வாய்ப்புகளை எல்லாம் நழுவவிட்டுவிடுவான், பொருத்தமானவற்றைச் செய்யான் எனலுமாம்.
பழிநோக்கான்: பழிக்கு நாணமாட்டான். வரக்கூடிய பழியை எண்ணிப்பார்க்கும் குணமில்லாதவன். பழிக்குரிய செயல்களையும் அறிந்தே செய்பவன் ஆவான். தனக்கு ஏதாவது குற்றம் வந்து விடுமோ என்றெல்லாம் கவலைகொள்ளமாட்டான்.
பண்பிலன்: குணக்கேடானவன். கொடுமை செய்பவனாயிருப்பான். அவனுக்குத் துணைவர யாரும் இருக்கமாட்டார்கள்.
நல்ல வழிகளை ஆராய்ந்து செய்யமாட்டதவன்; பயந்தருவனவற்றைச் செய்யாதவன், பிறர்பழிக்கத் தக்கனவற்றைச் செய்பவன், குணமற்றவன்; இவனைப் பகை கொள்ளலாம். இத்தகையவனை வெல்லுதல் இனிதாகும். வெல்வது எளிதாக இருத்தலால் ’பற்றார்க்கினிது’ என்று சொல்லப்பட்டது.

'வழிநோக்கான்' என்பதன் பொருள் என்ன?

வழிநோக்கான்: நல்ல வழிகளை ஆராயான்.
'வழிநோக்கான்' என்றதற்கு ஒருவினை செய்யத்தொடங்குங்கால் பின் வருவன பாரான், ஆகிறவழியான் காரியம் செய்யான், நூல் நெறி ஆரய்ந்து பாரான், நீதிநூலை ஓதான், நீதிநூலைப்படியான், நீதி நூலையோதி அப்பொருளை நோக்கான், நல்வழியை நோக்கான், பின்வரும் விளைவுகளை எண்ணிப் பார்க்க மாட்டான், காரியங்கள் செய்யும் வழிகளை ஆராயான், நீதி நெறி முறைகளை மதிக்காதவன், செயலாற்றும் வழியை ஆராயான், காரியங்களைச் செய்யும் வழிகளை ஆராயாதவன், தொன்றுதொட்டு வரும் முறைமைகளை ஆராயாதவன், நல்வழி நாடான், பின் வருவனவற்றை எண்ணிப் பாரான், வினைகளைச் செய்யும் வழிகளை ஆய்ந்தறியாதவன், பகை வந்ததற்குரிய காரணம் கருதாதவன் என்றவாறு உரைகாரர்கள் பொருள் கூறினர்.

இத்தொடர்க்கு ஒருவினை செய்யத்தொடங்குங்கால் பின் வருவன பாரான் என்றும் நூல் நெறி ஆரய்ந்து பாரான் என்றும் உரை கூறினர். தான் தொடங்கும் வினைநன்மைக்கோ அல்லது தீமைக்கோ வழியாதலை நோக்கான் என்று இதை விளக்கினர். செயல்களை செய்யும் வழிகளை ஆராயாமல் தொழிலைத் தொடங்குவான் என்பது இதன் பொருள்.

‘வழி நோக்கான்’ என்பதற்குச் செயல்களை ஆற்றும் வழிகளை ஆராயான் என்பது பொருள்.

நல்ல வழிகளை ஆராயான், வாய்ப்புடைய செயல்களைச் செய்யான், தனக்கு வரும் பழிக்கு அஞ்சான், நற்குணமுடையன் அல்லன் இவனோடு கொண்ட பகைமை பகைவர்க்கு இனிது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒழுங்கு முறையற்ற பண்பு இல்லாதவனை எதிர்த்தல் பகைமாட்சி.

பொழிப்பு

நல்ல வழிகளை ஆராயான், வாய்ப்புடைய செயல்களைச் செய்யான், பழிக்கு அஞ்சான், பண்புடையனும் அல்லன்; இத்தகையவனோடு கொண்ட பகை பகைவர்க்கு இனியது.