இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0869செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்

(அதிகாரம்:பகைமாட்சி குறள் எண்:869)

பொழிப்பு (மு வரதராசன்): அறிவு இல்லாத அஞ்சும் இயல்பு உடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்துப் பகைகொள்பவர்க்கு இன்பங்கன் தொலைவில் நீங்காமல் நிற்கும்.

மணக்குடவர் உரை: அறிவில்லாத அச்சமுடைய பகைவரைப் பெறின் அவரைச் செறுவார்க்கு இன்பம் தூரப்போகாது, அணித்தாக வரும்.
அறிவு- காரியவறிவு.

பரிமேலழகர் உரை: அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - நீதியை அறிதல் இல்லாத, அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா - அவரைச் செறுவார்க்கு உயர்ந்த இன்பங்கள் நீங்கா.
(உபாயம் அறிதலும் அறிந்தால் செய்து முடிக்கும் திண்மையும் இல்லாதாரே பகைவராதல் கூடாமையின் 'பெறின்' என்றும், அவரை அறிந்து மேற்சென்ற பொழுதே பகையின்மையும் செல்வமும் ஒருங்கே எய்தலின், 'சேணுடை இன்பங்கள் இகவா' என்றும் கூறினார்.)

தமிழண்ணல் உரை: போர் நெறி பற்றிய அறிவில்லாதவரும் போரைக் கண்டு அஞ்சுபவருமாகிய பகைவர்களைப் பெற்றால், அவரோடு பகைப்பவர்களுக்கு இன்பங்கள் சேய்மையில் தள்ளிப்போகா; அணித்தாகவே வந்து சேரும். அரசியல் நீதி இது; தம்மைப் பாதுகாக்க அறியாதவர்களைப் பகைத்தலால் இன்பமே உண்டாகும். அவ்வாறிருத்தல் கூடாது என்பது குறிப்பு.


இன்பம் சேணிகவா என இயல்பாகவே கொண்டு பொருள் உரைத்த மணக்குடவர் உரை

பொருள்கோள் வரிஅமைப்பு:
அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின் செறுவார்க்கு இன்பம் சேண் இகவா.

பதவுரை: செறுவார்க்கு-பகைவர்க்கு; சேண்-தொலைவு, உயர்ந்த; இகவா-நீங்கமாட்டா; இன்பம்-மகிழ்ச்சி; அறிவுஇலா-அறிவு இல்லாத; அஞ்சும்-பயப்படும், உள்நடுங்கும்; பகைவர்-பகைவர்; பெறின்-நேர்ந்தால்.


செறுவார்க்குச் சேணிகவா இன்பம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரைச் செறுவார்க்கு இன்பம் தூரப்போகாது, அணித்தாக வரும்;
பரிப்பெருமாள்: அவரைச் செறுவார்க்கு இன்பம் தூரப்போகாது, அணித்தாக வரும்;
பரிதி: மாற்றார்க்கு இவனை வெல்ல நாட்செல்லாது என்றவாறு.
காலிங்கர்: வந்து அடர்க்க நினைவார்க்குத் தம்மைச் சேண் நீங்கா இன்பம் ஆனவை; [அடர்க்க- நெருக்க; சேண்-தொலைவு]
காலிங்கர் குறிப்புரை: சேண் இகவா இன்பம் என்பது நீங்கா இன்பம் என்றது.
பரிமேலழகர்: அவரைச் செறுவார்க்கு உயர்ந்த இன்பங்கள் நீங்கா.

'செறுவார்க்கு இன்பம் தூரப்போகாது/செறுவார்க்கு உயர்ந்த இன்பங்கள் நீங்கா' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைப்பவர்க்கு என்றும் நலம் உண்டு', 'அவரை எதிர்த்துப் போரிடுபவர்க்கு இன்பங்கள் தொலைதூரம் நீங்கிப் போகா. (கிட்டிவரும்)', 'அவர்களுடன் போர் புரிய எண்ணுகிறவர்களுக்கு அளவற்ற இன்பம்', 'பகைத்துப் பொருவோர்க்கு உயர்ந்த இன்பங்கள் நீங்கா' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எதிர்த்துப் போரிடுபவர்க்கு இன்பங்கள் தொலைவாக நீங்கிப் போகா என்பது இப்பகுதியின் பொருள்.

அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவில்லாத அச்சமுடைய பகைவரைப் பெறின்.
மணக்குடவர் குறிப்புரை: அறிவு- காரியவறிவு.
பரிப்பெருமாள்: அறிவில்லாத அச்சமுடைய பகைவரைப் பெறின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அறிவு- காரியவறிவு. இவை இரண்டும் ஒருங்கு உடையார் வெல்லமாட்டார்; ஆதலால் பகை கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
பரிதி: அடக்கமில்லான் அச்சமில்லான் ஆகில்.
காலிங்கர்: எவ்விடத்து எனின் (முன் தீ)ங்கு தெரிந்து அறிவு இல்லாதவருமாவோர் எதிர்காணின் உள்நடுக்கம் உடைய பகைவரைப் பெறின் அவ்விடத்து என்றவாறு.
பரிமேலழகர்: நீதியை அறிதல் இல்லாத, அஞ்சும் பகைவரைப் பெற்றால்.
பரிமேலழகர் குறிப்புரை: உபாயம் அறிதலும் அறிந்தால் செய்து முடிக்கும் திண்மையும் இல்லாதாரே பகைவராதல் கூடாமையின் 'பெறின்' என்றும், அவரை அறிந்து மேற்சென்ற பொழுதே பகையின்மையும் செல்வமும் ஒருங்கே எய்தலின், 'சேணுடை இன்பங்கள் இகவா' என்றும் கூறினார். [உபாயம் - சாம தான பேத தண்டம் என்னும் நால்வகை பகை தொலைக்கும் வழிகள்; மேற்சென்ற பொழுதே - அப்பகைவருடன் போர் புரியச் சென்ற காலத்திலே]

அறிவில்லாத/நீதியை அறிதல் இல்லாத அச்சமுடைய பகைவரைப் பெறின் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவற்ற துணைவற்ற பகைவர் கிடைப்பின்', 'அறிவில்லாத அஞ்சுகின்ற பகைவரைப் பெற்றால்', '(பகைமையை விலக்கவோ அல்லது வெல்லவோ வேண்டிய) நல்லறிவும் இல்லாமல் (பகைவரை எதிர்க்கக்கூடிய தைரியமும் இல்லாது) அச்சமும் உள்ளவர்கள் கிடைத்தால்', 'அறிய வேண்டுவனவற்றை அறிதல் இல்லாத, அஞ்சக் கூடிய பகைவரைப் பெற்றால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

போர் செய்யும் அறிவற்ற, பகைவரை எதிர்காணின் அஞ்சுகின்ற பகைவரைப் பெற்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
போர் செய்யும் அறிவற்ற, பகைவரை எதிர்காணின் அஞ்சுகின்றவரைப் பெற்றால் எதிர்த்துப் போரிடுபவர்க்கு சேணிகவா இன்பம் என்பது பாடலின் பொருள்.
'சேணிகவா இன்பம்' என்பதன் பொருள் என்ன?

போட்டியின் திறம் அறியாதவனை ஆடாமலே வெல்லலாம்.

போர்புரிதற்கு வேண்டிய அறிவு இல்லாதவராய், பகைவரைக் கண்டு அஞ்சத்தக்க குணமும் உடையவாரய் இருப்போரைப் பகைவராகப் பெற்றால், அவரை எதிர்ப்போர்கட்கு வெற்றி இன்பம் தொலைவில் இல்லை.
போர் செய்யும் அறிவு கொண்டு அஞ்சாதவனாக இருப்பவரைப் பகைத்து அவரை வெல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் போர்த்திறங்கள் எதுவும் அறியாதவனாகவும் பகைவரைப் பார்த்து அஞ்சவும் செய்பவனை வெல்வது மிகவும் எளிது. இத்தகையவனைப் பகைவராகப் பெற்றவர்க்கு வெற்றி இன்பம் தொலைவில் நீங்காமல் அணித்தாக இருக்கும்.
அறிவிலா என்றதற்குப் பொதுவகையில் அறிவில்லாத என்று பலர் பொருள் கூறினர். மற்றவர்கள் காரிய அறிவு அறிவில்லாத, அடக்கமில்லாத, முன் தீங்கு தெரிந்து அறிவு இல்லாத, நீதியை அறிதல் இல்லாத, போர் நெறி பற்றிய அறிவில்லாத, அரசியல் அறிவில்லாத எனப் பலவாறு பொருள் உரைத்தனர். இங்கு பகைவரைப் பார்த்து நடுங்குபவர் என்று அடுத்துக் கூறப்படுவதால் போர்செய் அறிவு இல்லாத என்பது பொருத்தம்.
'அறிவிலா அஞ்சும் பகைவர்' என்பதை 'அறிவற்றவனாகவும் அஞ்சுகிறனாகவும் உள்ள பகைவர்' என்றும் 'அறிவின்றி அஞ்சும் பகைவர்' என்றும் கூறினர். இரண்டுமே ஏற்கக் கூடியன என்றாலும் 'அறிவற்றவனாகவும் அஞ்சுகிறனாகவும் உள்ள பகைவர்' என்ற பொருள் சிறந்தது.

'சேணிகவா இன்பம்' என்பதன் பொருள் என்ன?

'சேணிகவா இன்பம்' என்றதற்கு இன்பம் தூரப்போகாது, வெல்ல நாட்செல்லாது, சேண் நீங்கா இன்பம், உயர்ந்த இன்பங்கள் நீங்கா. எந்நாளும் நீங்காத இன்பம் உண்டாம், உயர்ந்த இன்பங்கள் நீங்கா, இன்பங்கள் சேய்மையில் தள்ளிப்போகா, உயர்ந்த இன்பங்கள் கிடைக்கும், என்றும் நலம் உண்டு, இன்பங்கள் தொலைதூரம் நீங்கிப் போகா (கிட்டிவரும்), அளவற்ற இன்பம், வெற்றி இன்பம் அப்பால்பட்டுச் செல்லாது; அடுத்தே இருக்கும், வெற்றி இன்பம் தூரப் போகமாட்டாது, உயர்ந்த இன்பங்கள் நீங்கா, வெற்றி இன்பம் தொலைவில் இராமல் அருகிலேயே நிலைத்திருக்கும், மகிழ்ச்சி எட்டும் தொலைவிலேயே இருக்கும், உயர்ந்த இன்பங்கள் நீங்காவாம், வெற்றியின்பங்கள் தொலைவில் நீங்கி நில்லா, உயர்ந்த வெற்றியாகிய இன்பமானது மிக தூரத்தில் இல்லை (நெருங்கிவிடுகிறது) என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கிடந்தாங்கே 'சேணிகவா இன்பம்' எனக் கொண்டு 'இன்பம் தூரப்போகாது, அணித்தாக வரும்' எனப் பொருள் உரைத்தார் மணக்குடவர். 'சேண் இன்பம் இகவா' என்று பரிமேலழகர் கொண்டு கூட்டி 'உயர்ந்த இன்பங்கள் நீங்கா' என்றார். மணக்குடவர் உரையே நேரிதும் பொருத்தமானதுமாம்.

'சேணிகவா இன்பம்' என்ற தொடர் (வெற்றி) இன்பம் தொலைவில் நீங்கி இல்லை; அருகாமையிலேயே உள்ளது என்ற பொருள் தரும்.

போர் செய்யும் அறிவற்ற, பகைவரை எதிர்காணின் அஞ்சுகின்றவரைப் பெற்றால் எதிர்த்துப் போரிடுபவர்க்கு இன்பங்கள் தொலைவாக நீங்கிப் போகா என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பகையாளியைப் பார்த்து நடுங்குபவன் பகைமாட்சியாம்.

பொழிப்பு

போர் செய்யும் அறிவில்லாத, பகைவரை எதிர்காணின் அஞ்சுகின்றவரைப் பெற்றால் எதிர்த்துப் போரிடுபவர்க்கு கிடைக்கும் நலங்கள் தொலைவாக இல்லை.