இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0867



கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை

(அதிகாரம்:பகை மாட்சி குறள் எண்:867)

பொழிப்பு (மு வரதராசன்): தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.



மணக்குடவர் உரை: பகையை உற்றிருந்தும் மாட்சியையில்லாதன செய்யுமவன் பகையினைத் துணிந்து ஒன்றனைக் கொடுத்தும் கொள்ளல் வேண்டும்.
மாணாதசெய்தலாவது பகைக்காவன செய்யாது பிறிது செயல். இஃது இவன் பகை செய்யமாட்டானாதலால் அப்பகை கோடலாமென்றது.

பரிமேலழகர் உரை: அடுத்து இருந்து மாணாத செய்வான் பகை - வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன செய்வான் பகைமையை; கொடுத்தும் கொளல் மன்ற வேண்டும் - சில பொருள் அழியக் கொடுத்தாயினும் கோடல் ஒரு தலையாக வேண்டும்.
(ஏலாதன - மெலியனாய் வைத்துத் துணிதலும், வலியனாய் வைத்துத் தணிதலும் முதலாயின, அப்பொழுது அதனால் சில பொருள் அழியினும், பின் பல பொருள் எய்தற்கு ஐயம் இன்மையின், 'கொளல் வேண்டும் மன்ற' என்றார். இவை ஆறு பாட்டானும் அது சிறப்பு வகையாற் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: வினையைத் தொடங்கிவிட்டு அதற்குப் பொருந்தாதனவற்றைச் செய்வான் பகையைச் சிலவற்றைக் கொடுத்தாயினும் கொள்ளுதல் வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அடுத்து இருந்து மாணாத செய்வான் பகை, கொடுத்தும் கொளல் மன்ற வேண்டும்.

பதவுரை: கொடுத்தும்-தந்தும்; கொளல்-பெறுதல்; வேண்டும்-வேண்டும், தகும்; மன்ற-திண்ணமாக, உறுதிப் பொருள் தருவதோர் இடைச்சொல்; அடுத்திருந்து-நெருக்கியிருந்து, நெருங்கியிருந்துகொண்டு, வினையைத் தொடங்கியிருந்து; மாணாத- மாட்சியையில்லாத, பொருந்தாத, ஏற்றமில்லாத; செய்வான்-செய்வானது; பகை-பகை.


கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துணிந்து ஒன்றனைக் கொடுத்தும் கொள்ளல் வேண்டும்;
பரிப்பெருமாள்: துணிந்து ஒன்றனைக் கொடுத்தும் கொள்ளல் வேண்டும்;
பரிதி: வெற்றி கொள்ளவேணும் என்றவாறு;
காலிங்கர்: தமக்குச் சிறந்தன யாதானும் கொடுத்தும் கோடல்வேண்டும் என்றது யாதினை எனின்;
பரிமேலழகர்: சில பொருள் அழியக் கொடுத்தாயினும் கோடல் ஒரு தலையாக வேண்டும்.
பரிமேலழகர் குறிப்புரை: அப்பொழுது அதனால் சில பொருள் அழியினும், பின் பல பொருள் எய்தற்கு ஐயம் இன்மையின், 'கொளல் வேண்டும் மன்ற' என்றார்.

'ஒன்றனைக் கொடுத்தும் கொள்ளல் வேண்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யாது கொடுத்தும் கொள்க', 'அவன் விரும்பிய பொருளைக் கொடுத்தாயினும் கட்டாயம் பெறுதல் வேண்டும்', 'பொருள் செலவு செய்தாயினும் பகைவனாக வெல்ல வேண்டும் (என்று நினைப்பார்கள்)', 'ஏதாவது கொடுத்தாவது கட்டாயமாகக் கொள்ளவேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எது கொடுத்தும் உறுதியாகக் கொள்ளவேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

அடுத்திருந்து மாணாத செய்வான் பகை :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகையை உற்றிருந்தும் மாட்சியையில்லாதன செய்யுமவன் பகையினை.
மணக்குடவர் குறிப்புரை: மாணாதசெய்தலாவது பகைக்காவன செய்யாது பிறிது செயல். இஃது இவன் பகை செய்யமாட்டானாதலால் அப்பகை கோடலாமென்றது.
பரிப்பெருமாள்: பகையை உற்றிருந்தும் மாட்சியையில்லாதன செய்யுமவன் பகையினை.
பரிப்பெருமாள் குறிப்புரை: மாணாதசெய்தலாவது பகைக்காவன செய்யாது பிறிது செயல். இஃது இவன் 'வினை செய்யமாட்டானாதலால்' பகை கோடலாமென்றது.
பரிதி: அடுத்திருந்தும் புல்லறிவினாலே மாறுபாடு செய்வான் பகையை
காலிங்கர்: (பயில) மண்டித்திருந்து தானே தனக்கு இன்னாதவற்றைச் செய்வானது பகையினை என்றவாறு. [பயில மண்டித்திருந்து - கூடவே சூழ்ந்திருந்தும்]
பரிமேலழகர்: வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன செய்வான் பகைமையை;
பரிமேலழகர் குறிப்புரை: ஏலாதன - மெலியனாய் வைத்துத் துணிதலும், வலியனாய் வைத்துத் தணிதலும் முதலாயின, இவை ஆறு பாட்டானும் அது சிறப்பு வகையாற் கூறப்பட்டது. [மெலியனாய் வைத்துத் துணிதல் - தன்வலி முதலிய குறைந்திருந்தும் பகைவருடன் போர் செய்ய துணிதல்; வலியனாய் வைத்துத் தணிதல் - தன்வலி முதலியனவற்றுள் சிறந்திருந்தும் பகைவரோடு போர் செய்யாது அடங்கியிருத்தல்]

'பகையை உற்றிருந்தும் மாட்சியையில்லாதன செய்யுமவன் பகையினை/அடுத்திருந்தும்புல்லறிவினாலே மாறுபாடு செய்வான் பகையை/பயில) மண்டித்திருந்து தானே தனக்கு இன்னாதவற்றைச் செய்வானது பகையினை/வினையைத் தொடங்கியிருந்து ஏலாதன செய்வான் பகைமையை என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பக்கத்திருந்தும் புரியாது செய்பவனது எதிர்ப்பை', 'பக்கத்திலேயே இருந்து கொண்டு ஏலாத செயல்களைச் செய்வானது பகையை', 'மிகவும் நெருங்கினவனாக இருந்து கொண்டே கெடுதி செய்கிறவனை', 'பக்கத்து அரசனாய் இருந்து பொருத்தமில்லாதவற்றையே தனக்குச் செய்து கொள்ளுவானுடைய பகைமையை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பகையாயிருந்தும் பகைக்காவன செய்யாது பிறிது செய்வானது பகையை என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
அடுத்திருந்தும் பகைக்காவன செய்யாது பிறிது செய்வானது பகையை எது கொடுத்தும் உறுதியாகக் கொள்ளவேண்டும் என்பது பாடலின் பொருள்.
'அடுத்திருந்து' என்பதன் பொருள் என்ன?

தாம் என்ன செய்கின்றோம் என்பதையே அறியாதவரது பகை கிடைப்பதற்கரிது.

பகைக்குச் சிறிதும் பொருந்தாச் செயல்களையே செய்கின்ற ஒருவனது பகையை ஒரு விலை கொடுத்தேனும் உறுதியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
வாழ்வியலில் கொள்ள வேண்டுவனவும் கொடுக்க வேண்டுவனவும் பல உள. கொடுத்து எதனைப் பெறுவோம்? இன்றியமையாத் தேவையானதைப் பெறுவதற்கு ஒன்றைக் கொடுப்போம். மற்றவற்றுள் நல்ல நட்பிற்கு விலை கொடுக்கலாம். ஆனால் இங்கு பகைமையை எது கொடுத்தும் வாங்கச் சொல்லப்படுகிறதே! ஏன்?
ஒருவன் நம்முடன் இகல் கொண்டு அதனை மிகுவித்துக் கொண்டிருக்கிறான். உள்ளார்ந்து போர் தொடுக்கும் எண்ணம் கொண்டுள்ளான் என்பதை நன்கு அறிய முடிகிறது. ஆனால் அவன் செயற்பாடுகள் வேறுவிதமாக உள்ளன. போர் தொடர்பான எதிலும் முனைப்புக் காட்டாமல் தொடர்பே இல்லாத போர் மாண்பற்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். தன்வலி முதலியவற்றுள் மேம்பட்டவனாய் இருந்தும் போர் செய்யாது அடங்கிக் கிடக்கிறான். இத்தகையவன் பகை செய்யமாட்டான். இப்படிப்பட்ட பகைவன் எங்கு கிடைப்பான்? அவனுடைய பகை விரும்பத்தக்கது. அவன் பகைவர்களுக்கு எளிதில் இரையாவான். தான் செய்வது என்னவென்று புரியாதிருப்பவனது எதிர்ப்பை ஏதாவது கொடுத்தாவது பெற்றுக் கொள்ள வேண்டும், அவனுடன் பொருது வெல்வது மிக எளிதென்பதால்.

'கொடுத்தும் கொளல்வேண்டும்' என்ற தொடர் குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் (குறிப்பறிதல் 703 பொருள்: பிறர் முகக் குறிப்பினாலே மற்றவர் உள்ளக்கருத்தை அறிய வல்லவரை எதைக் கொடுத்தும் தம் அவையில் இருத்திக் கொள்க என்ற குறளிலும் குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு (நட்பாராய்தல் 794 பொருள்: நற்குடியில் பிறந்து தன்பால் பழிவரக் கூடாதென்று அஞ்சுகின்றவனை எது கொடுத்தும் நட்புக் கொள்க) என்ற பாடலிலும் பயின்று வந்துள்ளது. குறள் 794இல் நல்லவர் நட்பைப் பெறுவதற்கு எது கொடுத்தும் கொளல்வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இங்கு பகையைப் பெறுவதற்காக சிறந்தன கொடுத்தும் உறுதியகக் கொளல் வேண்டும் என்று கூறப்படுகிறது.

'அடுத்திருந்து' என்பதன் பொருள் என்ன?

'அடுத்திருந்து' என்ற சொல்லுக்குப் பகையை உற்றிருந்தும், அடுத்திருந்தும், பயில மண்டித்திருந்து, வினையைத் தொடங்கியிருந்து, ஒரு காரியத்தைச் செய்ய உத்தேசித்திருந்து, தனக்கடங்காத வினையைத் தொடுத்திருந்து, தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும், ஒரு காரியத்தைத் தொடங்கிவைத்து கூடவே இருந்து, தன்னை அடுத்திருந்து, பக்கத்திருந்தும், பக்கத்திலேயே இருந்து கொண்டு, மிகவும் நெருங்கினவனாக இருந்து கொண்டே, பக்கத்து அரசனாய் இருந்து, வினையைத் தொடங்கிவிட்டு, தமக்கு மிகவும் நெருக்கத்தில் இருந்தும் (தன் பாதுகாப்புக்குத் தேவையானவற்றைச் செய்து கொள்ளாமல்), பக்கத்தில் இருந்தே, போரைத் தொடங்கி அண்மையிலிருந்து கொண்டு, உடன் கூடியிருந்தே தகாத என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'அடுத்திருந்து' என்றதற்குப் பக்கத்திலேயே இருந்து கொண்டு என்ற பொருள்படும்படி பெரும்பான்மை உரையாசிரியர்கள் பொருள் கூறினர். இது நம்மோடு இருந்து கொண்டு நமக்கு மறைமுகமாக ஊறு விளைவிப்பது அதாவது கூடவே இருந்துகொண்டு குழிபறிப்பது என்றதைக் குறிக்கும். இக்குறளுக்கான காலிங்கர் உரை 'மாணாது செய்வான் நண்பனாயினும் அவன் பகையைக் கொடுத்தாவது கொள்ளவேண்டும்' என்ற பொருள் தருவதாக உள்ளது. இத்தொடர்க்கு மணக்குடவர் 'பகையை உற்றிருந்தும்' எனப் பொருள் உரைத்தார். பின்வந்த பரிமேலழகர் 'வினையைத் தொடங்கியிருந்து' என்றார்.
இவ்வதிகாரத்துப் பல குறள்கள் பகைவனின் பலவீனங்களைச் சொல்லி, இவன் இன்ன விதத்தில் பலம் குறைந்தவனாக இருக்கிறான், அதனால் அவன்மேல் பகை கொள்ளலாம் என்ற அமைவிலேயே உள்ளன. அவ்விதமே இக்குறளுக்கும் பொருளுரைப்பது பொருந்தும். அந்த வகையில் மணக்குடவரின் 'பகையை உற்றிருந்தும் பகைக்காவன செய்யாது பிறிது செய்வான் பகையைக் கோடல்', பரிமேலழகரின் 'வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன செய்வானது பகையைக் கொள்ளுதல்' ஆகிய உரைகள் பொருந்தும்.

'அடுத்திருந்து' என்ற தொடர்க்கு பகையை உற்றிருந்தும் என்பது பொருத்தம்.

பகையாயிருந்தும் பகைக்காவன செய்யாது பிறிது செய்வானது பகையை எது கொடுத்தும் உறுதியாகக் கொள்ளவேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இகல்கொண்டும் பகைக்கானவற்றைச் செய்யாதவன் பகைமாட்சியாம்.

பொழிப்பு

பகையாயிருந்தும் பகைக்காவன செய்யாதிருப்பவனது பகையை எது கொடுத்தும் உறுதியாகக் கொள்ள வேண்டும்.