இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0868



குணன்இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனன்இலனாம் ஏமாப்பு உடைத்து.

(அதிகாரம்:பகைமாட்சி குறள் எண்:868)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் குணம் இல்லாதவனாய்க் குற்றம் பல உடையவனானால், அவன் துணை இல்லாதவன் ஆவான்; அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.

மணக்குடவர் உரை: குணங்களுள் யாதும் இலனாய்க் குற்றங்கள் பல உடையனாயின் அவன் துணையிலனாம்; அது மாற்றார்க்கு ஏமமாதலை உடைத்தாம்.

பரிமேலழகர் உரை: குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் இனன் இலனாம் - ஒருவன் குணம் ஒன்றும் இலனாய், உடைய குற்றம் பலவாய வழி அவன் துணையிலனாம்; மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து - அவ்விலனாதல் தானே அவன் பகைவர்க்குத் துணையாதலையுடைத்து.
(குணம் - இறைமாட்சியுட் சொல்லியன, குற்றம் - இவ்வதிகாரத்துச் சொல்லியனவும் மற்றும் அத்தன்மையனவும், துணை - சுற்றம், நட்பு, பொருள், படை முதலாயின. பகைவர்க்கு இவற்றான் உளதாம் பயன் தானே உளதாமாகலின் 'ஏமாப்புடைத்து' என்றார். 'இலனாய்' என்னும் செய்தெனெச்சம் 'உடைய' என வந்த பெயரெச்சக் குறிப்புக் கொண்டது.)

இரா சாரங்கபாணி உரை: ஒருவன் குணம் ஒன்றும் இல்லாதவனாய்க் குற்றம் பல உடையவனாக இருப்பின், அவன் துணை இல்லாதவன் ஆவான். அத்துணை இன்மை அவன் பகைவர்க்குத் துணையாதலை உடையது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குணன்இலனாய்க் குற்றம் பலவாயின் இனன்இலனாம் மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து.

பதவுரை: குணன்-நற்பண்பு; இலனாய்-இல்லாதவனாய்; குற்றம்-குற்றம்; பலவாயின்-பலவாய வழி; மாற்றார்க்கு-பகைவர்க்கு; இனன்-துணை; இலனாம்-இல்லாதவனாம்; ஏமாப்பு-அரணாதல், துணையாதல்; உடைத்து-உடையது.


குணன்இலனாய்க் குற்றம் பலவாயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குணங்களுள் யாதும் இலனாய்க் குற்றங்கள் பல உடையனாயின்;
பரிப்பெருமாள்: குணங்கள் யாதும் இலனாய்க் குற்றங்கள் பல உடையனாயின்;
பரிதி: நற்குணமில்லாதவனாய்க் குற்றம் பலவும் உள்ளவனாகில்;
காலிங்கர்: தன்வயின் குணம் என்பது ஒன்றும் இலனாய்க் குற்றம் பல உடையனாய் இருப்பின்;
பரிமேலழகர்: ஒருவன் குணம் ஒன்றும் இலனாய், உடைய குற்றம் பலவாய வழி;
பரிமேலழகர் குறிப்புரை: குணம் - இறைமாட்சியுட் சொல்லியன, குற்றம் - இவ்வதிகாரத்துச் சொல்லியனவும் மற்றும் அத்தன்மையனவும்.

'குணம் ஒன்றும் இலனாய்க் குற்றங்கள் பல உடையனாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குணமின்றிக் குற்றம்பல கொண்ட அரசன்', 'ஒருவன் நல்ல குணம் இல்லாதிருப்பதோடு பல குற்றங்கள் உள்ளவனாகவும் இருந்தால்', 'ஒருவன் குணம் இல்லாதவனாய்ப் பல குற்றங்கள் உடையவனாய் இருப்பின்', 'நற்குணம் ஒன்றும் இல்லாதவனாய், குற்றங்கள் பலவும் உடையவனாய் இருப்பின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குணம் ஒன்றும் இல்லாதவனாய்க் குற்றங்கள் பல உடையனாய் இருப்பின் என்பது இப்பகுதியின் பொருள்.

மாற்றார்க்கு இனன்இலனாம் ஏமாப்பு உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவன் துணையிலனாம்; அது மாற்றார்க்கு ஏமமாதலை உடைத்தாம்.
பரிப்பெருமாள்: அவன் துணையிலனாம்; அது மாற்றார்க்கு ஏமமாதலை உடைத்தாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அன்றியும் மாற்றார்க்கு இவன் துணையிலன் என்று மனத்தின் கொள்ளும் வலி உடைத்தாம் என்றும் ஆம். மேல் பகைவர்மாட்டுக் குற்றம் பெருகின், அவரை வெல்லலாம் என்றார்; இக்குற்றம் தம்மாட்டும் உளதாயின் வெல்ல ஒண்ணாது என்று இது பொதுவாகக் கூறப்பட்டது. குற்றவகை மேல் கூறப்படுகின்றன.
பரிதி: மாற்றார்க்கு இன்பமில்லாதவனாகில் அவர்க்கு மகிழ்ச்சி உண்டாம் என்றவாறு.
காலிங்கர்: அவனொடு மாறுபாடு கொள்ளக் கருதுகின்ற மாற்றார்க்கு இணை இல்லாததோர் சேம உறுதியைப் பெரிதும் உடைத்து என்றவாறு. [சேம உறுதி- பாதுகாப்பான பயன்]
காலிங்கர் குறிப்புரை: இனனிலன் என்பது இணை இலன் என்றது.
பரிமேலழகர்: அவன் துணையிலனாம்; அவ்விலனாதல் தானே அவன் பகைவர்க்குத் துணையாதலையுடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: குணம் - இறைமாட்சியுட் சொல்லியன, குற்றம் - இவ்வதிகாரத்துச் சொல்லியனவும் மற்றும் அத்தன்மையனவும், துணை - சுற்றம், நட்பு, பொருள், படை முதலாயின. பகைவர்க்கு இவற்றான் உளதாம் பயன் தானே உளதாமாகலின் 'ஏமாப்புடைத்து' என்றார். 'இலனாய்' என்னும் செய்தெனெச்சம் 'உடைய' என வந்த பெயரெச்சக் குறிப்புக் கொண்டது. [இறைமாட்சியுட் சொல்லியனஅஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடைமை; இவ்வதிகாரத்துச் சொல்லியன - அன்பின்மை, துணையின்மை, வலியின்மை முதலியனவாம்]

'அவன் துணையிலனாம்; அது மாற்றார்க்கு ஏமமாதலை உடைத்தாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துணையற்றவன்; பகைவர்க்கு வாய்ப்பானவன்', 'அவனுக்குத் துணைவர்கள் இருக்கமாட்டார்கள். அதுதான் பகைவர்களுக்கு (அவன்மேல் பாய) மிக்கக் களிப்புண்டாக்குவது', 'அவன் துணை இல்லாதவனாவன். (அவன் துணை அற்ற நிலை அவன் பகைவர்க்குத் தக்க பாதுகாப்பாகும்.)', 'துணையில்லாதவன் ஆவான்; பகைவர்க்கு வலிமையைத் தரக்கூடியவன் ஆவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவன் துணை இல்லாதவனாவான்; அது பகைவர்க்குப் பாதுகாப்பான பயன் உடையதாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

குணன்இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனன்இலனாம் ஏமாப்பு உடைத்து

நிறையுரை:
குணம் ஒன்றும் இல்லாதவனாய்க் குற்றங்கள் பல உடையனாய் இருப்பின் அவன் துணை இல்லாதவனாவான்; அது பகைவர்க்குப் பாதுகாப்பான பயன் உடையதாகும் என்பது பாடலின் பொருள்.
'ஏமாப்பு உடைத்து' என்பதன் பொருள் என்ன?

துணை இல்லாது தனிமரமாய் நிற்பவன் கடினமில்லா வெற்றியைத் தருவான்.

நல்ல குணம் எதுவும் இல்லாதவனாய், குற்றங்களும் பலவாக உள்ளவன் துணை இல்லாதவன் ஆவான். அந்த நிலை பகைவர்க்குத் தக்க பாதுகாப்பாக இருக்கும்.
நற்பண்புகளே இல்லாதவனாய் தீச்செயல்கள் ஆற்றிப் பல குற்றங்களில் உழலுபவனுக்குத் துணை நிற்க யாரும் இருக்க மாட்டார்கள். இது அவனது பகைவர்க்கு நல்ல வாய்ப்பாக அமையும். அதாவது இவன் பகைவர்க்கு வெற்றியைத் தானே விளைவிப்பான். பக்கத் துணை ஏதும் இல்லாதவனை, எந்தவித எதிர்ப்புமின்றி அவன் இடத்தில் நேரே புகுந்து வெற்றிக்கனியைப் பறிக்கலாம்.

'ஏமாப்பு உடைத்து' என்பதன் பொருள் என்ன?

'ஏமாப்பு உடைத்து' என்றதற்கு ஏமமாதலை உடைத்தாம், மகிழ்ச்சி உண்டாம், சேம உறுதியைப் பெரிதும் உடைத்து, துணையாதலையுடைத்து, தானே துணையாம், துணையாக அமையும், வாய்ப்பானவன், துணையாதலை உடையது, (அவன்மேல் பாய) மிக்கக் களிப்புண்டாக்குவது, பாதுகாப்பாகும், தக்க பாதுகாப்பாகும், வலிமையைத் தரக்கூடியவன் ஆவான், வலிமை உண்டாகும், அரணாதலையுடைத்து, பாதுகாவலாகும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஏமாப்பு என்ற சொல்லுக்குப் பாதுகாப்பு அல்லது துணை என்று பொருள் கொண்டனர். பாதுகாப்பாக போர் செய்ய வரலாம் என எள்ளலுடன் இங்கு சொல்லப்படுகிறது. பகைவர்க்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது; 'இந்தா எடுத்துக் கொள்' என்று தன் பகைவர் வெற்றிக்கு அவனது இயல்பால் அவனே பாதுகாப்பான சூழலை உண்டாக்கிக் கொடுக்கிறான் என்பதாக அமைந்துள்ள பாடல் இது.
'இனன் இலனாம் ஏமாப்புடைத்து' என்பதனை ஒரு தொடராகக் கொண்டு இவன் துணையிலன் என்று மனத்தின்கண் கொள்ளும் வலியுடைத்தாம் என்றும் ஆம் என உரைப்பார் பரிப்பெருமாள்.

'ஏமாப்பு உடைத்து' என்ற தொடர் பாதுகாப்பு ஆகும் என்ற பொருள் தரும்.

குணம் ஒன்றும் இல்லாதவனாய்க் குற்றங்கள் பல உடையனாய் இருப்பின் அவன் துணை இல்லாதவனாவான்; அது பகைவர்க்குப் பாதுகாப்பான பயன் உடையதாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

குணமிலாதவன், குற்றமுடையவன் பகைமாட்சியாம்.

பொழிப்பு

குணம் ஒன்றும் இல்லாதவனாய்க் குற்றம் பல உடையவனாக இருப்பின், அவன் துணை இல்லாதவன் ஆவான். அத்துணை இன்மை அவன் பகைவர்க்குப் பாதுகாப்புப் பயன் உடையதாம்.