‘அரண்’ என்பது பாதுகாவல் என்னும் பொருளைத்தரும். பாதுகாவலைக் கொடுக்கக் கூடியது ‘அரண்’ எனப்படுகின்றது.
மதிற்சுவரும், அகழியும், காடும் அரணாக இருந்த நிலைமையிலிருந்து மாறி வான் எல்லையிலும் இன்று அரண் உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம்.
மனித வரலாறு நிறைய முன்னேற்றங்களைக் கண்டிருந்தாலும் அரசியல் பரப்பில் நாடுகளது எல்லைகள் வரையறைப்பட்டும் அவை தனித்தனியான அரசமைப்பு கொண்டும்தான் உள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சீனாவின் பெருஞ்சுவர் போல, அமெரிக்கா போன்ற நன்கு வளர்ந்த குடியாட்சியிலும் குடியேறுபவர்களைத் தடுக்க எல்லை முழுக்க நீளமான சுவர் கட்டவேண்டும் என்ற கருத்தாடல் இன்றும் நடைபெறுகிறது.
அறம் ஒன்றைத் தவிர வேறு காவல் இல்லை என்ற நிலையில்தான் எல்லை வரையறைகள் இல்லாத (borderless) உலகம் பிறக்கும். அதற்கு இன்னும் பல நூற்றாண்டு காலம் ஆகும் என்றே தோன்றுகிறது.
அரண் நாட்டிற்கு உறுப்பு என்பதால் நாட்டின் சிறப்புக்கு அரணும் இன்றியமையாதது. தனது அரசே தலைமை தாங்கி விளங்கவேண்டும் என்ற எண்ணம் நீங்கும் வரையில், ஒரு நாடு நல்ல அரண் பெற்றிருக்க வேண்டும். குறளில் சொல்லப்பட்டுள்ள அரண் நாட்டினை எவ்விதம் காக்கிறது என்று கூறுகிறது.
ஒரு நாட்டின் படைபலம் இயங்கிவரும் காவல் நிலை என்றால் அதன் அரணோ நிலையாய் உள்ள காவல் நிலை; அரண் இருந்த நிலையிலேயே தற்காப்பைத் தந்து தாக்குதலும் செய்யும், அரண்களில் அவ்வந்நாட்டினர் நின்று வரிவாங்கியும் அந்தந்த நாட்டுச் சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றங்களுக்கான தடைகளை நிறைவேற்றியும் காத்து வருகின்றனர். அரசியல், பொருள்நிலை, போர்நிலை, பண்பாட்டு நிலை முதலிய அனைத்துக்கும் நாடு முழுவதற்கும் அரண் காவல் செய்கிறது.
அரண் அமைவாக அமைந்துவிட்டால் நாடு, பகைவர் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகாது. மூவேந்தர்களின் பல ஆண்டுகள் படையெடுப்பையும் தாக்குப்பிடித்து பாரியின் பறம்புமலையின் அரண் நின்றது என்று புறப்பாடல் வழி அறிகிறோம். குறள் அரண் வகைகளைப் பலபடக் கூறுமிடத்தில், இப்பொழுதைக்கும் பொருந்துமாறு அப்பொழுதே சொல்லி வைத்தாற்போலத் தோன்றுகிறது: அரணே போர் செய்கிறது; அரணே வெற்றியைப் பெற்றித் தருகிறது என்று அதைப் போற்றுகிறார் வள்ளுவர். அரண்காக்கும் போர் வினைவல்லாரது இன்றியமையாமையும் சொல்லிச் செல்கிறார்.
'இன்று கருத வேண்டிய அரண் அறிவாகிய அரண், எதிர்ப்பின்மையாகிய அரண், தற்காப்பு இன்மையாகிய அரண் முதலியனவே ஆகும். அறிவைச் 'செறுவார்க்கும் உள் அழிக்க லாகா அரண்' என்று திருவள்ளுவர் கூறியிருக்கின்றார்.... பொருளுக்கு (அரசியல் வாழ்வுக்குக்) காப்புச் செய்ய வல்லது அறமே என்னும் உண்மையை உலகம் உணர வேண்டிய நிலைமை வந்துவிட்டது' என்னும் மு வரதராசன் கருத்து இங்கு நினைக்கத்தக்கது.