இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0750



எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்

(அதிகாரம்:அரண் குறள் எண்:750)

பொழிப்பு (மு வரதராசன்): எத்தகைய பெருமைகளை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரிடத்தில் அரண் பயனில்லாததாகும்.



மணக்குடவர் உரை: சொல்லப்பட்ட எல்லா மாட்சிமையும் உடைத்தாயினும் வினையின்கண் மாட்சிமை இல்லாதார்மாட்டு அரணாற் பயனில்லை.
இது வினைவல்லாரும் வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: அரண் - அரண்; எனைமாட்சித்து ஆகியக்கண்ணும் - மேற்சொல்லப்பட்ட மாட்சியெல்லாம் உடைத்தாயவிடத்தும்; வினை மாட்சி இல்லார்கண் இல்லது - வினை செய்தற்கண் மாட்சி இல்லாதார் மாட்டு அவையிலதாம்.
(வாளா இருத்தலும், அளவறியாது செய்தலும், ஏலாதது செய்தலும் எல்லாம் அடங்க, 'வினைமாட்சியில்லார' என்றும், ஏற்ற வினையை அளவறிந்து செய்து காவாக்கால் அம்மாட்சிகளால் பயனின்றி அழியுமென்பார், 'அவையுடைத்தன்று' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் காப்பாரை இன்றியமையாதென்பது கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: எவ்வளவு மேன்மையுடையதாய் இருந்தாலும், போர்த்திறம் இல்லாதாரிடம் உள்ள கோட்டை சிறந்த பாதுகாப்பாதல் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அரண் எனைமாட்சித்து ஆகியக்கண்ணும், வினை மாட்சி இல்லார்கண் இல்லது.

பதவுரை: எனை-எத்துணை; மாட்சித்து-பெருமையுடையது; ஆகியக்கண்ணும்-ஆனபோதும்; வினைமாட்சி-செயல்திறன்; இல்லார்கண்-இல்லாதவரிடத்தில்; இல்லது-இலது; அரண்-பாதுகாவல், கோட்டை.


எனைமாட்சித்து ஆகியக் கண்ணும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சொல்லப்பட்ட எல்லா மாட்சிமையும் உடைத்தாயினும்;
பரிப்பெருமாள்: சொல்லப்பட்ட எல்லா மாட்சிமையும் உடைத்தாயினும்;
பரிதியார்: அரண் எத்தனை வலிக்கை உண்டாகிலும்;
காலிங்கர்: கீழ்ச்சொன்னவும் பிறவும் ஆகிய எனைத்து வகைப்பட்ட மாட்சிமை உடைத்தாகிய இடத்தும்;
பரிமேலழகர்: மேற்சொல்லப்பட்ட மாட்சியெல்லாம் உடைத்தாயவிடத்தும்;

'எனைத்து வகைப்பட்ட மாட்சிமை உடைத்தாகிய இடத்தும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரண் எவ்வாற்றல் உடையதாக இருந்தாலும்', 'எத்துணைச் சிறப்புக்களை உடையதாயினும்', 'எப்படிப்பட்ட (எந்திர தந்திர இரகசியங்கள் அமைந்த) பெருமையுள்ளதாக இருந்தாலும்', 'எவ்வளவு மேன்மையுடையதாய் இருந்தாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எத்துணை மேன்மையுடையதாய் இருந்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('இல்லை அரண்' பாடம்): வினையின்கண் மாட்சிமை இல்லாதார்மாட்டு அரணாற் பயனில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது வினைவல்லாரும் வேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: வினையின்கண் மாட்சிமை இல்லாதார்மாட்டு அரணாற் பயனில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வினைசெய்ய வல்லாரும் வேண்டு மென்றது.
பரிதியார்: சாதுரியவான் இல்லாத அரண் அரணல்ல என்றவாறு.
காலிங்கர் ('நில்லாது அரண்' பாடம்): புறத்தவர் திறத்துப் பொழுதுதோறும் வேறுபடச் செய்யும் வினையினது மாட்சிமை இல்லாதார் மாட்டு நில்லாது அரண்; எனவே அவ்வினைகள் ஆங்கு ஆங்குச் செய்து தெவ்வரை ஓட்டும் திறன் இல்லாதார்கண் உளதேனும் அழிந்துவிடும் என்றவாறு.
பரிமேலழகர்: வினை செய்தற்கண் மாட்சி இல்லாதார் மாட்டு அவையிலதாம் அரண்.
பரிமேலழகர் குறிப்புரை: வாளா இருத்தலும், அளவறியாது செய்தலும், ஏலாதது செய்தலும் எல்லாம் அடங்க, 'வினைமாட்சியில்லார' என்றும், ஏற்ற வினையை அளவறிந்து செய்து காவாக்கால் அம்மாட்சிகளால் பயனின்றி அழியுமென்பார், 'அவையுடைத்தன்று' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் காப்பாரை இன்றியமையாதென்பது கூறப்பட்டது.

வினை செய்தற்கண் மாட்சி இல்லாதார் மாட்டு அவையிலதாம் அரண் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பேராற்றல் இல்லாதார்க்குப் பயன் இல்லை', 'செயல்வகையால் சிறப்புப் பெறாதவரிடத்தில் அரண் பயனில்லாததாகும்', '(அந்த எந்திர தந்திரங்களைப் பற்றிய வேலைகளின் உளவுகளின் அறிவு) இல்லாதவர்கள் (அந்த சாதனைகளைப் பயன்படுத்திக் கொள்ள) இல்லாமற் போகக் கூடியதே கோட்டையாகும்', 'போர்த்திறம் இல்லாதாரிடம் உள்ள கோட்டை சிறந்த பாதுகாப்பாதல் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செயல்திறம் இல்லாதவரிடம் இருக்கும்போது பாதுகாப்பு இலது என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
எத்துணை மேன்மையுடையதாய் இருந்தாலும் வினைமாட்சி இல்லாதவரிடம் இருக்கும்போது பாதுகாப்பு இலது என்பது பாடலின் பொருள்.
'வினைமாட்சி' என்பது என்ன?

அரணின் மாட்சியும் அதை ஆட்சிப்படுத்துபவரது மாட்சியும் பொருந்தியிருக்க வேண்டும்.

எத்தனை மேன்மைகளையெல்லாம் பெற்றிருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் உள்ள அரண் பயனில்லாதது ஆகும்.
நாட்டைக் காப்பதற்குரிய அரண், எத்துணை பெருமைகளை உடையதாக இருந்தாலும், போர்த் தொழில் அறியார் இயக்கத்தில் இருந்தால் அதன் சிறப்புகள் பயன்படா. இவ்வதிகாரத்து முந்தைய குறட்கள் அனைத்தும் அரண் அமைப்பு பற்றியும் அது பெற்றுத்தரும் வெற்றியைப் போற்றியும், உடன்பாட்டு நிலையில், பாடப்பெற்றன. இங்கு 'இல்லது அரண்' என்று எதிர்மறை நிலையில் வைத்து அரணை இயக்குவோர்க்கு வேண்டிய மாட்சி பற்றிப் பேசப்படுகிறது. அரண் எத்தனைச் சிறப்புடையதாயிருந்தாலும் அதனை இயக்குபவர்கள் தக்க ஆற்றல் இல்லாதாராயின் எவ்விதப் பயனும் அற்றதாகிவிடும். ஆற்றல் இல்லாததுவே அழிவிற்கும் வழி வகுப்பவையாக மாறவும் கூடும்; அரணும் அரணாகாது.

‘எனைமாட்சி’ என்றது எத்துணை மாட்சி என்ற பொருள் தருவது. அரணுக்குரிய மாட்சிகள் இவ்வதிகாரத்து மற்ற பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன: நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என இயற்கையும் செயற்கையுமாய் இந்நான்கு அரணும் கொண்டு, உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய நான்கும் அமைந்து, காக்கவேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், பகைவரால் கைப்பற்றப்படுவதற்கு முடியாததாய், தன்னிடம் உணவுப்பொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதற்கு எளியதாகிய தன்மை உடையதாய், தன்னிடம் உள்ளவர்க்கு (வேண்டிய) எல்லாப் பொருளும் உடையதாய் முற்றுகையிட்டும், முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையதாய் முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும் (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியதாய் உள்ளமை எனப் பல மாட்சிகள் கூறப்பட்டன. 'எனைமாட்சித்து ஆகியக் கண்ணும்' என்றது இவை அனைத்தையும் ஓர் அரண் பெற்றிருந்த பொழுதும் என்ற பொருள்தரும்.

இதற்கு முந்தைய 'நாடு' அதிகாரம் ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே வேந்தமைவு இல்லாத நாடு (740 பொருள்: மேலே சொல்லப்பட்ட வளங்களெல்லாம் அமைந்தபோதிலும் பயனில்லை நல்லரசு அமையாத நாட்டிற்கு) என்று சொல்லி முடிந்தது. அதே நடையில் இந்த அதிகாரமும் அரண் பல நல்ல இயல்புகளையுடையதேயெனினும் செயல்வகையில் திறமையற்றவர் கையில் அரண் பயனற்றதாகிவிடும் எனச் சொல்கிறது.

'வினைமாட்சி' என்பது என்ன?

'வினைமாட்சி' என்பது செயல்திறன் குறித்தது. இது செயல்வகையால் சிறப்புப் பெறுவது பற்றியது.
அதிகாரம் அரண் ஆதலால் அரண் தொடர்பான செயல்களான போர்த்தொழில், படைக்கருவிகளையும் பொறிகளையும் கையாளுதல் போன்றவற்றில் காட்டப்படும் திறன் பற்றியதாகிறது. வினைமாட்சி என்றது போர்மாட்சி மட்டுமல்லாமல் அரண் காக்கும் பிறவினைகளின் மாட்சியையும் உடன் சேர்த்தே ஆனது. போர்வீரர் மட்டுமல்லாது நல்லாள் போன்றொரும் வினை வல்லாராக இருக்கவேண்டும்.
காலிங்கர் 'வினைமாட்சியாவது பொழுதுதோறும் வேறுபடச் செய்யும் வினையின் மாட்சி' என்கிறார். இதன் பொருள் அரணின் பாதுகாப்புத் திறன் காலத்துக்கேற்ப மாறி வளர்ந்துகொண்டுபோகும் ஆதலால் செயல்திறன் அண்மைக்காலத்திற்குரிய போர்புரிவகை, தொழில்நுட்பம் இவற்றிற்கானதாக இருக்கவேண்டும்; காலத்துக்கு ஒத்த புத்தம் புது நிலைக்குக் கொணர்ந்து மேம்பட்டதாகவும் இருக்கவேண்டும்; மாறும் நிலைக்கு ஏற்ப, காவல் திறனும் மாறி வெல்ல வல்லதாக வேண்டும் என்பது.
கோட்டையிலுள்ள வினைசெய்வார் அனைவரும் செய்ய வேண்டியன செய்யாமலோ, அளவறியாது செய்தாலோ பொருந்தாதன செய்தாலோ அரண் பாதுகாப்பற்றதாகிவிடும். அரணின் சிறப்பிற்கு ஏற்ப, அதை இயக்கும் அனைத்து மாந்தரும் தத்தம்தொழிலில் திறம் மேம்பட்டவராக இருத்தல் வேண்டும்.

எத்துணை மேன்மையுடையதாய் இருந்தாலும் செயல்திறம் இல்லாதவரிடம் இருக்கும்போது பாதுகாப்பு இலது என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

போரறிவிலார் கையிலுள்ள அரண் அரண்அல்ல.

பொழிப்பு

மாட்சிகளால் எத்தனைச் சிறந்திருப்பினும் அவற்றை ஆளும் திறன் கொண்ட மாந்தர் இல்லாதபோது அரண் பாதுகாப்பற்றதுதான்.