இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0743



உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவுஅரண் என்றுரைக்கும் நூல்

(அதிகாரம்:அரண் குறள் எண்:743)

பொழிப்பு (மு வரதராசன்): உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

மணக்குடவர் உரை: உயர்ச்சியும், அகலமும், திண்மையும், கிட்டுதற்கு அருமையுமென்னும் இந்நான்கினது அமைதியுடையது மதிலாமென்று சொல்லுவர் நூலோர்.
திண்மையென்பது கல்லும் இட்டிகையும் இட்டுச் செய்தல்.

பரிமேலழகர் உரை: உயர்வு, அகலம், திண்மை, அருமை இந்நான்கின் அமைவு - உயர்ச்சியும், அகலமும், திண்மையும், அருமையும் என்று சொல்லப்பட்ட இந்நான்கின் மிகுதியையுடைய மதிலை; அரண் என்று உரைக்கும் நூல் - அரண் என்று சொல்லுவர் நூலோர்.
(அமைவு, நூல் என்பன ஆகுபெயர். உயர்வு - ஏணியெய்தாதது. அகலம் - புறத்தோர்க்கு அகழலாகா அடியகலமும், அகத்தோர்க்கு நின்று வினை செய்யலாம் தலையகலமும். திண்மை - கல் இட்டிகைகளாற் செய்தலின் குத்தப்படாமை. அருமை - பொறிகளான் அணுகுதற்கு அருமை. பொறிகளாவன, 'வளைவிற் பொறியும் அடியிற்செறி நிலையும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் துடக்கும் ஆண்டலை யடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெய ரூசியும் சென்றெறி சிரலும், பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் உழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் சூலமும்' ( சிலப்., அடைக் 207-216) என்றிவை முதலாயின)

தமிழண்ணல் உரை: நல்ல உயரமும் அகலமும் இடிக்கவியலாத திண்மையும் கிட்டுவதற்கு அருமையும் எனும் இவை நான்கும் அமைந்ததே மதில் அரண் என்று நூல்கள் விளக்கிக் கூறும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உயர்வு அகலம் திண்மை அருமை இந்நான்கின் அமைவு அரண் என்றுரைக்கும் நூல்.

பதவுரை: உயர்வு-உயர்ச்சி; அகலம்-அகன்ற தன்மை; திண்மை-வலிமை; அருமை-எய்தற்கருமை; இந்-இந்த; நான்கின்-நான்கினது; அமைவு-அமைதியுடையது; அரண்-மதில்; என்று-என்பதாக; உரைக்கும்-சொல்லும்; நூல்-நூலோர், இலக்கியம்.


உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயர்ச்சியும், அகலமும், திண்மையும், கிட்டுதற்கு அருமையுமென்னும் இந்நான்கினது அமைதியுடையது;
மணக்குடவர் குறிப்புரை: திண்மையென்பது கல்லும் இட்டிகையும் இட்டுச் செய்தல்.
பரிப்பெருமாள்: உயர்ச்சியும், அகலமும், திண்மையும், கிட்டுதற்கு அருமையுமென்னும் இந்நான்கினது அமைதியுடையது;
பரிப்பெருமாள் குறிப்புரை: அருமையாவது-முதலையும் கிடங்கும் அடியொட்டியும் முதலாயினவற்றால் கிட்டுதற்கு அருமை. அமைவு என்றது இதனின் மேல் செய்யப்படாது என்னும் அளவு உடைத்து ஆதல். திண்மை என்றது கல்லும் இட்டிகையும் இட்டுச் செய்தல். [அடியொட்டி - இது ஒருவகைக் கருவி]
பரிதி: உயர்ச்சியும், அகலமும், வலிக்கையும், கொள்ளுதற்கு அருமையும் பெற்றது; [வலிக்கை-வலிமை]
காலிங்கர்: நோக்குதற்கு அரிய உயர்வு உடைமையும் அதற்கு அரிய அகலம் உடைமையும், குத்துதற்கு அரிய திட்பம் உடைமையும், {எந்திரங்களான் 'அணுகுதற்கருமை'} வினையான் அருமை உடைமையும் என்னும் இந்நான்கினது முற்றுப்பேறு உடையது யாது;
பரிமேலழகர்: உயர்ச்சியும், அகலமும், திண்மையும், அருமையும் என்று சொல்லப்பட்ட இந்நான்கின் மிகுதியையுடைய மதிலை;
பரிமேலழகர் குறிப்புரை: அமைவு, நூல் என்பன ஆகுபெயர். உயர்வு - ஏணியெய்தாதது. அகலம் - புறத்தோர்க்கு அகழலாகா அடியகலமும், அகத்தோர்க்கு நின்று வினை செய்யலாம் தலையகலமும். திண்மை - கல் இட்டிகைகளாற் செய்தலின் குத்தப்படாமை. அருமை - பொறிகளான் அணுகுதற்கு அருமை. பொறிகளாவன, 'வளைவிற் பொறியும் அடியிற்செறி நிலையும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் துடக்கும் ஆண்டலை யடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெய ரூசியும் சென்றெறி சிரலும், பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் உழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் சூலமும்' ( சிலப., அடைக் 207-216) என்றிவை முதலாயின. [தலை - மதில் மேற்புறம்;. விற்பொறி-எந்திரவில்; ஊகம்-கருங்குரங்கு. குழிசி-பானை; தொடக்கு-சங்கிலி; ஆண்டலைப் புள் -ஒருவகைப் பறவை; புதை-அம்புக்கட்டு]

'உயர்ச்சியும், அகலமும், திண்மையும், கிட்டுதற்கு அருமையுமென்னும் இந்நான்கினது அமைதியுடையது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயரம் அகலம் உறுதி அருமை நான்கும் அமைந்ததே', 'உயரம், அகலம், திண்மை, நெருங்குவதற்கு அருமை ஆகிய இந்நான்கும் அமைந்தது', 'உயரமும் அகலமும் உறுதியும் (தந்திரமான எந்திர) அருமைகளும் ஆகிய இந்த நான்கின் சேர்க்கை', 'உயர்வும், அகலமும், வலிமையும், நெருங்குதற்கு அருமையும் ஆய இந் நான்கினையும் பொருந்தியுள்ள மதிலை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உயர்வு, அகலம், உறுதி, நெருங்குதற்கு அருமை இவை நான்கும் அமைந்தது என்பது இப்பகுதியின் பொருள்.

அரண் என்றுரைக்கும் நூல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மதிலாமென்று சொல்லுவர் நூலோர்.
பரிப்பெருமாள்: மதிலாமென்று சொல்லுவர் நூலோர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அரண் செய்யும் ஆறு கூறிற்று.
பரிதி: மலையரண் என்றவாறு.
காலிங்கர்: மற்று அதுவே அரண் ஆவது என்றவாறு.
பரிமேலழகர்: அரண் என்று சொல்லுவர் நூலோர்.

'அரண் என்று சொல்லுவர் நூலோர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரண் என்று நூல் கூறும்', 'அரண் என்று நூலோர் கூறுவர்', 'கோட்டையின் கட்டிடம் என்று நூல்கள் சொல்லும்', 'சிறந்த அரண் (காப்பு) என்று காப்பு நூல் கூறும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அரண் என்று நூல்கள் கூறும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உயர்வு, அகலம், வலிமை, நெருங்குதற்கு அருமை இவை நான்கும் அமைந்தது அரண் என்று நூல்கள் கூறும் என்பது பாடலின் பொருள்.
'அமைவு' குறிப்பது என்ன?

செயற்கையில் எழுப்பப்படும் பாதுகாவலான மதில்.

உயர்வு, அகலம், உறுதி, அணுகுவதற்கு அருமை ஆகிய இந்நான்கும் சிறப்பாக அமைந்ததே அரண் என்று நூல்கள் கூறும்.
இங்குச் சொல்லப்பட்டுள்ள நான்கையும் பொருந்தியுள்ள தன்மையை பாதுகாவல் என்று சொல்லும் அரசியல் நூல்கள். இப்பாதுகாவல் மதில் என அழைக்கப்படுவது. மதில் பலமான உட்காப்பும், புறக்காப்புங் கொண்டதாயிருக்கவேண்டும் என்று சொல்கிறது இப்பாடல். மதிலின் களஅளவுகள் என்ன என்ன தன்மையில் இருக்க வேண்டும் என்பதையும் பகைவரிடமிருந்து தடுத்துக் காத்தற்குரிய பொறிகள் பொருந்தியதாகவும் இருக்க வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது; மதிலின் வெளிப்படை அளவுகளைக் குறிக்கும் உயரம் அகலம், ஆழம் (கனம்) என்ற உருவளவைகளையும், அணுகமுடியாத அருமையையும் பேசுகிறது

உயர்வு:
மதிலின் உயர்வைச் சொல்வது. பகைவர் ஏறிக் கடத்தற்கு அரியாதாக நெடிதுயர்ந்த தன்மையதாக இருக்கவேண்டும். நோக்குதற்கு அரிய உயர்வாக இருந்து ஏணிவைத்து அல்லது உடும்பைப் போட்டு ஏறமுடியாதயளவு உயரமாக இருக்கும்.
இன்று, இந்நாளைய போர்க்கலைக்கு ஏற்ப உயர்வு அகலங்கள் வேண்டுமாதலால், விமானங்களை எய்வதற்கு ஏதுவாகக் கருவிகள் அமைந்த நிலையே உயரமாகும்.

அகலம்:
மதிலின் அடிப்பாகம் அகன்றிருத்தல் அகலம் எனப்படுகிறது; பரப்பு என்றும் சொல்வர்; கோட்டை முழுவதற்கான அகலம் எனக் கொள்ளலாம். 'புறத்தோர்க்கு அகழலாகா அடியகலமும், அகத்தோர்க்கு நின்று வினை செய்யலாம் தலையகலமும்' என விளக்கம் தருகின்றார் பரிமேலழகர். 'உயரத்துக்கு உரிய அகலமும்' என்கிற காலிங்கரது உரை. மேலே போர்ப்படைகளை வைத்துப் போர் செய்யவும் படைவாகனங்களை செலுத்தவும் போதிய அகலம் இருக்க வேண்டும்.

திண்மை:
திண்மை உறுதியைக் குறிக்கும் சொல்; மதிலின் ஆழத்தை அதாவது கனத்தைச் சொல்வது; திண்ணியதாய் இருத்தலே அதன் சிறப்பியல்பு. திண்மை என்பதை 'குத்துதற்கு அரிய திட்பம் உடையது' என்று காலிங்கர் பொதுநிலையில் விளக்குகின்றார். பகைவரின் படைகள் துளைக்கமுடியாதபடி திண்மையாயிருக்க வேண்டும்.

அருமை:
பல்வகை பொறி அமைக்கப்பட்டுள்ளதால் மதிலை நெருங்க முடியாத அருமையைச் சொல்கிறது. அரணின் நோக்கமே இதுதான். பகைவர் உள்ளே புகுதல் முடியாதபடி உள்ள பாதுகாவல். அவ்வவ் காலத்திலுள்ள போர்க்கலைக்கு ஏற்ப காவலமைப்புகள் மாறும் ஆதலால் அடிப்படை நோக்கத்தினை மட்டும் அருமை என்ற ஒரே சொல்லில் கூறப்பட்டது.

இப்பாடல் மதிலரணின் சிறப்புக் கூறுகிறது. அரண் என்பது, நெடிதுயர்ந்து இருத்தல் வேண்டும்; அகலமானதாக அதாவது பரந்ததாய் இருத்தல் வேண்டும்; எளிதில் அழிக்கவோ முடியாதவகையில் உறுதியாகக் கட்டப்பட்டதாக இருத்தல் வேண்டும்; பகைவரைத் தாக்கும் கருவிகள் அமைக்கப்பெற்று, படைவீரர்களுடன் நிறுத்தப்பெற்றிருப்பதால் அதை நெருங்குதல் அருமையுடையதாக இருத்தல் வேண்டும் எனச் சொல்லப்பட்டது.
'பரிமேலழகர் இந் நான்கு தன்மைகளுமுடைய மதில் என்று கூறியுள்ளார். ‘மதில்’ என்று கூறுவதற்குக் குறளில் சொல்லில்லை. ஆயினும், இந் நான்கு இயல்புகளும் மதிலுக்குத்தான் உரியன என்று கருதி, ‘அமைவு’ என்பதை ஆகுபெயராய்க் கொண்டு, மதில் என்று கூறிவிட்டார்' எனப் பரிமேலழகர் உரையை மறுத்து 'உயர்வை மலைக்கும், அகலத்தை ‘மண்’ காடு ஆகியவற்றிற்கும், திண்மையை மலை காடுகட்கும், அருமையை நான்கிற்கும் கொள்ளலாம்' என அரணுக்கு வேறுவகையில் விளக்கம் தருகிறார் சி இலக்குவனார்.

'அமைவு' குறிப்பது என்ன?

'அமைவு' என்றதற்கு அமைதியுடையது, பெற்றது, முற்றுப்பேறு உடையது, மிகுதியையுடைய மதில், அமைந்திருப்பதே, மதில், அமைதியுடைய கோட்டை, அமைந்ததே, உடையதாய் அமைவது, சேர்க்கை, உடையது, பொருந்தியதே, பொருந்தியுள்ள மதில், அமையப் பெற்றது என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

இதனைப் பரிப்பெருமாள், 'அமைவு என்றது இதனின் மேல் செய்யப்படாது என்னும் அளவு உடைத்து ஆதல்' என்று சிறப்பாக விளக்குகின்றார். எவ்வளவு வேண்டுமோ, அவ்வளவும் இருத்தல்வேண்டும் என்கிறார் இவர்.
இக்குறளில் எந்தத் தன்மைக்கும் அடை சேர்த்துச் சொல்லப்படவில்லை. இக்குறட்பாவின் பொருள் உயர்வு அகலம் திண்மை அருமை ஆகிய நான்கின் அமைவே அதாவது நிறைவே அரண் என்பதாம்.
'இக்குறளிற் கூறிய இலக்கணங்கள் செயற்கையரண், இயற்கையரண் என்ற இருவகை அரண்களுக்கும் கொள்ளும் பொதுநடையில் அமைந்துள்ளன' என்பார் இரா சாரங்கபாணி.

'அமைவு' என்ற சொல் அமைந்திருப்பது என்ற பொருள் தரும்.

உயர்வு, அகலம், வலிமை, நெருங்குதற்கு அருமை இவை நான்கும் அமைந்தது அரண் என்று நூல்கள் கூறும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மதில் அமைப்பே அரண்.

பொழிப்பு

உயரம், அகலம், திண்மை, நெருங்குவதற்கு அருமை இவை நான்கும் அமைந்தது அரண் என்று நூல்கள் கூறும்.