இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0744



சிறுகாப்பின் பேரிடத்தது ஆகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்

(அதிகாரம்:அரண் குறள் எண்:744)

பொழிப்பு (மு வரதராசன்): காக்கவேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்து வந்த பகைவருடைய ஊக்கத்தை அழிக்கவல்லது அரண் ஆகும்.

மணக்குடவர் உரை: காக்கவேண்டும் இடம் சிறிதாய், மதிலகம் பெரிய இடத்தையுடைத்தாய், மதிலையுற்ற பகைவரது மிகுதியைக் கெடுப்பது அரணாவது.
சிறு காவலாவது ஒருபக்கம் மலையாயினும் நீராயினும் உடைத்தாதல்.

பரிமேலழகர் உரை: சிறுகாப்பின் பேர் இடத்தது ஆகி - காக்க வேண்டும் இடம் சிறிதாய் அகன்ற இடத்தை உடைத்தாய்; உறு பகை ஊக்கம் அழிப்பது அரண் - தன்னை வந்து முற்றிய பகைவரது மன எழுச்சியைக் கெடுப்பதே அரணாவது.
(வாயிலும் வழியும் ஒழிந்த இடங்கள் மலை, காடு, நீர்நிலை என்றிவற்றுள் ஏற்பன உடைத்தாதல் பற்றி 'சிறுகாப்பின்' என்றும்,அகத்தோர் நலிவின்றியிருத்தல் பற்றி, 'பேரிடத்தது ஆகி' என்றும், தன் வலி நோக்கி 'இது பொழுதே அழித்தும்' என்று வரும் பகைவர் வநது கண்டால், அவ்வூக்கமொழிதல் பற்றி, 'ஊக்கம் அழிப்பது' என்றும் கூறினார்.)

வ சுப மாணிக்கம் உரை: காக்கும் அளவு சிறிதாய் இடம்பெரிதாய்ப் பகைவரின் எழுச்சியை மழுக்குவதே அரண்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சிறுகாப்பின் பேரிடத்தது ஆகி உறுபகை ஊக்கம் அழிப்பது அரண்.

பதவுரை: சிறு-சிறியதான; காப்பின்-பாதுகாப்போடு; பேர்-பெரியதாகிய; இடத்தது-இடத்தை உடையதாய்; ஆகி-ஆய்; உறு-வந்து முற்றிய; பகை-பகை; ஊக்கம்-மனவெழுச்சி; அழிப்பது-கெடுப்பது; அரண்-கோட்டை.


சிறுகாப்பின் பேரிடத்தது ஆகி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காக்கவேண்டும் இடம் சிறிதாய், மதிலகம் பெரிய இடத்தையுடைத்தாய்;
மணக்குடவர் குறிப்புரை: சிறு காவலாவது ஒருபக்கம் மலையாயினும் நீராயினும் உடைத்தாதல்.
பரிப்பெருமாள்: காக்கவேண்டும் இடம் சிறிதாய், மதிலகம் பெரிய இடத்தையுடைத்தாய்;
பரிப்பெருமாள் குறிப்புரை: சிறு காவலாவது ஒருபக்கம் மலையாயினும் காடாயினும் நீராயினும் உடைத்தாதல்.
பரிதி: உள்ளிடம் உள்ளதாய் வாசல் சிறிதாகி;
காலிங்கர்: சிறு படையால் காக்கும் காப்பு அமைவு உடைத்துமாய், அகத்து வாழ்வோர்க்குப் பெரிதும் இடப்பாடு உடைத்துமாய்;
பரிமேலழகர்: காக்க வேண்டும் இடம் சிறிதாய் அகன்ற இடத்தை உடைத்தாய்;

'காக்கவேண்டும் இடம் சிறிதாய், மதில் அகம் பெரிய இடத்தையுடைத்தாய்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காக்குமிடம் சிறிதாய்ப் பரந்த இடத்தையுடையதாய்', 'காவல் புரிய வேண்டிய இடம் குறுகலாகவும் உள்ளே அகன்ற இடமுள்ளதாகவும்', 'பெரிய இடத்தை உள்ளடக்கி எதிரியை நின்று தடுத்தற்குரிய இடம் சிறியதாய்', 'குறைந்த காவலுக்கு உரியதாய் அகன்ற இடத்தினை உடையதாய்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நுழைவிடக் காப்பு சிறியதாயும் உள்ளே பெரிய இடத்தினை உடையதாய் என்பது இப்பகுதியின் பொருள்.

உறுபகை ஊக்கம் அழிப்பது அரண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மதிலையுற்ற பகைவரது மிகுதியைக் கெடுப்பது அரணாவது.
பரிப்பெருமாள்: மதிலையுற்ற பகைவரது மிகுதியைக் கெடுப்பது அரணாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இடம் பெரிதாகவும் காவல் சிறிதாகவும் வேண்டும் என்றது.
பரிதி: பகையை வெல்விப்பது அரண் என்றவாறு.
காலிங்கர்: புறத்துப் பகையினது உள்ளக் கோட்பாட்டினை ஒருங்கு அழிப்பது யாது; மற்று அதுவே அரணாவது என்றவாறு.
பரிமேலழகர்: தன்னை வந்து முற்றிய பகைவரது மன எழுச்சியைக் கெடுப்பதே அரணாவது.
பரிமேலழகர் குறிப்புரை: வாயிலும் வழியும் ஒழிந்த இடங்கள் மலை, காடு, நீர்நிலை என்றிவற்றுள் ஏற்பன உடைத்தாதல் பற்றி 'சிறுகாப்பின்' என்றும்,அகத்தோர் நலிவின்றியிருத்தல் பற்றி, 'பேரிடத்தது ஆகி' என்றும், தன் வலி நோக்கி 'இது பொழுதே அழித்தும்' என்று வரும் பகைவர் வநது கண்டால், அவ்வூக்கமொழிதல் பற்றி, 'ஊக்கம் அழிப்பது' என்றும் கூறினார்.

'உற்ற பகைவரது ஊக்கத்தைக் கெடுப்பது அரணாவது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சூழ்ந்து தாக்கவரும் பெரும்பகைவரது மன எழுச்சியைக் கெடுப்பதே அரண்', 'கிட்டி வருகின்ற பகைவர்கள் கோட்டையைப் பற்றிக் கொள்ளச் செய்கின்ற முயற்சிகளையெல்லாம் கெடுத்துவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும் கோட்டை', 'நெருங்கி,ய பகைவரது ஊக்கத்தை அழிப்பதாய் உள்ளதே அரண் ஆகும்', 'முற்றுகையிட அடையும் படையின் மன எழுச்சியைக் கெடுப்பதே அரணாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

முற்றுகையிட வரும் பகைவரின் ஊக்கத்தை அழிப்பதாய் உள்ளதே அரணாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நுழைவிடக் காப்பு சிறியதாயும் உள்ளே பெரிய இடத்தினை உடையதாய் முற்றுகையிட வரும் பகைவரின் ஊக்கத்தை அழிப்பதாய் உள்ளதே அரணாகும் என்பது பாடலின் பொருள்.
'ஊக்கம் அழிப்பது' குறிப்பது என்ன?

சிறிய நுழைவில் வந்த பகைவரைத் திகைக்கச் செய்யும் அளவில் பெரிய உள்ளிடம் இருப்பது அரண்.

பகையைத் தடுத்து நிறுத்தற்குரிய இடம் சிறியதாயும் உள்ளே பெரிய இடத்தினை உடையதாய் முற்றுகையிட வரும் படையின் எழுச்சியைக் கெடுக்க வல்லது அரணாகும்.
சிறுவாயில், பெரிய உள்இடம் கொண்டு பகைஅழிக்கும் அரணின் மாட்சியை உணர்த்துகின்ற பாடல். அரண்காவல் எவ்வளவு மிகுதியாக இருக்க முடியுமோ அவ்வளவும் இருத்தல் வேண்டும் என்கிறது இது. சிறுகாப்பு என்பது கோட்டை மதிலிடத்துள்ள கதவினை உடைய வாயில்களைக் குறிப்பது. கோட்டையின் வளைவு பெரிய இடத்தை அகப்படுத்தி இருப்பினும் மதிலிடத்துள்ள கதவினை உடைய வாயில்கள் சிலவாகவும், விரிவின்றியும் இருக்கும்; சிலரே இருந்து காப்பதற்கு ஏற்றதாய் இருப்பதால் அது சிறுகாப்பு எனப்பட்டது. மதில் அகலம் பேரிடத்தது; இது கோட்டைக்குள்ளே இடம் பெரிது என்பதைச் சொல்கிறது. பெரிது என்றது வீரர்கள் எண்ணிக்கையும் படைக்கலங்களும் மிகையாக இருக்கும் என்பதை உணர்த்துவது. வாயில் தாண்டி உட்புகுந்த பகைவர் பெரிய இடத்தையும் அங்கிருக்கும் அகத்தார் விரைந்து தாக்குவதையும் கண்டு மிரள்வர் என்கிறது பாடல்.
தெ பொ மீனாட்சிசுந்தரம் 'இங்குக் கூறிய காவல், போர் நோக்கிய காவல் மட்டுமே அன்று. பொருளாதாரக் காவலும், அத்தகையதாதல் வேண்டும். சுங்கம் வாங்கும்போது, பிற மக்கள் ஏமாற்றி உட்புகுந்து வெளிவருவார்களானால், அத்தகைய காவலால் யாது பயன்?' எனக் கூடுதல் விளக்கம் தருகிறார். சிறிய அளவிலான முயற்சி கொண்டே பெரும் இடத்தைக் காத்துத் தடுப்புக் காவலில் வெற்றி அடையும் மதில் திறன் பாடப்பெற்றது.
பெரிய பரப்பிலான இடம் சிறிய அளவினான காவலர்கள் கொண்டு அல்லது சிறுபடையால் காக்கக்கூடியதாதல் வேண்டும் என்றும் இக்குறளை விளக்குவர்.

'ஊக்கம் அழிப்பது' குறிப்பது என்ன?

'ஊக்கம் அழிப்பது' என்ற தொடர்க்கு மிகுதியைக் கெடுப்பது, வெல்விப்பது, உள்ளக் கோட்பாட்டினை ஒருங்கு அழிப்பது, மன எழுச்சியைக் கெடுப்பது, ஊக்கத்தை அழிக்கவல்லது, மனச்சந்தோஷத்தைக் கெடுக்கவல்லது, எழுச்சியை மழுக்குவது, முயற்சிகளையெல்லாம் கெடுத்துவிடக் கூடியது, மன உறுதியைத் தகர்க்க வல்லது, முறியடித்துத் தளரச்செய்வது என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

பகைகொண்டு தாக்கவரும் மாற்றார் படைகள் மிகுந்த செருக்குடன் இப்பொழுதே மிக எளிதில் இம்மதிலை வெல்லலாம் என்று சிறுவாயிலில் நுழைவர். ஆனால் உள்ளே இருக்கும் பெரும் இடத்தையும் அங்குள்ள படைவீரர்களையும் படைக்கலங்களங்களையும் கண்டபின் மலைத்துப்போவர். அவர்களுது மன உறுதி தளர்ந்து போய்விடும். 'இந்தக் கோட்டையை முறியடிக்க நம்மால் முடியாது' என்ற எண்ணத்திற்கு வந்துவிடுவர். இவ்வாறு பகைவரைத் திகைப்பு உணர்ச்சியில் ஆழ்த்தித் திணற அடிப்பதை 'ஊக்கம் அழிப்பது' என்கிறது இக்குறள்.

'ஊக்கம் அழிப்பது' மன உறுதியை இழக்கச் செய்வது குறித்தது.

பகையைத் தடுத்து நிறுத்தற்குரிய இடம் சிறியதாயும் உள்ளே பெரிய இடத்தினை உடையதாய் முற்றுகையிட வரும் படையின் ஊக்கத்தை அழிப்பதாய் உள்ளதே அரணாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பகைவர்க்கு வியப்பூட்டும்படி வடிவமைக்கப்படுவது அரண்.

பொழிப்பு

காக்குமிடம் சிறிதாய் உள்ளே அகன்ற இடத்தையுடையதாய் உள்நுழைந்த பகையின் ஊக்கத்தை அழிப்பது அரண்.