இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0747



முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண்

(அதிகாரம்:அரண் குறள் எண்:747)

பொழிப்பு (மு வரதராசன்): முற்றுகையிட்டும், முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.

மணக்குடவர் உரை: சூழவிட்டும், சூழவிடாதே ஒருபக்கமாகப் போர் செய்தும், அரணிலுள்ளாரைக் கீழறுத்தும் இம்மூன்றினாலும் கொள்ளுதற்கு அரியது அரணாவது.

பரிமேலழகர் உரை: முற்றியும் - புகலொடு போக்கு ஒழியும் வகை நெருங்கிச் சூழ்ந்தும்; முற்றாது எறிந்தும் - அங்ஙனம் சூழாது நெகிழ்ந்த இடன் நோக்கி ஒருமுகமாகப் பொருதும்; அறைப்படுத்தும் - அகத்தோரை அவர் தெளிந்தோரை விட்டுக் கீழறுத்துத் திறப்பித்தும்; பற்றற்கு அரியது அரண் - புறத்தோரால் கொள்ளுதற்கு அரியதே அரணாவது.
(இம் மூன்று உபாயத்துள்ளும் முதலாவது எல்லாப் பொருளும்உடைமையானும், ஏனைய நல்லாளுடைமையானும் வாயாவாயின.)

வ சுப மாணிக்கம் உரை: வளைந்தோ திடீரெனத் தாக்கியோ வஞ்சித்தோ பிடிக்க முடியாதது அரண்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும் பற்றற்கு அரியது அரண்.

பதவுரை: முற்றியும்-முற்றுகையிட்டும், சூழ்ந்தும்; முற்றாது-சூழாமல், வளைத்துக் கொள்ளாமல்; எறிந்தும்-போர் செய்தும்; அறைப்படுத்தும்-கீழறுத்தும், வஞ்சித்தும்; பற்றற்கு-கொள்ளுதற்கு; அரியது-பெறமுடியாதது; அரண்-கோட்டை.


முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சூழவிட்டும், சூழவிடாதே ஒருபக்கமாகப் போர் செய்தும், அரணிலுள்ளாரைக் கீழறுத்தும்;
பரிப்பெருமாள்: சூழவிட்டும், சூழவிடாதே ஒருபக்கம் முறிய எறிந்தும், அரணுள்ளாரைக் கீழறுத்தும்;
பரிதி: சூழ்ந்தும் சூழாது எறிந்தும் வஞ்சித்தும்;
காலிங்கர்: கொற்றவேந்தர் புறம் கோலிக்கொண்டும், அங்ஙனம் கோலிக்கொண்டிராது புறத்து நின்று பொருதும், சென்று குத்தியும், அறைப்படுத்தும் [கோலிக்கொண்டு-வளைத்துக் கொண்டு; அறைப்படுத்தும்-ஊடறுத்தும்]
பரிமேலழகர்: புகலொடு போக்கு ஒழியும் வகை நெருங்கிச் சூழ்ந்தும், அங்ஙனம் சூழாது நெகிழ்ந்த இடன் நோக்கி ஒருமுகமாகப் பொருதும், அகத்தோரை அவர் தெளிந்தோரை விட்டுக் கீழறுத்துத் திறப்பித்தும்;

'சூழ்ந்தும், சூழாது வளைத்துக் கொண்டு போர்செய்தும், வஞ்சித்தும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரணைச் சூழ்ந்தும் சூழாது தாக்கியும் வஞ்சனை செய்தும்', 'பகைவர்கள் வந்து முற்றுகையிட்டாலும் நெருங்கி வந்து முற்றுகையில் வெற்றி பெற முடியாதபடி அவர்களை (உள்ளிருக்கிறவர்கள்) ஓடும்படி செய்யவும் (உள்ளிருக்கிறவர்கள் எங்கிருந்து ஆயுதப் பிரயோகம் செய்கிறார்கள் என்பதை முற்றுகையிட்டவர்கள் அறிய முடியாதபடி) மறைக்கக் கூடியதுமாக', 'பகைவர் முற்றுகையிட்டுச் சூழ்ந்தும், அங்ஙனம் இன்றி ஒருமுகமாகப் போர் புரிந்தும் வஞ்சனையால் கீழறையுண்டாக்கியும்', 'முற்றுகையிட்டும், முற்றுகையிடாது திடீர் எனத் தாக்கியும், ஐந்தாம் படை வேலை செய்தும் (காட்டிக் கொடுப்போரைப் பயன்படுத்தியும்)' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சூழ்ந்தும், சூழாது தாக்கியும், வஞ்சனை செய்தும் என்பது இப்பகுதியின் பொருள்.

பற்றற்கு அரியது அரண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இம்மூன்றினாலும் கொள்ளுதற்கு அரியது அரணாவது.
பரிப்பெருமாள்: இம்மூன்றினாலும் கொள்ளுதற்கு அரியது அரணாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: அரண் கொள்வார்க்கு உபாயம் இம்மூன்று அல்லது இல்லை; இம்மூன்றினாலும் கொள்ளப்படாமை வேண்டும் என்றது.
பரிதி: பகைவரால் கொள்ளுதற்கு அரியது அரண் என்றவாறு.
காலிங்கர்: அதனைப் பற்றுவேம் என்று முயன்றாலும் பற்றுதற்கு அரியது யாது; மற்று அதுவே அரணாவது என்றவாறு.
பரிமேலழகர்: புறத்தோரால் கொள்ளுதற்கு அரியதே அரணாவது.
பரிமேலழகர் குறிப்புரை: இம் மூன்று உபாயத்துள்ளும் முதலாவது எல்லாப் பொருளும்உடைமையானும், ஏனைய நலலாளுடைமையானும் வாயாவாயின.

'இம்மூன்றினாலும் கொள்ளுதற்கு அரியது அரணாவது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவரால் கைப்பற்ற முடியாத அருமையுடையது அரண் ஆகும்', 'பகைவர்களால் வசப்படுத்த முடியாத உபாயங்கள் உள்ளதே கோட்டை என்பது', 'கைக்கொள்ளுவதற்கு முடியாதது அரணாகும்', 'பகைவரால் கொள்ளுதற்கு அரியது அரண்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பகைவரால் கைக்கொள்ளுதற்கு முடியாதது அரண் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சூழ்ந்தும், சூழாது தாக்கியும் அறைப்படுத்தும் பகைவரால் கைக்கொள்ளுதற்கு முடியாதது அரண் என்பது பாடலின் பொருள்.
'அறைப்படுத்தும்' என்றால் என்ன?

எவ்வகையானும் பிடித்தற்கரியதாக இருப்பது அரண்.

முற்றுகையிட்டும், மறைந்திருந்து தாக்கியும், அகத்தோர் உதவியுடனான வஞ்சனைகளாலும் பற்றற்கரியதாக அரண் அமையவேண்டும்.

முற்றியும்:
கோட்டைக்குள் செல்லவும் கோட்டையிலிருந்து வெளியில் வரவும் முடியாதவாறு முற்றுகையிடுவதைக் குறிப்பது இது. இதை அறப்போர் அல்லது நேர் தாக்குதற் போர் என அழைக்கிறார் தெ பொ மீனாட்சிசுந்தரம் (தெ பொ மீ). நேரே பகைவர் மேல் ஏறிப் பாய்ந்து பணியும்வரை தாக்குவது. இம்முற்றுகை பலநாள் நீடிக்கலாம். எல்லாப் பொருளும் இருக்குமேல் பலநாள் முற்றுகையும் பயன்தராது.
முற்றாது எறிந்தும்:
சூழ்ந்து முற்றுகையிடாது, உள்ளிருப்போரின் சோர்வு பார்த்துத் திடுமென கோட்டையுள் புகுந்து போரிடுவது. ஆயின் எந்த நேரத்திலும் போரிடும் வீரர்களிருப்பரேல், திடீர்த்தாக்குதலும் வீணாகும்.
இதைத் 'தாக்குதலின்றி எதிரியை அழியவிடு போர்' என்பார் தெ பொ மீ. ; இவ்வளவு காலம் எதிரி ஈடு கொடுக்க முடியும்' என்று கண்டு வளைந்து சுற்றி நின்று எதிரியை ஓர் எல்லைக்குள் ஒடுக்கி உணவு முதலியவற்றிற்கு அலையவிட்டு வெல்வது இது என்று வேறுவகையான ஓர் விளக்கம் தருவார் இவர்.
அறைப்படுத்தும்:
மூன்றாவது வஞ்சப்போர் (தெ பொ மீ). ஐந்தாம் படைகள் இத்தகைய வஞ்சப் போரிலேயே ஈடுபடுகின்றன. நாட்டுப்பற்றுள்ள நல்வீரர்கள் இருந்தால் காட்டிக்கொடுப்பவர்களின் சூழ்ச்சியால் பகைவரின் எண்ணம் நிறைவேறாது.

அரணின் அமைப்பாலும், அங்குள்ள போர் வீரங்களின் திறத்தாலும், எல்லாப் பொருள்களும் இருத்தலாலும் நேர்போர், மறைந்திருந்து போர், வஞ்சப்போர் எனும் இந்த மூன்றுவகையில் எதனைப் பின்பற்றியும் அரணைப் பகைவர் வெல்லமுடியாது. இத்தகைய முயற்சிகளை முறியடித்து உறுதியுடன் நிற்கவல்லதாக அமைந்ததே அரணாம்.

'அறைப்படுத்தும்' என்றால் என்ன?

'அறைப்படுத்தும்' என்பது வஞ்சனையால் வெல்ல முயல்வது. இது ஊடறுத்தும் எனவும் சொல்லப்படும். பல சமயங்களில் சூழ்ச்சியே வீரத்தினும் மேலோங்கி நிற்கும்; இப்போர் முறையில் வஞ்சனையே அன்றி வேறொன்றும் இல்லை. பகைநாட்டில் சிலரைத் தம் வயப்படுத்தி அவர் வழியே வெற்றியடைய முயல்வது இந்த வஞ்சப் போரேயாம். இச்சொல்லுக்கு 'அரணிலுள்ளாரைக் கீழறுத்தும்' என விளக்கம் அளிப்பார் மணக்குடவர், 'கீழறுத்துத் திறப்பித்தும் அதாவது அரணிலுள்ளோரை வஞ்சித்து மாறுபடுத்தியும்-நாட்டுப்பற்று நீங்குமாறு போதித்தும்' என்பார் பரிமேலழகர். இது ஐந்தாம்படை ஆக்குதல் என்று அறியப்படுவது.
பின்வந்த மற்ற பழைய ஆசிரியர்கள் 'உள்ளேயுள்ளவர்கட்கு இலஞ்சப் பரிசுகள் கொடுத்து தோற்கச் செய்யும் வஞ்சனை பண்ணியும்' என்றும் 'சுருங்கையறுத்துத் திறப்பித்தும்' என்றும் பொருள் கூறினர்.
வேறு சிலர் 'கீழேயுள்ள நுழைவாயிலைத் திறக்கச் செய்தல்' எனவும் 'பூமியிலே சுரங்கம் தோண்டி' எனவும் உரைத்தனர்.
நாமக்கல் இராமலிங்கம் 'அறைப்படுத்தும்' என்பதனை 'மறைப்படுத்தும்' எனப் பிரித்து மறைவிடங்களமைத்து அதாவது உள்ளிருக்கிறவர்களைப் பகைவர்கள் காணமுடியாதபடி அரண் மறைவிடங்கள் உள்ளதாக இருக்க வேண்டும் என உரை தந்தார்.

அறைப்படுத்தும் என்பது அரணில் உள்ள மக்களில் சிலரை எவ்வகையானும் வயப்படுத்தி நாட்டைக் காட்டிக் கொடுக்குமாறு செய்தலைக் குறிப்பது, அவர்கள் மூலம் மதிலின் கதவைத் திறக்கச் செய்தோ வேறுவகையிலோ உள்ளே புகுதல் ஒரு உத்தி. கோட்டையிலுள்ள மக்களெல்லோரும் நாட்டுப்பற்று மிக்கோராய் இருப்பார்களேயானால், அறைப்படுத்தும் வஞ்சனை தோல்வியுறும்.

சூழ்ந்தும், சூழாது தாக்கியும் வஞ்சனை செய்தும் பகைவரால் கைக்கொள்ளுதற்கு முடியாதது அரண் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

எவ்வகைப் போர் அணுகுமுறையாலும் வெல்ல முடியாதபடி அமைவது அரண்.

பொழிப்பு

வளைந்தோ சூழாதே தாக்கியோ வஞ்சித்தோ கைப்பற்ற முடியாதது அரண்.