ஆற்று பவர்க்கும் அரண்பொருள்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வலியுடையார்க்கும் அரணுடைமை பொருளாவது;
பரிப்பெருமாள்: வலி ஆற்றுவார்க்கும் அரண் பொருளாம்;
பரிப்பெருமாள் குறிப்புரை: வலி உடையோர்க்கும் ஒரு காலத்தே வேண்டுதலின் வேண்டும் என்றார்.
பரிதி: வீரர்க்கும் அரணே பொருள்;
காலிங்கர்: சோர மன்னரைப் போர் ஆற்றுபவர்க்கும் அரண் பொருள்; [சோரமன்னர்- திருட்டு அரசர்]
பரிமேலழகர்: மூவகை ஆற்றலுமுடையராய்ப் பிறர்மேற் செல்வார்க்கும் அரண் சிறந்தது; [மூவகை ஆற்றல்- தன்வலி, துணைவலி, படைவலி, ஆகிய மூவகையாற்றல்; அறிவு, ஆண்மை, பெருமை எனவும் கூறுவர்]
'வலியுடையார்க்கும்/வலி ஆற்றுவார்க்கும்/வீரர்க்கும்/போர் ஆற்றுபவர்க்கும்/மூவகை ஆற்றலுமுடையராய்ப் பிறர்மேற் செல்வார்க்கும் அரண் பொருள்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'போர்மேற் செல்வார்க்கும் மதில் வேண்டும்', 'பிறர்மேல் போர்புரியச் செல்பவர்க்கும் அரண் சிறந்தது', 'இன்னொரு நாட்டின் மீது படையெடுப்பவர்களுக்கும் கோட்டை அவசியமான பொருள்', 'பிறர் மேல் படையெடுத்துச் செல்வார்க்கும் தம் நாட்டுக் காப்பு இன்றியமையாதது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
போர்மேற் செல்வார்க்கும் அரண் மதிப்புமிக்க பொருளாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
அஞ்சித்தன் போற்று பவர்க்கும் பொருள்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காப்பார்க்கும் அரணுடைமை பொருளாவதாம்.
மணக்குடவர் குறிப்புரை: ஆதலால் அதனைச் செய்யவேண்டும்.
பரிப்பெருமாள்: வலிவு இன்மையான் அஞ்சித் தம்மைக் காப்பார்க்கும் அரண் பொருள்; ஆதலால் அதனைச் செய்யவேண்டும் என்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது. அரண் செய்யவேண்டும் என்றது.
பரிதி: பொருள் படைத்தார்க்கும் அரணே பொருள் என்றவாறு.
காலிங்கர்: இனி இங்ஙனம் போர் ஆற்றாது அஞ்சி அகம்புக்குத் தம்மைப் பேணிக்கொள்பவர்க்கும் அரண் பொருள்.
காலிங்கர் குறிப்புரை: ஆதலால் அதனை இகழ்தல் ஆகாது.
பரிமேலழகர்: அவையின்றித் தம்மேல் வருவார்க்கு அஞ்சித் தன்னையே அடைவார்க்கும் அரண் சிறந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: பிறர்மேல் செல்லுங்கால் உரிமை பொருள் முதலியவற்றைப் பிறனொருவன் வெளவாமல் வைத்துச் செல்ல வேண்டுமாகலானும், அப்பெருமை தொலைந்து இறுதி வந்துழிக் கடல் நடுவண் உடைகலத்தார் போன்று ஏமங்காணாது இறுவராகலானும், ஆற்றுபவர்க்கும் போற்றுபவர்க்கும் அரண் பொருளாயிற்று. ஆற்றல் உடையாராயினும் அரண் இல்வழி அழியும் பாலராகலின், அவரை முற்கூறினார். இதனான், அரணினது சிறப்புக் கூறப்பட்டது.
'பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காப்பார்க்கும் அரணுடைமை பொருளாவது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் தன் போற்றுபவர் என்றதற்கு தன்னை (அரணை) அடைவார் எனப் பொருள் கூறினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அஞ்சித் தற்காப்பவர்க்கும் அது வேண்டும்', 'பகைவர்க்கு அஞ்சித் தம்மைக் காத்துக் கொள்பவர்க்கும் அரண் சிறந்தது', 'இன்னொருவர் படையெடுத்து வந்துவிட்டால் அதற்கஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியவர்களுக்கும் அது அவசியமான பொருள்', 'பிறர் படையெடுத்து வருங்கால் தம்மைக் காத்துக்கொள்பவர்க்கும் காப்பு இன்றியமையாதது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அஞ்சித் தற்காப்பவர்க்கும் அது இன்றியமையாதது என்பது இப்பகுதியின் பொருள்.
|