நாடு என்ற சொல்லுக்கு விரும்பு என்ற பொருளும் உண்டு. மக்கள் விரும்பி வாழுமிடம் என்றதால் அது நாடு எனப்பட்டது போலும் (சி இலக்குவனார்). ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சட்டங்களை அமைத்துக்கொண்டு, பாதுகாவல், நீதி நிர்வாகம், நிதி மேலாண்மை போன்ற தேவையான நிறுவனங்களை அமைத்துக் கட்டுப்பாடுடன் வாழ்ந்து, வளர்ந்து, வளம் பெறும் மக்களைக் கொண்ட அமைப்பு நாடு என்று அழைக்கப்படும். அதற்கு ஒரு தலைவன் இருக்க வேண்டும்.
மக்களின் வாழ்வியல் நாட்டில் நடைபெறுவதால் நாட்டின் இயல்புணர்த்தும் அதிகாரமாக உள்ளது இது. நாடு என்று இவ்வதிகாரத்துப் பெயர் இருந்தாலும் இயற்கை அமைவுகள் மட்டுமின்றி நாட்டில் வாழும் மக்களின் இயல்புகளும் எடுத்துக் கூறப்பெறுகின்றன.
நாடு என்பதை நாடு ௭ன்றும் தேசம் (......எண்ணிய தேயத்துச் சென்று (753)) என்றும், உலகம் என்றும் வள்ளுவர் குறளில் குறிப்பிடுவார்.
நாடானது காடுகொன்று விரும்பி உண்டாக்கப்படலாம் அல்லது அது இயல்பாய் அமைந்ததாகவும் இருக்கலாம். இயற்கையாய் உள்ளது காடு. செயற்கையால் உண்டாவது நாடு. பேரிருளாய்க் கடுமையாய் அஞ்சத்தக்கது காடு; நாடவிளைவது நாடு.
ஒரு நாட்டில் 'இவை இவை இருக்கவேண்டும்' என உடன்பாட்டு முறையாகவும் 'இவை இவை இருத்தலாகாது' என்று எதிர்மறை முறையாகவும் இவ்வதிகாரம் தெளிவுபடுத்துகின்றது.
விளைநிலமும், எண்ணெய், கனிமம் முதலியன தருகிற சுரங்கமும், பிற மூலப் பொருள்களும் என்றிவை எல்லாம் அடங்கியதே இயற்கை வளங்களாம். இவை மனிதனது முயற்சியின்றி இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களாகும். அவற்றைப் பயன்படுத்தித்தான் விளைவு உண்டாக்கப்படுகிறது; விளைவுகளால் செல்வம் உருவாக்கப்படுகிறது. அச்செல்வம் உயிர்களின் உடல்நலம் பேணவும் இன்பநலனுக்கும் பயன்படுத்தப்படும். இவையெல்லாம் ஒழுங்குற நடைபெற நல்ல பாதுகாவல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டில் நல்லாட்சி அமையவேண்டும்.
ஒரு பரந்த நிலப்பரப்பில் உள்ள மக்கள் பெருமையும், பாதுகாப்பும் கொண்டு, இணைந்து வாழ்வது நாடு எனப்படும். அது இப்படி இருக்கவேண்டும் என வள்ளுவர் சொல்லுகிறார்:
குறையாது விளைவிக்கும் உழவர்களும், நடுநிலையாளர்களும், சோர்விலாத வணிகரும் கூடிப் பொருந்தியுள்ள இடமே நாடாகும்;
நாட்டுப் பற்று கொண்ட மக்கள் என்ன சுமை வந்தாலும் அரசு கேட்கும் வரியைக் கொடுக்கத் தயங்கமாட்டார்கள்;
பெரும்பொருள் கொண்டு, கெடுதி குறைந்த நாடு எனப் பெயர்பெற்று பலரால் விரும்பப்படுவது நாடு;
அங்கு பசி, பிணி, பகை இல்லை;
ஒன்றுக்கொன்று பகைத்திருக்கும் குழுக்கள், உட்பகை, அரசை அலைக்கழிக்கும் கொலைக்கும்பல் இவற்றைக் காணமுடியாது;
என்ன கேடு நேர்ந்தாலும் உடன் சீரமைப்புச் செய்துகொள்ளும் அமைப்பு கொண்டது அது;
நீர்வளம், மலைவளம், வல்லரண் இவற்றை வழங்கி இயற்கை அருள் செய்யும் இடம் அது;
நோயறியா, செல்வம், விளைச்சல் மிகுந்த, கேளிக்கைகள் நிறைந்த, நல்ல காவல் பொருந்திய உலகம் அது;
பிற நாட்டைச் சாராமல் தன் தேவைகளை நிறைவு செய்துகொள்ளும் அந்நாடு;
செம்மையான அரசமைப்பு கொண்டது.