பொறையொருங்கு மேல்வரும்கால் தாங்கி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடிமை செய்தால், ஒரு காலத்திலே பல குற்றம் தன்னிடத்துவரினும் அதனைப் பொறுத்து;
மணக்குடவர்: குடிமையாவது கடமையொழிய வருவது.
பரிப்பெருமாள்: குடிமை செய்தல், பல காலத்திலே பல வரினும் அதனைப் பொறுத்து;
பரிப்பெருமாள் குறிப்புரை: தளர்ச்சியைச் செய்தலின் பொறை ஆயிற்று. குடிமையாவது கடமையொழிய வருமவை.
பரிதி: நாட்டாண்மைக்காரர்க்குச் சேதம் வந்தால்;
காலிங்கர்: கோல்கீழ் வாழும் குடிகள் ஆயினார் யாதானும் ஒரு காரணத்தான் முன் இறுக்கும் ஆறு அன்றிப் பெரும்பொருள் பாரம் தங்கள் மேல் வரவேண்டும் காலத்தும் அதனைப் பொறுத்தும்;
பரிமேலழகர்: பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி;
பரிமேலழகர் குறிப்புரை: பாரங்கள் - மக்கள் தொகுதியும் ஆன் எருமை முதலிய விலங்குத்தொகுதியும், தாங்குதல் - அவை தத்தம் தேயத்துப் பகை வந்து இறுத்ததாக, அரசு கோல் கோடியதாக, உணவின்மையானாகத் தன்கண் வந்தால் அவ்வத்தேயங்களைப் போல இனிதிருப்பச் செய்தல், [இறுத்ததாக- தங்கியதாக; கோல் கோடியதாக - செங்கோல் (நீதி) தவறியதாக]
'பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். ‘பொறை’ என்பதற்குக் குற்றம் என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் கூற, பரிதி சேதம் என்றார். காலிங்கரும் பரிமேலழகரும் பாரம் எனப் பொருள் கொண்டனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறநாட்டு மக்களின் சுமையெல்லாம் ஒருங்கே தன்மேல் வரும்போது பொறுத்து', 'பல பொறுப்புகள் ஒருமிக்கத் திடீரென்று வந்து விட்டாலும் அந்தப் பொறுப்புகளின் பாரத்தைத் தாங்கி', 'பிறநாட்டினர் விரும்பிவந்து கூடியகாலை அவர்கள் பாரத்தைத் தாங்க வல்லதாய்', 'பிற நாட்டு மக்களையும் தாங்க வேண்டிய பாரம் (பொறுப்பு) முழுதும் தன் மேல் சாருங்கால் அதனை ஏற்று' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பொருள் பாரம் ஒருங்கே தங்கள் மேல் வந்த காலத்தும் அதனைப் பொறுத்தும் என்பது இப்பகுதியின் பொருள்.
இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிச்சயித்த கடமையை அரசனுக்கு ஒருங்கு கொடுக்க வல்லது நாடு.
பரிப்பெருமாள்: நிச்சயித்த கடமையை அரசனுக்கு ஒருங்கு கொடுக்க வல்லது நாடு என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: தளர்ச்சியைச் செய்தலின் பொறை ஆயிற்று. இதனானே குடிமக்கள் பண்பு உடையராக வேண்டும் என்பது கூறிற்று.
பரிதி: தளராமல் இறைக்கடமை ஒருக்காலே கொடுப்பது நாடு என்றவாறு.
காலிங்கர்: அரசனைப் பாதுகாத்துப் பின்னும் அரசற்கு ஆறில் ஒன்றாக என்றும் இறுத்தற்கு உரிய இறையினையும் ஒன்றும் குறைபடாமல் ஒருங்கு உடன் கொடுத்து இயல்வது யாது; மற்று அதுவே நாடு ஆவது என்றவாறு.
பரிமேலழகர்: அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது. [இறைப்பொருள்-வரிப்பொருள்]
பரிமேலழகர் குறிப்புரை: அச்செயலால் இறையைக் குறைப்படுத்தாது தானே கொடுப்பதென்பார், 'இறை ஒருங்கு நேர்வது' என்றார். [இறையைக் குறைபடுத்தாது - வரியைக் குறைக்காமல்]
'தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அரசனுக்கு வரிப்பொருள் முழுவதும் தருவது நாடு', 'அவற்றைச் சமாளிக்க வேண்டியதற்காக வழக்கமில்லாத புது வரிகளையும் மற்ற உதவிகளையும் ஒருங்கே அரசனுக்குக் கொடுக்கச் சம்மதிக்கிற குடிமக்களை உடைய நாடே நல்ல நாடு', 'தன் அரசனுக்குரிய வரிப்பணம் முழுவதும் உடம்பட்டுக் கொடுக்க வல்லதே செழித்த நாடாகும்', 'தன் அரசனுக்கு வரிப் பொருள் முழுவதும் உடன்பட்டுக் கொடுப்பதே நாட்டின் சிறப்பாகும் ' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அரசுக்குரிய வரிப்பொருள் முழுவதும் உடம்பட்டுத் தருவது நாடு என்பது இப்பகுதியின் பொருள்.
|