இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0739



நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு

(அதிகாரம்:நாடு குறள் எண்:739)

பொழிப்பு (மு வரதராசன்): முயற்சி செய்து தேடாமலே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர்; தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் அல்ல.



மணக்குடவர் உரை: தேடவேண்டாத வளத்தினை யுடைய நாட்டை நாடென்று சொல்லுவர்: தேடினால் வளந்தருகின்ற நாட்டை நாடல்ல வென்று சொல்லுவர்.

பரிமேலழகர் உரை: நாடா வளத்தன நாடு என்ப - தங்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை உடையவற்றை நூலோர் நாடு என்று சொல்வர்; நாடவளம் தரும் நாடு நாடு அல்ல - ஆதலால் தேடி வருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடாகா.
(நாடுதல், இரு வழியும் வருத்தத்தின்மேல் நின்றது. 'பொருள் செய்வார்க்கும் அஃது இடம்' (சிந்.நாம.48) என்றார் பிறரும். நூலோர் விதிபற்றி எதிர்மறை முகத்தான் குற்றம் கூறியவாறு. இவ்வாறன்றி, 'என்ப' என்பதனைப் பின்னும் கூட்டி இருபொருள்பட உரைப்பின், அனுவாதமாம்.)

இரா சாரங்கபாணி உரை: பிற நாடுகளை நாடாமல் தேவைக்குரிய பொருள்களைத் தானே விளைவிக்கும் வளமுள்ள நாடே நாடாம். பிற நாடுகளை நாட அதனால் பொருள்வளம் பெறும் நாடு நாடல்ல என்று நூலோர் கூறுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நாடா வளத்தன நாடு என்ப; நாடவளம் தரும் நாடு நாடு அல்ல.

பதவுரை: நாடென்ப-நாடு என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது; நாடா-தேடாமல்; வளத்தன-செல்வத்தையுடையவை; நாடல்ல-நாடு ஆகா; நாட-(பிற நாடுகளை) எதிர்பார்க்க, தேடி; வளந்தரும்-பொருள் உண்டாக்கும், செல்வம் கொடுக்கும்; நாடு-நாடு.


நாடென்ப நாடா வளத்தன:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தேடவேண்டாத வளத்தினை யுடைய நாட்டை நாடென்று சொல்லுவர்;
பரிப்பெருமாள்: நாடு என்று சொல்லுவர் தேடவேண்டாத வளத்தினை யுடைய நாட்டை;
பரிதி: புறத்திலே போய் ஒன்றும் தேடாமல் நானாச் செல்வமும் உண்டாயிருப்பது நாடு; [நானா செல்வமும் - பலவகைப்பட்ட செல்வமும்]
காலிங்கர்: நாடு என்று சொல்லுவர் பெரியோர்; யாதினை எனின் புறத்து ஒன்று போய் தேட வேண்டாத பலவகைப்பட்ட விளைவளம் சிறந்த நாடுகளை;
பரிமேலழகர்: தங்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை உடையவற்றை நூலோர் நாடு என்று சொல்வர்;

'தேடவேண்டாத வளத்தினை யுடைய நாட்டை நாடென்று சொல்லுவர்' என்று பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதியும் கலிங்கரும் 'புறத்திலே போய் ஒன்றும் தேடாமல் பலவகைப்பட்ட செல்வமும்/விளைவளமும் உண்டாயிருப்பது நாடு' என்றார். பரிமேலழகர் 'தேடி வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை உடையவற்றை நூலோர் நாடு என்று சொல்வர்' எனக் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னிறைவுடைய வளநாடே உரிமை நாடு', 'தேடியலைந்து கஷ்டப்படாமல் வாழ்க்கை வசதிகள் கிடைக்கக்கூடிய பிரதேசங்களே நாடுகள் எனப்படும்', 'தேடி வருந்தாமல் தானே உண்டாகுஞ் செல்வத்தையுடைய நாடுகளே சிறந்த நாடுகள் என்று நூலோர் சொல்லுவர்', 'பிற நாடுகளில் சென்று தேடவேண்டாத செல்வத்தை உடையனவே நாடுகள் என்று சிறப்பித்துச் சொல்லப்படும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தேடவேண்டாமல் வளம் உடைத்தாயிருப்பது நாடு என்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

நாடல்ல நாட வளந்தரும் நாடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தேடினால் வளந்தருகின்ற நாட்டை நாடல்ல வென்று சொல்லுவர்.
பரிப்பெருமாள்: நாடு அல்ல என்று சொல்லுவர் தேடினால் வளந்தருகின்ற நாட்டை .
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எல்லா நிலத்தினும் உள்ள பண்டம் கலத்தினாலாதல் காலினாலாதல் தன்னிடத்தே உடைத்தாதலும் தன் நிலத்தில் உள்ள பண்டத்தை மிகுதியாக உடைத்தாதலும் வேண்டும் என்றது.
பரிதி: அல்லது நாடல்ல என்றவாறு.
காலிங்கர்: மற்று அல்லவை யாது எனின் நிலத்து விளையும் வளம் புறத்துப் போய்த் தேடுமாறு விளையும் நாடு என்றவாறு.
பரிமேலழகர்: ஆதலால் தேடி வருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடாகா.
பரிமேலழகர் குறிப்புரை: நாடுதல், இரு வழியும் வருத்தத்தின்மேல் நின்றது. 'பொருள் செய்வார்க்கும் அஃது இடம்' (சிந்.நாம.48) என்றார் பிறரும். நூலோர் விதிபற்றி எதிர்மறை முகத்தான் குற்றம் கூறியவாறு. இவ்வாறன்றி, 'என்ப' என்பதனைப் பின்னும் கூட்டி இருபொருள்பட உரைப்பின், அனுவாதமாம்.

மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'தேடினால் வளந்தருகின்ற நாட்டை நாடல்ல வென்று சொல்லுவர்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை கூற பரிதியும் காலிங்கரும் 'நிலத்து விளையும் வளம் புறத்துப் போய்த் தேடுமாறு விளையும் நாடு நாடல்ல' என்ற பொருளில் உரை கூறினர். பரிமேலழகர் 'தேடி வருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடாகா' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறநாட்டை எதிர் நோக்கும் நாடு நாடன்று', 'அப்படியின்றிக் கஷ்டப்பட்டுத் தேடித்தான் வாழ்க்கை வசதிகளைச் செய்து கொள்ள வேண்டிய இடம் நல்ல நாடல்ல', 'வருந்தி முயன்றே பொருள் உண்டாக்கக் கூடிய நாடுகள் நாடென்று சிறப்பாகக் கூறப்படுவனவல்ல', 'பிற நாடுகளை எதிர்பார்த்திருக்குமாறு குறைந்த வளத்தைத் தரும் நாடுகள், நாடுகள் என்று சொல்லப்படா' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிற நாடுகளை எதிர்பார்த்து வளம் தரும் நாடு நாடல்ல என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தேடவேண்டாமல் வளம் உடைத்தாயிருப்பது நாடு என்பர்; பிற நாடுகளை எதிர்பார்த்து வளம் தரும் நாடு நாடல்ல.
'நாடா வளத்தன' என்றால் என்ன?

தன்னிறைவுடைய நாடாகத் திகழ்வதே வளமான நாடாம்.

தேடவேண்டாமல் வளங்களை உடைய நாடுகளையே சிறந்த நாடுகள் என்பர்; தேடிப் பொருள் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் ஆகமாட்டா.
பிற நாட்டை எதிர்நோக்காது தேவைக்குரிய பொருள்களைத் தன் நாட்டிலேயே அனைத்து வளங்களையும் உடையதுதான் நாடு எனச் சிறப்பித்துச் சொல்லப்படும். அங்ஙனமின்றிப் பிற நாடுகளை எதிர்பார்த்து வாழும் வகையில் பொருட் குறைபாடு உடையது நாடுஆகாது. பொருள் என்பது தொழில்நுட்பம்(technology) போன்ற சேவைகளையும் சேர்த்தே குறிக்கும். பிற நாடுகள் நாடும் பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடிய வளம் கொண்டதும் வள நாட்டின் தன்மையாகும்.
வருந்தி வளம் கொள்ளும் நாடு நாடல்ல என்றும் பொருள் கூறுவர். வளம் என்று சொல்லப்படுவது இயற்கையாகவும் கிடைக்கும்; மனித அறிவின் செயற்கையாலும் தோன்றும். ஒரு நாட்டில் சிறிய முயற்சியில் நல்ல வளம் உண்டாகலாம். ஆதலின், ஒரு நாட்டின் வளம் எனச் சிறப்பாகப் பேசுவது வருத்தம் இன்றிப் பெறும் வளமே ஆம். வருத்தம் பெரியதாய், அதன் பயனாக வரும் வளம் சிறியதானால் அதனை அந்நாட்டின் வளம் எனச் சொல்ல முடியாது. ஒரு சுரங்கத்திலிருந்து தங்கம் பெறுவதற்கான முயற்சிக்கு ஏற்படும் செலவு பெறப்பட்ட பொன்னின் மதிப்பைவிட மிகுதியானால் அதை வளம் என்று கொள்ள முடியாது. நம் முயற்சிக்கும் மேலாகப் பொருள் தருவதே வளமாகும். கிடைக்கும் பயனில் வருத்தமே விஞ்சுமானால் அப்பொருளை ஆக்காமலே இருப்பர்; அந்தத் தங்கச் சுரங்கம் அந்நாட்டிற்கு வளமாகாது.
வருந்தி வளம் கொள்ளும் என்பது மனித உழைப்பைக் குறிப்பதாகச் சிலர் தவறாகக் கருதுகின்றனர். அது பாடுபடும் மனித உழைப்பைக் குறிக்காது. எனவே 'நாடாமல்' என்பதற்கு 'உழைத்து வருந்தாமல்' எனக் கொள்ளாமல் தனது தேவைகளுக்குத் தேடி அலையாமல் எனப் பொருள் கொள்ளவேண்டும். இங்குத் தேவை என்பது இன்றியமையாப் பொருளுக்கான தேவையாகும். அவற்றை நாட்டிலேயே உண்டாக்கிக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்படி உண்டாக்க முடியவில்லையென்றால் அது நாடாகாது.

தனக்குத் தேவையானதைத் தானே பெற்றிருக்கும் தன்நிறைவு உடையதாய் ஒரு நாடு இருத்தல் வேண்டும். அடிப்படைத் தேவைகளான உணவு, உடை போன்றவற்றிற்குக்கூட வேற்று நாடுகளை எதிர்நோக்கியே வாழவேண்டுமென்றால், அந்நாடு தனக்கு உதவி புரியும் நாட்டுக்கு அடிமையாவதில்தான் போய் முடியும். நாடு வளமுள்ள நாடாக இருக்க வேண்டுமென்றால். அது அடிப்படைத் தேவைகளுக்கான பொருள்களிலாவது தன்னிறைவு பெற்றதாக மாறவேண்டும்.
குடிமக்கள் தங்கள் தேவைகளைப் பெருக்கிக் கொள்ளாமல் தத்தம் நாட்டில் விளையும் பொருள்களைக் கொண்டே நுகரும் இன்பத்தோடு அமைவதே நாடு என்னும் கருத்தும் முன்வைக்கப்பட்டது. தம் நாட்டின் பொருளாதாரத்தை மேலோங்கச் செய்வதே சிறந்த கொள்கை. பொருட்களாயினும் தொழில்நுட்பம் போன்ற சேவையாயினும் அவை எங்கு கிடைத்தாலும் ஏற்றுமதி/இறக்குமதி மூலம் பெற்று/விற்று நாட்டை முன்னெடுத்துச் செல்வதே விரும்பத்தக்கது; பயன் அளிப்பது. அதற்குத் தேவையான வெளிநாட்டு செலவாணியை (foreign exchange) அந்நாடு கைப்பொருளாக வைத்திருக்கும் வளமும் பெற வேண்டும். அதை விடுத்துத் தேவைகளைக் குறைத்துக் கொள்ளச் சொல்லும் கருத்து சிறக்கவில்லை.

'ஒன்றிற்கொன்று மாறுபட்ட எதிர்மறைக் கருத்துக்களை ஒரு குறளில் கையாண்டு உணர்த்தும் நடை கொண்ட குறள் இது. கூறும் பொருளின் வன்மை மென்மைகளுக்கேற்ப உடன்பாடு-எதிர்மறை என்று இரு நடைகளையும் வள்ளுவர் அடிக்கடி பயன்படுத்துவார். முதலில் சொன்ன கருத்திற்கு வலிவு தேடும் முறையில் அதன் பின்வரும் தொடரை அமைப்பார். 'நாடென்ப நாடா வளத்தன' என்னும் உடன்பாட்டுக் கருத்து 'நாடல்ல நாட வளந்தரும் நாடு' என்னும் எதிர்மறைக் கருத்தால் மேலும் தெளிவு பெறும் வகையில் குறள் அமைந்துள்ளது.
தொடங்கிய சொல்லாலே முடியும் குறள் இது - முதலும் ஈறுமாக 'நாடு' என்ற ஒரே சொல்லைக் கொண்டுள்ளது. மேலும் ஒரு குறளுக்குள்ளேயே 'பல பொருள் ஒரு சொல்' பயன்படுத்தப்பட்ட பாடல் இது; நாடு என்ற சொல் 'தேசம்' என்ற பொருளையும், 'தேடு' என்ற பொருளையும் தருவது. முதலில் நாடு என்ற பொருளிலும் அடுத்துத் தேடு என்ற பொருளிலும் சீர்களில் மாறிமாறி வந்துள்ள முறை நோக்கத் தக்கது. நுட்பமான ஒலிநயம் பொருந்திய பாடலாகவும் உள்ளது.

'நாடா வளத்தன' என்றால் என்ன?

'நாடா வளத்தன' என்பதற்குச் 'புறத்து ஒன்று போய் தேட வேண்டாத பலவகைப்பட்ட விளைவளம் சிறந்த நாடு' என்று பொருள் கூறுவார் காலிங்கர். இது தன்னிறைவு (Self-sufficient) கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்று சொல்வது. இந்நோக்கம் விரும்பத்தக்கது என்றாலும் உள் நாட்டிலேயே எல்லாப் பொருள்களையும் பெறுதல் அரிதாதலின் மற்றொரு பழைய ஆசிரியரான பரிப்பெருமாள் 'எல்லா நிலத்தினும் உள்ள பண்டம் கலத்தினாலாதல் காலினாலாதல் தன்னிடத்தே உடைத்தாதலும் தன் நிலத்தில் உள்ள பண்டத்தை மிகுதியாக உடைத்தாதலும் வேண்டும்' என்றார். இவர் 'தன் பொருள் வளத்தின் சிறப்பால் பிறநாட்டுப் பொருள்களைத் தேடி அலையாதபடி எளிதாகப் பெறுவதே நாடாவளம் அதுபோல் பிற நாடுகள் நாடும் பொருள்கள் நம் நாட்டில் பெரிதும் விளைதல் வேண்டும் அதை நாடும் நாட்டினர்க்கு ஏற்றுமதி செய்யவேண்டும்' என்கிறார். இவ்வாறு கொண்டும் கொடுத்தும் வாழ்வதே நாடாவளம் என்னும் பரிப்பெருமாள் உரை 'நாடா வளத்'தை நன்கு விளக்கும்.

வளமான நாடு எது என்பதை இன்னொரு கோணத்திலும் பார்ப்பர். வளநாடு என்பது முயற்சியின்றி வளம் பெறத்தக்க வகையில் இயற்கையாய் அமைந்ததாக இருக்கவேண்டும்; வருந்தித் தேடி வளம் சேர்ப்பது வளநாடு அல்ல என்பர் இவர்கள். சில நாடுகள் இயற்கைவளம் மிக உடையன. சில இயற்கை வளம் இல்லாதன. இயற்கைவளம் கொண்ட நாடுகளில் மக்கள் அதிகம் வருந்தாமல் வளமான வாழ்வு மேற்கொள்கின்றனர். எனவே தன்னிடத்தில் வாழ்வோர் முயற்சியின்றி செல்வம் அடைந்தால் அது வள நாடாகும்; தேடி அலைந்து வருந்திச் செல்வம் சேர்க்கும் நாடுகள் வளநாடல்ல என இவர்கள் கூறுவதால் 'நாடாமல்' என்பதற்கு 'உழைத்து வருந்தாமல்' எனப் பொருள் கொள்கின்றனர் போலும். இதை மறுத்து தேவநேயப் பாவாணர் 'தேடி வருந்தாமல்தானே வந்தடையுஞ் செல்வமுள்ள நாடு இவ்வுலகில் எங்குமின்மையாலும், இயற்கை விளைபொருளையும் விளையுமிடஞ்சென்று தொகுக்க வேண்டியிருப்பதனாலும், மெய் வருத்தமில்லா வாழ்வு சோம்பலையும் நோயையும் விளைக்குமாதலாலும், அது உரையன்மையறிக' என்று உழைப்பை முன்னிறுத்தி விளக்கம் அளிக்கிறார். வள்ளுவர் உழைபில்லாமல் பொருளாக்கம் பெறும் சமுதாயத்தை உயர்த்திப் பேசியிருப்பார் என எண்ண முடியவில்லை, ஆகவே, 'நாடாமல்' என்பதற்கு 'உழைத்து வருந்தாமல்' என்பது பொருளன்று.
நாமக்கல் இராமலிங்கம் 'வளம் என்பது இயற்கை வளங்களும் செயற்கை வளங்களும் சேர்ந்த செழுமை. வாழ்க்கைக்கான வசதிகள் எளிதில் கிடைக்கக்கூடிய இடங்களே மக்கள் வசிக்கத் தகுந்த நாடுகள்' என இக்குறளுக்கு விளக்கம் அளிக்கிறார். இக்கருத்து ஏற்கத்தக்கதாக உள்ளது. குடிநீர், மின்சாரம் போன்ற பொருட்களுக்காகக்கூட நாளும் போராட வேண்டியிருக்கும் மக்கள் குடியிருக்கும் நாட்டை வளநாடு என்று எப்படிச் சொல்ல முடியும்?

நாடா வளம் என்பது நிறைவு குறித்தது. உழைத்தும், விளைத்தும், ஏற்றுமதி-இறக்குமதி செய்தும் நிறைவு கண்டு எதற்கும் தேடியலைய வேண்டாமல் இருக்கும் நாடே வளநாடாகும்.

தேடவேண்டாமல் வளம் உடைத்தாயிருப்பது நாடு என்பர்; பிற நாடுகளை எதிர்பார்த்து வளம் தரும் நாடு நாடல்ல என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

அடிப்படை ஆதாரங்கள் அனைத்தும் தன்னகத்தே கொண்டிருப்பதே நாடு.

பொழிப்பு

தேடி வருந்தாமல் தேவைக்குரிய பொருள்களைத் தானே விளைவிக்கும் வளம்கொண்டதே நாடாம்; மற்ற நாடுகளை நாடி அதனால் வளம் தரும் நாடு நாடல்ல.