இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0738



பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து

(அதிகாரம்:நாடு குறள் எண்:738)

பொழிப்பு (மு வரதராசன்): நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

மணக்குடவர் உரை: நோயின்மையும், செல்வமுடைமையும், விளைவுடைமையும், இன்பமுடைமையும், காவலுடைமையுமென்று சொல்லப்பட்ட இவையைந்தும் நாட்டிற்கு அழகென்று சொல்லுவர்.

பரிமேலழகர் உரை: பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் இவ் ஐந்து - நோயின்மையும் செல்வம் விளைதல் இன்பம் காவல் என்றிவை உடைமையுமாகிய இவ்வைந்தனையும்; நாட்டிற்கு அணி என்ப- நாட்டிற்கு அழகு என்று சொல்லுவர் நூலோர்.
(பிணியின்மை, நில நலத்தான் வருவது. செல்வம், மேற்சொல்லியன. இன்பம், விழவும் வேள்வியும் சான்றோரும் உடைமையானும், நுகர்வன உடைமையானும்,நில நீர்களது நன்மையானும் வாழ்வார்க்கு உள் நிகழ்வது. 'காவல்' எனவே, அரசன் காவலும், வாழ்வோர் காவலும் அரண் காவலும் அடங்கின. பிற தேயங்களினுள்ளாரும் விழைந்து பின் அவையுள்ளாமைக்கு ஏதுவாய அதன் அழகு இதனாற் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: நோயில்லாமை, செல்வமுடைமை, விளைவுடைமை, இன்பம் உடைமை, பாதுக்காப்பமைந்த காவலுடைமை என்ற இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு தரும் என்று சொல்வார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் இவ்வைந்து நாட்டிற்கு அணி என்ப.

பதவுரை: பிணி-நோய்; இன்மை-இல்லாதிருத்தல்; செல்வம்-செல்வம், பொருள் மிகுதி; விளைவு-விளைச்சல்; இன்பம்-மகிழ்ச்சி; ஏமம்-காவல்; அணி-அணிகலன், அழகு; என்ப-என்று சொல்லுவர்; நாட்டிற்கு-நாட்டிற்கு; இவ்வைந்து-இந்த ஐந்து(ம்).


பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நோயின்மையும், செல்வமுடைமையும், விளைவுடைமையும், இன்பமுடைமையும், காவலுடைமையுமென்று சொல்லப்பட்ட;
பரிப்பெருமாள்: நோயின்மையும், செல்வமுடைமையும், விளைவுடைமையும், இன்பமுடைமையும், காவலுடைமையுமென்று சொல்லப்பட்ட;
பரிப்பெருமாள் குறிப்புரை: செல்வம்-பொன்னும் பசுவும் பலவாயின மிகுதல்; விளைவாவது, பல தானியங்களும் பொலிவு உடைமை; இன்பமாவது கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் இன்புறப்படும் பொருள்களை உடைமை; காவலாவது, மாற்றரசனாலும் தன் அரசனாலும் நலிவின்மை.
பரிதி: நோயின்மை, செல்வம், பதினாறு தானியமும் விளைவு, அரண், வினையற்றிருக்கை; [பதினாறு தானியம்- நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, கேழ்வரகு, எள், கொள், பயறு, உளுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை]
காலிங்கர்: நிலனும் நீரும் சோறும் முதலியவற்றின் இனிமைகளானே பிணி பெரிது இன்மையும், பலர்வழிச் செல்வம் பெரிது உடைமையும், வேட்பன எல்லாம் விளைந்து செல்கின்ற விளை நுகர்பொருளும், நுண்ணறிவு இன்பம் ஆகிய இன்பமும், ஒருநாள் போல் எந்நாளும் அரச(னால் ஏமுற்றுச் செல்வதோ)ரேமமும் என்னும்; [ஏமுற்று-இன்பமுற்று]
பரிமேலழகர்: நோயின்மையும் செல்வம் விளைதல் இன்பம் காவல் என்றிவை உடைமையுமாகிய;
பரிமேலழகர் குறிப்புரை: பிணியின்மை, நில நலத்தான் வருவது. செல்வம், மேற்சொல்லியன. இன்பம், விழவும் வேள்வியும் சான்றோரும் உடைமையானும், நுகர்வன உடைமையானும்,நில நீர்களது நன்மையானும் வாழ்வார்க்கு உள் நிகழ்வது. 'காவல்' எனவே, அரசன் காவலும், வாழ்வோர் காவலும் அரண் காவலும் அடங்கின.

'நோயின்மையும், செல்வமுடைமையும், விளைவுடைமையும், இன்பமுடைமையும், காவலுடைமையுமென்று சொல்லப்பட்ட' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நோயின்மை, செல்வம் விளைச்சல் இன்பம் காவல்', 'நோயில்லாமை, செல்வம், விளைச்சல், இன்பம், காவல் என்னும்', 'நோய் தராத (நீரும் காற்றும் உள்ள) இயல்பும், பொருளாதார பலமும், விளை பொருட்களின் மிகுதியும் (கல்வியினாலும் கலைகளாலும் அனுபவிக்கக்கூடிய இன்ப நிகழ்ச்சிகளும், (மக்களுடைய உயிருக்கும் உடைமைகளுக்கும்) பாதுகாப்பும் ஆகிய', 'நோயில்லாமை, பொருள்வளம், விளைவு மிகுதி, இன்ப நுகர்ச்சிக்குரிய வசதிகள், நல்ல பாதுகாப்பு என்னும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நோயில்லாமை, செல்வமுடைமை, விளைவுடைமை, இன்பம் உடைமை, காவலுடைமை என்பது இப்பகுதியின் பொருள்.

அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவையைந்தும் நாட்டிற்கு அழகென்று சொல்லுவர்.
பரிப்பெருமாள்: இவையைந்தும் நாட்டிற்கு அழகென்று சொல்லுவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல், நாட்டிற்கு அங்கமாவன கூறினார். இது அழகாவன கூறிற்று.
பரிதி: இந்த அஞ்சும் நிலத்துக்கு ஆபரணம் என்றவாறு.
காலிங்கர்: இவை ஐந்தும் நாட்டிற்கு அணி என்றவாறு.
பரிமேலழகர்: இவ்வைந்தனையும் நாட்டிற்கு அழகு என்று சொல்லுவர் நூலோர்.
பரிமேலழகர் குறிப்புரை: பிற தேயங்களினுள்ளாரும் விழைந்து பின் அவையுள்ளாமைக்கு ஏதுவாய அதன் அழகு இதனாற் கூறப்பட்டது.

'இவையைந்தும் நாட்டிற்கு அழகென்று சொல்லுவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஐந்தும் நாட்டிற்கு அணி என்பர்', 'இவ்வைந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர் மேலோர்', 'இந்த ஐந்தும் ஒரு நாட்டிற்கு அமைய வேண்டிய சிறப்புகள்', 'ஐந்தும் நாட்டிற்கு அழகு தருவன என்று அறிஞர் கூறுவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இவை ஐந்தும் நாட்டிற்கு அழகு என்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நோயில்லாமை, செல்வமுடைமை, விளைவுடைமை, இன்பம் உடைமை, காவலுடைமை இவை ஐந்தும் நாட்டிற்கு அழகு என்பர் என்பது பாடலின் பொருள்.
'அணி' என்ற சொல்லின் பொருள் என்ன?

செல்வமும், அமைதியும் உள்ள நாட்டில் மக்கள் இன்பமாக வாழ்வார்கள்.

நோயில்லாதிருத்தல், செல்வமுடைமை, விளைவுடைமை, இன்பம், பாதுகாவல் ஆகிய இவை ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
நாட்டின் இன்றியமையாத உறுப்புகளாகா இருபுனல், மலை, வல்லரண், வருபுனல் ஆகியன கூறியபின் இங்கு அந்நாட்டின் சிறந்த நிலை சொல்லப்படுகிறது.

பிணியின்மை:
இது உடல்நலத்துடன் வாழ்வதைச் சொல்வது. நாட்டில் நோய் நுடக்கம் இல்லாமை வேண்டும். 'பிணியின்மைக்குக் காரணம் நிலம் நீர் சோறு முதலியவற்றின் இனிமை' என்பர் காலிங்கர். பிணியுள்ள நாட்டில் கேடு பல விளையும். உடல்நலம் இருந்தால்தான் பிற நலங்களும் கூடிவரும். நோய் ஒழிந்த வாழ்க்கையே இன்ப வாழ்வுக்கு அடிப்படை.

செல்வம்:
இது ஆக்கம், பொருளுடைமையைக் குறிப்பது. செல்வம் நிறைந்திருந்தால் அந்நாட்டில் வறுமை, பசி இருக்காது. 'வேட்பன எல்லாம் விளைந்து செல்கின்ற விளைநுகர் பொருள்' என ஆக்கப் பொருள்களை எல்லாம் சொல்கிறார் காலிங்கர். இயற்கைச் செல்வங்களான சுரங்கச் செல்வம், கடற் செல்வம், மலைச் செல்வம் மற்றும் வணிகர் தரும் பொருள் முதலியன எல்லாம் இதில் அடங்கும். இச்செல்வங்கள் எல்லாம் ஒரு சிலர் கையில் இருப்பது செல்வமாகாது எனப் பொருள்படும்படி 'பலர்வழிச் செல்வம் பெரிது உண்மை' என்பார் பரிப்பெருமாள். தேவநேயப் பாவாணர் 'நிலமும் வீடும், தட்டு முட்டுக்களும், பொன்னும் வெள்ளியும் மணியும், ஊர்தியும் கால்நடையும், பன்னாட்டு விளைபொருளும் செய்பொருளுமாகிய பொருட் செல்வமும்; கல்விச் செல்வமுமாம்' என செல்வத்தை விளக்குவார்.

விளைவு:
செழிப்பான விவசாயமும், விளைச்சலும் நாட்டில் இருக்க வேண்டும். விளைவு என்பது முதலும் உழைப்பும் நேர்ந்து உண்டாகும் பயன். விளைவு இருந்தால்தான் உழைப்பவர்க்கும், அதை நுகர்வோர்க்குக் கொண்டு சேர்க்கும் வணிகர்க்கும் பயன் கிடைக்கும். பரிதி விளைவு என்பதை நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, கேழ்வரகு, எள், கொள், பயறு, உளுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை எனப் பதினாறு தானியங்கள் எனப் பட்டியலிடுகிறார். விளைவு என்பது விளைநுகர் பொருள் மட்டும் அன்று; தொழில் செய்வதால் பெறப்படும் விளைவு அனைத்தும் விளைவுதான்.

இன்பம்:
இன்பம் என்பது மகிழ்ச்சி. 'நுண்ணறிவு இன்பமாகிய இன்பம்' என நுட்ப இன்பத்தைக் காலிங்கர் சொல்ல, 'இன்பமாவது கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் இன்புறப்படும் பொருள்களை உடைமை' எனப் பரிப்பெருமாள் இன்பத்திற்குப் பொதுவாகத் துணை செய்யும் பொருள்கள் பற்றிக் கூறுவார். விழாக்கள், நுகர்வன உடைமை இவற்றாலும் இன்பம் கிட்டும். நுண்கலைகளை அனுபவித்து மகிழ்தலும் இன்பத்துள் சேர்ந்ததே. 'இன்பம்' நாடக நடிப்பு, அழகிய இயற்கைக் காட்சி, திருவிழா, இசையரங்கு, சொற்பொழிவு, நால்வகை அறுசுவையுண்டி, நன்காற்று, இனிய இல்லற வாழ்வு, தட்பவெப்பச் சமநிலை; நிலவிளையாட்டு, நீர் விளையாட்டு, வேலை வாய்ப்பு, வரிப்பளுவின்மை, செங்கோலாட்சி முதலியவற்றால் நேர்வது' என்பார் தேவநேயப்பாவாணர்.
நாட்டு மக்கள் மூடநம்பிக்கைகள் அகன்று, அடிமைத்தனம், கொடுங்கோன்மைத் துயர் இவையின்றி இன்புற்றிருக்க வேண்டும். இன்பவாழ்க்கை நடத்துவதுதானே மாந்தரின் இறுதி நோக்கம்.

ஏமம்:
ஏமம் என்பது காவல் என்ற பொருள் தரும். இன்பம் இடைமுறிதல் இன்றி நெடுக நீடிக்க காவல் வேண்டும். காவல் உரிமையுள்ள நாடே பாதுகாப்பான நாடு. கள்ளர், விலங்குகள், பகைவர் இவற்றிலிருந்து வாழ்வார் காக்கப்பட பலமான காவற்படையிருக்கவேண்டும். பசியும் பிணியும் ஒழிந்திடினும் பகை இருக்குமாயின் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லமுடியாது. வெளிப்பகை இல்லாதிருக்க பகைவர் அஞ்சும் வலிமையை ஒரு நாடு பெற்றிருத்தல் வேண்டும். ஏமம் என்பது குடிமக்கள் காவலும் அரண் காவலும் அடங்கியது. 'ஏமம் செங்கோலாட்சி, படைவலிமை, அரண் சிறப்பு, பகையின்மை ஆகியவற்றால் ஏற்படுவது' என்பது தேவநேயர் உரை.
சி இலக்குவனார் 'எண்ணும் உரிமை, பேசும் உரிமை, எழுதும் உரிமை, வழிபடும் உரிமை, வாழும் உரிமை முதலியன பெற்றிருத்தல் வேண்டும். இவ்வுரிமைகள் பறிபோகாதவாறு பாதுகாவல் இருத்தல் வேண்டும்” என உரைப்பார்.

இவை ஐந்தும் அணிபோன்று அமைந்து நாட்டைப் பொலிவுபெறச் செய்யும்.

'அணி' என்ற சொல்லின் பொருள் என்ன?

அணி என்பது அழகு சேர்ப்பதற்காக அணியப்படுவது. ஒரு நாட்டிற்கு அழகு சேர்ப்பனவாக ஐந்து தன்மைகள் இங்கு சொல்லப்படுகின்றன. நாட்டை அழகாக்கும் இவை நாட்டின் அகத்தின் பொலிவைச் சொல்லும். நோயில்லாச் சமுதாயத்தை உடையதாகவும். பெருஞ்செல்வம் கொண்டதாகவும், விளைச்சல் மிகுதியாக உள்ளதாகவும் இன்பத்திற்குக் குறைவில்லாததாகவும், வாழ்தற்குப் பாதுகாப்பான சூழ்நிலையைத் தருவதாகவும் உள்ள நாடு உலக மக்களை ஈர்க்கும் தன்மை கொண்டது. இதனாலே இவை அணி எனச் சொல்லப்பட்டது.

அணி என்றதற்கு இங்கு அழகு என்ற பொருள் சிறக்கும்.

நோயில்லாமை, செல்வமுடைமை, விளைவுடைமை, இன்பம் உடைமை, காவலுடைமை இவை ஐந்தும் நாட்டிற்கு அழகு என்பர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மக்கள் குடியேற விரும்பும் ஈர்ப்புத்தன்மைகள் கொண்ட நாடு எது?

பொழிப்பு

நோயின்மை, செல்வம், விளைச்சல், இன்பம், காவல் என்னுமிவ்வைந்தும் நாட்டிற்கு அழகு என்பர்.