இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0735பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு

(அதிகாரம்:நாடு குறள் எண்:735)

பொழிப்பு (மு வரதராசன்): பலவகையாக மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.

மணக்குடவர் உரை: பலபலவாய்த் திரளுந் திரட்சியும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தனை யலைக்கின்ற கொலைத் தொழிலினையுடைய குறும்பரும் இல்லாதது நாடு.

பரிமேலழகர் உரை: பல்குழுவும் - சங்கேத வயத்தான் மாறுபட்டுக் கூடும் பல கூட்டமும்; பாழ் செய்யும் உட்பகையும் - உடனுறையா நின்றே பாழாகச் செய்யும் உட்பகையும்; வேந்து அலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு - அளவு வந்தால் வேந்தனை அலைக்கும் கொல்வினைக் குறும்பரும் இல்லாததே நாடாவது.
(சங்கேதம் - சாதி பற்றியும் கடவுள் பற்றியும் பலர்க்கு உளதாம் ஒருமை. உட்பகை - ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார் முதலிய மக்களும், பன்றி,புலி, கரடி முதலிய விலங்குகளும். 'உட்பகை, குறும்பு' என்பன ஆகுபெயர். இம்மூன்றும் அரசனாலும் வாழ்வாராலும் கடியப்பட்டு நடப்பதே நாடு என்பதாம்.)

சிற்பி பாலசுப்பிரமணியம் உரை: பிரிந்து பிரிந்து கிடக்கும் மனப்பான்மையாலும், பேரழிவை உண்டுபண்ணும் உட்பகையாலும், அரசாட்சியை நிலை குலைக்கும் வன்முறைக் கும்பலாலும் தொல்லைப்படாத நாடே நாடு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு.

பதவுரை: பல்-பலவாகிய; குழுவும்-கூட்டமும்; பாழ்செய்யும்-கெடுதலாகச் செய்யும்; உட்பகையும்-உள்ளாய் நிற்கும் பகை; வேந்து-அரசு; அலைக்கும்-வருத்தும்; கொல்-கொலை செய்கின்ற; குறும்பும்-சதி செய்யும் கூட்டத்தாரும்; இல்லது-இல்லாதது; நாடு-நாடு.


பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பலபலவாய்த் திரளுந் திரட்சியும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தனை யலைக்கின்ற கொலைத் தொழிலினையுடைய குறும்பரும்; .
பரிப்பெருமாள்: பலவாய்த் திரளுந் திரட்சியும் பாழ் ஆக்கு உட்பகையும் வேந்தனை யலைக்கின்ற அலைக்கின்ற கொலைத் தொழிலையுடைய குறும்பரும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: பாழ் ஆக்கும் உட்பகையாவது, நாட்டுத் தலைவராயினும் அதிகாரியாயினும் நாட்டைக் கெடுக்குமவர்கள்.
பரிதி: பலகுடியைச் சேதம் பண்ணும் தாயாதிகளும் இராசாவுடன் பகை செய்யும் கூட்டமும்;
காலிங்கர்: மறப்படை மாக்கள் பெருகக் கூடும் கூட்டமும், செல்வம் உடையோர் தம் செல்வத்தைத் தேய்க்கும் உட்பகையும், நாடு பற்றி வாழும் பெருநெறி வேந்தனைக் காடு பற்றி நிற்கச் செய்யும் கொல்வினைக் குறும்பும்;
பரிமேலழகர்: சங்கேத வயத்தான் மாறுபட்டுக் கூடும் பல கூட்டமும் உடனுறையா நின்றே பாழாகச் செய்யும் உட்பகையும் அளவு வந்தால் வேந்தனை அலைக்கும் கொல்வினைக் குறும்பரும்;
பரிமேலழகர் குறிப்புரை: சங்கேதம் - சாதி பற்றியும் கடவுள் பற்றியும் பலர்க்கு உளதாம் ஒருமை. உட்பகை - ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார் முதலிய மக்களும், பன்றி,புலி, கரடி முதலிய விலங்குகளும். 'உட்பகை, குறும்பு' என்பன ஆகுபெயர்.

'மாறுபட்டுக் கூடும் பல கூட்டமும் உடனுறையா நின்றே பாழாகச் செய்யும் உட்பகையும் அளவு வந்தால் வேந்தனை அலைக்கும் கொல்வினைக் குறும்பரும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பல கட்சிகளும் உடனிருந்தே குழி பறிக்கும் உட்பகையும் அரசனை வாட்டி வருத்தும் கொலை புரியும் தீயரும்', 'குடிகளுக்குள் பல கட்சிகளும், நாட்டைப் பாழாக்கிவிடக் கூடிய உடனிருக்கும் துரோகிகளும், அரசாங்கத்தை அலைக்கழிக்கும் இரகசியக் கூட்டங்களின் கொலை மிகுந்த அராஜகமும்', 'மாறுபட்ட கொள்கையுடைய பல கூட்டங்களும், நாட்டைப் பாழாகச் செய்யும் உட்பகையும், இடம் வந்தபோது அரசனைத் துன்புறுத்துங் கொலைத் தொழிற் குறுநில மன்னரும்', '(தந்நலம் காரணமாக அமைந்துள்ள) பல கூட்டங்களும் அழிவினை உண்டு பண்ணும் உட்பகையும், அரசனுக்குத் துன்பம் தரும் கொலைத் தொழில் செய்யும் கொடியரும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பல மாறுபட்ட கருத்துக்களையுடைய கூட்டங்களும், அழிவினை உண்டாக்கக்கூடிய உட்பகையும், அரசுக்குத் துன்பம் தரும் கொலைத் தொழிலையுடைய வன்முறையாளரும் என்பது இப்பகுதியின் பொருள்.

இல்லது நாடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்லாதது நாடு.
பரிப்பெருமாள்: இல்லாதது நாடு.
பரிப்பெருமாள் குறிப்புரை: அவை ஆராய்ந்து கடிய வேண்டுதலின் இது கூறப்பட்டது.
பரிதி: இல்லாதது நாடு.
காலிங்கர்: இல்லது யாது; மற்று அதுவே நாடாவது என்றவாறு.
பரிமேலழகர்: இல்லாததே நாடாவது.
பரிமேலழகர் குறிப்புரை: இம்மூன்றும் அரசனாலும் வாழ்வாராலும் கடியப்பட்டு நடப்பதே நாடு என்பதாம்.

'இல்லாதது நாடு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இல்லாதது நாடு', 'இல்லாதது நல்ல நாடு', 'இல்லாததே நல்ல நாடாகும்', 'இல்லாமலிருப்பதே நாட்டின் சிறப்பாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இல்லாததே நாடு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பல மாறுபட்ட கருத்துக்களையுடைய கூட்டங்களும், அழிவினை உண்டாக்கக்கூடிய உட்பகையும், அரசுக்குத் துன்பம் தரும் கொலைத் தொழிலையுடைய வன்முறையாளரும் இல்லாததே நாடு என்பது பாடலின் பொருள்.
'கொல்குறும்பு' குறிப்பதென்ன?

சூழ்ச்சிக்கும் வன்முறைக்கும் இடம் இல்லாததே நாடாகும்.

மாறுபட்ட கொள்கைகளையுடைய பலவகையான குழுவினரும், உடனிருந்தே கெடுக்கும் பகையும், அரசைத் துன்புறுத்தும் கொலைகாரக் குறும்பரும் இல்லாததே நாடாகும்.
பசி, பிணி, பகை ஆகியன சேராதிருப்பது நாடு என்று முற்குறளில் கூறப்பட்டது. இவையெல்லாம் புறத்திலிருந்து வருவன; வெளிப்படையாகத் தோன்றுபவை. இக்குறளில் ஒரு நாட்டில் இல்லாதிருக்க வேண்டிய நிலைமைகளுள் அகநிலையில் மறைந்து உறைந்திருக்கும் எதிர்மறை இயல்புகளான மற்றொரு மூன்று - பல்குழு, உட்பகை, கொல் குறும்பு என்பன கூறப்படுகின்றன. இவை உள்ளிருந்து பெருங்கேடு விளைக்கத் தக்கன ஆகையால் அவை நாட்டில் இருத்தலே ஆகாது எனச் சொல்லப்படுகிறது.

பல்குழு:
ஒருநாட்டிலுள்ள முரண்பட்டுக் கிடக்கும் குழுக்களைப் பல்குழு என்று இக்குறள் சொல்கிறது.
நாட்டில் பல குழுக்கள் தோன்றுவது இயற்கை. பலப்பல இனங்கள் (சாதிகள்), மாறுபட்ட கருத்துக்களையுடைய சமயங்கள், பல வேறுபட்ட கொள்கைகளையுடைய அரசியல் குழுக்கள் (கட்சிகள்), போன்றவற்றை குழுக்கள் எனலாம். இவை தவிர்த்த எண்ணற்ற குழுக்களும் இயங்கி வருகின்றன. நம் நாட்டின் அரசியல் சட்டம் குழுக்கள் உருவாக்கி இயங்குவதற்கு உரிமை (Right of Association) அளிக்கிறது. மக்கள் கூட்டமாக வாழும் இயல்பினர். குழுக்களாக வாழும் கூட்டுறவில் அவர்கள் பெருமை சிறக்கும். இந்தக் கூட்டுறவு உரிமை தரப்பட்டது தமது உரிமையையும் தமது குழுவின் உரிமையையும் காத்துக்கொண்டு நாட்டின் வளம் செழிக்கவும் உதவுவதற்கேயன்றி மற்றக் குழுக்களுடன் போராடி ஒன்றையொன்று அழித்துக் கொண்டு நாடு பாழாவதற்கு அன்று. ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு .கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்படாமல், ஒற்றுமைக்கு மாறாக குழுமனப்பான்மையுடன் செயல்படக்கூடாது என்று சொல்லவரும் வள்ளுவர் அவ்வகையான வேற்றுமை பாராட்டும் குழுக்களைப் 'பல்குழு' என அழைக்கின்றார். ஒரு குழு மற்றொரு குழுவுடன் ஒத்துச் செல்லாத சமயங்களில், அவ்வக்குழுவின் நலன் பாதிக்கப்படும்பொழுது, பொதுமை கருதி விட்டுக் கொடுக்க மனமில்லாமல் தன் குழுவின் விருப்பத்தை அடைய முயற்சிப்பதால் கலகம் உண்டாகும். அப்பொழுது ஒரு குழு இன்னொரு குழுவை அழிக்க முயலும்.
பொதுநலன் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் நலத்தையே நாடி அரசியல், இனம், சமயம், மொழி என்னும் போர்வையிலே மறைந்து கொண்டு நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் குழுக்கள் வளர்ந்து ஆதிக்கம் செலுத்துவதற்கு இடந்தரக் கூடாது. பலவாகப் பிரிந்து இயங்கும் கூட்டங்களாகச் செயல்படுவது மக்களாட்சி முறையில் சிறந்த சிந்தனைகள் உருவாவதற்குத் துணை செய்யும் என்பது உண்மை. ஆனால் அக்குழுக்கள் நாட்டின் பொது நன்மைக்கு எதிராகச் செயல்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. மேலும் அரச தந்திரம் என்ற பெயரில் ஆட்சியாளர்களே போர்க்குணம் கொண்ட குழுக்கள் உருவாவதற்குக் காரணமாக அமைவது இன்னும் கேடானது. ஓர் பொறுப்புள்ள அரசு இதுபோன்ற செயல்களில் எக்காரணத்துக்காகவும் ஈடுபடக் கூடாது.
பலகுழுக்கள், அக்குழுக்கள் வழிப்பட்ட கலகங்கள் என்றால் நாட்டில் அமைதி குலையும். நாளும் கலகங்களை ஒடுக்குவதிலேயே அரசின் ஆற்றல் முழுதும் செலவாகும்.

உட்பகை:
உடனிருந்தே கொல்லும் நோய்போல அடுத்திருந்தே கெடுக்கின்ற நட்புறவினர் போன்ற பகைவர்களை உட்பகை எனக்கூறுவர். உட்பகையானது ஓர் அரசைப் பாழ்செய்யும் கொடுமைத் தன்மை கொண்டது. உட்பகைஞர் சூழ்ச்சியைக் கையாண்டு, உடனிருந்தே கெடுதி செய்வர். பகையை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் அரசைத் தடுமாறச் செய்ய சமயம் பார்த்துக் காத்திருப்பர். எப்படியேனும் குழப்பத்தினை உண்டுபண்ணி அக்குழப்பத்தில் தம் கருத்தான அழிவு வேலையை முடித்துக்கொள்ள முயல்வர் இவர்கள். இவ்விதம் நாட்டை அழிவுக்குள்ளாக்குவதை நோக்கமாக உடையவர்கள் நாட்டுப் பற்று இல்லாதவர்களாயிருப்பர். தன்னலம் மட்டுமே கருதும் உள்நாட்டுப் பகைவர்கள் நாட்டைப் பற்றியோ குடிமக்களைப் பற்றியோ சிறிதும் எண்ண மாட்டார்கள்; இவர்களுக்கு ஆதாயம் என்றால் நாட்டின் உரிமையைப் பலிகொடுக்கவும் தயங்கமாட்டார்கள். இவர்களால் நாட்டின் வளமும் கெடும். நாடு அயலாரால் அடிமைப் படுத்தப்படவும் நேரலாம். வெளிப்படை நோயினைத் தீர்ப்பது எளிது. புலப்படத் தோன்றாத நோயினை அறிவதும் அதனை நீக்குவதும் மிக அருமை. உட்பகை எதிர்பாராத நேரத்தில் தாக்கி நாட்டைக் கெடுத்து ஒழிக்கும். ஆகவே உட்பகையை அவ்வப்பொழுது ஒற்றர்களால் அறிந்து களையவேண்டும்,

'கொல்குறும்பு' குறிப்பதென்ன?

'கொல்குறும்பு' என்பதற்கு கொலைத் தொழிலினையுடைய குறும்பர், இராசாவுடன் பகை செய்யும் கூட்டம், நாடு பற்றி வாழும் பெருநெறி வேந்தனைக் காடு பற்றி நிற்கச் செய்யும் கொல்வினைக் குறும்பு, கொல்வினைக் குறும்பர், கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னர், கொலையையே தொழிலாகவுடைய கீழ்மக்கள், கொலைத்தன்மை மிக்க குறும்புடையவர்கள், காலிக் கூட்டம், கொலை புரியும் தீயர், இரகசியக் கூட்டங்களின் கொலை மிகுந்த அராஜகம், கொலைக்கு அஞ்சாத குறும்புத் தன்மையர், கொலைத் தொழிற் குறுநில மன்னர், கொலைத் தொழில் செய்யும் கொடியர், வன்முறைக் கும்பல், நாட்டிற்குள்ளிருந்து சமையம் வாய்க்கும் போதெல்லாம் போராலுங் கொள்ளையாலும் அரசனையும் குடிகளையுந் துன்புறுத்தும் அடங்காச் சிற்றரண் தலைவர், வேந்து அலைக்கும் குறும்பரும், வழிப் பறிப்பாரும், திருடரும், வஞ்சகம் பொய்பேசும் மனிதரும் புலி கரடி முதலிய கொடிய விலங்குகள், சிற்றரசர்கள் தங்களுக்குள் போரிட்டும் பலர் கூடிப் பேரரசை எதிர்த்தும் துன்புறுத்தும் சிற்றரசர்கள் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

வேந்தலைக்கும் கொல்குறும்பு:
கொல்குறும்பு என்ற தொடர்க்கு கொலைத் தொழிலை உடைய சிறுமைக் குணம் கொண்டோர் என்பது நேர் பொருள். ‘குறும்பர்’ என்பது நெறிமுறையில்லாது மக்களை வருத்துவோரைக் குறிப்பிடும் சொல். இத்தொடர்க்கு முன்னால் 'வேந்தலைக்கும்' என அடை கொடுக்கப்பட்டுள்ளது. 'வேந்தலைக்கும் கொல்குறும்பு' என்றது நாட்டை ஆள்பவர்களையே கதி கலங்க வைக்கும் கொலைத் தொழிலைக் கொண்ட குழுவினர் அதாவது அரசுடன் பகை செய்யும் வன்முறைக் கும்பல் எனப் பொருள்படும். இதற்கு வ சுப மாணிக்கம் 'அரசினை ஆட்டும் காலிக் கூட்டம்' எனப் பொருள் தருகிறார். கொலையே அக்குறும்பரின் இயல்பு என்று காட்ட வள்ளுவர் 'கொல் குறும்பு' என்று அவர்களை அழைக்கின்றார். காலிங்கர் 'நாடு பற்றி வாழும் பெருநெறி வேந்தனைக் காடு பற்றி நிற்கச் செய்யும் கொல்வினைக் குறும்பு' என விளக்குவார்.
கொல்குறும்பர் வெவ்வேறு வடிவில் செயல்படுவர். அரசை அலைக்கழித்து இறுதியில் ஆட்சியையே கொல்லக்கூடிய வலிமைமிக்க தீயோர் இவர்கள். மறைந்திருந்து தாக்கும் கொரில்லா உத்திகளைக் (Guerrilla tactics) கையாளும் வன்முறையாளர், பயங்கரவாதிகள் (terrorist group), தீவிரவாதிகள் (extremist group), போன்றோர் கொல்குறும்பரில் அடங்குவர். இன்னும் நில உடைமையாளர்கள் போன்றோர் சிலர் நிலப்பரப்புகளை வைத்துக்கொண்டும் வாணிகம் முதலிய துறைகளைக் கைப்பற்றியும் செல்வாக்குப் பெற்று அரசை அலைத்துத் தொல்லை கொடுக்கும் கூட்டமாக நிற்பார்கள்; அரசின் முயற்சிகளுக்கு இடையூறு செய்துகொண்டு, நாடு முன்னேறாதபடி பிற்போக்கிலேயே இருக்கச் செய்வார்கள். இவர்களுக்கு நாட்டுப் பற்று இல்லையாதலால் தங்கள் ஆடம்பர இன்ப வாழ்வுக்காக அறமற்ற எதனையும் செய்வார்கள்.
வளங்கொழிக்கும் நாட்டில் மட்டுமே இந்தக் கொல்குறும்பாம் வன்முறை அரசியற் கொள்கை வளராது இருக்க முடியும். தத்தங் கொள்கைகளை எடுத்து விளங்க இடந்தராதபோது இத்தகையோர் தலைமறைந்து நின்று கலகம் செய்வர். இவர்களில் தன்னலம் கருதாத புரட்சியாளர்களும் இருக்கலாம். இவர்களது கொள்கையினை வெளிப்படையாக விளக்க உரிமையும் தருதல் வேண்டும். அதற்கு முதலில் அவர்கள் அச்சுறுத்தும் கொல்தொழிலைக் கைவிடவேண்டும்.

'கொல்குறும்பு' என்ற தொடர் அரசுடன் பகை செய்யும் கொலைத்தொழில் கும்பல் எனப் பொருள்படும்.

பல மாறுபட்ட கருத்துக்களையுடைய கூட்டங்களும், அழிவினை உண்டாக்கக்கூடிய உட்பகையும், அரசுக்குத் துன்பம் தரும் கொலைத் தொழிலையுடைய வன்முறையாளரும் இல்லாததே நாடு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நீறு பூத்த நெருப்பு போல உள்ள அரசுப்பகை கொண்டவர்கள் இல்லாததே நாடு.

பொழிப்பு

முரண்பட்ட கொள்கைகளையுடைய பலவகையான கூட்டங்களும், அழிவுண்டாக்கும் உட்பகையும், அரசை அலைக்கழிக்கும் கொலை புரியும் வன்முறையாளரும் இல்லாதது நாடு.