இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0731தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு

(அதிகாரம்:நாடு குறள் எண்:731)

பொழிப்பு (மு வரதராசன்): குறையாத விளைபொருளும், தக்க அறிஞரும், கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.

மணக்குடவர் உரை: தப்பாமல் விளையும் நிலங்களும் தகுதி யுடையாரும் தாழ்வில்லாத செல்வரும் சேர்வது நாடு.
தள்ளா விளையுள்- மழையில்லாத காலத்தினும் சாவிபோகாத நிலம்.

பரிமேலழகர் உரை: தள்ளா விளையுளும் - குன்றாத விளையுளைச் செய்வோரும்; தக்காரும் - அறவோரும்; தாழ்வு இலாச் செல்வரும் - கேடு இல்லாச் செல்வமுடையோரும்; சேர்வது நாடு - ஒருங்கு வாழ்வதே நாடாவது:
(மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல்தொழிலோடும் இயையாமையின், 'விளையுள்' என்பது உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும் நிறைய உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறந்தோர், அந்தணர் முதலாயினார். 'நற்றவஞ்செய்வார்க்கு இடம்: தவம் செய்வார்க்கும் அஃது இடம்' (சீவக. நாமக.48) என்றார் பிறரும். இதனான் அழிவின்மை பெறப்பட்டது. கேடு இல்லாமை - வழங்கத் தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர். இதனான் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: குறையாத விளைச்சலும் நடுநிலைமை யாளரும் சோர்விலாத வணிகரும் உடையது நாடு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு.

பதவுரை: தள்ளா-குறையாத; விளையுளும்-விளைச்சலும், நிலமும்; தக்காரும்-நடுநிலையாளரும்; தாழ்விலா-சோர்வில்லாத, கேடில்லாத; செல்வரும்-பொருட்பெருக்குடையவரும், ஆள்வினையாளரும்; சேர்வது-பொருந்தியிருப்பது; நாடு-நாடு.


தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தப்பாமல் விளையும் நிலங்களும் தகுதி யுடையாரும் தாழ்வில்லாத செல்வரும்;
மணக்குடவர் குறிப்புரை: தள்ளா விளையுள்- மழையில்லாத காலத்தினும் சாவிபோகாத நிலம்.
பரிப்பெருமாள்: தப்பாமல் விளையும் நிலங்களும் தகுதி யுடையாரும் தாழ்வில்லாத செல்வரும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: தள்ளா விளையுள்- மழையில்லாத காலத்தினும் சாவிபோகாத நிலம். தக்கார்-குலத்தாலும் குணத்தாலும் அமைந்தார். தாழ்வு இல்லாத செல்வர் - பிறரால் இகழப்படாத செல்வர்; பிறர்க்குப் பயன்படும் செல்வர் என்றது.
பரிதி: மாறா விளைச்சலும், நல்லோரும் குறைவில்லாத செல்வரும்;
காலிங்கர்: மாறாது விளையும் விளைச்சலும், தகுதியால் சிறந்த கல்வியும் ஞானமும் உடைய சான்றோரும், நாளும் யாவர்க்கும் ஈயக் குறைபடாத செல்வம் உடையோரும்;
பரிமேலழகர்: குன்றாத விளையுளைச் செய்வோரும் அறவோரும் கேடு இல்லாச் செல்வமுடையோரும்;
பரிமேலழகர் குறிப்புரை: மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல்தொழிலோடும் இயையாமையின், 'விளையுள்' என்பது உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும் நிறைய உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறந்தோர், அந்தணர் முதலாயினார். 'நற்றவஞ்செய்வார்க்கு இடம்: தவம் செய்வார்க்கும் அஃது இடம்' (சீவக. நாமக.48) என்றார் பிறரும். இதனான் அழிவின்மை பெறப்பட்டது. கேடு இல்லாமை - வழங்கத் தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர். இதனான் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது.

'தப்பாமல் விளையும் நிலங்களும் தகுதி யுடையாரும் தாழ்வில்லாத செல்வரும்' என்று பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'மாறா விளைச்சலும், நல்லோரும் குறைவில்லாத செல்வரும்' என்றார். காலிங்கர் 'மாறாது விளையும் விளைச்சலும், தகுதியால் சிறந்த கல்வியும் ஞானமும் உடைய சான்றோரும், நாளும் யாவர்க்கும் ஈயக் குறைபடாத செல்வம் உடையோரும்' என்று கூறினார். பரிமேலழகர் 'குன்றாத விளையுளைச் செய்வோரும் அறவோரும் கேடு இல்லாச் செல்வமுடையோரும்' எனப் பொருள் உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'குறையாத விளைவை உண்டாக்கும் உழவரும் நடுநிலையுடையவரும் பிறரால் இகழப்படாத ஈத்துவக்கும் செல்வரும்', 'வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுப் பொருட்கள் விளையக்கூடிய நிலங்களும் அந்த நிலங்களில் பாடுபடத் தக்க உழவாளிகளும் குற்றமற்ற வழியில் செல்வத்தை வளர்க்கக்கூடிய வணிகரும் சேர்ந்துள்ளது', 'காலந் தப்பாது உழவுசெய்து விளை பொருள் எடுப்பாரும், நன்னெறி ஒழுகுவோரும், கேடில்லாத செல்வம் உடையோரும் ஒருங்கு இருக்குமிடமே', 'குறையாத விளைபொருள்களும், அறவோரும், கேடு இல்லாத செல்வம் உடையோரும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குறையாத விளைச்சலும், நடுநிலைமையாளரும், முயற்சியில் தாழ்வில்லாத ஆள்வினைச் செல்வரும் என்பது இப்பகுதியின் பொருள்.

சேர்வது நாடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சேர்வது நாடு.
பரிப்பெருமாள்: சேர்வது நாடு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இம்மூன்றும் எல்லா உயிர்க்கும் ஆகலின் சேரவேண்டும் என்று கூறப்பட்டது.
பரிதி: சேர்வது நாடு என்றவாறு.
காலிங்கர்: செறிந்து இயல்வது நாடு என்றவாறு.
பரிமேலழகர்: ஒருங்கு வாழ்வதே நாடாவது.

சேர்வது நாடு/செறிந்து இயல்வது நாடு/ஒருங்கு வாழ்வதே நாடாவது என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருங்கு வாழ்வதே நாடு', 'நல்ல நாடு', 'தக்க நாடாகும்', 'ஒருங்கு வாழ்வதே நாட்டின் சிறப்பாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பொருந்தியுள்ள இடமே நாடாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குறையாத விளைச்சலும், நடுநிலைமையாளரும், முயற்சியில் தாழ்வில்லாத ஆள்வினைச் செல்வரும் பொருந்தியுள்ள இடமே நாடாகும் என்பது பாடலின் பொருள்.
'தாழ்விலாச் செல்வர்' யார்?

மிகை இயற்றலும், நேர்மையான பகிர்ந்தளிப்பும், தளராத முயற்சியும் திரண்டு இருப்பது நாடாம்.

குறையாத விளைபொருளும், நடுநிலை தவறாத சான்றோர்களும், சோர்வில்லாத செல்வமுடையோரும் பொருந்தியுள்ள இடமே நாடாகும்.

தள்ளா விளையுள்: இத்தொடர்க்குத் 'தப்பாமல் விளையும் நிலங்கள்', 'மாறாது விளையும் விளைச்சல்' 'குன்றாத விளையுளைச் செய்வோர் என விளையுள் என்றதற்கு நிலம், விளைச்சல், உழவர் என்னும் பொருளில் உரை கண்டனர். நாடு என்பதே நிலப்பரப்பைக் குறிப்பதால் விளைபுலம் என்பதினும், விளைச்சல் என்பது நாட்டின் சிறப்பை நன்கு விளக்கும். விளைச்சல் எனக் கொண்டாலும் விளைவிப்போர் எனக் கொண்டாலும் பொருளில் பெரிதும் வேறுபாடு தோன்றவில்லை.
உயிர் வாழ்விற்கு உணவுதான் அடிப்படை என்பதால் விளையுள் என்பது வேளாண்பொருள் குறித்தது எனக் கொண்டனர். ஆயினும் ‘விளையுள் என்பது மக்களால் விளைவிக்கப்படும் அனைத்துப் பொருள்களையும் குறிப்பதாகக் கொள்வது சிறக்கும். தள்ளா விளையுள் என்பது 'குறையாத விளைபொருள்' எனப் பொருள்படும். குறையாத விளைபொருள் தரும் நாடு உறுபசியும் ஓவாப்பிணியும் அறியாததாக விளங்கும்.

தக்கார்: தக்கார் என்ற சொல் பொதுவாகத் தகுதியுடையவரைக் குறிப்பது. இதற்கு இங்கு திறனுடையார், நல்லோர், குணநலம் வாய்ந்த சான்றோர், நன்னெறி ஒழுகுவோர் என்றும் பொருள் கூறுவர். நடுவுநிலைமையைத் ‘தகுதி’ என்றும் (நடுவுநிலைமை 111) நடுநிலையாளரைத் ‘தக்கார்’ என்றும் (நடுவுநிலைமை 114) குறளில் ஆளப்பட்டுள்ளது. உண்டாக்கப்பட்ட பொருளைப் பகிர்ந்தளிப்பதில் நேர்மை கடைப்பிடிக்க வேண்டுமென்பதால் நடுநிலையாளர் ஒரு நாட்டிற்கு இன்றியமையாதவர் ஆவர். ஆகையால் தக்கார் என்பதை இங்கு வள்ளுவர் நடுநிலையாளர் என்ற பொருளிலேயே ஆண்டுள்ளதாகத் தோன்றுகிறது.
ஆக்கம் பெருகினால் போதாது; அதைச் சரிவரப் பங்கிட வேண்டும். நடுவு நிலையில் இருந்து, பொருளாக்கத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் அவரவர்கட்குத் தக்கபடி பங்கிடுதல் வேண்டும் என்ற பொருளில் தள்ளா விளையுளைச் சார்ந்து தக்காரும் வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

சேர்வது: இச்சொல் சேர்ந்திருப்பது என்ற பொருள் தரும், இக்குறள் தள்ளாவிளையுள், தக்கார், தாழ்விலாச்செல்வர் ஆகிய மூன்றும் சேர்ந்திருத்தலைச் சொல்கிறது. இவற்றுள் தள்ளாவிளையுள் என்பது அஃறிணைப் பொருள். இது தக்கோர் செல்வர் முதலிய உயர்திணைப் பொருளோடும் சேர்தல் என்ற தொழிலோடும் இயையாமை கருதி பரிமேலழகர் தள்ளாவிளையுள் என்னும் தொழில் அதனைச் செய்யும் உழவரை உணர்த்துதலாகக் காரியவாகு பெயராகக் கொண்டார். ஆனால் தேவநேயர் 'இயற்கையுஞ் செயற்கையுமாகிய இருவகை விளையுள் இருப்பதனாலும் 'சேர்வது' என்பது கூடியிருப்பது அல்லது பொருந்தியிருப்பது என்றே பொருள்படுதலாலும், பலவாயினும் எண்ணுத்திணை விரவுப்பெயர் வருதல் (தொல்.சொல். கிளவி 51) வழுவன்மையானும் உயர்திணைப் பெயர்கள் தொழிலோடு இயைந்து வரலாம்; வழுவன்று என்க' எனப் பரிமேலழகரை மறுப்பார்.

தள்ளாவிளையுள் என்று பொருளாக்கத்தை (Production)யும் தக்கார் என்பது பொருளினைப் பங்கிடுதலை(Distribution)யும் செல்வர் என்பது வாணிகத்தினையும் இக்குறள் சுட்டுகின்றது எனப் பொருளியல் கலைச்சொற்கள்வழி தெ பொ மீனாட்சிசுந்தரம் விளக்குவார்.
நாட்டில் வாழும் உயிர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவதாகவும் அமைதியாக வாழ்ந்து இன்புறுவதற்கு ஏற்றதாகவும் நாடு இருக்கவேண்டும். இல்லையானால் அது நல்லநாடாக அறியப்படாது. குறையாத விளைபொருள் வேண்டும்; அவை நடுநிலையாளர் மூலம் நேர்மையான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுத் துய்க்கப்பட வேண்டும்; குற்றமில்லா வாணிகம் செய்யும் செல்வம் உடையவர்கள் வேண்டும் என்கிறது பாடல்.

'தாழ்விலாச் செல்வர்' யார்?

'தாழ்விலாச் செல்வர்' என்றதற்குத் தாழ்வில்லாத செல்வர், குறைவில்லாத செல்வர், நாளும் யாவர்க்கும் ஈயக் குறைபடாத செல்வம் உடையோர், கேடு இல்லாச் செல்வமுடையோர் (கேடு இல்லாமை - வழங்கத் தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர்), கேடில்லாத செல்வம் உடையவர், எவ்வகையிலும் தாழ்வு படாத நல்ல செல்வர், சோர்விலாத வணிகர், குற்றமற்ற வழியில் செல்வத்தை வளர்க்கக்கூடிய வணிகர், வளம் குன்றாச் செல்வர் என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.

ஒரு நாட்டிற்குச் செல்வர்கள் இன்றியமையாக் கூறு என வள்ளுவர் குறிப்பிடுகின்றாரே! அவர்கள் நாட்டிற்கு அவ்வளவு தேவையானவர்தாமா? வள்ளுவர் வெறும் செல்வர் என்று கூறாமல் தாழ்விலாச் செல்வர் எனச் சொல்லியுள்ளார் என்பது நோக்கத்தக்கது. தாழ்விலாச் செல்வர் என அவர் யாரைக் குறிப்பிடுகிறார்? கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வரைக் குறிப்பதாகப் பெரும்பாலோர் பொருள் கூறினர். அதாவது இது அறச் செயல்களுக்காகக் கொடுப்பவர்களைக் குறித்தது என்பர் இவர்கள். செல்வம் உடையவர்க்குத் தாழ்வாவது ஈயாமல் இருப்பதுதான் ஆதலால் 'தாழ்வு இலாச் செல்வர்' ஈவாரைக் குறிக்கும் என விளக்குவர். தாழ்விலாச் செல்வர் என்றதற்குக் கேடில்லாச் செல்வம் உடையோர் என்றவர்கள் தீதின்றி சேர்த்த பொருள் அல்லது பிறரைத் தாழ்த்தாது பொருள் பெற்றவர்கள் என்றனர். இவர்களது செல்வம் பிறர்க்கு பயன்படும் செல்வம். இவர்கள் இகழப்படாத செல்வர் ஆவர்.

தாழ்விலாச் செல்வர் என்ற தொடர்க்குச் சோர்விலாத வணிகர் என்று வ சுப மாணிக்கம் பொருள் கூறுவார். மேலே சொன்னபடி தெ பொ மீனாட்சிசுந்தரமும் இத்தொடர் வணிகரைக் குறிப்பதாகவும் கொள்வர். வணிகர்கள் புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து தேடி அலைந்து பொருள் குவிப்பவர்களாம். ஆள்வினைத் திறனுடைய இவர்களை ஆங்கிலத்தில் entrepreneur எனச் சொல்வர். இத்தகைய வணிகர்கள் பெரும்பொருள் படைக்க வல்லவர்களாதலால் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பவர்கள் ஆகின்றனர். இவர்களையே வள்ளுவர் 'தாழ்விலாச் செல்வர்' என்கிறார். விளை பொருட்களை நாட்டின் பல பகுதிகளுக்குப் பகிர்ந்தளிக்கவும் பன்னாடுகளுக்குக் கொண்டு செல்லவும் தம் நாட்டில் விளையாப் பொருட்களை வேறு நாடுகளிலிருந்து வாங்கி வரவும் ஊக்கமிகு வணிகர்கள் வேண்டும் என்பதாலேயே அவர்களைத் 'தாழ்விலாச் செல்வர்' என்றழைத்து சோர்வில்லாத அச்செல்வரின் இன்றியமையாமையை இக்குறளில் சுட்டியுள்ளார் வள்ளுவர். வாணிபத்தாற் பொருள் பெருக்குபவரும் பொருந்தி வாழுமிடமே நாடென்று சிறப்பித்தற்குரியதாகும்.

'தாழ்விலாச் செல்வர்' என்பது சோர்விலாத வணிகரைக் குறிக்கும் தொடர்.

குறையாத விளைச்சலும், நடுநிலைமையாளரும், முயற்சியில் தாழ்வில்லாத ஆள்வினைச் செல்வரும் கூடிப் பொருந்தியுள்ள இடமே நாடாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வேளாண்மை சான்றாண்மை, தாளாண்மை இன்றியமையாது வேண்டுவது நாடு

பொழிப்பு

குறையாத விளைச்சலும் நடுநிலையாளரும் சோர்விலாத செல்வரும் உடையது நாடு.