இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0740ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
வேந்தமைவு இல்லாத நாடு

(அதிகாரம்:நாடு குறள் எண்:740)

பொழிப்பு (மு வரதராசன்): நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைந்திருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமற் போகும்.

மணக்குடவர் உரை: மேற்கூறியவற்றால் எல்லாம் அமைந்ததாயினும் பயனில்லையாம்; வேந்தனது அமைதியை உடைத்தல்லாத நாடு.
இதுநாட்டுக்கு அரசனும் பண்புடையனாகல் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: வேந்து அமைவு இல்லாத நாடு - வேந்தனோடு மேவுதல் இல்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே - மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனுடைத்தன்று.
(வேந்து அமைவு எனவே, குடிகள் அவன்மாட்டு அன்புடையராதலும்,அவன்தான் இவர்மாட்டு அருளுடையனாதலும் அடங்கின. அவைஇல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவைஇரண்டு பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.)

இரா இளங்குமரன் உரை: எவ்வளவு வளங்களைத் தன்னிடத்துப் பொருந்தி இருப்பினும் சிறந்த ஆட்சியைப் பொருந்தாத நாடு பயனில்லா நாடேயாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே வேந்தமைவு இல்லாத நாடு.

பதவுரை: ஆங்கு-அங்கே (வேண்டிய)படி; அமைவு-(எல்லா வளங்களும்) நிறைதல்; எய்தியக்கண்ணும்-இருந்ததாயினும்; பயம்-பயன், நன்மை; இன்றே-இல்லையே; வேந்து-அரசு, ஆட்சித் தலைமை, அரசன்; அமைவு-மேவுதல், பொருந்துதல்; இல்லாத-இல்லாத; நாடு-நாடு.


ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மேற்கூறியவற்றால் எல்லாம் அமைந்ததாயினும் பயனில்லையாம்;
பரிப்பெருமாள்: மேற்கூறியவற்றால் எல்லாம் நேர்ந்ததாயினும் பயனில்லையாம்;
பரிதி: நாட்டுக்கு உறுப்பானது எல்லாம் உண்டாகிலும்;
காலிங்கர்: அவ்வண்ணமே கீழ்ச்சொல்லி வந்த நன்மைகள் எல்லாம் முற்றுப்பெற்ற இடத்தும் யாதானும் ஒரு பயன் இலதே;
பரிமேலழகர்: மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனுடைத்தன்று.

'மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனில்லையாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மேலைச் சிறப்பெல்லாம் இருந்தும் பயனில்லை', 'மேலே கூறிய நலங்களெல்லாம் அமைந்தபோதிலும் அவற்றால் யாதொரு பயனுமில்லை', 'அப்படி எல்லா வாழ்க்கை வசதிகளும் சுலபமாகக் கிடைக்கக்கூடியதாக அமைந்திருந்தாலும் பயனற்றது', 'மேற்கூறியாங்கு எல்லாம் பொருந்தி இருப்பினும், பயன் அற்றதாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மேலே சொல்லப்பட்ட வளங்களெல்லாம் அமைந்தபோதிலும் பயனில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

வேந்தமைவு இல்லாத நாடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வேந்தனது அமைதியை உடைத்தல்லாத நாடு.
மணக்குடவர் குறிப்புரை: இதுநாட்டுக்கு அரசனும் பண்புடையனாகல் வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: வேந்தனது அமைதியை உடைத்தல்லாத நாடு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நாட்டுக்கு அரசனும் பண்புடையனாக வேண்டுமென்றது.
பரிதி: நாட்டாண்மைக்காரன் நன்மையில்லாத நாடு நாடல்ல என்றவாறு.
காலிங்கர்: யாது எனின் கொற்றவன் காவல் முற்றுப் பெறுதல் இல்லாத நாடானது என்றவாறு.
பரிமேலழகர்: வேந்தனோடு மேவுதல் இல்லாத நாடு;
பரிமேலழகர் குறிப்புரை: வேந்து அமைவு எனவே, குடிகள் அவன்மாட்டு அன்புடையராதலும்,அவன்தான் இவர்மாட்டு அருளுடையனாதலும் அடங்கின. அவைஇல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவைஇரண்டு பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.

'வேந்தனது அமைதியை உடைத்தல்லாத/நன்மையில்லாத/காவல் முற்றுப் பெறுதல் இல்லாத நாடு' என்று பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்லாட்சி இல்லாத நாடு', 'நல்லரசு வாய்க்காத நாட்டிற்கு', 'நல்ல அரசாட்சி அமையாத நாடு', 'அரசனோடு பொருந்துதல் இல்லாத நாடு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நல்லரசு அமையாத நாட்டிற்கு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மேலே சொல்லப்பட்ட வளங்களெல்லாம் அமைந்தபோதிலும் பயனில்லை வேந்தமைவு இல்லாத நாட்டிற்கு என்பது பாடலின் பொருள்.
'வேந்தமைவு' குறிப்பது என்ன?

நாட்டில் எல்லா வளம் இருந்தும் தலைவன் சரியில்லை என்றால் என்னாம்?

மேற்சொன்ன வளங்களெல்லாம் உடையதாக இருந்தாலும் அரசு இயந்திரம் சரியாக இயங்கவில்லையென்றால் பயன் கிட்டாது.
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் (புறநானூறு 186 பொருள்: வேந்தனாகிய உயிரை யுடைத்து பரந்த இடத்தையுடைய உலகம்; அதனால் இவ் வுலகத்தார்க்கு நெல்லும் உயிரன்று; நீரும் உயிர் அன்று) என்று ஒரு நாட்டிற்கு அரசுமுறையே உயிர்நிலையாம் என்கிறது இச்சங்கப் பாடல். நாட்டிலுள்ள மக்கள் ஒத்து வாழ, அரசமைப்பு மிக மிக இன்றியமையாத ஒன்று; அரசமைப்பை நடத்திச் செல்ல ஓர் தலைவன் வேண்டும். இந்த அரச அமைப்பையே வேந்து என்ற சொல்லால் இக்குறள் குறிக்கிறது. வேந்தமைவு என்பது ஆட்சித்தலைவனுக்கும் மக்களுக்குமிடையே நல்லுறவு நிலவுதலைக் குறிக்கும் என்பர். அரசமைப்பு சிறப்பாக இயங்கினால்தான் நாட்டில் எவ்வளவு வளங்கள் இருந்தபோதிலும் வளங்களின் பயனைத் துய்க்க முடியும். அரசாட்சியின் செம்மை கேடுற்ற ஆட்சியில் வளங்களின் பயனும் கெட்டுவிடும்.

வளங்களை இயற்கையில் கொண்டிருந்தாலும், அல்லது வளங்களைச் செயற்கையாகப் பெற்றிருந்தாலும், நாட்டில் நல்ல அரசாட்சி அமைதல் வேண்டும்; அப்பொழுதுதான் வளங்களை ஒருங்கிணைத்து அதன் முழுப்பயன்களையும் எய்தலாம். இவ்வுலகம் நன்கு நடைபெறுதற்கும் நடைபெறாததற்கும் அரசமைப்பு காரணம் என்பதைப் பல இடங்களில் குறள் கூறியுள்ளது. ஆட்சியில் குழப்பம். நிர்வாகத்தில் சீர்கேடு, எங்கும் கையூட்டு எதற்கும் கையூட்டு என்ற நிலையில் அரசு எந்திரம் இயங்கினால் வளங்களினால் பயன் பெறமுடியாது என்பதைச் சொல்ல வந்தது இப்பாடல்.

ஆங்கமைவு என்றது அங்கே சொன்னபடி அதாவது முன்னே உள்ள 9 பாடல்களில் கூறியபடி அமைந்திருந்தாலும் என்ற பொருள் தருவது. அக்குறட்பாக்களில் கூறப்பட்ட, நாட்டில் உள்ள, அமைவுகளாவன:
1. தள்ளா விளையுள், நடுநிலையாளர், கேடில்லாச் செல்வர் பொருந்தியிருத்தல்.
2. பெரும்பொருளுடைமை, கேடில்லாமல் மிகுதியாக விளைச்சல் உண்டாவது.
3. அரசு வேண்டும் வரிப்பொருளைத் தரும் குடிகள் உள்ளமை.
4. பசி, பிணி, பகை இல்லாதிருப்பது.
5. பல்குழு, உட்பகை, கொல்குறும்பு இன்மை.
6. கேடு அறியாதது.
7. நீர்வளம், மலைவளம், வல்லரண் கொண்டிருப்பது.
8. பிணியின்மை, செல்வம், விளைவு, இன்பம், பாதுகாவல் என்ற அணிகள் பூண்டிருப்பது.
9. தன்னிறைவு பெற்றிருப்பது.

'வேந்தமைவு' குறிப்பது என்ன?

'வேந்தமைவு' என்றதற்கு அரசனும் பண்புடையனாக வேண்டும், நாட்டாண்மைக்காரன் நன்மையாய் இருத்தல், கொற்றவன் காவல் முற்றுப் பெறுதல், வேந்தனோடு மேவுதல், நல்ல அரசன் பொருந்தியிருத்தல், நல்ல வேந்து முழு உரிமையுள்ள ஆட்சி அமையப்பெறுதல், நல்லாட்சி உடையது, நல்லரசு வாய்த்தல், நல்ல அரசாட்சி அமைதல், சிறந்த ஆட்சியைப் பொருந்தியிருத்தல், அரசனோடு குடிகள் அன்போடு மேவுதல், அரசனோடு பொருந்துதல், வேந்தனோடு ஒற்றுமையாக வாழும் குடிகள், அரசியல் அமைதி என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.

பரிப்பெருமாள் 'நாட்டிற்கு அரசனும் பண்பு உடையன் ஆக வேண்டும்' என இக்குறளுக்குக் கருத்துரைத்தார். 'வேந்து அமைவுஎன்பது வேந்தனோடு மேவுதல்; எனவே, குடிகள் அவன் -மாட்டு அன்புடையராதலும், அவன்தான் இவர்மாட்டு அருள் உடையனாதலும் அடங்கின' என்று பரிமேலழகர் உரை செய்கிறார்.
இவற்றினும் 'கொற்றவன் காவல் முற்றுப்பெறுதல் வேண்டும்' என்ற காலிங்கர் உரை மேலானது. வேந்தனது காவல் அமைதி பற்றி இவர் பேசுகிறார். அரசுக் காவல் என்பது செங்கோன் முறை அஃதாவது நல்லாட்சியைக் குறிக்கும். நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல் (படைமாட்சி 770 பொருள்: போரைக் கண்டு அஞ்சி ஓடாது நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமை தாங்கும் தலைவர் இல்லாதபோது படை இல்லையாய் விடும்.) என்பது போன்ற நடையினது இக்குறள் என்பார் இரா.சாரங்கபாணி.

'வேந்தமைவு' நல்ல அரசு அமைந்திருத்தலைக் குறிக்கும்.

மேலே சொல்லப்பட்ட வளங்களெல்லாம் அமைந்தபோதிலும் பயனில்லை நல்லரசு அமையாத நாட்டிற்கு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அரசமைப்பு சீராக இருப்பது நாடு மிக மிக வேண்டுவது.

பொழிப்பு

மேலே சொல்லப்பட்ட வளங்களெல்லாம் அமைந்தபோதிலும் பயனுமில்லை, நல்லரசு அமையாத நாட்டிற்கு.