இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0721 குறள் திறன்-0722 குறள் திறன்-0723 குறள் திறன்-0724 குறள் திறன்-0725
குறள் திறன்-0726 குறள் திறன்-0727 குறள் திறன்-0728 குறள் திறன்-0729 குறள் திறன்-0730

ஒன்றைப் பற்றி நன்கு திட்டவட்டமாக அறிந்து வைத்திருந்தால், அவைக்கு அஞ்ச வேண்டியிராது.
- தமிழண்ணல்

அவை அஞ்சாமையாவது அவையின்கண் பயப்படாமல் இருந்து உறுதியுடன் தம் கருத்துக்களைச் சொல்வதைக் குறிக்கும். அவையினர் தமது அறிவைத் தாழ்வாகக் கருதுவரோ என்ற தாழ்வுணர்ச்சியும் தம் கருத்தை ஏற்பார்களோ மாட்டார்களோ என்ற ஐயம் காரணமாகவும். கூச்சத்தாலும் பழக்கமின்மையாலும் அவைமுன் பேசும்போது அச்சம் ஏற்படக்கூடும். அவையைக் கண்டு அஞ்சாமல் நின்று பேசும் திறமையைக் கற்றோர் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அவையஞ்சாமை

சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்திப் படிக்கத்தக்க அதிகாரங்கள். அவையைக் கண்டு அஞ்சாமல் இருந்து பேசுதல் அவையஞ்சாமையாம். இது 'அவையினருக்குப் பயப்படாமல் இருத்தல்' என்ற பொருளைத் தரும். கல்விகேள்விகளில் சிறந்தவரே அவையஞ்சாமல் பேசவல்லார் என்பது வள்ளுவர் கருத்தாதலால் கற்ற என்ற சொல்லை பலமுறை இவ்வதிகாரத்தில் ஆள்கின்றார். கற்ற அனைவருக்கும் அவையஞ்சாமை வேண்டும்.

ஒரு கருத்தை அல்லது தாம் விரும்பும் திட்டத்தை, ஈர்ப்புடைய சொற்களில், அவையோர் மனக்கொள்ளும் வகையில் அஞ்சாமல் சொல்லும் சொல்லும் திறன் பேசப்படுகிறது. அவையில் அஞ்சாமல் பேசுவதற்குச் சொற்றிறமை வேண்டும். சொற்களஞ்சியப் புலமையாளர் - மிகுதியான சொற்களை அறிந்தவர் - சொல்வன்மை உடையவராயிருப்பர். மொழியாளும் திறமையை வற்புறுத்த, அவையறிதலுக்குப் பிறகு இங்கும், அடுத்தடுத்து இரண்டு அதிகாரங்களில் இரண்டு குறள்களில் 'சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்' என்பதை ஈற்றுப் பகுதியாக வைக்கிறார் வள்ளுவர்.
அவையஞ்சாமை ஒருவன் பெற்ற கல்வியறிவால் எளிதில் கைவரப் பெறும். அதை இன்னும் வளர்த்துக்கொள்ள தம்மினும் மேலாகக் கற்றவர்கள் உள்ள அவைக்குச் சென்று மேலும் பாடம் கற்றுக் கொள்ளலாம். அவையில் அஞ்சாமல் எதிர்மொழிதற்கு நிறையக் கற்றிருக்க வேண்டும். பல்துறை நூல்களை - இலக்கண, தருக்க நூல்கள் போன்றவற்றைத் தெரிந்திருத்தல் நலம் என்கிறது அதிகாரம்.
அவையில் பேசுவது போர்க்களத்தில் நிற்பதுபோல் என்றும் வாள் என்னும் போர்க்கருவி நூல் போன்றது என்றும் சொல்லி அவையஞ்சாமை பெருமைப்படுத்தப்படுகிறது.

குழுவாகக் கூடி கலந்துரையாடுவது குறிகொண்ட பொருளைச் செம்மைப்படுத்த உதவும். ஒருவன் தான் கற்ற கல்வியறிவைப் பகிர்ந்து கொள்ளும் போதுதான் பொது நன்மைக்கு அதை எய்துவிக்க முடியும். கல்வியறிவிற் சிறந்திருந்தாலும் அவையில் கருத்துரைத் திறனுடன் பேசுவதற்குத் தனித்திறமையும் துணிவும் வேண்டும் அவை அஞ்சும் ஒருவர்க்குத் தம் கருத்தை கூட்டத்தில் எடுத்துரைத்தல் இயலாது.

இன்று நாடாளுமன்றம், சட்டப்பேரவை, அரசியல் பொதுமேடைகள், சமுதாயக்கூடங்களின் மாநாடுகள், கருத்தரங்குகள், இயக்குநர் குழும அமர்வு (Board of Directors Meeting), பணியிடங்களில் அடிக்கடி நடைபெறும் கூட்டங்கள் போன்ற அவைகளை நாம் அறிவோம். குறளில் புல்லவை (719), வல்லவை (721), நுண்ணவை (726), நல்லவை (728), நல்லாரவை (729) என்று அவை வகைகள் குறிக்கப்பெறுகின்றன.

அவையஞ்சாமை அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 721ஆம் குறள் சொல்லின் தொகைகளை அறிந்த தெளிவுடையோர் பேசும்வகை அறிந்து, கற்றுவல்ல பொருள்களை, வாய்தவறிக் குற்றமாகக் கூறார் என்கிறது.
  • 722ஆம் குறள் கற்றவர்முன் தாம் கற்றவற்றை அவர் மனங்கொள்ளும் வகையில் பேச வல்லவர் கற்றவருள் நன்கு கற்றார் எனச்சொல்லப்படுவார் எனக் கூறுகிறது.
  • 723ஆம் குறள் பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவை எதிர்கொள்வது எளிது; அவையின்கண் அஞ்சாது சொல்லும் துணிவு கொள்வது அரிய செயலாகும் எனச் சொல்கிறது.
  • 724ஆம் குறள் தாம் கற்றவற்றைக் கற்றார் அவையில் அவர் ஏற்கும்படி சொல்லி தம்மினும் மிகக் கற்றவரிடத்து மிகுதியை அறிந்து கொள்க என்கிறது.
  • 725ஆம் குறள் மன்றத்தில் அஞ்சாமல் மறுமொழி சொல்ல, முறையாக, வேண்டிய அளவறிந்து கற்க வேண்டும் எனச் சொல்கிறது.
  • 726ஆம் குறள் வீரம் இல்லாதவர்க்கு வாளோடு என்ன உறவு? நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன தொடர்பு? என்கிறது.
  • 727ஆம் குறள் அவையில் பேசுவதற்கு அஞ்சுபவன் கற்ற நூல் பகை நடுவில் பேடி பிடித்த கூரியவாள் போலும் எனச் சொல்கிறது.
  • 728ஆம் குறள் நல்லோர் அவையில் அவர் ஏற்கும் வகை சொல்ல முடியாதவர் பல நூல்களைக் கற்றிருந்தாலும் பயன்படுதல் இலர் என்கிறது.
  • 729ஆம் குறள் கற்றறிந்தும் நல்லவர் அவையில் பேச அஞ்சுபவர் கல்லாதவரைவிடக் கீழ் என்பர் எனக் கூறுகிறது.
  • 730ஆவது குறள் அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவற்றைக் அவையோர் ஏற்பச் சொல்ல இயலாதவர், அவ்விடத்து இருந்தாலும் இல்லாதவராகவே இருப்பார் என்கிறது.

அவையஞ்சாமை அதிகாரச் சிறப்பியல்புகள்

கற்றவராகவே இருந்தாலும், கருத்துக்களை பயமின்றி ஓர் அவையில் வெளிப்படுத்துபவரே உலகோரால் போற்றப்படுவர் என்கிறது கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் (722) என்ற பாடல். கற்றவர்கள் அல்லாதவர்களுக்கிடையில் எளிதில் பேசிவிடலாம். ஆனால் கற்றார் அவையில் அச்சமின்றி அங்கு கூடியுள்ளோர் உள்ளங்கொள்ளுமாறு சொல்வது மிகக் கற்றவர்க்கே இயலும் என்பதையும் தெரிவிப்பது இக்குறள்.

வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன் நுண்ணவை அஞ்சு பவர்க்கு (726) என்று வீரம் இல்லாதவர்க்கு வாளோடு என்ன உறவு? நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன தொடர்பு? என நச்சென்று கேள்விகள் எழுப்புகிறது இக்குறள்.
குறள் திறன்-0721 குறள் திறன்-0722 குறள் திறன்-0723 குறள் திறன்-0724 குறள் திறன்-0725
குறள் திறன்-0726 குறள் திறன்-0727 குறள் திறன்-0728 குறள் திறன்-0729 குறள் திறன்-0730