இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0722



கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லுவார்

(அதிகாரம்:அவையஞ்சாமை குறள் எண்:722)

பொழிப்பு (மு வரதராசன்): கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

மணக்குடவர் உரை: கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படுவார், தாம் கற்றதனைக் கற்றார் முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்லவல்லார்.
இது கற்றாரென்பார் அவையஞ்சாதார் என்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: கற்றாருள் கற்றார் எனப்படுவர்- கற்றார் எல்லாரினும் இவர் நன்கு கற்றார் என்று உலகத்தாரால் சொல்லப்படுவார்; கற்றார் முன் கற்ற செலச் சொல்லுவார் - கற்றார் அவைக்கண் அஞ்சாதே தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும் வகை சொல்ல வல்லார்.
(உலகம் அறிவது அவரையே ஆகலின் அதனால் புகழப்படுவாரும் அவர் என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: கற்றவர் அவையில் தாம் கற்றவற்றை அவர் உள்ளம் கொள்ளுமாறு சொல்லும் வன்மை உடையார் கற்றார் எல்லாரினும் இவர் நன்கு கற்றார் என்று சொல்லப்படுவார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்.

பதவுரை: கற்றாருள்-கற்றவர்களுள்; கற்றார்-கற்றவர்; எனப்படுவர்-என்று சொல்லப்படுவார்; கற்றார்முன்-கற்றவர் கண்; கற்ற-கற்கப்பட்டவை; செல-மனங்கொள்ள; சொல்லுவார்-சொல்லக்கூடியவர்.


கற்றாருள் கற்றார் எனப்படுவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படுவார்;
பரிப்பெருமாள்: கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படுவார்;
காலிங்கர்: உலகத்துக் கற்றவர் பலருள்ளும் இவர் பெரிதும் கற்றார் என்று அக்கற்றவர் தம்மிலே முன் எடுத்து உரைக்கப்படுவார்;
பரிமேலழகர்: கற்றார் எல்லாரினும் இவர் நன்கு கற்றார் என்று உலகத்தாரால் சொல்லப்படுவார்;

'கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படுவார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கற்றவருள் கற்றார் எனப்படுவார் யார்?', 'கற்றவருள் மிகச்சிறந்த கற்றவர் எனப்படுபவர்', 'கற்றவர்களால் கற்றவராக மதிக்கப்படுவார்கள்', 'படித்தவருள் படித்தவராக மதிக்கப்படுவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கற்றவருள் நன்கு கற்றார் எனச்சொல்லப்படுவார் என்பது இப்பகுதியின் பொருள்.

கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் கற்றதனைக் கற்றார் முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்லவல்லார்.
மணக்குடவர் குறிப்புரை: இது கற்றாரென்பார் அவையஞ்சாதார் என்று கூறிற்று.
பரிப்பெருமாள்: தாம் கற்றதனைக் கற்றார் முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்லவல்லார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கற்றார் என்பதூஉம் அவையஞ்சாதாவரையே என்று கூறப்பட்டது.
பரிதி: கற்றோர் கூடின கூட்டத்திலே தாம் கற்ற கல்வியைச் செலுத்துதல், அமிர்தமானதை நல்லோர் முன்னே வைத்தற்கு ஒக்கும்; கல்லார்முன் சொல்லுதல் மரப்பாவைமுன் வைத்தற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின் கற்றோர் முன்னர்த் தாம் கற்றவற்றை ஏற்கச் சொல்ல வல்லோர் என்றவாறு.
பரிமேலழகர்: கற்றார் அவைக்கண் அஞ்சாதே தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும் வகை சொல்ல வல்லார்.
பரிமேலழகர் குறிப்புரை: உலகம் அறிவது அவரையே ஆகலின் அதனால் புகழப்படுவாரும் அவர் என்பதாம்.

'தாம் கற்றதனைக் கற்றார் முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்லவல்லார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கற்றவர்முன் எடுத்துச் சொல்ல வல்லவரே', 'கற்றவர் கூட்டத்தில் தாம் கற்றவற்றை அஞ்சாது, கேட்பவர் மனங்கொள்ளும் வகையில் பேச வல்லவரே', 'கற்றறிந்தார் சபையில் தாம் கற்றதைத் தடுமாற்றமின்றி விளங்கச் சொல்லத் தெரிந்தவர்கள்தாம்', 'தாங்கள் கற்றவற்றைப் புலவர்கள் அவையில் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லுபவர்கள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கற்றவர்முன் தாம் கற்றவற்றை அவர் மனங்கொள்ளும் வகையில் பேச வல்லவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கற்றவர்முன் தாம் கற்றவற்றை அவர் மனங்கொள்ளும் வகையில் பேச வல்லவர் கற்றவருள் நன்கு கற்றார் எனச்சொல்லப்படுவார் என்பது பாடலின் பொருள்.
'கற்ற செலச்சொல்லுவார்' குறிப்பது என்ன?

கற்றால் மட்டும் போதுமா? தாம் கற்றவற்றவற்றை அவையினர்க்குச் சொல்லவும் தெரியவேண்டும்.

கற்றவரின் முன்பு தாம் கற்றவைகளை அவர் ஏற்குமாறு சொல்லவல்லவர் கற்றவர்களுள் கற்றவராக மதிக்கப்படுவார்.
கற்றவர் எல்லோரும் பேச்சில் வல்லவராய் இருப்பர் என்று சொல்ல முடியாது. கற்ற ஒருவர்க்கு கோர்வையாகப் பேசவராதிருக்கலாம். அல்லது வழுப்படச் சொல்லி இழுக்கு அடைவோமோ என்று அஞ்சி பேச்சினிடையே தடுமாற்றம் கொள்வராயிருப்பர். இன்னும் சிலர் கற்றவர்முன் தம் அறியாமை வெளிப்பட்டுவிடுமோ என அஞ்சுவராயிருக்கலாம். கற்றார் பலர் கூடிய அவையில் நடுக்கமின்றித் தாம் கற்றவற்றைப் பிறரும் ஏற்கும்படி திறம்படச் சொல்லவல்லவர்கள் கற்றாருள் கற்றார் என எண்ணப்படுவர் என்கிறது பாடல்.
அவையஞ்சாமை பற்றி இக்குறளில் வெளிப்படையாக ஏதும் சொல்லப்படவில்லை. ஆயினும், கற்றோர் நிறைந்த அவையில் தானும் கற்றவராகவே இருந்தாலும், கருத்துக்களை பயமின்றி வெளிப்படுத்துவரே உலகோரால் போற்றப்படுவர் என்பது உணர்த்தப்பட்டது.

ஒன்றனுள் ஒன்று என்ற உத்தியைப் பலவிடங்களில் பயன்படுத்தி உள்ளார் வள்ளுவர். ஒரு பொருளை நன்கு அழுத்திச் சொல்ல விரும்பும்போது அவரது மொழிநடை அமைப்பில் இந்த உத்தி பொதிந்து கிடப்பதைக் காணலாம். கொடிய வறுமையைச் சுட்டும் போது இன்மையுள் இன்மை... என்றும், அறிவிலார் செய்த தீங்கினைப் பொறுத்தற்குப் பேராற்றல் தேவை என்பதைச் சொல்ல ........... வன்மையுள் வன்மை என்றும் (153) கூறுவார். அருட் செல்வமே உயர்ந்த செல்வம் என்பதனை வலியுறுத்தச் 'செல்வத்துள் செல்வம் (241) ...........என்பார். இன்பத்துள் இன்பம்...... துன்பத்துள் துன்பம் ...(629) என இன்பத்தையும் துன்பத்தையும் அடைமொழியாக்கியும் கூறியுள்ளார். இங்கு ஒன்றனுள் ஒன்றைப் பொதிந்து சுட்டும் நடையில் பேச்சுக்கலையில் வல்ல கற்றாரைக் 'கற்றாருள் கற்றார்' என்கிறார்.

'கற்ற செலச்சொல்லுவார்' குறிப்பது என்ன?

'கற்ற செலச்சொல்லுவார்' என்பதற்குக் கற்றவற்றை (கற்றார்) ஏற்கச் சொல்லவல்லார் அல்லது மனக்கொள்ளும் வகை சொல்ல வல்லார் என்று பொருள் கூறுவர், கற்றவர்முன் தாம் கற்றதைத் தடுமாற்றமின்றி விளங்க எடுத்துச் சொல்லத் தெரிந்தவர்கள் அவர்கள். கற்றவர்கள் கூடியுள்ள அவை முன்பாக தான் கற்றதை அங்குள்ளோர் சுவைக்கும்படியும் மனங்கொள்ளுமாறும் சொல்லும் வல்லமை வாய்ந்தவர்கள் 'செலச் சொல்லுதலாவது கற்றவர்களும் தாம் அறிந்ததையே கேட்டு இரசிக்குமாறு சொல்லுதலாகும். அதாவது, அவர்களுக்குத் தெரிந்த பொருளையே அழகுபட அவர்கள் அனுபவிக்குமாறு பேசுவதாகும்' என்பார் ஜி வரதராஜன். கற்றர் அவையில் என்றதால் கற்றார் பலரும் பல நோக்கிற்கண்டு மதிப்பிடுவர். கற்றார் முன் அவர் மனங்கொளச் சொல்லும் திறன் சிலர்க்கே உளதாம். ஆதலின் அவர் கற்றாருள் கற்றார் ஆகிறார். 'செலச் சொல்லுதலுக்கு' முன்னர் அனைவரும் 'ஏற்றுக்கொள்ளச்சொல்லுதல்' என உரை கண்டனர். கற்றார் தந்நுண்மாண் நுழைபுலத்தால் எதனையும் எடைபோட்டு நன்கறிந்து குறையுங் காண்பாராதலின் 'ஏற்றுக்கொள்ளச் சொல்லுதல்' என்றனர் (தண்டபாணி தேசிகர்).
கற்றார் அவையில் அஞ்சாமல் தாம் கற்றவற்றை அவையிலுள்ளோர் மனம் கொள்ளும்படி சொல்லவல்லவர் ஆதலால் அவரே 'கற்ற செலச்சொல்லுவார்' ஆம். நன்கு கற்றவரே அவை அஞ்சாது பேசவல்லவராவார். கற்றவர்கள் அல்லாதவர்களுக்கிடையில் எளிதில் பேசிவிடலாம். ஆனால் கற்றார் அவையில் அச்சமின்றி அங்கு கூடியுள்ளோர் உள்ளங்கொள்ளுமாறு சொல்வது மிகக் கற்றவர்க்கே இயலும். எவ்வளவு கற்றவர்களானாலும் கற்றார் அவையில் பேசத் திணறுபவர்கள் கற்றவர்களில் தாழ்வானவர்களாகவே கருதப்படுவர்.

கற்றவர்முன் தாம் கற்றவற்றை அவர் மனங்கொள்ளும் வகையில் பேச வல்லவர் கற்றவருள் நன்கு கற்றார் எனச்சொல்லப்படுவார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவையஞ்சாமை கற்றவரை இன்னும் மேலானவர் ஆக்கும்.

பொழிப்பு

கற்றவர்முன் அவர் ஏற்கும் வகையில் தாம் கற்றவற்றைப் பேச வல்லவர் கற்றவருள் கற்றார் எனப்படுவார்.