இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0726வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு

(அதிகாரம்:அவையஞ்சாமை குறள் எண்:726)

பொழிப்பு (மு வரதராசன்): அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு?

மணக்குடவர் உரை: வன்கண்ணரல்லாதவர்க்கு வாளினாற் பயனென்னை? அதுபோல, நுண்ணிய அவையின்கண் அஞ்சுவார்க்கு நூலினாற் பயனென்னை?
இது பிறர்க்குப் பயன்படாமையேயன்றித் தமக்கும் பயன்படாரென்றது.

பரிமேலழகர் உரை: வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என் - வன்கண்மையுடையார் அல்லார்க்கு வாளொடு என்ன இயைபு உண்டு; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலோடு என் - அது போல் நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன இயைபு உண்டு?
(இருந்தாரது நுண்மை அவைமேல் ஏற்றப்பட்டது. நூற்கு உரியர் அல்லர் என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: வீரர் அல்லார்க்கு வாளோடு என்ன உறவு? மேடை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன உறவு?


பொருள்கோள் வரிஅமைப்பு:
வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடுஎன்; நுண்ணவை அஞ்சுபவர்க்கு நூலொடு என்.

பதவுரை: வாளொடு-வாட்கருவியுடன்; என்-என்ன?; வன்கண்ணர்-வீரம், தறுகண்மை; அல்லார்க்கு-அல்லாதவர்க்கு; நூலொடு-இலக்கியங்களோடு; என்-என்ன?; நுண்ணவை-நுண்ணிய அறிவினையுடையார் அவை; அஞ்சுபவர்க்கு-நடுங்குபவர்களுக்கு.


வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வன்கண்ணரல்லாதவர்க்கு வாளினாற் பயனென்னை?
பரிப்பெருமாள்: வன்கண்ணரல்லாதவர்க்கு வாளினாற் பயனென்னை?
பரிதி: தறுகணாண்மையில்லாதார்க்கு வாளைக் கொண்டு காரியமில்லை;
காலிங்கர்: பலநாளும் தாம் வாளொடு பயின்று போந்தனரேனும் என்ன பயன்? பகை வந்து உற்ற இடத்து அவ்வாளினால் பணிகொள்ளும் தறுகண்மை உடையரல்லாதார்க்கு; [பயின்று போந்தனரேனும் - பயிற்சி பெற்றவர்களாயினும்]
பரிமேலழகர்: வன்கண்மையுடையார் அல்லார்க்கு வாளொடு என்ன இயைபு உண்டு;

'வன்கண்மையுடையார் அல்லார்க்கு வாளொடு என்ன இயைபு உண்டு?' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அஞ்சாத மறவர் அல்லாதார்க்கு வாளினால் என்ன பயன்?', 'தைரியம் இல்லாதவர்கள் வாளெடுத்து என்ன பயன்?', 'திண்மை இல்லாதவர்களுக்கு வாளால் செய்யும் சண்டையோடு என்ன தொடர்பு இருக்கிறது?', 'அஞ்சாமைக் குணம் இல்லார்க்கு வாளோடு என்ன தொடர்பு?' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வீரம் இல்லாதவர்க்கு வாளோடு என்ன உறவு? என்பது இப்பகுதியின் பொருள்.

நூலொடுஎன் நுண்ணவை அஞ்சு பவர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோல, நுண்ணிய அவையின்கண் அஞ்சுவார்க்கு நூலினாற் பயனென்னை?
மணக்குடவர் குறிப்புரை: இது பிறர்க்குப் பயன்படாமையேயன்றித் தமக்கும் பயன்படாரென்றது.
பரிப்பெருமாள்: அதுபோல, நுண்ணிய அவையின்கண் அஞ்சுவார்க்கு நூலினாற் பயனென்னை?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிறர்க்குப் பயன்படாமை யன்றித் தமக்கும் பயன்படாது என்றது.
பரிதி: ஆஸ்தானத்தில் அஞ்சுவார்க்குக் கல்வி வேண்டாம் என்றவாறு.
காலிங்கர்: மற்று அப்படியே சிலர் பலநாளும் நூலொடு பயின்று போந்தரேனும் என்ன பயன்? அந்நூலைத் தாம் எதிர்விடுத்து இன்புறாது கல்விக்குரிய சான்றோர் குழாத்தை அஞ்சுமவர்க்கு என்றவாறு. [எதிர்விடுத்து - எதிராகச்சொல்லி]
பரிமேலழகர்: அது போல் நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன இயைபு உண்டு?
பரிமேலழகர் குறிப்புரை: இருந்தாரது நுண்மை அவைமேல் ஏற்றப்பட்டது. நூற்கு உரியர் அல்லர் என்பதாம்.

'நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன இயைபு உண்டு?' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதுபோல, மதிநுட்பமுடையார் அவையைக் கண்டு அஞ்சுவார்க்குக் கற்ற நூலினால் என்ன பயன்?', 'அதைப்போல் கற்றவர்கள் சபையில் அஞ்சாமல் பேசத் தெரியாதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும் என்ன பயன்?', 'அதுபோல நுட்பமான அறிஞர் அவைக்கு அஞ்சுபவர்க்கு நூலோடு என்ன தொடர்புண்டு', 'நுண்ணிய அறிவினையுடையார் அவையை அஞ்சுபவர்க்கு நூலோடு என்ன தொடர்பு? (இருசாரார்க்கும் பயனில்லை என்பதாம்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன தொடர்பு? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வீரம் இல்லாதவர்க்கு வாளோடு என்ன உறவு? நுண்ணவை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன தொடர்பு? என்பது பாடலின் பொருள்.
'நுண்ணவை' என்பது என்ன?

அவையில் பேச அஞ்சுபவர் தாம் கற்ற நூலாற் பயன்பெறச்செய்தல் இல்லை.

வீரமற்றவர்களுக்கு வாள் எதற்கு? நுண்ணறிவு வாய்ந்த அறிஞர்கள் கூடியுள்ள அவையில் பேச அஞ்சுவோர் என்ன நூல் கற்றார்களோ?
ஒருவன் கையில் வாள் இருக்கிறது. அவனுக்கு வாள்வீச்சில் பயிற்சியும் உண்டு. ஆனால் அதைப் பொதுவெளியில் பயன்படுத்தத் தறுகண்மை இல்லை; பொருதும் வன்மையைப் பெறாதவராயிருக்கிறான். பின் அவன் கையில் வாள் இருந்து என்ன பயன்? பயன் ஒன்றும் இல்லை. வாள் தனியறையில் சுழற்றுவதற்கு அல்ல, போர்க்களத்தில் அஞ்சாமல் வீரத்துடன் போராடுவதற்காக உள்ள கருவி. கருவியிருந்தும் கருத்து உறுதியின்மையால் பயன்படாமற்போயிற்று. அது போல ஒருவன் பெறும் நூற்கல்வியும், தானே படித்துவைத்துக் கொள்வதற்காக உள்ளது அல்ல. அவையில் சென்று அஞ்சாமல் சொல்லவும் கருத்தாடல் செய்யவும் வேண்டும். கற்ற அவனிடம் நூலறிவு இருந்தும் அவைக்குப் போய்ப் பேச அஞ்சுவதால் படித்ததெல்லாம் வீண், அதாவது அந்த அறிவு பயனற்றது, ஆகின்றது.
கோழையின் கைவாளாலும், அவையஞ்சுவான் கற்ற நூலாலும் பயன் ஒன்றுமில்லை என்பது கருத்து. ஒருவரது இயல்புக்கு ஒவ்வாத ஒன்று இருப்பதால் என்ன பயன் என்று கேட்பதன் வழியாக, நூலறிவுளோர், அவை அஞ்சாதிருக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

'நுண்ணவை' என்பது என்ன?

'நுண்ணவை' என்ற சொல்லுக்கு நுண்ணிய அவை, ஆஸ்தானம், சான்றோர் குழாம், நுண்ணியாரது அவை, நுண்ணறிவுடையவரின் அவை, அறிவு நுட்பமுடையார் கூடிய அவை, மதிநுட்பமுடையார் அவை, நுட்பமான அறிவுடையவர்கள் கூடியுள்ள சபை, நுண்ணிய அறிஞர் அவை, நுட்பமான அறிஞர் அவை, நுண்ணிய அறிவினையுடையார் அவை, நுண்ணறிவு வாய்ந்த அறிஞர்கள் கூடியுள்ள சபை, நுண்ணறிவுடையோரது அவை, நுண்ணறிஞரவை, நுட்ப அறிஞர்கள் கூடிய சபை என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

குறளில் புல்லவை (719), வல்லவை (721), நல்லவை (728) நல்லார் அவை (729) என்று பலவகை அவைகள் சொல்லப்பட்டுள்ளன. அதுபோல நுண்ணவையையும் அவைகளில் ஓர் வகையினதாகக் கொள்ளலாம். கற்ற நூலினால் என்ன பயன் என்று நேரடியாக நூலை இணைத்துக் கேள்வி எழுப்பப்படுவதால், குறிப்பிட்ட துறையில் மிகுந்த கல்வியறிவும் பயிற்சியும் கொண்ட தொழில்முறை அறிஞர்/தொழில் வல்லுநர் உள்ள அவை(professional meeting)யை நுண்ணவை குறிக்கிறது எனலாம்.

‘நுண்ணவை’ என்பதற்கு நுண்ணறிவுடையவரின் அவை என்பது பொருள்.

வீரம் இல்லாதவர்க்கு வாளோடு என்ன உறவு? நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன தொடர்பு? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஏட்டறிவைப் பயன்கொள்ளச் செய்ய அவையஞ்சாமை வேண்டும்.

பொழிப்பு

வீரம் இல்லாதார்க்கு வாளோடு என்ன உறவு? நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன தொடர்பு?