இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0730



உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்

(அதிகாரம்:அவையஞ்சாமை குறள் எண்:730)

பொழிப்பு (மு வரதராசன்): அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளை (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்லமுடியாதவர், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.

மணக்குடவர் உரை: உளராயினும் செத்தாரோடு ஒப்பார்: அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றதனை அதற்கு இசையச் சொல்லமாட்டாதார்.
இது செத்தாரோடு ஒப்பரென்றது. இவை ஐந்தும் அவையஞ்சுதலான் வருங்குற்றம்கூறின.

பரிமேலழகர் உரை: களன் அஞ்சிக் கற்ற செலச் சொல்லாதார் - அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் - உயிர் வாழ்கின்றாராயினும் உலகத்தாரால் எண்ணப்படாமையின் இறந்தாரோடு ஒப்பர்.
(ஈண்டுக் 'களன்' என்றது ஆண்டிருந்தாரை. இவை ஐந்து பாட்டானும் அவைஅஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: சபைக் கூச்சத்தால் தாம் கற்ற கல்வியைப் பிறருக்குப் பயன்படும்படி சொல்ல முடியாதவர்கள் இருந்தும் இல்லாததற்குச் சமானமே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
களனஞ்சிக் கற்ற செலச்சொல்லாதார் உளரெனினும் இல்லாரொடு ஒப்பர்.

பதவுரை: உளர்-இருக்கின்றனர்; எனினும்-என்றாலும்; இல்லாரொடு-இறந்தாரோடு; ஒப்பர்-ஒப்புமையாவார்; களன்-இடம், அவை; அஞ்சி-நடுங்கி; கற்ற-கற்கப்பட்டவை; செல-மனங்கொள்ள; சொல்லாதார்-சொல்லமாட்டாதவர்.


உளரெனினும் இல்லாரொடு ஒப்பர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உளராயினும் செத்தாரோடு ஒப்பார்;
பரிப்பெருமாள்: உளராயினும் செத்தாரோடு ஒப்பார்;
பரிதி: விளைவில்லாத நிலம் உடையராயினும் இல்லாரோடு ஒப்பாவார்;
காலிங்கர்: இவ்வுலகத்து உயிர் வாழ்க்கை உடையரேனும் இறந்தாரோடு ஒப்பர்;
பரிமேலழகர்: உயிர் வாழ்கின்றாராயினும் உலகத்தாரால் எண்ணப்படாமையின் இறந்தாரோடு ஒப்பர்.
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டுக் 'களன்' என்றது ஆண்டிருந்தாரை.

'உளராயினும்/இவ்வுலகத்து உயிர் வாழ்க்கை உடையரேனும் செத்தாரோடு ஒப்பார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வாழ்ந்தாலும் மாண்டவருக்கு ஒப்பாவர்', 'உயிர் வாழ்கின்றார் எனினும் இறந்தாரோடு ஒப்பாவர்', 'உயிர் வாழ்வார் எனினும் இறந்தாரோடு ஒப்பர்', 'உயிரோடு இருக்கின்றார் எனினும் இறந்தாரோடு ஒப்பர். (அவையில் இருந்தாலும் இல்லாதவராகவே கருதப்படுவர்.)' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அவ்விடத்து இருந்தாலும் இல்லாதவராகவே எண்ணப்படுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றதனை அதற்கு இசையச் சொல்லமாட்டாதார்.
மணக்குடவர் குறிப்புரை: இது செத்தாரோடு ஒப்பரென்றது. இவை ஐந்தும் அவையஞ்சுதலான் வருங்குற்றம்கூறின.
பரிப்பெருமாள்: அவைக்களத்து அஞ்சித் தாம் கற்றதனை அவர்க்கு இசையச் சொல்லமாட்டாதார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவை ஐந்தும் அவையஞ்சுதலான் வருங்குற்றம்கூறின.
பரிதி: படித்தவைகளைப் பயந்து அவையிற் செல்லும்படி சொல்ல மாட்டாதவர்கள்.
காலிங்கர்: யார் எனின், தாம் எய்திய அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றனவற்றை அவர் செவிக்கு ஏற்குமாறு சொல்லுதல் கல்லாதார் என்றவாறு.
பரிமேலழகர்: அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்;
பரிமேலழகர் குறிப்புரை: இவை ஐந்து பாட்டானும் அவைஅஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது.)

'அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றனவற்றை அவர் செவிக்கு ஏற்குமாறு சொல்லமாட்டாதார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மேடைக்கு அஞ்சிச் சொல்ல மாட்டாதவர்', 'அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவற்றைக் கேட்போர் மனம் கொள்ளச் சொல்ல இயலாதவர்', 'அவைக்கு அஞ்சித் தான் படித்தவற்றை அதற்கு ஏற்பச் சொல்ல முடியாதவர்கள்', 'அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கேற்பச் சொல்லமாட்டாதவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவையிலுள்ளோர்க்கு அஞ்சித் தாம் கற்றனவற்றை அவர்க்கு ஏற்பச் சொல்லமாட்டாதார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அவையிலுள்ளோர்க்கு அஞ்சித் தாம் கற்றனவற்றை அவர்க்கு ஏற்பச் சொல்லமாட்டாதார் உளரெனினும் இல்லாராகவே எண்ணப்படுவர் என்பது பாடலின் பொருள்.
'உளரெனினும் இல்லார்' குறிப்பது என்ன?

பங்கேற்றுப் பேச இயலாத கற்றவர் ஏன் அவைக்கு வந்தார்?

அவையினோர்க்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்ல முடியாத கற்றுவல்லார், அவர் அங்கிருந்தும் இல்லாதவராக எண்ணப்படுவார்.
தாம் கற்றவற்றை அவையினர் மனங்கொள்ள எடுத்துரைக்கும் திறமில்லாதவர் அந்த அவையில் இருந்தாலும் இல்லாதவராகவே கருதப்படுவார். செயலற்ற பொறிகள் எப்படிப் பொறிகளாகாவோ அதுபோல், கற்றவர் தாம் கற்றதற்கேற்ப செயலாற்றவிட்டால் அவர் கற்றவராகக் கருதப்படார். இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது உணர விரித்துரையா தார் (சொல்வன்மை 650 பொருள்: கற்றதைக் கேட்டார் உணரும்படி விரித்துரைக்க மாட்டாதவர், கொத்தாக மலர்ந்திருப்பினும் மணம் பெறாத மலரை ஒப்பர்) என்ற குறளை இப்பாடலுடன் ஒப்பு நோக்கலாம். அவர் அவையில் வந்து கலந்து கொண்டாலும் தனக்குண்டான துறை பற்றி விளங்கச் சொல்ல இயலாவிட்டால் அவர் அங்கு இல்லாதவராகவே எண்ணப்படுவார்.

நூல்கற்றவர் ஏதாவதொரு வகையில் சமுதாயப் பங்களிப்பு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவார். தம் துறை சார்ந்த பொருள்பற்றி நடக்கும் கூட்டங்களில் கலந்துகொண்டு பயனுள்ள கருத்துக்களைச் சொல்லி அவர் அந்தப்பணியைச் செய்யலாம். ஆனால் அவைக்குச் சென்றவர் கூட்டத்தினர்க்குப் பயந்து ஒன்றும் பேசாமல் இருந்தால் அவர் கற்றவற்றை எப்படிப் பயன்கொள்வது? அங்கிருந்தும் பேசாததால் அவர் அங்கு இல்லாதவராகவே கருதப்படுவார். அவர் உயிரோடு வடிவோடு இருந்தாலும் பயன்படாமையால் இலரானார்.

'உளரெனினும் இல்லார்' குறிப்பது என்ன?

இக்குறளுக்கு உரை எழுதிய பலர் 'உளர்' என்பதற்கு உயிருள்ளவர் என்றும் 'இல்லார்' என்றதற்கு இறந்தார் என்றும் பொருள் கூறினர். அவைக்கு வந்தவர் பேசவில்லையென்றாலும் அவர் கற்றவர். வள்ளுவர்க்குக் கற்றவரிடம் மதிப்பு உண்டு. அவருக்குக் கற்றவரை நடமாடும் பிணம் என்று சொல்ல மனம் வருமா? ஆதலால், அவையில் ஒன்றும் சொல்லாததால், அவர் மீது வெறுப்புக்கொண்டு, அவைக்கண் வந்திருந்தும் அஞ்சித் தான் கண்ட நல்ல கருத்தை அவைக்கு இசையச் சொல்லமாட்டாதார் அவையிலிருந்தும் இல்லாதவரே ஆவர் என்றார்.

அவையிலுள்ளோர்க்கு அஞ்சித் தாம் கற்றனவற்றை அவர்க்கு ஏற்பச் சொல்லமாட்டாதார் அவ்விடத்து இருந்தாலும் இல்லாதவராகவே எண்ணப்படுவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவையஞ்சாமை இருந்தால்தான் அவை ஒருவரைக் கற்றாராக ஏற்கும்.

பொழிப்பு

அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவற்றைக் அவையோர் ஏற்பச் சொல்ல இயலாதவர், அவ்விடத்து இருந்தாலும் இல்லாதவராகவே இருப்பார்.