இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0725ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு

(அதிகாரம்:அவையஞ்சாமை குறள் எண்:725)

பொழிப்பு (மு வரதராசன்): அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

மணக்குடவர் உரை: அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும்.
நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.

பரிமேலழகர் உரை: ஆற்றின் அளவு அறிந்து கற்க - சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க; அவை அஞ்சா மாற்றம் கொடுத்தற்பொருட்டு - வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு.
(அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்கு அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார், ஆகுபெயரான். அவர் சொல்லை வெல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமல் கற்க என்பதாம், இதனான் அதன் காரணம் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: அளவையின்கண் அஞ்சாமல் நின்று, தன்னைக் கேள்வி கேட்பவர்கட்கெல்லாம் மறுமொழி கொடுக்கும் பொருட்டு, ஒருவன் அதற்கான நெறிமுறைப்படி அத்தகைய ஆற்றல் தரும் அளவை நூலை நன்கு கற்க வேண்டும். அளவைநூல் -தருக்கம். அவைக்கு அஞ்சாது, உடனுக்குடன் மறுமொழிய, வினா விடைகளாலான அளவை நூலறிவு மிகமிகத் தேவை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு ஆற்றின் அளவறிந்து கற்க.

பதவுரை: ஆற்றின்-நெறியால்; அளவு-அளவு, அளவை நூல்; அறிந்து-தெரிந்து; கற்க-கற்க வேண்டும்; அவை-மன்றம்; அஞ்சா-நடுங்காமல்; மாற்றம்-எதிர் உரை; கொடுத்தல்-தருதல்; பொருட்டு-(அதற்காக).


ஆற்றின் அளவறிந்து கற்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும்;
மணக்குடவர் குறிப்புரை: நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.
பரிப்பெருமாள்: நெறியானே அளவு கூறு நூல்களை அறிந்து கற்க;
பரிப்பெருமாள் குறிப்புரை: அளவு-பிரமாணம். அது கூறு நூல்களாவன மீமாம்சை முதலான நூல்கள். கல்வியாவதுமெய் ஆராய்ச்சியான நூல்களைக் கற்றலும், வேத வேதாந்தம் கற்றலும், உழவும் வாணிகமும் கற்றலும், படை வழங்கலாகிய தண்டநீதி கற்றலும் என நால்வகைப்படும் என்பது கௌடல்ய மதம். அந்த நான்கினும் பின் கூறிய இரண்டும் சொல்லாண்மை அன்மையானும், வேதம் கேட்டல் சொல்லாதே அமைதலானும், அவையிற்றைக் கூறாது தர்க்கம் கற்றர்க்கல்லது மறுமாற்றம் சொல்லுதல் அரிது ஆதலின் அதனைக் கற்கவேண்டும் என்று இது கூறப்பட்டது. [தர்க்கம் - உண்மைப்பொருளை உசாவியறியத் துணைசெய்யும் நூல்.]
பரிதி: ஒரு காரியத்தைக் கற்கும்போது பொருள் தெரிந்து கற்க;
காலிங்கர்: அரசர்க்கு அமைச்சராய் உள்ளார் முன்னமே தாம் கற்குமிடத்துக் கல்வி நெறியின் அளவு அறிந்து கற்பார் ஆக;
காலிங்கர் குறிப்புரை: இதனால் என்சொல்லியவாறோ எனின், அரச நீதியும் அமைச்ச நீதியும் அறநெறிக்கு உரியவும், புரவியும் களிறும் பொருந்துவ குறிப்பவும் பிறவும் ஆகிய வரம்புக்கு ஏற்பன கற்க என்று இங்குச் சொல்லிய அன்றிப் புல்லிய கற்பின் அவை அரசர்க்கும் அவைக்கும் அடாதன என்றவாறு. [புல்லிய - இழிந்த நூல்கள்].
பரிமேலழகர்: சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க;
பரிமேலழகர் குறிப்புரை: அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்கு அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார், ஆகுபெயரான். அவர் சொல்லை வெல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமல் கற்க என்பதாம், இதனான் அதன் காரணம் கூறப்பட்டது.

'நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும்' என்று மணக்குடவர் கூற பரிப்பெருமாள் 'நெறியான அளவு கூறு நூல்களைக் கற்க' என்றார். பரிதி 'பொருள் தெரிந்து கற்க' என்கிறார். காலிங்கர் 'கல்வி நெறியின் அளவு அறிந்து கற்க' என உரை கூறினார். பரிமேலழகர் பரிப்பெருமாளைப் பின்பற்றி 'அளவை நூல் உட்பட்டுக் கற்க' என உரை செய்தார். .

இன்றைய ஆசிரியர்கள் 'முறையாகத் தருக்கநூல் அறிந்து கற்க', 'நெறிப்படி அளவை நூல்களை (தருக்க நூல்களை) அறிந்து தெளிவாகக் கற்க வேண்டும்', 'சபையில் தர்க்கம் செய்ய நேரிட்டால் சபைக்கு அஞ்சாமல் தம்முடன் தர்க்கம் செய்கிறவருக்கு எதிர்வாதம் சொல்லுவதற்காக', 'நெறிமுறைப்படி அளவைகளை (தருக்கங்களை) நன்கு அறிந்து கற்க வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முறையாக வேண்டிய அளவறிந்து கற்க வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக.
பரிப்பெருமாள்: அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக.
பரிதி: ஆஸ்தானத்திலே உத்தாரங் கொடுத்தல் பொருட்டாக என்றவாறு. [உத்தாரம் - மறுமொழி]
காலிங்கர்: என்னை எனின், பின்பு தாம் சென்று எய்திய அவையினை அஞ்சாது மற்று அவர் கேட்டவற்றிற்கு மாற்றம் வண்மையின் வழங்குதல், பொருட்டு ஆக என்றவாறு.
பரிமேலழகர்: வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு.

'அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவைக்கண் அஞ்சாது மறுமொழி சொல்ல', 'அவையில் ஒன்றைக் கேட்டார்க்கு அஞ்சாமல் மறுமாற்றம் கொடுத்தற்காக', '(சொல்ல வேண்டிய) ஒழுங்கு முறை கெடாதபடி அளவறிந்து (தம் கல்வித் திறத்தை அழுத்தமாகப்) பேச வேண்டும்', 'அவைக்கு அஞ்சாமல் கேட்ட கேள்விகட்கு விடையளித்தற்பொருட்டு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மன்றத்தில் அஞ்சாமல் மறுமொழி சொல்ல என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மன்றத்தில் அஞ்சாமல் மறுமொழி சொல்ல, முறையாக வேண்டிய அளவறிந்து கற்க வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'அளவறிந்து கற்க' குறிப்பது என்ன?

கேள்வி கேட்பார்க்குப் பதில் கொடுக்கத் தேவையான அளவு படித்து அவைக்குப் பேசச் செல்லுக.

வினா எழுப்புவோர் தொடுக்கும் சொல்லுக்கு அஞ்சாமல் சொல் தருவதற்காக. பேசப்போகும் பொருள் பற்றிய நூல்களை கற்கவேண்டிய அளவு அறிந்து கற்றல் வேண்டும்.
அவையில் அஞ்சாமல் பேசி மறுமொழிசொல்லும் வல்லமை பெறுவதற்காகக் கற்க வேண்டிய முறைப்படி கற்கவேண்டிய அளவு அறிந்து பலதுறை நூல்களைக் கற்க வேண்டும். பல நூல்கள் என்னும்போது அளவை நூல்களும் அடக்கம். கருத்து மோதல்கள் உருவாகும் அவைகளில் பேசும்போது எதிரில் இருப்போர் கேட்கும் கேள்விகட்கு உடனுக்குடன் பதிலிறுக்கவேண்டும். அங்ஙனம் விடை கூறும்போது, அச்சமில்லாமல் அழுத்தம் திருத்தமாகப் பேசவேண்டுமாதலால், அதற்கு வேண்டிய அளவு முறைப்படி கற்றிருக்க வேண்டும் என்கிறது இப்பாடல். அவைக்கு அஞ்சாமல் மறுமொழி கொடுப்பதற்காக இவ்வாறு கற்க வேண்டுமென்பதால், அத்தகைய தகுதியில்லாதார் அவையை எதிர்நோக்க அஞ்சுவர் என்பது பெறப்படும்.

'மாற்றம்' என்றதற்குச் சொல் என்றும் 'மாற்றம் கொடுத்தல்' என்ற தொடர்க்குப் பதில் கூறுதல் எனவும் பொருள் கொள்வர். மாற்றம் சொல்லிற்குப் பொதுப்பெயராயினும் மறுமொழிக்கு உரிய பெயராதலால் இங்கு இடமறிந்து பெய்யப்பெற்றது. 'மாற்றம் கொடுத்தல்' என்பது எதிர்வரும் வினாக்களையும் எதிர்ப்புகளையும் எதிர்பார்த்து அவற்றிற்குத் தக்க விடையை அவையில் கொடுக்க முன்னமேயே ஆயத்தமாக இருத்தலைக் குறிப்பது. அவையில் பிறர் மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிக்கும்போது அந்தக் கருத்துக்களைக் கூறுபவர் யாராக இருந்தாலும் அந்தக் கருத்துக்கள் தனக்குத் தவறு எனத் தோன்றினால், அஞ்சாமல் மறுப்பு தெரிவித்து தன் கருத்துகளை நிலைநாட்ட வேண்டும்.

'அளவறிந்து கற்க' குறிப்பது என்ன?

அளவு என்றதைப் பொதுச் சொல்லாகவே 'அளவு அறிந்து கற்க' என்றதில் கையாளப்பட்டது.
அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு அதற்குரிய கல்வியைக் கொள்ளவேண்டும்; அக்கல்வி பெற அதற்குண்டான நூல்களை அளவு அறிந்து கற்க வேண்டும் என்கிறது பாடல். அப்படிக் கற்றுத் தெரிந்தபின் அவைக்குச் செல்ல அஞ்ச வேண்டியிராது.
ஒருவன் தான் எடுத்துக் கொண்ட பொருள் பற்றி அவையில் அஞ்சாமல் சொல்வதற்கு, அப்பொருள் பற்றிய நூல்கள் பலவற்றை நன்கு கற்கவேண்டும். கேள்வி கேட்போர்க்கு விடைகூறும் பொருட்டாக பலதுறை நூல்களையும் கற்கும் முறைமை அறிந்து கற்க வேண்டும். அவையில் சிறப்பாகப் பேச சொற்றிறமை மிகவேண்டப்படுவதால் சொல்லிலக்கணத்தை முதலில் நன்கு கற்கவேண்டும். பின் தர்க்கநூல் எனச்சொல்லப்படும் அளவை நூலையும் (Logic) தெரிந்துவைத்திருக்கவேண்டும். சொல்லிலக்கணம் கற்றபின் அளவை நூல் கற்கத்தக்கது. இதனாலேயே பரிமேலழகர் 'தருக்க நூற்படிப்பார்க்கு, அதற்கு முன் இலக்கண அறிவு வேண்டும்' என்பதை வற்புறுத்த 'சொல்லிலக்கண நெறியானே' எனக்கூறினார். உண்மை காணுதற் பொருட்டும் காட்டுதற் பொருட்டும் சொற்போர் நடைபெறும். கருத்துப் போரில் மறுமாற்றம் சொல்லுதற்கு தர்க்கம் கற்றிருத்தல் மிகவும் துணை செய்யுமாதலால் அதனைக் கற்கவேண்டும். அப்போதுதான் எதிராளிக்குத் தக்கபடி ஈடுகொடுத்து வெற்றி கொள்ளுமாறு பேச முடியும்.

மன்றத்தில் அஞ்சாமல் மறுமொழி சொல்ல, முறையாக, வேண்டிய அளவறிந்து கற்க வேண்டும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவையஞ்சாமை வேண்டுமெனில் சொற்றிறமையை வளர்த்துக் கொள்க.

பொழிப்பு

அவைக்கண் அஞ்சாது மறுமொழி சொல்ல முறையாக வேண்டிய அளவு தெரிந்து கற்க.