இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0729கல்லா தவரின் கடைஎன்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார்

(அதிகாரம்:அவையஞ்சாமை குறள் எண்:729)

பொழிப்பு (மு வரதராசன்): நூல்களைக் கற்றறிந்தபோதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரைவிடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.

மணக்குடவர் உரை: கல்லாதவரினும் கடையரென்று சொல்லப்படுவர்; உலகநூல் கற்றறிந்துவைத்தும் நல்லாரிருந்த அவையின்கண் சொல்லுதலஞ்சுவார்.
இது கல்லாதவரினும் இகழப்படுவரென்றது.

பரிமேலழகர் உரை: கற்று அறிந்தும் நல்லார் அவை அஞ்சுவார் - நூல்களைக் கற்றுவைத்தும், அவற்றால் பயனறிந்து வைத்தும், நல்லார் இருந்த அவையினை அஞ்சி ஆண்டுச் சொல்லாதாரை; கல்லாதவரின் கடை என்ப - உலகத்தார் கல்லாதவரினும் கடையர் என்று சொல்லுவர்.
(அக்கல்வி அறிவுகளால் பயன் தாமும் எய்தாது பிறரை எய்துவிப்பதும் செய்யாது, கல்வித்துன்பமே எய்தி நிற்றலின், 'கல்லாதவரின் கடை' என உலகம் பழிக்கும் என்பதாம்.)

தமிழண்ணல் உரை: அரிய நூல்களைக் கற்று, அரும் பொருள்களைத் தெரிந்து வைத்திருந்தும், நல்லோர் கூடிய அவையிலே பேச அஞ்சுகின்றவர்களை, கல்லாதவர்களை விடக் கடைப்பட்டவரென்று உலகத்தார் பழித்துப் பேசுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கற்றறிந்தும் நல்லார் அவை அஞ்சுவார் கல்லாதவரின் கடை என்ப.

பதவுரை: கல்லாதவரின்-கல்லாதவரைக் காட்டிலும்; கடை-கீழ், இழிந்தவர்; என்ப-என்று சொல்லுவர்; கற்று-கற்று; அறிந்தும்-தெரிந்தும்; நல்லார்-நல்லவர்; அவை-மன்றம்; அஞ்சுவார்-நடுங்குபவர்.


கல்லா தவரின் கடைஎன்ப:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கல்லாதவரினும் கடையரென்று சொல்லப்படுவர்;
மணக்குடவர் குறிப்புரை: இது கல்லாதவரினும் இகழப்படுவரென்றது.
பரிப்பெருமாள்: கல்லாதவரினும் கடை என்று சொல்லுவார் உலகத்தார்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கல்லாதவரினும் இகழப்படுவர் என்றவாறு.
பரிதி: கல்லாதவரினும் கடையராவர்;
காலிங்கர்: மற்று இவ்வாறு அன்றிக் கற்று அறிவு இல்லாத மூடரினும் சாலக்கடை என்று சொல்லுப சான்றோர்;
பரிமேலழகர்: உலகத்தார் கல்லாதவரினும் கடையர் என்று சொல்லுவர்.

'கல்லாதவரினும் கடை என்று சொல்லுவார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். யார் சொல்லுவர் என்பதற்கு வாளா சொல்லுவர் என்றும் உலகத்தார்/சான்றோர் என்றும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'படியாதவரினும் கீழ் என்பார்கள்', 'கல்லாதவரினும் இழிந்தோராவார்', 'படிப்பே இல்லாதவர்களைவிட மட்டமானவர்கள் என்று சொல்ல வேண்டும்', 'கல்லாதவரைவிடக் கடைப்பட்டவர் என்பர் உலகத்தார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கல்லாதவரைவிடக் கீழ் என்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

கற்றறிந்தும் நல்லார் அவையஞ்சு வார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகநூல் கற்றறிந்துவைத்தும் நல்லாரிருந்த அவையின்கண் சொல்லுதலஞ்சுவார்.
பரிப்பெருமாள்: கற்றறிந்து வைத்தும் நல்லோரிருந்த அவையின்கண் சொல்லுதல் அஞ்சுவாரை என்றவாறு.
பரிதி: கல்வியைக் கற்றும் ஆஸ்தானத்திலே அஞ்சுமவர் என்றவாறு.
காலிங்கர்: யாரை எனின் கற்க வேண்டுவன கற்று அவற்றின் கருத்து அறிந்து வைத்துப் பின்னும் கல்வியால் பெரிதும் நல்லோரது குழாத்தைக் கண்ட இடத்து அஞ்சுமவர்களை என்றவாறு.
பரிமேலழகர்: நூல்களைக் கற்றுவைத்தும், அவற்றால் பயனறிந்து வைத்தும், நல்லார் இருந்த அவையினை அஞ்சி ஆண்டுச் சொல்லாதாரை;
பரிமேலழகர் குறிப்புரை: அக்கல்வி அறிவுகளால் பயன் தாமும் எய்தாது பிறரை எய்துவிப்பதும் செய்யாது, கல்வித்துன்பமே எய்தி நிற்றலின், 'கல்லாதவரின் கடை' என உலகம் பழிக்கும் என்பதாம்.

'கற்றறிந்து வைத்தும் நல்லோரிருந்த அவையின்கண் சொல்லுதல் அஞ்சுவாரை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'படித்தறிந்தும் நல்லவையில் பேச அஞ்சுபவர்', 'பல நூல்களைக் கற்றறிந்தபோதிலும் நல்லவர் கூடிய அவைக்கு அஞ்சுபவர்', 'கல்வியறிவு இருந்தும் நல்லவர்கள் நிறைந்த சபையில் பேச முடியாதபடி அஞ்சுகின்றவர்கள்', 'நூல்களைக் கற்று அறிந்தும் நல்லார் இருந்த அவையைக் கண்டு அஞ்சுவார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கற்றறிந்தும் நல்லவர் அவையில் பேச அஞ்சுபவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கற்றறிந்தும் நல்லவர் அவையில் பேச அஞ்சுபவர் கல்லாதவரைவிடக் கீழ் என்பர் என்பது பாடலின் பொருள்.
'நல்லார் அவை' என்பது என்ன?

பேச அஞ்சும் கற்றார் கல்லாதவரினும் கீழ்.

நன்றாகக் கற்றறிந்திருந்தபோதிலும், நல்லவர்கள் குழுமியுள்ள அவையின் கண் பேச அஞ்சுகின்றவர், ஒன்றும் கல்லாதவரைவிடக் கடைப்பட்டவர் ஆவர் எனச் சொல்வர்.
நல்லவர்கள் கூடி பொதுநன்மை கருதி ஒரு பொருள் பற்றி கலந்து பேச எண்ணுகிறார்கள். அப்பொருள் பற்றிய துறையில் நிறையக் கற்றவர் ஒருவரை அக்கூட்டத்தில் உரைக்க அழைக்கிறார்கள். அவர் நிறையத் தெரிந்தவர்தாம். ஆனாலும் அவையினரைக் கண்டால் நடுங்குபவராதலால் 'கூட்டத்தில் பேச வராது' என்கிறார். அப்படிப்பட்டவரைப்பற்றி உலகம் என்ன சொல்லும்? 'இவன் என்னத்தை படித்து என்னத்தைக் கிழிச்சான்? படிக்காதவனே மேல்' என வெறுப்புடன் உலகோர் சொல்வார் என்கிறது பாடல்.
நல்லவர்களின் கூட்டத்தைக் கண்டு அஞ்சுகின்றவர்கள், கல்லாதவர்களை விடத் தாழ்ந்தவர்களாம். கல்வி கேள்விகளையுடையார் வாளா இருப்பின், உலகிற்கு எவ்விதப் பயனையும் தருகின்றாரில்லை. அவர் நல்லார் முன்தாம் கற்றவற்றைச் சொல்லும் திறம்பெற்றவராய் இருத்தல் வேண்டும். இல்லையேல், அவர் கற்ற கல்வி கேள்விகளாற் பிறர் பயனுறச் செய்ய இயலாது கழிகின்றாராவர். எனவே, அவர் கல்லாதவரினுங் கடையராவார். கற்றவற்றைச் சொல்லலும் பயன் உள்ள செயலாகும்.

கல்வி கற்றலின் மேன்மை பற்றியும் கல்லாதவரின் இழிவு பற்றியும் மற்றெவரையும்விட மிகையாகவே சொல்லியுள்ளவர் வள்ளுவர். கல்லாதவரை விலங்கு என்றே அவர் அழைப்பார். அப்படிப்பட்ட கல்லாதவரினும் கீழாக, கற்றும் சொல்லத் தெரியாதவனை, பிறர் கருதுவர் என்கிறார் இங்கு. கற்றவவனிடத்திலிருந்து உலகம் எதிர்பார்ப்பது அவன் படித்ததைப் பலருக்கும் பயன்படும்படி எடுத்துரைக்க வேண்டும் என்பது. அவனுக்கு இது இயலவில்லை என்றால் செயலற்றவராக இருக்கும் கற்றவர் கல்லாதவரினும் கடை ஆகிறார். நூற்கல்விக்கும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் கூட்டம் ஓர் இணைப்பாக இருக்கும். எனவே அவையில் தெரிவிப்பதற்குக் கற்றவர் முன்வரவேண்டும் என்பது வற்புறுத்தப்படுகிறது.

'நல்லார் அவை' என்பது என்ன?

'நல்லார் அவை' என்றதற்கு நல்லாரிருந்த அவை, நல்லோரிருந்த அவை, ஆஸ்தானம், நல்லோரது குழாம், நல்ல அறிஞரின் அவை, நல்லோர் கூடிய அவை, நல்லவர் அவை, நல்லவை, நல்லவர்கள் நிறைந்த சபை, தக்காரவை, நல்ல அறிஞர்கள் குழுமியுள்ள அவை, நல்ல அறிஞரவை, நல்லவர்கள் சபை என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நல்லார் அவை என்பதற்கு நல்லெண்ணம் கொண்டோர் கூடிய அவை எனப் பொருள் கொள்ளலாம். பொதுநன்மை கருதிய ஒப்புரவாளர் கூட்டம் போன்றது எனலாம்.

'நல்லார் அவை' என்றது நல்லோர் கூடிய அவை எனப்பொருள்படும்

கற்றறிந்தும் நல்லவர் அவையில் பேச அஞ்சுபவர் கல்லாதவரைவிடக் கீழ் என்பர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவையஞ்சாமை இல்லாத கற்றாரை உலகம் நன்கு மதியாது.

பொழிப்பு

கற்றறிந்தபோதிலும் நல்லவர் கூடிய அவைக்கு அஞ்சுபவர் கல்லாதவரினும் கீழ் என்பார்கள்.