பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்
(அதிகாரம்:அவையஞ்சாமை
குறள் எண்:728)
பொழிப்பு (மு வரதராசன்): நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைக் கேட்பவர் மனத்தில் பதியுமாறு சொல்லமுடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.
|
மணக்குடவர் உரை:
பலநூல்களைக் கற்றாலும் ஒருபயனில்லாதவரே: நல்லவையின்கண் நன்றாக அவர்க்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்.
இஃது அவையஞ்சுவார் கற்றகல்வி பிறர்க்குப் பயன்படாதென்றது.
பரிமேலழகர் உரை:
நல்லவையுள் நன்கு செலச் சொல்லாதார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல சொற்பொருள்களைத் தம் அச்சத்தான் அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்; பல்லவை கற்றும் பயம் இலரே - பல நூல்களைக் கற்றாராயினும் உலகிற்குப் பயன்படுதல் இலர்.
(அறிவார் முன் சொல்லாமையின் கல்வியுண்மை அறிவாரில்லை என்பதாம். இனிப் 'பயமிலர்' என்பதற்கு, 'கல்விப் பயனுடையரல்லர்' என்று உரைப்பாரும் உளர்.)
தமிழண்ணல் உரை:
நல்லவர்கள் கூடிய அவையின்கண் தாம் கற்றவற்றை, அவர் உள்ளம் ஏற்கும்படி சொல்லமாட்டாதவர், பற்பல நூல்களைக் கற்றிருந்தாரேனும் உலகத்திற்குப் பயன்படமாட்டார்கள்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
நல்லவையுள் நன்கு செலச்சொல்லாதார் பல்லவை கற்றும் பயமிலரே.
பதவுரை: நல்லவையுள்-நல்ல மன்றத்தில்; நன்கு-நன்றாக; செல-உள்ளங்கொள்ள; சொல்லாதார்-சொல்லமாட்டாதவர்; பல்லவை-பலவற்றை; கற்றும்-கற்றும்; பயம்-பயன்; இலரே-இல்லாதாரே.
|
பல்லவை கற்றும் பயமிலரே:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பலநூல்களைக் கற்றாலும் ஒருபயனில்லாதவரே;
பரிப்பெருமாள்: பலநூல்களைக் கற்றாலும் ஒருபயன் உடையரல்லர்;
பரிதி: பல நூல் கற்றும் பலனில்லை;
காலிங்கர்: பலவற்றுள் கற்று உணர்ந்தும் அவற்றால் ஒரு பயனும் இலர்;
பரிமேலழகர்: பல நூல்களைக் கற்றாராயினும் உலகிற்குப் பயன்படுதல் இலர்.
பரிமேலழகர் குறிப்புரை: இனிப் 'பயமிலர்' என்பதற்கு, 'கல்விப் பயனுடையரல்லர்' என்று உரைப்பாரும் உளர்.
'பலநூல்களைக் கற்றாலும் ஒருபயனில்லாதவரே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'உலகிற்குப் பயன்படுதல் இலர்' என உரைத்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'பல படித்தும் பயனில்லை', 'பல நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்பட மாட்டார்', 'பல நூல்களைப் படித்திருந்தாலும் பயனற்றவர்களேயாவார்கள்', 'பல நூல்களைக் கற்றாராயினும் உலகிற்குப் பயன்படுதல் இலர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பல நூல்களைக் கற்றிருந்தாலும் பயன்படுதல் இலர் என்பது இப்பகுதியின் பொருள்.
நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்லவையின்கண் நன்றாக அவர்க்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அவையஞ்சுவார் கற்றகல்வி பிறர்க்குப் பயன்படாதென்றது.
பரிப்பெருமாள்: நல்லவையின்கண் நன்றாக அவர்க்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அவையஞ்சுவார் கற்றகல்வி பிறர்க்குப் பயன்படாதென்றது.
பரிதி: நல்லோர் செவிக்கு ஏறச் சொல்லாத கருவியுடையார் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின் நல்லறிவாளர் குழாத்துச் சென்றைடத்தும் கல்வி நன்மை அவர் செவிக்கு ஏற்குமாறு சொல்லுதற்கு அல்லாதார் என்றவாறு.
பரிமேலழகர்: நல்லார் இருந்த அவைக்கண் நல்ல சொற்பொருள்களைத் தம் அச்சத்தான் அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்.
பரிமேலழகர் குறிப்புரை: அறிவார் முன் சொல்லாமையின் கல்வியுண்மை அறிவாரில்லை என்பதாம்.
'நல்லார் இருந்த அவைக்கண் நல்ல சொற்பொருள்களைத் தம் அச்சத்தான் அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நல்லவையில் எடுத்துச் சொல்ல இயலாதவர்', 'நல்லோர் கூடிய அவையில் தெளிவாகக் கேட்பார் மனத்திற்பதியுமாறு அச்சத்தால் பேச இயலாதவர்', 'நல்லவர்கள் கூடியுள்ள சபையில் (அச்சமில்லாமல்) எதிர்வாதம் பேசுகிறவர்களும் ஏற்றுக் கொள்ளும்படி நன்றாகப் பேசத் தெரியாதவர்கள்', 'கற்றுவல்லோர் இருக்கும் நல்ல அவையின்கண் அவர் ஏற்கும் வகை சொல்ல முடியாதவர் ' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
நல்லோர் அவையில் அவர் ஏற்கும் வகை சொல்ல முடியாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நல்லவையில் அவர் ஏற்கும் வகை சொல்ல முடியாதவர் பல நூல்களைக் கற்றிருந்தாலும் பயன்படுதல் இலர் என்பது பாடலின் பொருள்.
'நல்லவை' என்றால் என்ன?
|
யாருக்கும் பயன்படச் சொல்லப்படாத பலகல்வி கற்றதனால் என்?
நல்ல அறிஞர்கள் குழுமியுள்ள அவையின்கண் நன்றாக அவர்கள் உள்ளத்தில் ஏற்கும்படி சொல்ல இயலாதவர், பலவற்றைக் கற்றிருந்தாலும் பயனில்லாதவரே ஆவர்.
பல துறைகளைச் சார்ந்த அறிவு நூல்களைக் கற்றிருந்தும், நல்லறிஞர்கள் கூடியுள்ள அவையில் அவர்கள் நன்கு மனங்கொள்ளும்படி உரைக்க இயலாதவர் உலகுக்கு ஒரு பயனும் இல்லாதவரே. சொல்திறம் அற்றவர்கள் வாய்சோர்ந்து குற்றப்படவும் மற்றவர்க்குப் புரியாதபடியும் பேசிவிடுவர். குறைபடப் பேசினால் இழுக்குண்டாகும் என அவையினர்க்கு அஞ்சிச் சிலர் வாய் மூடி இருப்பார்கள். தாம் கற்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தெரியாவிட்டால், பலதுறை அறிவுள்ளாரானாலும் உலகார்க்குப் பயன் இல்லை என்கிறது பாடல்.
'நன்கு செல' என்பதற்கு 'நன்றாக ஏற்றுக்கொள்ள' எனவும் 'நல்ல சொற்பொருளை ஏற்க' என இருதிறமாக உரை கூறியுள்ளனர். இவற்றுள் செல என்ற சொல்லுக்கு அடையாக அமைந்து 'நன்றாக ஏற்க' எனச் சொல்லப்பட்ட உரை சிறந்தது. 'நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார்' என்ற பகுதி 'நல்ல அறிஞர்கள் உள்ள அவையின்கண் நன்றாக அவர்கள் உள்ளத்தில் ஏற்கும்படி சொல்ல இயலாதவர்' என்ற பொருள் தரும். ஒருவர் கற்றவை அவையோர்க்கு அவரது வாய்ச்சொல்லால் அறியப்படும்; பிறர் ஏற்குமாறு சொல்ல இயலாதார் பலவற்றைக் கற்றிருந்தாலும் பயனிலாதார் ஆனார்.
பல்லவை என்ற சொல்லுக்குப் பலவற்றை என்பது நேரிய பொருள். இச்சொல்லுக்குச் சிலர் பல நூல்களை எனப் பொருள் கூறுவர்.
மு கோவிந்தசாமி பல்லவை கற்றும் என்றதற்கு 'பல அவைகளில் (கூட்டங்களில்) சென்று கற்றும்' என உரை செய்தார். இது இயல்பாக இல்லை. பல்லவை கற்றல் என்பது பலதுறை நூல்களைக் கற்றிருத்தல் என்ற பொருள் தருவது.
‘பயமிலர்’ என்பதற்குப் பயனிலர் அதாவது பயன் இல்லாதவர் என்பது பொருள். எதற்குப் பயன் இல்லாதவர்? 'கல்விப் பயனுடைய ரல்லர்' எனவும் 'உலகிற்குப் பயன்படுதல் இலர்' எனவும் இதை விளக்குவர். நல்லவையுள் நன்கு செலச் சொல்லாதார் கூடியுள்ளோர்க்குச் சொல்லி பிறரும் இன்புறக் காணாராராயிருக்கலாம்; அவர் படித்தது அவர்க்கு இன்பமூட்டிப் பயனுண்டாயிருக்கும்; வெளியார் எவருக்கும் அன்று. எனவே பயனிலர் என்றது முழுவதும் கல்விப் பயனுடையரல்லர் என்பதல்ல. அவர் உலகோர்க்குப் பயன்படுதல் இலர் என்பது கருத்து.
|
'நல்லவை' என்றால் என்ன?
'நல்லவை' என்றதற்கு நல்லோர், நல்லறிவாளர் குழாம், நல்லார் இருந்த அவை, நல்ல அறிஞரின் அவை, நல்லவர்கள் கூடிய அவை, சான்றோர் பேரவை, தக்கார் அவை, கற்றுவல்லோர் இருக்கும் நல்ல அவை, நல்ல அறிஞர்கள் குழுமியுள்ள அவை, நல்லறிஞர் இருந்த அவை என உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர்.
இவற்றுள் இங்கு நல்லவர்கள் கூடிய அவை என்பது பொருத்தமாகப் படுகிறது. அவையஞ்சாமை அதிகாரம் கற்றார் அச்சங்கொள்வது பற்றியே கூறுகிறது. இப்பாடலிலும் கற்றவர் கூடிய அவையே பேசப்படுகிறது. கற்றவரிலும் சிறந்த அறிஞர்கள் உள்ள நல்ல அறிஞர் கூட்டம் என்ற பொருளில் நல்லவை எனப்பட்டது.
'நல்லவை' என்பது நல்ல அறிஞரின் அவை குறித்தது.
|
நல்லோர் அவையில் அவர் ஏற்கும் வகை சொல்ல முடியாதவர் பல நூல்களைக் கற்றிருந்தாலும் பயன்படுதல் இலர் என்பது இக்குறட்கருத்து.
அவையஞ்சாமை கற்றாரை வெறும் நடமாடும் நூல்நிலையங்களாக இல்லாமல் பயனுள்ளோராக்கும்.
நல்லவையில் கேட்பார் மனத்திற்பதியுமாறு அச்சத்தால் பேச இயலாதவர் பல நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்பட மாட்டார்.
|