'மன்னரைச் சேர்ந்தொழுகல்' அதிகாரம் தலைவரைச் சேர்ந்து வாழ்பவர்களின் பழக்கங்கள் பற்றியது.
தலைமை தாங்குவரோடு பழகத் தனித்திறம் வேண்டும். உயர் நிலையிலிருப்பவர்களிடம் ஒழுகும் முறைமை தெரிந்துகொள்வதால் பல நன்மைகள் உண்டு. இக்கலையில் கைவந்தவர்கள் ஆட்சிச் செயல்பாடுகளைத் திறம்பட ஆள்வர். இதில் ஆற்றல் பெற்றோரே அதிகார மையத்தோடு சேர்ந்துபழகுவதில் வெற்றி காண்பர். இவ்வதிகாரத்தில் தரப்பட்டுள்ள அறிவுரைகள் தலைவரின் உள்வட்டத்தில் இருப்போர்க்கு நல்ல துணையாய் நிற்கும்.
ஆட்சித்தலைவரைக் குறிக்க வள்ளுவர் இகல்வேந்தர் என்ற தொடரைப் பயன்படுத்துகிறார். இதற்கு மாறுபடும் மனமுடைய மன்னர் எனப் பொருள் கூறுவர். அன்பும் சினமும் மாறிவரும் குணம் கொண்டவர் இவர். தலைமைப் பொறுப்பிலுள்ள அனைவருக்கும் இக்குணம் இயல்பாகிவிடும். இப்பண்பு கொண்டவரிடம் எவ்விதம் சேர்ந்துஒழுகுதல் வேண்டும் என்று இவ்வதிகாரத்தில் கற்றுக் கொடுக்கின்றார் வள்ளுவர். ஆட்சியைத் திறம்பட எடுத்துச் செல்வதற்கு உயர்நிலையிலிருப்பவர்களுக்கு நல்ல பழகுமுறை தேவை. நல்ல நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும். இல்லாவிட்டால் அது ஆட்சியின் மாண்புக்கு கேடு உண்டாக்கும்.
சேர்ந்தொழுகுவோர்க்கு வழங்கப்படும் அறிவுரைகள்:
உறவின் நெருக்கம்:
தலைவரோடு தீக்காய்வார் போல அணுக்க உறவு வைத்துக்கொள்ளவேண்டும்.
செய்யத்தகுவன, செய்யக் கூடாதன:
தம்மீது ஐயம் கொள்ளாதிருக்க, சேர்ந்தொழுகுவோர் தலைவர் விரும்புவனவற்றில் தாம் நாட்டம் கொள்ளாமல் இருக்கவேண்டும், பெருங்குற்றங்கள் தம்மிடம் நிகழாமல் காத்துக்கொள்ளவேண்டும்; அவர் முன்னிலையில் செவிச்சொல் கூறுவதையும் சேர்ந்து நகையாடலையும் நீக்க்கவேண்டும்;. அவரது ஒழுங்கமைதியைத் தெரிந்து கொள்ள முயலாதிருக்க வேண்டும்; அவரது முகம், கண்கள் மூலம் குறிப்பறிந்து உரிய நேரம் பார்த்து, வெறுப்பில்லாதனவாய், வேண்டிய அளவினவாய் ஏற்கத்தக்க வகையில் சொல்லவேண்டும்; பயனுள்ள செயலைக் கேட்காமலேயே சொல்லவேண்டும், பயனற்றதைக் கேட்டாலும் சொல்லக்கூடாது. தலைவர் வயதில் தன்னில் சிறியவன், உறவினன் என்பதற்காகத் தாழ்வாக எண்ணக்கூடாது.
மிக்க உரிமை கொண்டாடுதல் கூடாது:
மதிக்கப்பட்டேன் என்று மதியாதன செய்யாதே; பழையவன் என்று பண்பில்லாமல் நடக்காதே.
பாராட்டுப் பெற்று தலைவரின் நெருக்கத்தை உண்டாக்கிக்கொண்டவர் அந்த அணுக்கம் தான் விரும்பத்தகாதன செய்வதற்கான உரிமை என்று எண்ணாமல் அளவோடு நடந்துகொள்ளவேண்டும்; அதுபோல உறவினர்களையும் நண்பர்களையும் அருகாமையில் வைத்துக்கொள்வதில் சில நன்மைகள் உண்டு என்றாலும் அவர்கள் தமக்கு நிறைய உரிமைகள் உண்டு என்ற தவறான எண்ணத்தில் அடாத செயல்களைச் செய்தால் ஆட்சியின் பெயருக்குத் தீராத களங்கத்தை ஏற்படுத்திவிடுவர். அவர்களும் உரிமை வரம்பு மீறக்கூடாது.