இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0694



செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியார் அகத்து

(அதிகாரம்:மன்னரைச்சேர்ந்தொழுகல் குறள் எண்:694)

பொழிப்பு (மு வரதராசன்): வல்லமை அமைந்த பெரியாரிடத்தில், (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதலும் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுக வேண்டும்.

மணக்குடவர் உரை: அமைந்த பெரியாரிடத்து ஒருவன் செவியுட் சொல்லுதலும், ஒருவன் முகம்பார்த்துத் தம்மில் நகுதலும் தவிர்ந்தொழுகல் வேண்டும்.
இது கூற்றும் நகையும் ஆகாவென்றது.

பரிமேலழகர் உரை: ஆன்ற பெரியாரகத்து - அமைந்த அரசர் அருகு இருந்தால்; செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர் காண ஒருவன் செவிக்கண் சொல்லுதலையும் ஒருவன் முகம் நோக்கி நகுதலையும் தவிர்த்து ஒழுகுக.
(சேர்தல்: பிறனொடு சேர்தல். செய்தொழுகின், தம் குற்றம் கண்டு செய்தனவாகக் கொள்வர் என்பது கருத்து.)

சி இலக்குவனார் உரை: அரச அவையில் காதோடு நெருங்கிப் பேசுதலையும் சேர்ந்து சிரித்தலையும் நீக்கி ஒழுகுதல் வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆன்ற பெரியார் அகத்து செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்.

பதவுரை: செவி-காது; சொல்லும்-மொழியும்; சேர்ந்த-பொருந்திய; நகையும்-சிரிப்பும்; அவித்து-தவிர்ந்து; ஒழுகல்-நடந்து கொள்க; ஆன்ற-அமைந்த; பெரியார்-பெருமையுடையவர்; அகத்து-இடையில்.


செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் செவியுட் சொல்லுதலும், ஒருவன் முகம்பார்த்துத் தம்மில் நகுதலும் தவிர்ந்தொழுகல் வேண்டும்;
பரிப்பெருமாள்: ஒருவன் செவியுடன் சொல்லுதலும், ஒருவன் முகம்பார்த்துத் தம்மில் நகுதலும் தவிர்ந்து ஒழுகுக;
பரிதி: இரகசியமாக ஒருவர் கூடச் சொல்லுவதும் சிரிப்பதும்; .
காலிங்கர்: அரசரைச் சேர்ந்து ஒழுகும் அமைச்சரானோர் மற்று அவர் தம்மொடு சொல்லும் செவிச் சொல்லன்றிப் பிறரொடு பறையும் செவிச்சொல்லும், இனி மற்று அவரோடாயினும் பிறரோடாயினும் அங்குக்கூடி நகும் நகையும் என்னும் இவை இரண்டும் ஒழித்து ஒழுகுக; [பறையும் -சொல்லும்].
பரிமேலழகர்: அவர் காண ஒருவன் செவிக்கண் சொல்லுதலையும் ஒருவன் முகம் நோக்கி நகுதலையும் தவிர்த்து ஒழுகுக.
பரிமேலழகர் குறிப்புரை: சேர்தல்: பிறனொடு சேர்தல். செய்தொழுகின், தம் குற்றம் கண்டு செய்தனவாகக் கொள்வர் என்பது கருத்து.

'ஒருவன் செவியுட் சொல்லுதலும், ஒருவன் முகம்பார்த்துத் தம்மில் நகுதலும் தவிர்ந்தொழுகல் வேண்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதோடு ஓதுதலையும் பார்த்துச் சிரித்தலையும் வைத்துக் கொள்ளாதே', 'ஒருவன் செவியுட் சொல்லுதலையும் சொல்லுதலுடன் கூடிய சிரித்தலையும் தவிர்ந்து ஒழுகுக', 'யாரோடும் இரகசியம் பேசுவதையும் அதையொட்டிச் சிரிப்பதையும் அடியோடு விலக்கி நடந்து கொள்ள வேண்டும்', 'மற்றொருவர் செவியுள் ஏதாவது மறைவாகச் சொல்லுதலும், அதனோடு சேர்ந்த சிரிப்பும் நீக்கி நடக்க வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செவியுள் மறைவாகச் சொல்லுதலும், சேர்ந்த சிரிப்பும் தவிர்ந்து நடக்க வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

ஆன்ற பெரியார் அகத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அமைந்த பெரியாரிடத்து.
மணக்குடவர் குறிப்புரை: இது கூற்றும் நகையும் ஆகாவென்றது.
பரிப்பெருமாள்: அமைந்த பெரியாரகத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது செவிக்கூற்றும் நகையும் ஆகாது என்றது.
பரிதி: ராச சந்நிதியில் கைவிடுக என்றவாறு.
காலிங்கர்: யார்மாட்டு எனின் செல்வம் முதலிய முற்றுப் பெற்ற பெரியோராகிய அவ்வரசரிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: அமைந்த அரசர் அருகு இருந்தால்;

'அமைந்த பெரியாரிடத்து/ராச சந்நிதியில்/அவ்வரசரிடத்து/அரசர் அருகு இருந்தால்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெரியவர்முன்', 'பண்பு நிறைந்த பெரியவரிடத்து', 'மிகப் பெரிய பதவியிலுள்ளவர்களான அரசர்களுக்கு அருகில்', 'சிறப்பு மிகுந்த பெரிய அரசரிடத்துப் புகும்போது அவர் முன்பாக' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பண்பு நிறைந்த பெரியவர் முன்பாக என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பண்பு நிறைந்த பெரியவர் முன்பாக ஒருவன் செவியுள் மறைவாகச் சொல்லுதலும், அதனோடு சேர்ந்த சிரிப்பும் தவிர்ந்து நடக்க வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'ஆன்ற பெரியார் அகத்து' குறிப்பது என்ன?

ஆட்சிமன்றத்தில் ஒருவர் காதுக்குள் பேசுவதும் சேர்ந்து நகையாடுவதும் வேண்டாம்.

சிறப்புக்கள்பல அமைந்த பெரியார்கள் உள்ள மன்றத்தில் தலைவரைச் சேர்ந்தொழுகுவோர் இன்னொருவர் செவியுள் மட்டும் படும்படி மறைவாகச் சொல்லிக் கொள்ளுதலும், ஒருவருடன் சேர்ந்து நகைத்துக் கொள்ளுதலும் ஆகியவற்றைத் தவிர்த்து ஒழுகுதல் வேண்டும்.
ஆட்சித்தலைவருக்குத் தான் நெருங்கியவர் என்ற உரிமையில் பழகும் பண்புகளை மறந்து நடக்கக்கூடாது. ஆட்சிமன்றத்தில் அமைந்த பெரியார்கள் உள்ள இடத்தில், தலைவரைச் சேர்ந்தொழுகுவோர் இன்னொருவருடன் காதில் மறைவாகப் பேசுவதும், சேர்ந்து நகைச்சுவை பகிர்ந்து கூடிச் சிரித்து மகிழ்தலும் பண்பாடான செயல்கள் அல்ல. பொதுவாக ஒருவர் காண, அவர்முன் இவ்வாறு நடந்து கொள்வதே அவருக்கு ஐயமும் வருத்தமும் ஏற்படும். இங்கு பண்பான பெரியவர் உள்ள இடத்தில் அவை பெரியாரை அவமதிப்பனவாகவும் கருதப்படும். எனவே அவற்றை விலக்கவேண்டும். மேலும் மற்றவர்கள் தம்மைப் பற்றி ஏளனமாகப் பேசுவதாக, சிரிப்பதாக எடுத்துக்கொள்ளவும் நேரும்.

காதோடு காதாக அருகிலிருக்கும் மற்றவர்க்குக் கேட்காதவாறு பேசுவது செவிச்சொல் எனச் சொல்லப்படுகிறது. மறைவாகப் பேசுதலை 'கிசுகிசுவென்று பேசுதல்' என்று இன்றைய வழக்கில் சொல்கிறோம். சிலர் கூடியிருக்கின்ற இடங்களில் இரண்டு பேர் தாங்கள் மட்டும் கிசுகிசுவென்று பேசுவதும் சிரிப்பதுமாக இருப்பதுண்டு. சேர்ந்த நகை என்றதால் அது கலகலவென்று எள்ளி நகையாடி குறிப்புப் பொருளை உணர்த்துவது போல ஒருவருடன் ஒருவர் கூடிச் சிரிக்கும் பண்பாடற்ற செயலைக் குறிப்பதாகும். பெரியோர்கள் கூடி இருக்கின்ற அவையில் மாட்சிமை பொருந்திய தலைவர் முன்பாக, சேர்ந்தொழுகுவோர் அவ்வாறு செவிக்குள் தங்களுக்குள் பேசுதலும் சிரித்தலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று இப்பாடல் சொல்கிறது.
அவர்கள் வெளியே கேட்காதவாறு காதுக்குள்தானே பேசிக்கொள்கிறார்கள். அதில் என்ன தவறு? நகைத்துக்கொள்வது நல்லதுதானே; எப்படிக் குற்றமாகும்? எனக் கேட்கத் தோன்றலாம். கூட்டமாக எல்லோரும் இருந்து பேசி நகைப்பதில் தவறு இருக்க முடியாது. ஆன்ற பெரியோர்கள் கூடி இருக்கின்ற சபையில் மற்ற எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பதுபோல நடந்துகொள்வது விரும்பத்தக்கதல்ல.
இனி, 'அவித்தல்' என்பது அழித்தல், ஒழித்தல் என்னும் பொருளில் இங்கு ஆளப்படவில்லை. இச்சொல் குறிப்பான அளவில் பக்குவமாக வேகவைத்தல் என்றும் பொருள்படும். இங்கு செவியுட் பேசுவதும் நகைப்பதும் முற்றிலுமாக கூடாது எனச் சொல்லாமல் தேவைப்பட்டால் மட்டும் பக்குவமாகச் செய்து ஒழுகுக எனக் கூறப்படுகிறது.
ஆலோசனைக் கூட்டங்களில் தலைவரைச் சேர்ந்தொழுகுவோர் சிலசமயம் தலைவருடன் செவியில் உரைப்பதும் உண்டுதான். சில நேரங்களில் அவை தேவையானதும் கூட. அவர் காதோடு ஏன் பேசுகின்றார் என்று எண்ணுவதோ நம்மைப்பற்றி பேசுகின்றார்களோ என்று மற்றவர்களுக்கு ஐயம் உண்டாவதோ இல்லை. பலரும் கூடியிருக்கும் அவையில் நடந்து கொள்ளவேண்டிய வகைமையில் மறைபேசுவதும் நகையாடுவதும் தவிர்க்கமுடியாத சூழல்களில் மட்டும் அளவுடன் செய்து ஒழுகுக என்பது கருத்து.

'ஆன்ற பெரியார் அகத்து' குறிப்பது என்ன?

'ஆன்ற பெரியார் அகத்து' என்றதற்கு அமைந்த பெரியாரிடத்து, அமைந்த பெரியாரகத்து, ராச சந்நிதியில், செல்வம் முதலிய முற்றுப் பெற்ற பெரியோராகிய அவ்வரசரிடத்து, அமைந்த அரசர் அருகு இருந்தால், வல்லமை அமைந்த பெரியாரிடத்தில், கல்வி கேள்விகளால் நிரம்பிய பெரியவர்கள் அருகிலிருக்கும்போது, பெரியவர்முன், பண்பு நிறைந்த பெரியவரிடத்து, மிகப் பெரிய பதவியிலுள்ளவர்களான அரசர்களுக்கு அருகில், சிறந்த ஆட்சியாளன் முன்னிலையில், சிறப்பு மிகுந்த பெரிய அரசரிடத்துப் புகும்போது, அரச அவையில், பலப்பலச் சிறப்புக்கள் அமைந்த அமைச்சர் போன்ற பெரியாரிடத்துத் தங்கியிருக்கும்போது, வலிமை நிறைந்த அரசரருகில் இருக்கும்போது என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்,

இக்குறள் சொல்வது அரசர் எதிரிலான ஒழுகுமுறையா? அரசரிடத்தே நேரடியாக ஒழுகுமுறையா? அல்லது அரசவைப் பெரியோரிடத்து பழுகும் பண்புநெறியா? என்ற வினாக்கள் எழுகின்றன. இப்பாடலிலுள்ள பெரியார் என்றது அரசரைக் குறிக்கிறதா? அல்லது அரசவையிலுள்ள மற்ற பெரியவர்களைச் சொல்கிறதா? என்ற கேள்விகளுக்கும் விடை காணல் வேண்டும். இவையனைத்தையும் கலந்து எண்ணும்போது, இப்பாடலில் சொல்லப்படும் காட்சியை இப்படி நோக்கினால் தெளிவாகலாம்: ஆட்சிக்கூடத்தில் தலைவர், அவரைச்சேர்ந்தொழுகுவார், பெரியார்கள் சிலர், மற்றவர்கள் இருந்து கருத்தாடல் செய்கின்றனர். தலைவர்க்கு நெருக்கமானவர் (சேர்ந்தொழுகுவார்) என்ற உரிமையில் அவர் அருகில் இருப்பவரிடம் காதில் மறைபோல் சொல்வதும் அவரிடம் நகையாடவும் செய்கிறார். இது பண்புள்ள ஒழுகுமுறை அல்ல என்று சொல்லவருகிறது இக்குறள்.
ஆட்சிமனறத்தில் தலைவருடனோ அல்லது அங்குள்ள அமைந்த பெரியோர்களிடமோ நேரடியாகப் பண்பற்ற செயல்களில் ஈடுபட எவரும் துணியார். ஆன்ற பெரியார் என்பது தலைவரல்லாத மற்ற பண்பான பெரியவர்கள் எனக் கொள்வதே பொருத்தமாகத் தோன்றுகிறது. எனவே பெரியவர்களிடம் கொள்ளும் நேரடித்தொடர்பு குறித்துக் கூறுவதாக அதாவது பெரியவர்களின் செவிக்கண் சொல்லுதலும் அவரோடு சேர்ந்து நகுதலும் என்று கொள்வதைவிடக் கல்வி கேள்விகளால் நிரம்பிய பெரியவர்கள் அருகிலிருக்கும்போது அல்லது பெரியவர்முன், மற்றவர்களிடம் அவற்றைச் செய்வதைத் தவிர்க என்று சொல்லப்பட்டது எனலாம்.

பண்பு நிறைந்த பெரியவர் முன்பாக ஒருவன் செவியுள் மறைவாகச் சொல்லுதலும், அதனோடு சேர்ந்த சிரிப்பும் தவிர்ந்து நடக்க வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மன்றத்தில் மிகை உரிமை எடுத்துக்கொள்வது மன்னரைச்சேர்ந்தொழுகல் பண்பு ஆகா.

பொழிப்பு

பண்பு நிறைந்த பெரியவர்முன் செவியுட் சொல்லுதலையும் கூடிச் சிரித்தலையும் தவிர்ந்து ஒழுகுக.