இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0692மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்

(அதிகாரம்:மன்னரைச்சேர்ந்தொழுகல் குறள் எண்:692)

பொழிப்பு (மு வரதராசன்): அரசர் விரும்புகின்றவைகளைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.

மணக்குடவர் உரை: எல்லார்க்கும் பொதுவாகக் கருதப்பட்டவையன்றி மன்னரால் விரும்பப்பட்டவற்றை விரும்பாதொழிக; அவ்விரும்பாமை அம்மன்னராலே நிலையுள்ள செல்வத்தைத் தருமாதலான்.
அவை நுகர்வனவும் ஒப்பனை முதலாயினவுமாம். இஃது அவற்றைத்தவிர்தல் வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: மன்னர் விழைப விழையாமை - தம்மால் சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல்; மன்னரான் மன்னிய ஆக்கம் தரும் - அமைச்சர்க்கு அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும்.
(ஈண்டு 'விழைப' என்றது அவர்க்குச் சிறப்பாக உரியவற்றை. அவை: நுகரப்படுவன, ஒப்பனை, மேன்மை என்றிவை முதலாயின. இவற்றை ஒப்பிற்கு அஞ்சித் தாம் விழையா தொழியவே, அவ்வச்சம் நோக்கி உவந்து,அவர்தாமே எல்லாச் செல்வமும் நல்குவார் என்பது கருத்து. எனவே, அவற்றை விரும்பின் கேடு தரும் என்பதாம்.)

குன்றக்குடி அடிகளார் உரை: அரசர்கள் விரும்புவனவற்றை விரும்பாதிருப்பின் ஆக்கம் தரும். மன்னர் விரும்பும் புகழ், பெருமை, அதிகாரம், பெண் ஆகியவற்றை அமைச்சர்கள் விரும்பக்கூடாது என்பது கருத்து.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கம் தரும்.

பதவுரை: மன்னர்-ஆட்சித் தலைவர்; விழைப-விரும்புவன; விழையாமை-விரும்பா தொழிதல்; மன்னரால்-ஆட்சித் தலைவரால்; மன்னிய-நிலைபெற்ற; ஆக்கம்-முன்னேற்றம், செல்வம்; தரும்-கொடுக்கும்.


மன்னர் விழைப விழையாமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லார்க்கும் பொதுவாகக் கருதப்பட்டவையன்றி மன்னரால் விரும்பப்பட்டவற்றை விரும்பாதொழிக; அவ்விரும்பாமை;
மணக்குடவர் குறிப்புரை: அவை நுகர்வனவும் ஒப்பனை முதலாயினவுமாம்.
பரிப்பெருமாள்: எல்லார்க்கும் பொதுவாகக் கருதினவையன்றி மன்னரால் விரும்பப்பட்டவையிற்றை விரும்பாதொழிக; அவ்விரும்பாமை;
பரிப்பெருமாள் குறிப்புரை: அவை நுகர்வனவும் ஒப்பனை முதலாயினவுமாம்.
பரிதி: அரசன் விரும்பினதைத் தான் விரும்புவானல்லன்; விரும்பானாகில்;
காலிங்கர் ('விழையாரேல்' பாடம்): அரசர் விரும்புவன யாவை சில; மற்று அவற்றைத் தாம் சிறிதும் விரும்பாரெனில், விரும்பாமையாகிய இதுதான்;
பரிமேலழகர்: தம்மால் சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல்;
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டு 'விழைப' என்றது அவர்க்குச் சிறப்பாக உரியவற்றை. அவை: நுகரப்படுவன, ஒப்பனை, மேன்மை என்றிவை முதலாயின.

'மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசர் விரும்புவனவற்றை விரும்பாவிடின்', 'அரசர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதிருத்தல்', '(அரசர்களோடு இருக்கும் பொழுது) அரசர் ஆசைப்படுகிற விஷயங்களில் எல்லாம் (அவர்களோடு) தாமும் ஆசை காட்டாமல் இருப்பது', 'அரசர் விரும்பினவற்றைத் தாம் விரும்பாமை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஆட்சித்தலைவர் விரும்புவனவற்றை (சேர்ந்தொழுகுவோர்) விரும்பாதிருத்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

மன்னரால் மன்னிய ஆக்கம் தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அம்மன்னராலே நிலையுள்ள செல்வத்தைத் தருமாதலான்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அவற்றைத்தவிர்தல் வேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: அம்மன்னந்தானே நிலையுள்ள செல்வத்தைத் தருமாதலான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அவற்றைத்தவிர்தல் வேண்டு மென்றது.
பரிதி: மன்னரால் ஆக்கம் பெறுவன் என்றவாறு.
காலிங்கர்: அம்மன்னரால் நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: அமைச்சர்க்கு அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: இவற்றை ஒப்பிற்கு அஞ்சித் தாம் விழையா தொழியவே, அவ்வச்சம் நோக்கி உவந்து,அவர்தாமே எல்லாச் செல்வமும் நல்குவார் என்பது கருத்து. எனவே, அவற்றை விரும்பின் கேடு தரும் என்பதாம்.

'மன்னராலே நிலையுள்ள செல்வத்தைத் தரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரால் நிலையான முன்னேற்றம் கிடைக்கும்', 'அமைச்சர்க்கு அவராலே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும்', 'மன்னரால் பாராட்டப்பட்டுப் பல நன்மைகளை உண்டாக்கும்', 'அரசரால் நிலைபெற்ற செல்வத்தைக் கொடுப்பிக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆட்சித்தலைவரால் நிலையான முன்னேற்றம் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆட்சித்தலைவர் விரும்புவனவற்றைச் (சேர்ந்தொழுகுவோர்) விரும்பாதிருத்தல் ஆட்சித்தலைவரால் நிலையான முன்னேற்றம் தரும் என்பது பாடலின் பொருள்.
தலைவர் விரும்புவதை அவருடன் சேர்ந்து இருப்பவர் ஏன் விரும்பக்கூடாது?

ஒருவரைச் சேர்ந்து இருக்கிறோம் என்பதற்காக அவர் போன்று விருப்பு வெறுப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

ஆட்சித்தலைவரால் விரும்பப்படுபவைகளை அவரைச் சார்ந்தவர்களும் விரும்பாதிருந்தால் அது அவர்களுக்கு நிலையான முன்னேற்றத்தைப் பெற்றுத் தரும்.
தலைவரைச் சுற்றியே எப்பொழுதும் இருப்பதாலேயே தலைவர் போலவே தாமும் நடை உடை பாவனை போன்றவற்றில் இருக்கவேண்டும் என்ற தூண்டல் அல்லது சபலம் சேர்ந்தொழுகுவோருக்கு எழுவது உண்டு. பின் அவ்வாசைகள் விரிந்து அவர்போலவே செல்வம் சேகரிக்க வேண்டும் அவர் பெற்றுள்ள பதவியையும் பெறவேண்டும் என நினைக்கத் தூண்டும். இதன் காரணமாகத் தான் விரும்புபவற்றை தன்னைச் சார்ந்தோரும் விரும்புவதை தலைவர் விரும்புவதில்லை. தன்னைச் சார்ந்தோர் அவரது நிலைக்கேற்றபடி மட்டுமே நடந்துகொள்ளவேண்டுமெனவே ஆட்சித்தலைவர் விரும்புவார். அதைவிடுத்து தனக்குச் சமமாக அவர் எண்ணி ஒழுகினால் அவர் மீது தலைவருக்கு வெறுப்புத்தான் உண்டாகும். தலைவர் விரும்புவதை தான் விரும்பாமல் நடந்துகொண்டால் தலைவர் உவந்து தானே சார்ந்தோர் முன்னேற்றத்துக்கு வழி செய்வார்.
தலைவர் விரும்புவதைச் சேர்ந்தொழுகுவார் விரும்புதலைத் தவிர்த்தல் வேண்டும்; இல்லையேல் அது அவர்க்கு கேடாகவும் முடியலாம்.

மன்னிய ஆக்கம் என்ற தொடர் எல்லாவகையாலும் நிலைபெற்ற முன்னேற்றம் அல்லது உயர்வு என்ற பொருள் தரும்.

தலைவர் விரும்புவதைக் கூட இருப்பவர் ஏன் விரும்பக்கூடாது?

விழைப அதாவது விரும்புவன என்றதற்கு எல்லார்க்கும் பொதுவாகக் கருதப்பட்டவை தவிர்த்து ஆட்சித்தலைவரால் விரும்பப்பட்டவற்றை குறிக்கும் என மணக்குடவர் கூறினார். பரிமேலழகர் 'விழைப' என்றது தாம் சேர்ந்த அரசர்க்குச் சிறப்பாக உரியவற்றை எனக் கூறி அவையாவன: நுகரப்படுவன அதாவது செவி முதலிய ஐம்பொறிகளாலும் துய்க்கப்படுவன, ஒப்பனை அதாவது அழகு சேர்க்கும் பொருட்கள், மேன்மை அதாவது யாவர்க்கும் மேலாக இருக்கும் தன்மை என்றிவை முதலாயினஎன விரித்தார். முதலியன என்று சொல்லப்பட்டதால், வெண் கொற்றக்குடை, வீரக்கழல், முடி, செங்கோல் போன்றவற்றையும் குறிக்கலாம்.
மற்ற உரையாளர்கள் தலைவர் விரும்புவனவாக புகழ், பெருமை, அதிகாரம், பெண் ஆகியவற்றையும் விலங்கு நிலம், வீடு போன்ற உடைமைகளையும் குறிக்கின்றனர். தேநேயப்பாவாணர் 'மன்னர் விழைப' என்றது, உண்டி, ஆடையணி, உறையுள், ஊர்தி, பெண்ணின்பம் முதலியவற்றுட் சிறந்த வகைகளையும்; கண்ணியம், புகழ் முதலியவற்றில் ஒப்புயர்வின்மையும்; அரசனுக் கென்றே ஒதுக்கப் பெற்ற ஆடிடம், நீர்நிலை முதலியவையும் என்றார். மு கோவிந்தசாமி 'விழைப-அரசுத்தலைமை' என்றார்.
விரும்பாமை என்பது தலைவர் தன்னைச்சேர்ந்தவர் தான் விழையும் எல்லாப்பொருள்களையும் விரும்பாமையை அல்ல; தலைவர்க்குண்டான சிறப்புப் பொருள்களை விழையாமைதான் கூறப்படுகிறது. ஆட்சித்தலைவன் விழையும் சிறப்புக்களை யெல்லாம் சேர்ந்தாரும் விரும்புவது தலைவர்க்குச் சமமாய் இருக்க எண்ணுவதையே தெரிவிக்கும்; அது அவரோடு போட்டிப் போடுவதைப் போலாகிவிடும். தலைவனைச் சூழ்ந்திருப்பவனது செருக்கையும் இது வெளிப்படுத்துவதாகிறது. இத்தகைய சூழலை எத்தலைவரும் விரும்பார். தனது அதிகாரத்தின் நிழலில் இருப்பதால்தானே இவன் இவ்வாறு நடந்துகொள்கிறான் என்ற எண்ணம் தலைவனுக்கு ஏற்படும். இன்னபிற காரணங்களால் தன்னைச் சுற்றி இருப்பவர் தாம் விரும்புவதை விரும்பார்.

ஆட்சித்தலைவர் விரும்புவனவற்றைச் சேர்ந்தொழுகுவோர் விரும்பாதிருத்தல் ஆட்சித்தலைவரால் நிலையான முன்னேற்றம் தரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

மன்னர்க்கானதைச் சேர்ந்தார் விரும்பாமல் இருப்பது மன்னரைச்சேர்ந்தொழுகலில் ஆக்கம்தரும் பண்பு.

பொழிப்பு

ஆட்சித்தலைவர் விரும்புவனவற்றை விரும்பாதிருத்தல் அவரால் நிலையான முன்னேற்றம் பெற்றுத்தரும்.